Monday, August 15, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !

-

சென்னையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கபட நாடகத்தை தோலுரித்த புமாஇமு!

ப்போதும் தமிழக அரசு முதலாளிகளுக்காகத்தான் செயல்படுகின்றது. இதற்கு எத்தனை மேக்கப் போட்டாலும் உழைக்கும் மக்களின் நலனுக்காக செயல்படுவதாக நடிக்கக்கூட முடியாது என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் நிரூபித்துவிட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள்
சென்னையில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் (படம் : இணையத்திலிருந்து)

எல்லா அத்தியாவசியத் தேவைகளின் விலையும் விசம் போல் ஏறிக்கொண்டு இருக்கின்றது. தினம் ஒரு விலைவாசி உயர்வு மக்களை கொன்று குவித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால், மக்கள் என்னவோ தாங்களாகவே விரும்பி இந்த விலைவாசி உயர்வை ஏற்பது போன்ற மாயையை உருவாக்க, ஒவ்வொரு ஊரிலும் மின்கட்டண உயர்வை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டு இருக்கின்றது மின்சார ஒழுங்கு முறை ஆணையம்.

31.10.2014 அன்று ஈரோட்டில் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். அதற்கு முன் கடந்த 24-ம் தேதி சென்னையில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நாடக திருவிழாவில் அதன் மேக்கப்பை கொஞ்சம் சுரண்டிப் பார்க்கலாம்.

இடம்: சென்னை , பாரிமுனை – ராஜா அண்ணாமலை மன்றம்

பெயரோ கருத்துக் கேட்பு கூட்டம், ஆனால், மக்கள் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது என்பதற்காகவே பெரியளவில் முன்னறிவிப்பு விளம்பரங்களும், மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தாத ரகசியக் கூட்ட அரங்கமாக இருந்தது. மீறி வருபவர்களும் சுதந்திரமாக கருத்து சொல்லக்கூடாது என்பதற்காகவே குவிக்கப்பட்டிருந்து காக்கிகள் பட்டாளம். (பலத்த போலீசு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது) இதுக்கு பேர்தான் ஜனநாயகபூர்வமான கருத்துக்கேட்புக் கூட்டமாம்.

அரங்கத்தின் முதல் வாயிலில் நின்று காக்கிகள் வரவேற்க, பதப்படுத்தப்பட்டு அட்டைப் பெட்டியில் வைத்த பழங்களை போல் அரங்கத்துக்குள் ஆணையத்தின் உறுப்பினர்கள், அதிகாரிகள், மேடையில் வீற்றிருந்தார்கள்.

தங்களுடைய கருத்துக்களை கூறுவதற்காக மக்கள் அலைகடலென திரண்டு வருவார்கள், அரங்கத்தின் தொள்ளாயிரம் நாற்காலிகளும் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள், மின்வாரிய அதிகாரிகளைத் தவிர வந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐக்கூட தாண்டி இருக்காது. அவர்களும் எம்மைப் போன்று ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள், சில சங்கங்களைச் சார்ந்தவர்கள். இதுதான் கோடிக்கும் மேற்பட்ட மக்களும், ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களும் உள்ள மூன்று மாவட்ட மக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டமாம்! ஒருவேளை ஒழுங்குமுறை ஆணையத்தின் புள்ளி விவரப்படி, மூன்று மாவட்ட மக்கள் தொகை 100 ஆக இருக்குமோ என்னவோ? என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தியது. இது நகைச்சுவைக்காக இல்லை. யாருக்கும் கட்டுப்படாத, ஏன், அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது. ’தரம் என்றால் தனியார், அதிகாரிகள்தான் சரியானவர்கள்’ என நம்பச் சொல்லும் மெத்தப் படித்த மேதாவிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்.

கட்டண உயர்வுக்கு ஆதரவாகவும், தனியார்மயத்திற்கும், ஆணையத்துக்கும் ஆதரவாகவும் பேசினால் 20, 30 நிமிடம் வரை கூட பேசலாம். எதிராகப் பேசினால் உடனே முடிக்க வேண்டும். பேசுபவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் ஆணையத்திடமிருந்து பதில் இல்லை.

