privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா மாதாவை பெரியாரோடு ஒப்பிடுவது தர்மமா இந்துவே ?

அம்மா மாதாவை பெரியாரோடு ஒப்பிடுவது தர்மமா இந்துவே ?

-

மிழக மக்களின் கண்ணீர் உச்சநீதிமன்றத்தால் துடைக்கப்பட்டு ஆண்டவனின் ஆனந்தக்கண்ணீர் மழையாக பொழிந்த ஒரு நாளில் அந்தக் கட்டுரை இந்து தமிழில் (தி இந்து – ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?) வெளியானது. காய்கறிகளோடு கருவாடு விற்பதைக்கூட சகித்துக்கொள்ளாத இந்துவா இப்படி செய்தது? தன் அலுவலகத்தில் சைவம் சாப்பிடுவோர் அசைவம் சாப்பிடுவோரைக் கண்டு மனம் கோணக்கூடாது (அல்லது மனம் மாறிவிடக்கூடாது) என தர்மத்தின் வழி நின்று சிந்தித்த இந்துவா இது? தங்கள் கம்பெனி ஓனரையும் அதிகாரிகளையும் விரட்டி விரட்டி கைது செய்ய முயன்றவர் என்றாலும் ஜெயாவை அம்பலப்படுத்தாமல் அமைதிகாத்த இந்துவா இது என தேசபக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?
மனின் தலையில் பிறந்தோரால் நடத்தப்படும் இந்துவா இப்படி செய்வது? ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என சொல்ல இவர்களுக்கு எப்படி மனது வந்தது?

நீசர்கள் கூடித்திரியும் பேஸ்புக்கில் இது எழுதப்பட்டிருந்தால்கூட சகித்துக்கொள்ளலாம். பிரம்மனின் தலையில் பிறந்தோரால் நடத்தப்படும் இந்துவா இப்படி செய்வது? ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என சொல்ல இவர்களுக்கு எப்படி மனது வந்தது? சாம்பலை கௌரவிக்க வேண்டுமானால் அதை விபூதி என்று சொல்லித்தான்தான் புனிதப்படுத்த வேண்டும், அதைவிட்டுவிட்டு ஆன்டிபயாடிக் என்று சொன்னால் விவரமானவன் யாராவது அதை சாம்பல் என்று நிரூபித்துவிடமாட்டானா? ஜெயலலிதாவை ஆதரிக்கவும் பெரியாரை அவமானப்படுத்தவும்தான் தினமலர் எனும் பத்திரிகையே செயல்படுகிறது. அவர்கள் இப்படியா நடந்துகொள்கிறார்கள்!!!

வாஸ்து, ஜோதிட, ஜாதக, பெயர்மாற்ற நிபுணர்களை கௌரவித்து வாழ்வளித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் அவர் சுற்றத்தாரும் எங்கே, வேறு வேலையே தெரியாத இந்த அப்பாவி நிபுணர்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளை பரப்பிய பெரியார் எங்கே… இந்த இருவரையுமா ஒப்பிடுவது??

தனக்காக ”செத்தவர்கள்” இருநூற்று சொச்சம்பேருக்கு தலா 3 லட்சம் கொடுத்த வள்ளல் ஜெயலலிதாவை ஒவ்வொரு காசுக்கும் கணக்கு பார்த்து வெட்டித்தனமாக கல்லூரிகள் கட்டிய கருமி பெரியாரோடா ஒப்பிடுவது?

தன் அரசியல் விரோதிகளை சட்டசபையிலேயே தரம் தாழ்ந்து விமர்சிக்கவைக்கும் ஜெயாவின் வீரத்தில் கால்பாகமேனும் பெரியாருக்கு இருந்திருக்குமா? பத்து வயது பையனைக்கூட வா போ என ஒருமையில் கூப்பிடும் தைரியமற்றவரல்லவா பெரியார்!!

