Sunday, April 20, 2025
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!

இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!

-

இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!

நாம் அன்றாடம் பார்க்கும் சுற்றுப்புறம்தான், அதையே ஒரு பொழுது மழைக்குப் பிறகு பாருங்கள், மறைந்து மங்கிக்கிடந்த இயற்கைக் காட்சிகள் உயிர்ப்பித்தது போலத் தெரியும். மழைநீர் கழுவிய இலை முகங்கள், மணம் விரிந்து நிறம் பொழியும் பல பூக்கள், மழை நனைந்து கிளையமர்ந்து தலை துவட்டும் பறவைகள், வேற்றிடம் தேடி செவ்வரிக்கோடாய் பேரணி தொடங்கும் எறும்புகள், கார் நிலையாலே நீர் நிலை நிரம்பி ஊர்விழி கவரும் ஆம்பல்கள்… என ஒட்டுமொத்த உயிரினச் சூழலே விழித்துக் கொள்கிறது, (இந்த இடத்தில் நகரத்துக் கோலங்கள் நாம் ஏற்படுத்திக் கொண்ட கழிவுகள் என்பதை நினைவில் நிறுத்துக) இப்படியொரு இயற்கை நம்மைச் சுற்றி இருப்பதையே மறந்துபோய், இல்லை கூலி உழைப்பின் கொடுமையால் மறக்கடிக்கப்பட்டு, முழுநேரமும் முதலாளித்துவத்துக்கு உழைத்துக்கொட்டி உழைப்புச் சக்தி, உயிரினச் சக்தியை மட்டுமல்ல பல கோடி மக்கள், உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இயற்கையையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஐந்திணைநாம் வாழும் இந்த நிலப்பகுதி, குறிப்பாக தமிழகம் ஐவகை நிலங்களையும், அதற்கேற்ற வளங்களையும் கொண்டது என்பது ஏடறிந்தவர்களுக்கு தெரியும், இல்லை, நம் பாட்டி, தாத்தா பழங்கதைகள் வழி, அனுபவங்கள் வழி அறிந்திருக்கலாம், இப்படித் தலைமுறை தலைமுறையாக பல்லுயிரிகளையும் வாழ வைத்த இயற்கை, உழைக்கும் மக்கள் பேணிக்காத்த இயற்கை வளங்கள் இன்று ஏன் இல்லை, தானாக அழிந்தனவா? இல்லை. இயற்கை வளங்கள், ஆதாரங்கள் இவைகளின் இயங்கியல் சுழற்சியால் மண்ணுக்கு கிடைத்துவந்த மழை, மாறி மாறி வந்த சீரான பருவங்கள், புல் பூண்டு, பச்சையோடு, மனித மனங்களையும் மலர்வித்த இயற்கை அமைப்பை ஒரு சில தனிப்பட்ட முதலாளிகளின் லாப வெறிக்கு இரையாக்கியதால், அனைவருக்குமான இயற்கை அழிந்து வருகிறது.

மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட சமூக அமைப்பால், குறிப்பாக சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியிலான முதலாளித்துவ சமூக அமைப்பால் தங்களை மட்டும் பாதித்துக் கொள்ளவில்லை, இயற்கை அமைப்பையும் சீரழித்து, சிதைத்து வருகிறோம் என்பதை அறிவோமா? கோழியையும், ஆடுகளையும், ஆலமரத்தையும் குழந்தைகளுக்கு பாடப் புத்தகத்தில் மட்டுமே காட்டி வளர்க்கும் அளவுக்கு இயற்கையைத் தொலைத்துவிட்டு எதைப் பெறப்போகிறோம் புறத்தில்! இன்னும் சில தலைமுறைக்கு இப்போது மிச்சமிருப்பதுதான் இயற்கை என நம்பும் அளவுக்கு நிலைமையை கேவலமாக்கிவிட்டோம், யார் குற்றம்? நாம் இழந்து வரும் இயற்கை எத்துனை வளமானது என்பதை அறிந்தால்தான், இழப்பின் வலி உணர்ந்தால்தான் பெறுவதற்கான போராட்டத்தின் உணர்ச்சி கொஞ்சமாவது நம் தோலில் உரைக்கும்.

நம் முன்னோர்களின் அனுபவத்தின் வழி, இலக்கியக் காட்சிகள் வழி கொஞ்சம் நம் இயற்கை வளத்தைப் பாருங்கள். அன்றைய இயற்கையை நமக்கு அறியத்தருகிற இந்த இலக்கியக் காட்சிகளில் எழுதியவர்களின் கற்பனையும், உவமைகளும் கலந்தும், மிகுந்தும் இருந்தாலும் தனித்தனியாக தொடர்பற்றது போல நாம் காணும் இயற்கையின் இயக்கத்தை ஒருங்கே நம் மனக்கண் முன் நிறுத்தும் காட்சிப் படிமங்களில் அக்காலத்திய மனிதனின் இயற்கை அறிவும், உணர்வும் நம்மிடம் கற்றலையும், இயற்கையை பேணுதலையும் வேண்டுகின்றன. முதலாளித்துவ வணிகக் கொள்ளைக்காக ஊட்டியில் சூட்டிங் வைத்தாலும் உயர்ந்து நிற்கும் இயற்கை வனப்பை அவுட் ஆஃப் போக்கசிலும், திறந்து கிடக்கும் பெண்களின் சதைகளை குளோசப்பிலும் காட்டுவதிலேயே குறியாய் இருக்கும் இன்றைய ‘வளர்ந்த’ நவீன கலைஞர்களைப் பார்க்கையில் அன்றைய அக ஒழுக்க விழுமியங்களை இயற்கையை துணைக்கழைத்துக் கொண்டு மாந்தனை உலகத்தின் ஒரு பகுதியாக நினைவுறுத்தும், அந்த இயற்கையின் தூண்டுதலைப் பெற படித்துதான் பாருங்களேன்.

இயற்கையின் தூண்டுதல்
இயற்கையின் தூண்டுதலைப் பெற படித்துதான் பாருங்களேன்.