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் தலைவர் சா. காந்தி பேசும்போது, “மின்துறையில் ரூ 24,309 கோடிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் யார்? நான் அதுபற்றி புகார் கொடுத்தேனே அதை விசாரித்தீர்களா? அதுபற்றி பேசாமல் கட்டணத்தை உயர்த்தினால் எப்படி?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையம் பதில் சொல்லமுடியாதாம். இதை அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றனர் ஆணையத்தின் உறுப்பினர்கள். இதுதான் ஜனநாயக முறைப்படி நடக்கும் கருத்து கேட்கும் கூட்டத்தின் யோக்கியதை. அந்த துறை சார்ந்த இவர் கேட்கும் கேள்விக்கு இப்படி என்றால் மற்றவர்கள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

40-வது நபராக எங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. காலையில் இருந்து மதியம் வரை 20 பேர்கள்தான் கருத்துக்களைக் கூறினர். மாலை 5 மணிவரை நடக்கும் கூட்டத்தில் எங்கள் கருத்துக்களை கூறமுடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

பக்கத்தில் இருந்தவரிடம், “ஒரு வேளை இன்று பேசமுடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக நாளைக்கும் கூட்டம் நடத்துவார்களா?” என்ற கேட்டோம்.

அதற்கு அவர் “நீங்க வேற சார் இன்றோடு கூட்டத்தை முடித்துக்கொள்வார்கள். அனைவரும் கருத்துச் சொல்ல வேண்டுமென்பது அவர்கள் நோக்கமல்ல, ஒரு பேருக்குத்தான் இதை நடத்துகிறார்கள். இதுதான் இதற்குமுன்பும் நடந்தது” என்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தும் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கைப் பற்றி சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.

பிறகு உணவு இடைவேளை முடிந்து அரங்கிற்குள் வந்த நம்மை ஒருவர் அழைத்தார். “நீங்க யார்?” என்று கேட்டார்.

நாம்,” பு.மா.இ.மு” என்றவுடன்,

“ம.க.இ.க வைச் சார்ந்தவர்களா? என்றார்.

“ஆமாங்க” என்றதும்

“சிவப்புச் சட்டையைப் பார்க்கும் போதே தெரியுது” என்று சொல்லிவிட்டு ‘’ ஆழமாக பேசுங்க, சார் விடாதீங்க’’ என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டினார்.

ஒரு வழியாக நாற்பதாவது நபராக எங்களை அழைத்துவிட்டார்கள்.

“இங்கு நடப்பது மக்கள் கருத்து கேட்பு கூட்டமா? இல்லை நாடகமா? 3 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை 100 தானா? உண்மையில் கருத்து கேட்க வேண்டும் என்றால் மக்கள் இருக்கும் இடத்தைதேடிச் சென்றுதானே கருத்துகேட்க வேண்டும்? அப்படி ஏன் செய்யவில்லை?

மின்துறையில் ஏற்பட்ட நட்டத்திற்கு யார் காரணம்? தனியாருக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் மின் அளவு எவ்வளவு, அவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு, அதை செலுத்தினார்களா? இல்லையா?

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது, பன்னாட்டு கம்பெனிக்கு மானியவிலைக்கு மின்சாரம் வழங்குவது, இதனால் ஏற்படும் நட்டத்தை மக்கள் தலையில் கட்டண உயர்வு என்ற பெயரில் திணிப்பது. இதற்கெல்லாம் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினோம்.

அங்கேயே பதில் கேட்டோம். அப்படியெல்லாம் சொல்லமாட்டார்களாம், இந்தக் கருத்துக்களை குறித்து வைத்துக்கொள்வார்களாம். இதைகேட்டவுடன் மீண்டும் தொடர்ந்து பேசினோம்.

“பின் எதற்கு இந்த ஒழுங்குமுறை ஆணையம்? மக்களிடம் செல்லவில்லை, மக்கள் சார்பாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை, எதைக்கேட்டாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது என்றால் இந்த ஆணையம் எதற்காக? இந்த ஆணையத்தை முதலில் கலைக்க வேண்டும். மின்கட்டணத்தை ஒரு பைசாக்கூட உயர்த்தக் கூடாது. மீறி உயர்த்தினால் மின்கட்டணம் கட்ட வேண்டாம் என்று மக்களை தட்டியெழுப்புவோம்” என்று பேசினோம்.

அங்கு கூடி இருந்தவர்களை பார்த்து “இந்த ஒழுங்கு ஆணையங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள். மக்கள் சொத்தை முதலாளிகள் பகிரங்கமாக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கும் ’மாமா ‘ வேலைதான் இந்த ஆணையத்தின் வேலை, இப்போது இல்லை, எப்போதோ நிரூபித்துவிட்டார்கள்.