பத்து நிமிடம் தன்னைப் பற்றிய துதிபாடலை கேட்கும் பொறுமை இருந்திருக்கிறதா பெரியாருக்கு? ஆனால் பக்கம் பக்கமாக தன்னை புகழ்ந்துரைத்தாலும் அதனை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளும் பொறுமையும் பக்குவமும் ஜெயலலிதாவுக்குத்தானே உண்டு?

ஊரே பஞ்சத்தில் இருந்தாலும் சர்வ அலங்காரத்தோடு காட்சி தந்தவர்கள் நம் இந்து தெய்வங்கள். திரண்ட சொத்துக்கள் இருந்தபோதிலும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணித்த பாமரர் பெரியார். ஒரு கல்யாணம் காதுகுத்துக்குக்கூட தனி விமானத்தில் வந்துபோகும் ஜெயலலிதாவை கடவுளோடு ஒப்பிடாமல் கடவுள் இல்லையென சொன்ன பெரியாரோடு ஒப்பிட்டது நியாயமா.. பதில் சொல் இந்து பதில்சொல்!!!

ஜெயா அமைச்சர்கள்
காலில் விழுவதும் கால்மேல் கால் போடாமல் இருப்பதுமே இந்துப் பண்பாட்டின் பிரதான விதிகள்

செலவு செய்ய வக்கில்லாவிட்டாலும் ஆடம்பரமாக கல்யாணம் செய்துகொள்ள விரும்பிய பெருமாளுக்கு காசை அள்ளி இறைத்தவன் குபேரன். வாழ்நாளில் வேலையென்று ஒன்றை செய்திராத சுதாகரனின் ஆடம்பரத் திருமண ஆசையை நிறைவேற்றிவைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயாவை குபேரனோடு ஒப்பிடாமல் தாலிகூட இல்லாமல் கஞ்சத்தனமாக கல்யாணம் பண்ணிக்கொள்ள சொன்ன பெரியாரோடு ஒப்பிடுவது என்ன நியாயம் இந்துவே?

எதிர்த்துப் பேசிய நக்கீரனுக்கு குஷ்டம் வரவைத்தான் சிவன். வழியை மறித்தான் என்பதற்காக மனைவியின் மகனான பிள்ளையாரின் தலையை வெட்டினான் சிவன். அந்த அதிகார மனம்தான் அவன் பக்தர்களை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தன்னுடைய பத்திரிகையிலேயே தனக்கு ஏற்பில்லாத கருத்துக்களை அனுமதித்த தலைமைப் பண்பில்லாதவர் பெரியார். தன்னைக் கேள்வி கேட்கும் பக்தன் ஒருவன்கூட இல்லாத கூட்டத்தின் தலைவர் ஜெயா. அந்தவகையில் சிவனைவிட மேலானவர் ஜெயலலிதா. அவரையா மானிடனான பெரியாரோடு ஒப்பிடுவது?

நாட்டு மக்களிடம் வரிமேல் வரிபோட்டு சுரண்டினாலும், தன்னை துதிபாடி வயிறு வளர்க்கும் புலவர் பெருமக்களுக்கு வாரி வாரி வழங்கியவர்கள் இந்தியாவின் பேரரசர்கள். நம்பிய கோடானுகோடி மக்களை நாதியற்றுப்போகவிட்டாலும்கூட தன் கோயிலில் மணியாட்டியவனையும் தன்னை புகழ்ந்து போற்றியவர்களையும் கௌரவிக்கத் தவறாதவர்கள் நம் தெய்வங்கள். பெரியாரோ துதிபாடுதல் எனும் கலையையே ஒழித்துக்கட்டப் பார்த்தவர். தன் துதிபாடிகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொள்ளும் ஜெயலலிதாவை பெரியாரோடு ஒப்பிட கல்நெஞ்சக்காரனாலும் இயலாதே??

காலில் விழுவதும் கால்மேல் கால் போடாமல் இருப்பதுமே இந்துப் பண்பாட்டின் பிரதான விதிகள். அந்த விதிகளை மீட்டெடுத்து காத்தருள்பவர் ஜெயா. பெரியாரோ இத்தகைய ஹிந்துப் பண்பாட்டினை முழுமூச்சோடு எதிர்த்தவர். ஒரு பண்பாட்டுக் காவலரை கலாச்சார விரோதியோடு ஒப்பிடுவது பண்புள்ளவர்கள் செய்யும் காரியமா?