சங்க இலக்கியம் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் ஒரு காட்சி, மலைப்பகுதியில் பாயும் ஆற்றின் வரவில் விரவும் காட்சிகள் எத்தனை? “மருதத்துறையின் அழகு” எனும் தலைப்பிலான அப்பாடல், “வரையன புன்னாகமும் கரையன சுரபுன்னையும்…” என நீள்கிறது. அதில் பாய்ந்து வரும் நீரானது மலைப் பகுதியிலுள்ள புன்னையின் மலர்களையும், ஆற்றங்கரை பகுதியிலுள்ள சுரபுன்னை மலர்களையும், வாள் வீர மரத்து மலர்களையும், வேங்கையின் பூக்களையும், அலரிப் பூக்களையும், காந்தட் பூக்களையும், உதிர்ந்த தோன்றிப் பூக்களையும், தீயென்று எண்ணுமாறு மலர்ந்து, காற்று மோதுவதால் கட்டவிழ்ந்த இதழ்களைக் கொண்ட ஒள்ளிய நீலப் பூக்களையும், மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள சோலைப் புறங்களிலே அருவி நீரானது நிரப்பிற்று. மேலும் அலை நுரைகளாகிய மென் குமிழிகளையும், இனிய மணமுடன் கூடிய சந்தனக் குழம்பினையும் உடையதாக வையை நீர்பெருக்கு விளங்கிற்றாம். நமக்குத் தெரிந்த பூக்களின் பெயரைக் கேட்டால் ஒரு நான்கினைச் சொல்வதே அபூர்வம், இந்தக் காட்சிகளைப் பாடிய நல்லந்துவனார் எந்தக் கல்லூரியிலும் ‘எம்டெக்’ படித்து தன்நிலம் மறந்தவர் அல்ல, தன்நிலம் அறிந்து இயற்கையின் ஈடுபாட்டால் எத்தனைப் பூக்களை அடுக்குவதன் வழி, ஒரு ஆற்றின் வழி அப்பகுதி உயிரினச் சூழலையே காலம் கடந்தும் நம் கண்முன் நிறுத்துகிறார்.

இப்படி பலவும் தழுவிய இயற்கையின் நீரை விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் பாட்டிலில் அடைத்து “சிறுவாணி”, “இமாலயா”, “அக்குவா”, “கின்லே” என விற்று தீர்ப்பதை சகிக்கும் நம் “தோலின் இயற்கையைப்” பார்த்து இயற்கை வருந்தும்.

‘எந்த இயற்கை எப்படி போனால் எனக்கென்ன? எத்தனை தண்ணி கேன் வேண்டுமானாலும் வாங்கும் வசதி எனக்கிருக்கிறது!’ என்று நியாயம் பேசி சாரம் போனவர்களுக்கு மத்தியில் சங்க இலக்கியத்தின் “ஐங்குறுநூறு” – இல் மருத நிலத்தைப் பாடிய ஓரம்போகியார் எனும் புலவர் “கண் பசப்படைந்தது” எனும் பாடலில் ஒரு வாழ்வியல் காட்சியை விளக்குமிடத்தில் கூட “கூதிர் ஆயின் தன்கலித்தந்து, வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்…” அதாவது கூதிர்காலமாகிய அய்ப்பசி, கார்த்திகை மாதங்களானால் கலங்கியும், வேனிற்காலமாகிய வைகாசி, ஆனி மாதங்களில் நீல மணிபோல தெளிந்தும் நீர் விளங்கும் ஊரனே! எனப் பாடிச் செல்கிறார்.

சாக்கடையான நீர்நிலைகள்
நகரமயமாக்கத்தினால் சாக்கடையான நீர்நிலைகள்

நீர் நிலையெல்லாம் நகரமயமாக்கத்தினால் சாக்கடையாக்கி, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புமளவுக்கு ‘வல்லரசாகப் பீற்றும்’ நாட்டில் இன்னும் சாக்கடைக்கு ரூட்டு போட முடியாத இந்த முதலாளித்துவத்தின் இயற்கைச் சீரழிப்பில் வாழும் நம்மை “கூதிர் ஆயின் ட்ரைனேஜ் கலித்து, வேனில் ஆயின் கூவம் நாறும் மகனே!” என்று இன்றிருந்தால் ஓரம்போகியார் பாடியிருப்பார். தண்ணீரை தனியாராக்கி விற்பது மட்டுமல்ல, தனது மூலதன வளர்ச்சிக்காக, லாபத்திற்காக நீர் நிலைகளை மாசுபடுத்தி இயற்கையை சீரழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகளை எதிர்க்காமல் எப்படி கிடைக்கும் இயற்கையின் அழகு?!

குறிஞ்சி எனும் மலைநிலப்பகுதியில் பன்றி ஒன்று தினைப்பயிரை மேய்ந்ததாக பாடல் ஒன்றில் பதிவு செய்கிறார் கபிலர். “மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி…” அதாவது மென்மையான தன்மையுள்ள தினையை யாரும் அடித்து விரட்டாத சூழலில் அஞ்சாமல் மேய்ந்ததாம் பன்றி. வளமிக்க இயற்கையில் பன்றியும் பசியாறியிருக்கிறது. இன்றோ ‘வளர்ந்த’ நிலையில் ஒரு ரூபா இட்லிக்கு உழைக்கும் மக்கள் ஏங்குவதும், ‘வளர்ச்சியின்’ அடையாளமாம். முதலாளித்துவக் கழிவுகளான பீசா, பர்கர், கோக், பெப்சி என்று பன்றிகளைப் போல ஒரு கூட்டம் மேய்வதும் காலத்தின் கோலம். பன்றிக்கு தினையும், சுனையும் கிடைக்குமளவுக்கு இயற்கையை விட்டு வைத்திருந்தது. ஒரு காலம் பன்றிக்கு கிடைத்தது கூட கிடைக்காமல், மனிதனை ‘சுகரிலும்’, ‘கஞ்சியிலும்’ குடியிருக்க சாக்கடையிலும் தள்ளியிருக்கிறது முதலாளித்துவ முன்னேற்றம்!

