privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்நவம்பர் 7 - இந்த மண்ணில் ஒரு சொர்க்கம் சாத்தியமா ?

நவம்பர் 7 – இந்த மண்ணில் ஒரு சொர்க்கம் சாத்தியமா ?

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே,

மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைக்கு முடிவு கட்டி சாதாரண உழைக்கும் மக்களும் ஆட்சி அதிகாரத்தைப் பெறமுடியும் என்பதை உலகுக்கு முதன்முதலில் நிரூபித்துக் காட்டியது ரசியப் புரட்சி. அந்த நாள்தான் நவம்பர் 7, 1917. அந்த புரட்சிநாள் தான் உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் பண்பாட்டு விழாவுமாகும்.

ரசியாவில் சோசலிச அரசு அமைக்கப்படுவதற்கு முன் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடினார்கள். மாணவர்களுக்கு கல்வியறிவு கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலையில்லை. தொழிலாளர்களும், விவசாயிகளும் உரிமைகள் ஏதுமின்றி நசுக்கப்பட்டனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கீழ் ரசிய நாடே சூறையாடப்பட்டுக் கிடந்தது.

ரசிய புரட்சிக்குப்பின் அமைக்கப்பட்ட சோசலிச அரசு தங்கள் குடிமக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது. வறுமையை ஒழித்தது; அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை அடிப்படை உரிமையாக்கியது; விளையாட்டுத்துறையை மேம்படுத்தி உலகளவில் பல சாதனைகளை படைத்தது; பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தது; சாதாரண பால்காரம்மாவை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டியது; விவசாயம், தொழில்துறையை உலகமே வியக்கும் வகையில் வளர்த்தெடுத்தது. மொத்தத்தில் இம்மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைத்துக் காட்டியது.

நம் நாட்டிலும் இப்படி ஒரு சொர்க்கத்தை படைக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு எழுகிறதா? அதற்கு நம் நாட்டின் இழிநிலையை மாற்றியமைக்க வேண்டும்.

நம் அனைவருக்கும் அரசே இலவசமாக வழங்கவேண்டிய சேவைகளான கல்வியும், மருத்துவமும் தனியார் முதலாளிகள் கையில். இயற்கை நமக்குத் தந்த கொடையான தண்ணீரும் காசு இல்லாமல் கிடைக்காது. நமது வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு மட்டும் நாள்தோறும் வாட்டி வதைக்கிறது.

இதோ ஆவின்பால் விலை உயர்வு நம் தலையில் இடியைப் போல் இறக்கப்பட்டுள்ளது. அடுத்து மின்கட்டணம் நம்மை சுட்டெரிக்கத் தயாராகி வருகிறது.

இதுமட்டுமா, நாட்டு மக்கள் தொகையில் சரிபாதியினரான இளைஞர்களுக்கோ வேலை இல்லை; வேலை தர வக்கற்ற இந்த அரசு இளைஞர்கள் மீது டாஸ்மாக் சாராயத்தையும், நுகர்வுவெறி மோகத்தையும், பாலியல் வக்கிரங்களை பரப்பும் இண்டர்நெட்டையும், மெமெரி கார்டையும் அன்றாடம் திணித்து சீரழிவில் தள்ளி வருகிறது.

வேலை வாய்ப்பை வாரி வழங்கப் போவதாக சொல்லி வந்த நோக்கியா கம்பெனி இழுத்து மூடப்பட்டு விட்டது. வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. விவசாய நிலங்களும், மலைகளும், காடுகளும், ஏரி, குளம், ஆறுகளும், கனிம வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக அன்றாடம் சூறையாடப்படுகின்றன.

இப்போது சொல்லுங்கள் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா?

இல்லையே என்கிறீர்களா?

அப்படியென்றால் இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் யார் காரணம்? இதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

1991 -க்குப் பின் நம் நாட்டில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான்.

காங்கிரசு, பா.ஜ.க, அதிமுக, திமுக எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் நம்மை ஆண்டாளும் இந்த நாசகாரக் கொள்கைகளைத்தான் அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். நம் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். இது நமக்கான அரசா? இல்லை. இல்லவே இல்லை என்பது இப்போது புரிகிறதா? கார்ப்பரேட் முதலாளிகள் நலன் கொண்ட அரசு இது.

சட்டம், போலீசு, நீதிமன்றம், அதிகாரிகள், அரசின் துறைகள் என அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் சட்டைப் பாக்கெட்டில். இவைகள் அனைத்தும் லஞ்ச – ஊழலில் மலிந்துகிடக்கின்றன. இவர்கள் போடும் சட்டங்களை இவர்களே மதிப்பதில்லை. இவர்கள் சொல்லும் நீதி, நியாயம், ஒழுக்கம் அனைத்தையும் இவர்களே காலில்போட்டு மிதிக்கிறார்கள். ஒட்டுமொத்த அரசே அழுகி நாறிக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மத்தியில் ஆளும் மோடி அரசாகட்டும், தமிழ்நாட்டு கிரிமினல் லேடி ஜெயா வின் பொம்மை அரசாகட்டும் இவைகளின் செயல்பாடுகளைப் பாருங்கள். கிரிமினல்மயமான ஒரு மாஃபியா கும்பலைப் போல் செயல்படுவது தெரியும். மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள், அதையே நியாயம் என்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை போலீசை ஏவி ஒடுக்குகிறார்கள். ’ஜெயில்’ லலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கும், ஜெயிலும்,பெயிலும், அதிமுக ரவுடிகளின் வன்முறையும் இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.

சற்று சிந்தித்துப் பாருங்கள் உழைக்கும் மக்களாகிய நமக்கு இங்கு உரிமைகள் ஏதாவது இருக்கிறதா. துளியளவும் இல்லையே. இப்படிப்பட்ட அரசமைப்புக்குள் நமது பிரச்சனைகளை எப்படி தீர்த்துக்கொள்ள முடியும்.

அப்படி தீர்த்துக்கொள்ள முடியாத, நமக்கு எந்த வகையிலும் பயன்படாத, அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்பை இன்னும் ஏன் நாம் கட்டிக்கொண்டு அழவேண்டும். தூக்கியெறிவோம் இந்த அரசமைப்பு முறையை.

நம் கையில் அதிகாரம் இருக்கும் வகையில் மாற்று அதிகார அமைப்புகளுக்கான போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம்.

அதற்கு உழைக்கும் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்,

இம் மண்ணிலும் ஒரு சொர்க்கத்தைப் படைப்போம்.

நவம்பர் – 7

ரசியப்புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
நவம்பர் – 2 ல் பு.மா.இ.மு நடத்திய விளையாட்டு விழா!

சென்னையில்  செயல்பட்டு வருகின்ற புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல் / டாக்டர். சந்தோஷ் நகர்,எழும்பூர் ஆகிய இடங்களில் நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சிநாள் விழாவினை, நமது பண்பாட்டு விழாவினை, உழைக்கும் மக்களாகிய குடும்ப விழாவினை சிறப்பாகக் கொண்டாடியது.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

குரோம்பேட்டை பு.மா.இ.மு கிளையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம் மற்றும் லெமன் ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் என சிறார்களை ஈர்க்கும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டன.

கிளைச் செயலர் தோழர் தம்புராஜ் தொடக்கவுரை நிகழ்த்தி விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். கலந்து கொண்ட மாணவர்கள் நவம்பர் 7 விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தி சென்றுள்ளனர்.


[புகைப்படங்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 9445112675