privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆவின் பாலுக்காக ஆர்ப்பாட்டம் - அதிமுக ரவுடிகள் எதிர்ப்பு

ஆவின் பாலுக்காக ஆர்ப்பாட்டம் – அதிமுக ரவுடிகள் எதிர்ப்பு

-

  • ஆவின் பால் விலை உயர்வு
  • ஏழை எளிய மக்களின் மீது விழுந்தது இடி!
  • ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்யும் சதி!

என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புத் தோழர்கள் கடந்த 26-ம்  தேதி முதல் சென்னையில் பல்வேறு மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பேருந்து, ரயில்களில் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதால் இருக்கும் அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் இந்த வேளையில், வழக்கம் போல் ஓட்டுக் கட்சிகள் தங்களுடைய நாடகத்தை கட்டவிழ்த்து விட ஆரம்பித்துவிட்டனர். மக்களின் தவிப்பை, பல பச்சிளம் குழந்தைகளின் பசியை அவர்களுடைய ஓட்டுக்கட்சி அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.க., தேமுதிக, பாஜக, பாமக என மாறி மாறி, ’மாபெரும் போராட்டம்’ நடத்தப் போவதாக விளம்பரம் செய்து கொண்டு இருக்கும் இவர்கள், பால் விலையேற்றத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை சொல்லவுமில்லை, சொல்லப்போவதும் இல்லை என்பதோடு திட்டமிட்டே மூடி மறைக்கவும் செய்கின்றனர். காரணம், இந்த விலை உயர்வுக்கு அடிப்படையான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதால் தான்.

தி.மு.க ஆட்சியில் இதைத் தான் செய்தனர். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒரு பக்கம் கெஞ்சிக் கொண்டிருக்கும் விஜயகாந்த், ராமதாஸ் என யாராக இருந்தாலும், இதைத் தான் செய்வார்கள். மக்களை அரசியலில் இருந்து விலக்கி வெறும் பார்வையாளர்களாக வைத்துவிட்டு இவர்கள் நடத்தும் நாடகத்தை மக்களிடையே தோலுரிக்கும் விதமாகவும், இந்தக் கட்சிக்கு, அந்தக் கட்சிக்கு என மாறி மாறி ஓட்டுப்போட்டு முட்டாளாவதும், ஒரு பக்கம் வரி, கட்டணம், விலை உயர்வு என மக்கள் உழைப்பைச் சுரண்டுவதையும், மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களான மக்கள் சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பது மூலமும் கொள்ளையடிக்கும் சட்டமன்றம் – பாராளுமன்றம், அதிகாரிகள் – அரசியால்வாதிகளைக் கொண்ட இந்த அரசமைப்பு முறைக்குள்ளேயே தீர்வை தேடக் கூடாது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட நம்முடைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள உழைக்கும் மக்களாகிய நம் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். இத்தகைய மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டக் கமிட்டிகளை உருவாக்க வேண்டும். இத்தகைய சமூக மாற்றத்திற்காக மக்கள் வீதிக்கு வந்து போராட அமைப்பாகத் அணிதிரள வேண்டும் என்ற கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் செஞ்சட்டை அணிந்த தோழர்கள் மக்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

தொடர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இக்குழுத் தோழர்கள் பூந்தமல்லி, கல்லறைத் தோட்டம், மாதவரம், மணலி, ஆவடி, அம்பத்தூர், பாரிமுனை, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து வருகின்றனர்.

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்றதும், 50 வயது மதிக்கத்தக்க ஒரு தாய் “எவனவனோ கொள்ளை அடித்து விட்டுப் போகிறான், அதற்கு தண்டனையை நம்ம தலையில் சுமத்துகிறானுங்க பாவிங்க இத விடக்கூடாதுப்பா” என்றார் அனல் பறக்கும் கோபத்துடன்.

மற்றொரு அம்மா, “எனக்கு 4 குழந்தைகள் இருக்கு, அதில் ஒன்று கைக்குழந்தை, பால் முக்கியமாக கொடுத்தாக வேண்டும், இப்போ விலை ஏறி போச்சி, இனி நான் என்ன செய்வேன். விலையை குறைத்தால் நல்லா இருக்கும். ஆனால் யாரு இத செய்வாங்க” என்கிறார் ஏக்கதோடு.