தேன் உண்டாகும் ஒரு மலை, அதனிடத்தே தெளிந்த நீர் சூழ்ந்துள்ள ஒரு வட்டக்கற்பாறை, அந்தப் பாறைக்கு வெளியே தூய மணல்பரப்பு, அதிலும் ஓரிடம் தென்றல் வீசுவதால் வரிவரியாய் கரு மணல் கோடுகள்… இப்படி காட்சி நீள்வது எங்கு தெரியுமா? வெம்மை கொண்ட பாலை நிலத்தில், “நற்றிணையில்” நப்பசலையார் எனும் புலவர் காட்டும் நிலைமை இது, இயற்கை வளங்களுக்கு வேதாந்தாவும், அம்பானியும் விலை வைக்காத காலம் அது, ஆகையால் வெப்பம் மிகுந்த பாலையிலும் மிச்சமிருந்தது பச்சையும், நீரும். நாடு முன்னேறுவதாய் சொல்லப்படும் இன்றோ, மருத நிலத்திலேயே அதாவது வயல் பகுதிகளிலேயே நீருமில்லை, பச்சையும் பார்க்க அரிதாய் வருகிறது. ஏன்? இயற்கை பொய்த்ததோ? இல்லை, கொடிய முதலாளிகளின் வக்கிரச்சுரண்டலால் காடுகளை அழித்து மழை பொய்த்து, நீராதாரங்களை ரியல் எஸ்டேட்டாக்கி, வயல்களை ‘பிளாட்’ போட்டு முதலாளித்துவ லாபத்தில் இயற்கை மூர்ச்சையாகிக்கிடக்கிறது. நாமோ கணினியில் அருவியை ‘லோட்’ செய்து ஐ…! நாடு முன்னேறியிருச்சின்னு கண் பசை காய்கிறோம்.

குளம்
இப்படி ஒரு குளத்தை நாம் பார்த்ததுண்டா

மலைவளத்தின் அழகுக் காட்சியை நாம் தள்ளி நின்று பார்த்து ரசித்திருப்போம், அதன் அழகின் ஊடே குறிஞ்சி வளத்தின் பன்முகங்களைப் பார்த்துக் கூறுகிறார் நற்றிணையில் நல்வேட்டனார் என்ற உழைப்புக் கவிஞர், “நெடிய கணுக்களை உடைய சந்தன மரத்தின் அசையும் கிளைகளிலே, பச்சை நிறம் கொண்ட மணம் வீசும் கொடியான தமாலம் சுற்றிப் படர்ந்திருக்கும். தேன் எடுக்கும் குறவர்கள் அக்கொடியை தேவைக்கு அறுத்து எடுத்துச்செல்வர். அத்தகு கொடிகள் அறுக்கப்பட்டு அவ்விடம் அது இல்லாததால் இது காடுதானோ என களிறுகள் (யானை) தமக்குள் குழம்புமாம். செம்பொன், வெள்ளை பளிங்குபோல மின்னும் கருங்கற்களிடையே ஓடும் காட்டாற்றின் சுழிதோறும் முதலைகள் இயங்கியபடி இருக்குமாம்… “யாணர் வைப்பின் கானம்” எனும் பாடலில் ஒன்றுக்கொன்று உயிரினச் சுழற்சியாய் விளங்கும் இயற்கை வளம் இன்றும் நெஞ்சத்தே புகும் ஆற்றலோடு பாய்கிறது. காட்டாற்று வெள்ளமும், வெண்பளிங்கு கற்களும் இன்று கார்ப்பரேட்டுகளின் சொத்தாகி, மலைகளிலும் மரங்கள் வெட்டப்பட்டு, கார்ப்பரேட் டூரிசம், வீக்கென்ட் ஜாலி, ஆன்மீகச் சுற்றுலா எனும் பெயரில் உத்தர்கான்ட் போன்ற மலைகளில் இயற்கை விதிகளுக்கு மீறி அளவற்ற, வரம்பற்ற கட்டிடங்களைக் கட்டி சிவனைப் பார்க்கப் போனவர்களை சிவலோகத்திற்கே அனுப்புகிறது முதலாளித்துவ கார்ப்பரேட் கொலைக்களம். யானை, முதலை, வாழை, சந்தன மரங்கள், கொடிகள் என லாபநோக்கற்று அனைவருக்குமான இயற்கையாய் நம் கண்ணில் விரிகிறது களவாடப்படாத குறிஞ்சிநிலம்.

ஆலங்குடி வங்கனார் என்பவர் பார்த்த இப்படி ஒரு குளத்தை நாம் பார்த்ததுண்டா? “வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக் கயக்கணக் கொக்கின் கூம்புமு கையன்ன…” எனும் பாடல் காட்சியில், இளம் யானையினது காதுகளைப்போல பசுமையான இலைகள் விரிந்து விளங்கினவாம், கூட்டமாய் இருக்கும் கொக்குகளைக் போல குவிந்த மொக்கள், அவற்றுக்கு ஏற்ப அமைந்த திரட்சியான தண்டினைக் கொண்ட நீராம்பல், விடிவெள்ளிபோல இருளை போக்கியபடி கீழ்த்திசை நோக்கி மலர்ந்திருந்த குளமாம்…” அடடா! இயற்கையில் ஒன்றைச் சொல்கையில் இன்னொரு இயற்கையை விரும்பும் வாழ்வியல் விருப்பம் லாபம் பார்க்கும் மனத்திடம் வருமா?

எதைப் பார்த்தாலும் இதை தோண்டி விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதற்காகவே இயற்கையை ஆராயும் கார்ப்பரேட் வணிக வக்கிரம் மெல்ல மெல்ல மேலிருந்து கீழிறங்கி சாதாரண மனிதர்கள் மத்தியிலும் படிந்துவிடுவதால், இயல்பிலேயே பொது நலனுக்குரியதாய் இருக்கும் இயற்கை வளங்களை ரசிப்பதன் வழி போற்றிப் பாதுகாப்பதற்குப்பதில் சாதாரண மனிதன் வரை அதில் நமக்கும் ஏதும் ஆதாயம் உண்டா? என அம்மா குடிநீருக்கும், அடுக்குமுறை காண்ட்ராக்ட்டுக்கும் மனம் அலைகிறது. பல பத்து செலவழித்து எந்தப் பல்கலைக்கழகத்திலும் போய் படித்து பட்டம் பெறாத அந்தக் கால மனிதர்கள் இயற்கையை தம் உயிரினச் சூழலின் ஒரு பகுதியாக பார்த்துக் காத்தார்கள். கேவலம் ஒரு தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தரும் பிச்சைக் காசுக்காக அவனோடு கூட்டு சேரும் இந்தகால ஊடகப் பிறவிகள் முன்னேறியவர்களா? இயற்கையைப் பொதுவில் வைத்துப் பார்த்து, நம்மையும் பார்க்க வைக்க பாடிய அந்தக்கால மனிதர்கள் முன்னேறியவர்களா?!