தொலை தொடர்பு துறையில் மக்களுக்கு சிறந்தளவில் சேவை வழங்கி வந்த, நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி சொத்துக்களை கொண்ட பி.எஸ்.என்.எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை ட்ராய் எனும் தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்தான் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கொழுக்க வைக்க ஒழித்துக்கட்டியது. வரலாறு இப்படி இருக்கும் போது, இவர்களிடம் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சொன்னால் அதை குறைக்கவா போகிறார்கள்? இல்லை, மின் கட்டணத்தை உயர்த்துவது என்று இவர்கள் ஏற்கனவே முடிவு கொண்டு வந்து விட்டனர். அந்த வகையில் இந்தக் கருத்துக் கேட்புக்கூட்டம் என்பது ஒரு நயவஞ்சக நாடகம்.

மின் கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு இலவசமாகவும், மின்வாரியத்திற்கு கடன் ஏற்படாமல் இருக்கவும் ஒரேவழி தான் உள்ளது. மின்சாரத்தில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும், பன்னாட்டுகம்பெனிகளுக்கு கொடுக்கும் மானியங்களையும், டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும், ரத்து செய்து மின்கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இந்த ஆணையங்களும், தீர்ப்பாயங்களும் பன்னாட்டு, உள்நாட்டு தரகு அதிகாரவர்க்க முதலாளிகளுக்கு சேவை செய்பவைதான். இங்கே எந்த ஜனநாயகமும் கிடைக்காது. இவைகளை அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை” என்று பேசி முடித்தவுடன் அங்கே இருந்தவர்கள் கைகளைத் தட்டி வாழ்த்துக்கள் கூறினர்.

நிகழ்ச்சி முடிந்த உடன், “உங்களை சார் பார்த்துப் பேசவேண்டுமாம்” என்று கூறினார், ஒருவர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் – மதியம் நம்மை சந்தித்தாரே அவரேதான் – நம்மிடம் “நீங்க பேசியது நல்லா இருந்தது. ஆனால் கொஞ்சம் தடாலடியா பேசிட்டீங்க” என்றார்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேட்டாலும் எதுவுமே நடக்காதது போல் அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு பசப்பலாக பேசும் அதிகார வர்க்கத்தின் திமிரை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

சென்னை
9445112675

31-10-2014 அன்று ஈரோடு நகரில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக நடத்திய கருத்து கேட்பு கூட்டம் என்ற நாடகத்தில் அதனை அம்பலப்படுத்தி பேசப்பட்ட உரைகள்.

கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் விளவை இராமசாமி அவர்கள் பேசிய உரை

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் ஆன்ந்த் உரை

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சாருவாகன் பேச்சு

பத்திரிகை செய்தி

TNERC

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

 1. பெரியார் இராமசாமி
  பிறந்த மண்ணில்
  விளவை இராமசாமியின் குரல்
  மண்ணின் சுயமரியாதைக்கே
  உணர்வுட்டும் கம்யூனிசத்தின் குரல்!

  பத்து அல்லக்கைகளை
  பக்கத்தில் வைத்துக் கொண்டு
  கறுப்பு பூனை புடைசூழ
  முக்கி முணகி
  அறிக்கையிடும்
  ஓட்டுக்கட்சிகள் வெத்து வெட்டுகள்!

  ஒழுங்கும் இல்லாத முறையும் இல்லாத
  தனியார்மயத்தின் ‘மாமா’ அதிகார வர்க்கத்தை
  முகத்துக்கு நேரே விளாசிய
  கம்யூனிஸ்டுகளே!
  நீங்கள்தான் மக்களுக்கான அரசியல்வாதிகள்!

  சிங்கத்தை அதன்
  குகைக்குள் சந்திப்பதை விடவும் கடினம்
  அசிங்கத்தின் பெருச்சாளிகளை
  அதன் வலைக்குள் சந்திப்பது,
  அதையும்,
  மக்களுக்காகச் செய்யும்
  மெய்யான மாவீரர்கள்
  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
  போன்ற புரட்சிகர அமைப்புகள்தான்!

  ஊடகப் பம்மாத்துகளே
  உண்மையிலேயே உங்களிடம் ஜனநாயகம் இருந்தால்
  இதை ஒருநிமிடம் ஒலிபரப்பி பாருங்கள்
  மக்கள் யார் பக்கம் பார்க்கலாம்?

  துரை.சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க