இன்னொரு பெரியவர் “கொள்ளை அடிச்ச மாதவரம் மூர்த்தி மற்றும் வைத்தியநாதனின் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே எல்லாம் சரி ஆகிடும்மா” என்றார் தீர்க்கமாக.

மாதவரம் பகுதியில் வயதான முதியவர் ஒருவர், “டீயும் வெற்றிலையும் தான் என் உணவு, இப்ப டீ க்கு வேட்டு வைச்சிட்டானுங்க, இனி வெற்றிலை மட்டும் தான் வேறு வழி இல்லை” என்றார்.

பூந்தமல்லியில் டீ கடைக்காரர் ஒருவரிடம் பேசும் போது, “பால் விலை ஏற்றத்தால் டீ விலையை ஏற்ற எனக்கு இஷ்டம் இல்லை. மக்கள் வயிற்றில் அடிப்பது கஷ்டமாக உள்ளது. இருந்தாலும் இப்படியே போனால் வேறுவழி இல்லை” என்று கூறினார்.

சென்ட்ரலில் ஒருவர், “மாட்டுத் தீவனம் ஊழல் நடந்தபோது, அதற்கு காரணமாக இருந்த லல்லு பிரசாத் யாதவிடம் கேட்கும் போது, மாடு தின்றுவிட்டது என்று ஏளனமாக பதில் சொன்னார், இப்போது ஆவின் பால் ஊழலைப் பற்றி கேட்டால், பாம்பு குடித்துவிட்டது என்று தான் சொல்வாங்க, எவனும் வாய் திறக்க மாட்டான்” என்றார்.

ஆவின் பாலில் கலப்படம் செய்து கொள்ளையடித்த அ.தி.மு.க கொள்ளைக் கூட்டத்தின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் பகுதியில் தொடர்ந்து கடைகளில் பேசிக் கொண்டே வரும் போது, அருகில் இருந்த வீட்டிலும் பேசலாம் என்று சென்றோம்.

கருணாகரன் MA,.BL,. என்ற பெயர் பலகையைப் பார்த்ததும், ஒரளவு ஜனநாயக கருத்து இருக்க வாய்ப்புள்ளது, என்று நினைத்துச் சென்று பேசினோம். நாம் கொடுத்த பிரசுரத்தை படித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில், “மூர்த்தி கொள்ளை அடித்தார் – னு உனக்கு தெரியுமா? எங்கடா பார்த்திங்க, நீங்க யார் ஏரியால வந்து யாரைப் பத்தி பேசுறீங்க, எங்கிட்ட வந்து எங்க அண்ணனைப் பத்தியே பேசுறீங்களாடா?” என்று அசிங்கமான வார்த்தைகளைச் சொல்லி பேசினார்.

நாங்கள், “அசிங்கமாக பேசுவதை முதலில் நிறுத்து. ஊரறிந்த கொள்ளையைப் பற்றி எங்க நடந்தது, நீ பாத்தியானு கேக்குறீங்க, தவறான ஆளிடம் வந்து விட்டோம், கொள்ளையடித்தவனிடம், கொள்ளை நடந்துவிட்டது என்று பேசி பயனில்லை. நாங்கள் மக்களிடம் சொல்கிறோம், நீங்களூம் மக்களிடம் சொல்லுங்கள். எது உண்மை என்று மக்கள் சொல்லட்டும்” என்று பதிலளித்துவிட்டு மக்களை சந்திக்கச் சென்றோம்.