தாது மணல் கொள்ளை
கடற்கரை மக்களும், மான்களும், பூக்களும், வண்டுகளும், வெள்ளுப்பும் விளைகின்ற பலபடித்தான நிலத்தை, தனி ஒரு முதலாளி தன் லாபவெறிக்காக கொள்ளை அடிக்கிறான்.

நெய்தல் எனும் கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் பாடவந்த உலோச்சனார் எனும் புலவர், “பெயினே! விடுமான் உழையினும்… இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்…” எனும் பாடலில், “அழியாத மரபினை உடைய நம் பழைய ஊர், மழை பெய்தால் உலவும் உழை எனும் மானினங்கள், பெரும்கதிர் கொண்ட நெல்லினங்கள் கொழுத்த மீன்களைச் சுடுவதால் எழும் புகை ஊரெல்லாம் சூழும். சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களின் இனிமே…” என கடலோர வளம் பாடியும், ஒரு இடத்தில் “கடல்சார்ந்த பகுதியில் இரும்பைப் போன்று விளங்கும் கரிய கிளைகளை உடைய புன்னை மரம், அதன் பசும் இலைகளை நீலம் போலத் தோன்றும் இலைகள் இடையே வெண்ணிற வெள்ளிப் பூக்கள் அதன் நறுமணத் தாது மணலில் விழுந்து, மணலிடம் புகுந்த வண்டுகள் விரையும்…” என்று ஒரு கடல் பகுதியோரம் இயற்கை வளத்தின் கவினுறு காட்சிகளை பயனுற விளக்குகிறார். இப்படி கடற்கரை மக்களும், மான்களும், பூக்களும், வண்டுகளும், வெள்ளுப்பும் விளைகின்ற பலபடித்தான நிலத்தை, தனி ஒரு முதலாளி தன் லாபவெறிக்காக தாது மணலை அள்ளி கடலையே தூர்வாரி இயற்கை வளங்களை நாசம் செய்து இதை நாட்டின் தொழில் முன்னேற்றம் என்று அரசும், அதிகார வர்க்கமும் சூழ நடக்கும் இந்த இயற்கை வளக் கொள்ளையை, கொலையை தடுக்க வேண்டுமெனில் முதலில் நமக்கு இயற்கையின் மதிப்பும், அதன் எல்லையில்லா பொதுப்பயனும், தெரிய வேண்டும். தன் உடலின் இயற்கையால் உருவான ஒரு ‘கருவை’ ஸ்கேன் எடுத்து, மருந்து கொடுத்து பார்த்து, பார்த்து கொஞ்சி ஒரு பிள்ளை பெற்றதையே பெருமையாக கூத்தாடி மகிழும் மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருக்கொண்டு, தன்னைவிட தன்னைச் சூழ்ந்திருக்கும் மனித இனத்துக்கு அளப்பிரிய நன்மைகளை பிரசவிக்கும் இயற்கையை நாம் எப்படி பொதுவில் வைத்து போற்றிப்பாதுகாக்க வேண்டும். இந்தச் சுரணைக்காவது கொஞ்சம் பழம்பாடல் காட்சிகளைப் பாருங்களேன்.

எருமையைக் கட்டிப் போட்டது போல, எவனோ ஒரு முதலாளிக்காக ரா முழுக்க விழித்திருந்து, வெயிலே படாமல் வைட்டமின் டி குறைபாட்டால் மூட்டுபோயி, எலும்பு தேய்ந்து வாங்கும் வெயிட்டான கூலிக்காக ஐ.டி. துறையால் நாடு வளர்ச்சியடைந்து வல்லரசாகப் போகிறது என்பவர்கள், ஓரம்போகியார் எனும் பழையகாலத்துப் புலவர் பார்த்தக் காட்சியைப் பார்த்தால், எருமை நடை முன்னேற்றமா? இழவெடுத்த இந்தக் கூலிக்கான என்ஜினியர் நடை அழகா என்பது தெரிந்துவிடும், “துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை… எருமைச் சுவல்படு முதுபோத்து…” எனும் அகநானூறு பாடலில், “தள தள வென்று கண்ணுக்கு குளிர்ச்சி தரும் ஒரு எருமைக்கடா, நீர்த்துறை ஓரங்களில் மீன்கள் மேயும் பொய்கையிலே செழித்து ஆம்பல் மலர்களை மேய்ந்து, திளைப்பில் சேற்றில் உறங்கி, எழுந்து நடந்த கால்கள் மிதிபட்டு வரால் மீன்கள் சிதைந்தும், வந்த வழியில் அதன் மேனியில் களைப்பு தீர பகன்றைக் கொடியும் உடலில், கொம்பில் சூடியபடி ஊருக்குள் புகுந்ததாம்…” சேறு தூங்கிய எருமைக்குள்ள இயற்கையும், உறக்கமும் கூட வாய்க்காமல், நமது இயற்கை வனப்பையும், உடலின் இயற்கையையும் கூட சுரண்டும் முதலாளிகளுக்கு பணிந்து சேவை செய்து உடலில் உயிரணுவும் மிஞ்சப்போவதில்லை.

இயற்கைப் பெருமிதம்
இயற்கைப் பெருமிதம் இழந்து நிற்கும் நம் அவலத்திற்கு பெயர் உலகமய வளர்ச்சியா? உலகளாவிய இகழ்ச்சியா?