ஜெயா ஸ்ரீரங்கத்தில்
“விதிகளை காற்புள்ளி அரைப் புள்ளிகூட மாறாமல் பின்பற்றும் ஜெயாவை இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத பெரியாரோடு ஒப்பிட்டு எங்கள் மனங்களை புண்படுத்தாதே இந்துவே”

கிருஷ்ண பரமாத்மா பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டபோது சேலை மட்டும்தான் கொடுத்தான். அந்த சம்பவத்தை தடுக்கவும் இல்லை, தடுக்கும் ஆற்றலை சபையோர் யாருக்கும் அருளவும் இல்லை. அந்த தெய்வாம்சத்தின் நீட்சிதான் அம்மா. இருளர் இனப்பெண்கள் போலீசாரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டபோது அவர் 5 லட்சத்தை அள்ளி வழங்கினார், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் விதிக்கிணங்கி அந்த போலீஸ்காரர்களை கைதுகூட செய்யவில்லை. இன்றைக்கு ஷிபான் சேலை மீட்டர் முப்பது ரூபாய்க்குகூட கிடைக்கிறது. ஆகவே இன்றைக்கு யார் நினைத்தாலும் கிருஷ்ண பரமாத்மாவாகிவிட முடியும். ஆனால் யார் நினைத்தாலும் 5 லட்சம் கொடுக்கும் அம்மாவாகிவிடமுடியாது. ஆகவே ஜெயலலிதாவோடு ஒப்பிடும் தகுதியை கிருஷ்ணனுக்கு வேண்டுமானால் கொடுக்கலாமேயன்றி பெரியாருக்கு ஒருக்காலும் தரமுடியாது.

ஊர் மக்களில் பெரும்பாலானவர்கள் குடிசையில் இருந்தாலும் சகல சௌகர்யத்தோடு பெருங்கோயில்களில் வசிப்பதே இந்துக் கடவுள்களின் லட்சணம். பல்லக்கில்லாமல் அவர்கள் எப்போதும் பயணிப்பதில்லை. அவர்கள் யாரை தண்டிப்பார்கள் யாருக்கு பதவி கொடுப்பார்கள் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. எல்லோரும் என் காலடியில் வீழ்ந்துகிடந்து வாய்ப்புக்காக மன்றாடியபடி இருங்கள் என்பதே அவர்களது தர்மம். அவர்கள் எப்போதும் சாமானிய மக்களை தங்களிடமிருந்து தள்ளியே வைத்திருப்பார்கள்.

அவர்கள் பூஜையை விரும்புபவர்கள், விவாதத்தை அல்ல. அவர்கள் நியாயத்தைப் பேசுபவர்கள் அல்லர், மாறாக அவர்கள் பேசுவதே நியாயமென கொள்ளப்படும். தனக்காக அடுத்தவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதையும், ஊனமாக்கிக் கொள்வதையும், மொட்டையடிப்பதையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள் கடவுளர்கள்தான். இந்த விதிகளை காற்புள்ளி அரைப் புள்ளிகூட மாறாமல் பின்பற்றும் ஜெயாவை இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத பெரியாரோடு ஒப்பிட்டு எங்கள் மனங்களை புண்படுத்தாதே இந்துவே என கடுமையாக எச்சரிக்கிறோம்.

இங்ஙனம்,

நாமக்காரவா அசோசியேஷன்.
அசைவ துவேஷ பஜனா மண்டலி.
லெட்டர் டு எடிட்டர் சேவா சங்.
தராதரப் பிரச்சார சபா.
பிரம்ம ஜீவ தர்ம சன்சாத் டிரஸ்ட்.
மீடியா பார்ட்னர் : மேன்மக்கள்மேன்மக்களே.நெட்

– இசையவன்