நாம் வெளியில் வந்து கொண்டிருக்கும் போதே, “போலீசுக்கு போன் பண்ணி உங்களை என்ன செய்கிறேன் பாருங்கடா, எங்க ஆளுங்களைக் கூப்பிடுறோம் இருங்கடா” என்று பேசிக் கொண்டிருந்தார்(ன்). நாங்கள் இந்த மிரட்டல்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் பேசிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் அ.தி.மு.க ரவுடிகள் வந்து ஒன்றும் தெரியாதவர்கள் போல், “என்ன பேசுறீங்க” விசாரித்தனர். சொன்னவுடன், “யார் ஏரியாவில் வந்து, யாரைப் பற்றிடா பேசுறீங்க எங்க அண்ணன்கிட்ட பேசுங்கடா” என்று ஒரு போனை கொடுத்தனர்.

வேறு வழியின்றி வாங்கினால் எதிர்முனையில் மாதவரம் மூர்த்தி, “ஏவ் நீங்க யாருங்கயா எங்க வந்து என்ன பேசுறீங்க?” என்று மிரட்டும் தொனியில் பேச, எமது தோழர், “முதலில் மரியாதையா பேசுங்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அதிமுக குண்டர்களில் ஒருவன் கோழைத்தனமாக பின்புறமாக வந்து எமது தோழரை அடித்தான். அருகில் இருந்த போலீசு , அ.தி.மு.க காரனைப் போல் வேடிக்கைப் பார்த்து நின்றது. அரசியல் உறுதிகொண்ட எமது தோழர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த அ.தி.மு.க காலியை அம்பலப்படுத்தத் தொடங்கியதும், அப்போது தன் கடமையை ( அதிமுக ரவுடிகளை பாதுகாக்கும் கடமையை ) செய்ய ஆரம்பித்து அங்கிருந்து அ.தி.மு.க குண்டர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றது போலிசு.

மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பது; பாலில் கலப்படம் செய்வது; பேருந்தைக் கொளுத்துவது; கடைகளை சூறையாடுவது அனைத்தும் சமூக விரோத செயல்கள். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் இதெல்லாம் ’புனிதமான’ காரியங்கள். அ.தி.மு.க கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருப்பதற்கான முதல் தகுதியே சமூக விரோதியாக இருக்க வேண்டும் என்பது தான். அதிமுக எனும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவியான ’ஜெயில்’ லலிதா வின் ஆசியோடு எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிவரை உயர்ந்த மாதவரம் மூர்த்தி வேறு எப்படி இருக்க முடியும்? ஆனால், எமது தோழர்களோ இந்த ரவுடித்தனத்திற்கும் சேர்த்து முடிவுகட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கிரிமினல்கள் ஆவின் பாலில் கலப்படம் செய்து கொள்ளையடித்தது, அதனைத் தொடர்ந்து, கொள்ளையை மூடி மறைத்து விலையேற்றத்தை தங்கள் தலையில் திணிப்பது ஆகிய உண்மையை தெரிந்துகொள்ளும் போது மக்கள் கொதிக்கிறார்கள். ஆனால், இதுகாலம் வரை முதலாளிகள் நலன் கொண்ட இந்த அரசமைப்பு முறையை பாதுகாக்க இந்த அரசு ஏவி வரும் அடக்குமுறைகள் காரணமாகவும், மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள், சொரணையற்றவர்கள், கேனையர்கள், காசு கொடுத்தால் எதையும் செய்வார்கள் என்று ஆட்சி அதிகாரம், பதவி சுகம், சொத்து சேர்ப்பது ஆகியவற்றிற்காக ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகள் பிழைப்புவாதமாக – காரியவாதமாக – சந்தர்ப்பவாதமாக நடத்திவரும் கேடுகெட்ட ஓட்டுச்சீட்டு அரசியலால் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.

இக்கொடுமைகளுக்கெல்லாம் காரணமே இந்த அரசமைப்பு முறைதான், அதை அடித்து நொறுக்கி மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உண்மை அவர்களை பற்றிக்கொண்டு வருகிறது. “ஒரு கருத்து மக்களை பற்றிக்கொள்ளுமானால் அது பவுதீக சக்தியாக மாறும்’’ என்ற பாட்டாளி வர்க்க ஆசான் கார்ல் மாக்ஸ் சொன்ன வழியில் எமது பிரச்சார பயணம் தொடர்கிறது.

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 1, 2014 அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தஞ்சையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க