தனித்தனியாக இயற்கையையும், மனிதனையும் பிரித்து மேயும் கார்ப்பரேட் பயங்கரத்தை விலங்குகள்கூட சகிப்பதில்லை, தமது வாழ்விடங்கள் பறிக்கப்படும் போது, தமது இயற்கையின் நியதி மறுக்கப்படும் போது ஊருக்குள் புகுந்து கலகம் செய்கின்றன பாம்புகளும், யானைகளும். ஆறறிவு படைத்த மனிதனோ சதா சம்பள பயத்தில் சகலமும் இழந்தால் கடைசியில் மண்புழு உன்னை இயற்கையில் சேர்க்காது, உன்னை ஒரு உயிராகவும் மதிக்காது. எத்தனை மரங்கள், எத்தனை விலங்குகள், எத்தனைப் பூச்சிகள், எத்தனைப் பறவைகள், எத்தனை நிறங்கள், ஆற்றுநீர், மழைநீர், கடல்நீர், பனிநீர், இது போதாதென மாந்தர்கள் உணர்வு காட்டும் விழிநீர், என இயற்கையின் நிலைகளை, தான் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களுக்கு ஏற்ப அனைத்தையும் வகைப்படுத்தி, வாழும் மக்கள் மனங்களில் நிலைநிறுத்தி இது நம் மண், நம்நிலம், இத்தகு சிறப்பு வாய்ந்தது எனும் குறிப்புகாட்டி வயல்களில் உழன்று, மலைகளில் ஏறி, பாலையில் அலைந்து, நெய்தலில் கிடந்து, முல்லையில் நடந்து உழைக்கும் மக்கள் உணர்வூட்டிய இயற்கைப் பெருமிதம் இழந்து நிற்கும் நம் அவலத்திற்கு பெயர் உலகமய வளர்ச்சியா? உலகளாவிய இகழ்ச்சியா?

இயற்கையை ஊடுருவி உணரும் திறனும், அதை நமக்கு உணர்த்தும் திறனும், இத்தனை நுணுக்கமாக இயற்கை வளங்களை, பன்முகங்களை அறிந்து விளங்கச் செய்யும் அந்தக் காலத்து மனிதர்களின் அறிவில் ஒரு சதவிதமாவது இயற்கையைப் பற்றியதில் இன்று நமக்கு உண்டா? விதவிதமான கார்களின் பெயரும், செல்போன்களின் பெயரும், கணினிகளின் பெயரும் தெரிந்த நம் பிள்ளைகளுக்கு நம்மைச் சுற்றியிலுள்ள இயற்கையின் வகைகளை எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எளிய உதாரணம், தொலைக்காட்சியில் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்தும் “சொல்லுங்கண்ணே… சொல்லுங்க” நிகழ்ச்சியில் ஒரு பட்டதாரி பையனிடம் கரும்பு எங்கிருந்து வெட்டுவார்கள் என்று கேட்டதற்கு, “மரத்திலிருந்து” என்றார். மறுகாலனிய அடிமைத்தனக் கல்வி நம்மிடமிருந்து மண்ணை மட்டுமல்ல, மனிதத் தேடலையே பறித்துவிட்டது. “நான் பாக்குற வேலைக்கு இந்த அறிவு போதும், நான் சம்பாதிக்கறதுக்கு இந்த வேலை ஓ.கே.” என்பதோடு அவனுடைய சமூகத் தொடர்பை அறுத்துவிடுகிறது.

மலைநிலம் போனால் என்ன? விளைநிலம் போனால் என்ன? எந்தக் கார்ப்பரேட்டாவது ஆற்றையும், மலையையும், காட்டையும் கொள்ளையடித்தாலென்ன? கொலை செய்தாலென்ன? இயற்கையாலான தன்னையும் ஒரு நல்ல விலைக்கு எடுத்துக் கொண்டால் போதும், அதற்கேற்ற ஒரு சிலை நிலமாய் நான் கிடக்கத் தயார் என்ற இயற்கைக்கு விரோதமான மனிதனாகவும், மறுகாலனிய சிந்தனை மனிதனை மாற்றியிருப்பதுதான் ஆகப்பெரிய கொடூரம். முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக இங்கிலாந்தில் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு முதலாளிகளின் கம்பளிக்காகவும், கறிக்காகவும் செம்மறியாடுகள் வளர்க்க மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட்டது. ஸ்காட்லாந்தில் 15,000 பழங்குடி மக்கள் வாழ்விடத்தை 1,31,000 ஆடுகள் பிடித்துக்கொண்டன என்று எழுதிய ‘கற்பனா உலகம்’ என்ற நூலின் ஆசிரியர் தாமஸ்மூர் “இங்கிலாந்து ஒரு விநோதமான பூமி, அங்கு செம்மறியாடுகள் மனிதர்களை விழுங்குகின்றன” என்றார். இங்கு சேவைத்துறை ‘வளர்ச்சியில்’ கணினிகள் மனிதர்களை விழுங்குவதைப் பார்க்கிறோம்.

ஆட்டுக் கிடைகள்
“இங்கிலாந்து ஒரு விநோதமான பூமி, அங்கு செம்மறியாடுகள் மனிதர்களை விழுங்குகின்றன”

முதலாளித்துவத்தின் மூலதன வளர்ச்சியைக் குறிப்பிட வந்த கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூல் தொகுதி ஒன்றில், நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களைப் பற்றி “தாம் பாலுண்டு வளர்ந்த மார்பகத்திலிருந்து புவியின் குழந்தைகள் பிடுங்கப்படுகின்றனர். இவ்வாறு மண்ணின் மீதான உழைப்பையும் மாற்றியமைத்து, அவனுடைய இயங்கியல் உயிர்வாழ்வின் ஊற்றான மண்ணையும் மாற்றுகிறது” என இயற்கை உறவை மாற்றியமைக்கும் முதலாளித்துவ வளர்ச்சி, அதன் லாப நோக்கங்களைச் சுட்டிக்காட்டுவார். மேலும் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் முதலாளிகளின் தனிமனித லாபவெறிக்கு இரையாவதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் அவர் சொல்லும்போது, “ஒரு உயர்ந்த சமூகப் – பொருளாதார உருவாக்கத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பிற மனிதர்களை உடமையாகக் கொண்டிருப்பது எவ்வாறு அபத்தமானதாக தோன்றுகிறதோ? அது போன்றே, ஒரு நாடோ, ஒட்டுமொத்த சமூகமோ புவியின் உடமையாளர்கள் அல்ல” என்று சரியாகவே பூமியை பொதுவில் வைக்கும் கண்ணோட்டத்தை வலியுறுத்தினார்.

நம் அனைவருக்குமான இயற்கையை இழப்பதைப்பற்றி கவலைப்படாமல், இப்போதைக்கு எனக்கு எல்லா வசதிகளும் தரக்கூடிய நுகர்பொருள் கிடைக்கிறது என மனிதன் வாளாவிருந்தால் வெகு விரைவில் வாழ்வையும் இழப்பான். பல்லுயிரிகளையும், மனிதனின் புற மற்றும் அக உலகினையும் வாழவைக்கும் இயற்கையைக் பேணிக்காக்க இயற்கையை நம் தலைமுறைகள் ரசிக்கக் கற்றுத்தருவோம், அதன் மூலம் அதை காப்பதற்கான பொது உணர்வை மேம்படுத்தலாம். இழந்த இயற்கையை மட்டுமல்ல, இருக்கும் இயற்கை வளத்தையும் காத்திட வேண்டுமெனில், மனித விழுமியங்களுக்கு மட்டுமல்ல, இயற்கைக்கும் விரோதமான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை, சுரண்டும் வர்க்க அரசியலைத் தூக்கி எறிய வேண்டும், அதற்கு முதல் தேவை, இயற்கையைப் போற்றும், இயற்கையை பொதுவில் வைத்துக்காக்கும் கம்யூனிச அரசியல் கண்ணோட்டம். ஒரு வகையில் வரலாற்று விதிப்படி இயற்கை தெரிவு செய்யும் பெருவிருப்பும் கம்யூனிசம்தான். கம்யூனிசமே புவியின் கருப்பொருளாய் அமைகையில் ஐவகை நிலமும் மீண்டும் அழகுற மிளிரும், அங்கே கம்யூனிச அரசியலின் அழகியல் பார்த்து இயற்கை சிலிர்க்கும்!

– துரை.சண்முகம்

  1. Very interesting and thought provoking article. The writer must have done lot of reading to write this article. But I laughed when he concluded that communist world view will solve the problem of ecological degradation and environmental destruction. But it is far from the truth. The time when Lenin talked about progress through industrialisation we have a communist world view which believe in competing with destructive capitalism and not live in harmony with nature. Industrialisation without conservation of nature created all round destruction which we all see now. The need for sustainable development is realised only now after the effect of industrialisation on environmental destruction for which both capitalist and communist theories are to be blamed. People like vandana siva, Udayakumar and Mda Phadkar are more relevant than communist theoreticians and capitalist economists

    • @ Sundaram

      “The time when Lenin talked about progress through industrialisation we have a communist world view which believe in competing with destructive capitalism and not live in harmony with nature.”

      This is a gross misjudgement. You have to site reference.

      In capitalist mode of economy, Governments do not plan anything. Capitalists or moneyed worthies plan and control everything. In socialist economy, Governments control economic activity and not the moneyied worthies. (Where is moneyied worthies in a socialist state!). No doubt; Vandana Shiva, Udayakumar and Medha Phadkar are relevant. But their role needs supplements to create a leap change.

  2. ‘இயற்கை எனும் தாய் மனிதனுக்கு அளப்பறியா வளங்களை வழங்கியுள்ளாள்,ஆனால் முட்டாள் மூடர் கூட்டம் தனது பேராசை எனும் குணத்தால் அதை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்ற வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

  3. //மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட சமூக அமைப்பால், குறிப்பாக சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியிலான முதலாளித்துவ சமூக அமைப்பால் தங்களை மட்டும் பாதித்துக் கொள்ளவில்லை, இயற்கை அமைப்பையும் சீரழித்து, சிதைத்து வருகிறோம் என்பதை அறிவோமா?//

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், சிவந்தவன் கண்ணுக்கு சிதைந்ததெல்லாம் முதலாளிதுவதினால் தான் என்பது போல எதற்கெடுத்தாலும் முதலாளித்துவத்தின் மீதும் கார்ப்ரேட்டுகளின் மீதும் தான் அரிப்பை தீர்த்துக் கொள்வதுப்போல் இதற்க்குமா ? ஏன் வினவு நீங்கள் சொல்லும் விளக்கத்தின் படிப் பார்த்தால் உலகில் உள்ள அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இந்நேரம் பசுமை இழந்த பாலைவனமாய் தானே இந்நேரம் காட்சி அளிக்க வேண்டும். அனால் உண்மை வேறு மாதிரி அல்லவா இருக்கிறது? அமெரிக்கா, கனடா தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை ஆசியாவின் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள நீர் நிலைகள், மலை வளங்கள், சுற்றுப்புற சுழல் போன்ற அனைத்து இயற்கை சார்ந்த விடயங்களையும் நன்றாகவே பேணி பாதுகாக்கிறார்கள்.. நிலை இப்படியிருக்க இது யாருடைய பிரச்சனை. யாருடைய பிரச்சனை என்பதை விட, யாரால் ஏற்பட்ட பிரச்சனை?

    • “அமெரிக்கா, கனடா தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை ஆசியாவின் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள நீர் நிலைகள், மலை வளங்கள், சுற்றுப்புற சுழல் போன்ற அனைத்து இயற்கை சார்ந்த விடயங்களையும் நன்றாகவே பேணி பாதுகாக்கிறார்கள்.”

      This is not a fact. Only after every inch of land turned out to be desert, one has to understand the macro economic superstructure of societies then they have to wait for the opinion about the third world war by the great scientist Einstein.(When questioned about the third world war, Einstein told ‘I can not tell about WW3, but about WW4 and that will be fought with stones and sticks!)

    • யாருடைய பிரச்சனை? மனிதகுலம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயிரினங்களின் பிரச்சனை.

      யாரால் வந்த பிரச்சனை? நிச்சயமாக, உலகையே விழுங்கினாலும் பசியடங்காத, லாபவெறி பிடித்தலையும் கார்ப்பரேட்டுகளால் வந்த பிரச்சனைதான். நீங்கள் சொல்லும் முதலாளித்துவ நாடுகளில் சுற்றுச்சூழல் விதிகள் ஓரளவிற்கு உள்ளன. மக்களிடமும் விழிப்புணர்வு உள்ளது. அதனால் தான் மீத்தேன், அணு உலை உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களுக்கு எதிராக சிலராவது போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமது நாட்டு மக்களிடம் எதிர்ப்பு வரும், தாங்கள் கொடுத்திருக்கும் குறைந்தபட்ச ஜனநாயகத்தைப் பயன்படுத்திப் போராடுவார்கள். தற்சமயம் அது தேவையில்லாத தலைவலி என்பதால்தான் அங்கு சுரண்டுவதில்லை. ஏழை நாடுகளில் ஜனநாயகமும் இல்லை. மோடி போன்றவர்கள் வந்தபின் சுற்றுசூழல் சட்டங்களும் இல்லை, இருக்கப்போவதில்லை. எனவேதான் நம்மைப் போன்ற நாடுகளில் வரைமுறையற்ற இயற்கைவளக் கொள்ளை நடக்கிறது. கூடதல் விவரங்களுக்கு, பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள காடுகள், வனங்கள் அழிவு குறித்த நூல்களை வாங்கிப் படியுங்கள். கொஞ்சநாட்களுக்கு முன்புவந்த புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் தேடிப் பாருங்கள்… உண்மை புரியும்…

    • வளர்ச்சியடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் இயற்கையை நன்றாக பாதுகாக்கிறார்கள் – என்கிறார் ஆனால் எப்போதிருந்து என்பதை கவனிக்க வேண்டும். லட்சக்கணக்கான உதாரணங்களை பார்க்கலாம்.

      அமெரிக்காவில் ரெய்ச்சல் கார்சன் என்ற பெண்மணி 1962 ல் “மெளன வசந்தம்” என்ற சுற்றுபுற சூழலியல் பற்றிய ஆய்வு நூல் வெளியிட்டார், மிகுந்த பரபரப்பையும், பெரிய விவாதத்தையும், கிளப்பிவிட்டது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி பிற வகைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மையால் எவ்வளவு பெரிய பாதிப்பை சூழலியலில் ஏற்படுத்தியது என்பதை நிரூபித்தது “மௌன வசந்தம்” வேதிப் பொருட்களால் சின்ன பூச்சியிலிருந்து மரம், செடி, கொடி, நீர், கடைசியில் மனிதன்வரை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விரிவாக ஆய்ந்தது.

      “வரலாற்றில் முதல் முறையாகக் கருவறையிலிருந்து கல்லறை வரையில் ஆபத்தான வேதிப் பொருட்களின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொருவரும் உட்படுத்தப்படுகிறார்” என்று ரெய்ச்சல் கார்சன் குற்றம் சாட்டினார்.

      அமெரிக்காவில் மிகநீண்ட போராட்டத்திற்கு பின் இந்த வேதிப் பொருட்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டு சட்டம் இயற்றப்பட்டது. அபாயமான வேதிப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு மேலைநாடுகளில் தடை ஏற்பட்டது. ஆனால் நம் இந்தியா மாதிரி மூன்றாம் உலக நாடுகளின் தலையில் இம்மாதிரி ஆபத்தான கம்பெனிகள் வந்தன். அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கம்பெனி, போபாலில் பல்லாயிரம் மக்களை படுகொலை செய்து பல லட்சம் உயிரினங்களை அங்ககீனப்படுத்திய வரலாறு துயரமானது.

      அமெரிக்காவின் டெட்ராயிடு உலகின் அதிக கார் உற்பத்தி செய்யும் நகரமாக முன்பு அறியப்பட்டது. ஆனால் இன்று மனிதர்கள் வாழத்தகுதியற்ற நகரமாக கைவிடப்பட்டது. அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. (சில வருடம் முன்பு ப.சிதம்பரம் சென்னையை கார் உற்பத்தி தொழிலின் மூலம் இந்தியாவின் டெட்ராயிடாக மாற்றப்போவதாக பெருமையடித்தார்) ஒரு காரை தயாரிக்க மட்டும் குறைந்த பட்சம் 1,50,000 லிட்டர் அளவு நல்ல நீர் பயன்படுத்தப்பட்டு கழிவுநீராக பூமிக்குள் செலுத்தப்படுகிறது.

      குடிதண்ணீர் முதல் மனித உறவுகள் வரை உலகில் உள்ள அனைத்தையும் முதலாளித்துவம் விற்பனைப் பொருளாக்கியது. முதலாளித்துவம் அதீத உற்பத்தியை செய்து இயற்கையையும், மனிதர்களையும் சுரண்டி உயிர் வாழ்கிறது என்பது எவ்வித சிவப்பு பார்வையும் இன்றியே அவதானிக்கலாம்.

      கம்யூனிசம் என்பது திட்டமிட்டு மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்யவே உற்பத்தி செய்கிறது.

      லெனின் தலைமையிலான சோவியத் அரசு 1918ல் நாட்டின் அனைத்து காடுகள், நீராதாரங்கள் மற்றும் கனிமவளங்கள் தேசத்தின் சொத்தாக அறிவித்தது. காடுகள் பாதுகாப்பிற்குரிய காடுகள் மற்றும் உபயோகப்படுத்துவதற்குரிய காடுகள் பிரிக்கப்பட்டன. பாதுகாப்பிற்குரிய காடுகளில், அரிப்புக்களை கட்டுப்படுத்துவது மற்றும் நீராதாரங்களை பாதுகாப்பதே இதன் நோக்கம்.

      சிவப்பு சிந்தனை என்பது மனித குலத்தின் மீது மட்டுமல்லாமல் இயற்கையின் மீதும் அக்கரையுள்ள தத்துவம்.

      இரணியன்.

    • ரெபேக்கா மேரி,

      சிவப்பு நிறத்தக் கண்டா உங்களுக்கு அவ்வளவு கசப்பா இருக்கு அதுக்கு நாங்க எண்ணப் பண்ண. வினவுல எவ்வளவோ கட்டுரைகள் இங்க இருக்குற இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்பதைப் பற்றி எழுதியிருந்தாலும் சில பேரோட காமாலைக் கண்களுக்கு ஏதும் தெரிய மாட்டேங்குதே. அமெரிக்கா அவனோட நாட்டக் கொள்ளையடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆச்சு. அதுக்கு தான் ஆசியா ஆப்ரிக்க நாடுகள் இருக்கே. போபால் கத உங்களுக்கு தெரியாமலா இருக்க்கும்.

  4. சங்க கால கவிஞர்கள் வெறும் இன்பவாத கவிராயர்கள் இல்லை என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.. மற்ற தோழர்களின் கருத்து என்ன..?! லாபவெறியானது பார்ப்பனீயத்துடன் கைகோர்த்துதான் ஆப்ரிக்காவையும் அரேபியாவையும் சுரண்டுகிறது என்று ஒரு இந்துமத உதாரணத்துடன் நிறுவக்கூடிய கற்பனை வளம் படைத்த தோழர் தென்றலின் கருத்து என்னவோ..?!

    • கண்டிப்பாக அம்பி! வேத காலத்தில் தஸ்யுக்களின் நீர் நிலையைத் தகர்க்க இந்திரனை அம்பு விடச்சொல்லியும், ஏராளமான கால்நடைகளை யாகத்தில் ‘ சுவாகா’ செய்தும் ஆரியப்பார்ப்பனியம் சோம, சுரா, கஞ்சாவால் சுற்றுச்சூழலுக்கு தர்ப்பனம் செய்தது என்னவோ உண்மைதான்!

      இரணியன்

  5. சமீபத்தில் வாசித்த கட்டுரைகளில் மிகச் சிறப்பான கட்டுரை.

    எனினும், ‘சாக்கடை இன்ஸ்பெக்டரான’ எனது மூக்கு சில இடங்களில் வேர்க்கத்தான் செய்தது.

    கட்டுரையாளர் கவனத்திற்கு,

    முதலாவதாக ,பொருட்செரிவான கட்டுரை என்பதால் அதன் நடை ஆழம் கொண்டதாகவும் நிதானமான வாசிப்பைக் கோருவதாகவும் இருத்தல் சரி தான். எனினும், வாக்கிய அமைப்பை மேலும் எளிமையாக்கியிருந்தால் எம்மைப் போன்ற முகநூல் தலைமுறையினருக்கும் வாசிக்க எளிமையாக இருந்திருக்கும் (நாங்கள் தானே உங்கள் இலக்கு?)

    உதாரணம் இந்த பத்தி –

    //அன்றைய இயற்கையை நமக்கு அறியத்தருகிற இந்த இலக்கியக் காட்சிகளில் எழுதியவர்களின் கற்பனையும், உவமைகளும் கலந்தும், மிகுந்தும் இருந்தாலும் தனித்தனியாக தொடர்பற்றது போல நாம் காணும் இயற்கையின் இயக்கத்தை ஒருங்கே நம் மனக்கண் முன் நிறுத்தும் காட்சிப் படிமங்களில் அக்காலத்திய மனிதனின் இயற்கை அறிவும், உணர்வும் நம்மிடம் கற்றலையும், இயற்கையை பேணுதலையும் வேண்டுகின்றன. முதலாளித்துவ வணிகக் கொள்ளைக்காக ஊட்டியில் சூட்டிங் வைத்தாலும் உயர்ந்து நிற்கும் இயற்கை வனப்பை அவுட் ஆஃப் போக்கசிலும், திறந்து கிடக்கும் பெண்களின் சதைகளை குளோசப்பிலும் காட்டுவதிலேயே குறியாய் இருக்கும் இன்றைய ‘வளர்ந்த’ நவீன கலைஞர்களைப் பார்க்கையில் அன்றைய அக ஒழுக்க விழுமியங்களை இயற்கையை துணைக்கழைத்துக் கொண்டு மாந்தனை உலகத்தின் ஒரு பகுதியாக நினைவுறுத்தும், அந்த இயற்கையின் தூண்டுதலைப் பெற படித்துதான் பாருங்களேன்.//

    மொத்த கட்டுரையையும் தனியே பிரிண்ட் அவுட் எடுத்து இரண்டு மூன்று முறை படித்த பின் தான் உள்ளடக்கத்தின் சுவையை ருசிக்க முடிந்தது 🙂

    இரண்டாவதாக, சில இடங்களில் கவித்துவமான தோற்றம் தெரிவதற்காக அலங்காரமான சொற்பிரயோகம் (வாக்கியக் கட்டுமானம்) பயன்படுத்தப்பட்டிருந்தது. இயற்கைப் பற்றி பேசும் இடத்தில் அது கொஞ்சம் செயற்கையாக இருந்தது.

    மூன்றாவதாக, கட்டுரையில் நான் அதிகம் இரசித்தது பழைய தமிழ் இலக்கியங்களில் உள்ள இயற்கையைக் குறித்த நுண்ணுணர்வு. இதெல்லாம் என்னைப் போன்றவர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இந்த அம்சம் கொஞ்சம் கூடுதலாக இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும். அதே போல் பழைய செய்யுள் பகுதிகளில் வரும் வார்த்தைகளுக்கான அருஞ்சொற்பொருளை அடைப்புக்குறியினுள்ளோ கீழே அடிக்குறிப்பாகவோ கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.

    குறைகள் வெகு சில தான்.. மற்றபடி கட்டுரை வாசித்த பின் புல் மீல்ஸ் சாப்பிட்டது போல் இருந்தது 🙂

    நண்பர் துரை.சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போல் நிறைய எழுதுங்கள்.

  6. சங்க இலக்கியத்தில் அள்ளிப் பருக எண்ணற்ற இயற்கை இன்பங்கள் இருக்கின்றன.அகம்,புறம்,கலி மற்றும் காப்பியங்களில் பயணித்தால் அள்ளி மாளாது.கட்டுரையின் களத்தேர்வு சிறப்பானது.தொடக்கத்தில் இருந்த கவிஞரின் கவித்துவ நடை இறுதிவரை தொடரவில்லை.உரை நடையும் எளிமை குன்றியுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க