Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்

டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்

-

கிழக்கு டில்லியின் திரிலோக்புரியில் வன்முறை தாண்டவமாடி நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களை ஊரிலிருந்து ஓடி ஒளிய வைத்து வெற்றி கண்ட இந்து மதவெறியர்கள் வடமேற்கு டில்லியின் பவானா பகுதியிலும் ஒரு வன்முறையை மொஹரம் தினத்திற்கு திட்டமிட்டனர். இதற்காக ஒரு மகா பஞ்சாயத்தை பவானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ குகன் சிங் ரங்கா ஏற்பாடு செய்தார். ரங்காவுக்கு பக்கபலமாக நின்றவர் இந்து மதவெறி அரசியலில் பாஜகவிற்கு ஜூனியர் பார்ட்னரான காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் தேவேந்திர குமார். பவானா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 700 பேர் – பெரும்பான்மையானவர்கள் ஜாட்கள் – நவம்பர் 2-ம் தேதியன்று நடந்த மகா பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஜெ.ஜெ காலனி முஸ்லிம்களின் தஸியா ஊர்வலம் பவானாவுக்குள் நுழையக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

மகாபஞ்சாயத்துக்கு போகும் வழி
மகாபஞ்சாயத்துக்கு போகும் வழி

மகா பஞ்சாயத்து கூட்டப்படுவதற்கு முன்னரே இந்து மதவெறியர்கள் போலீஸிடம் பவனாவுக்குள் மொஹரம் ஊர்வலம் வரக்கூடாது என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் ஜெ.ஜெ காலனி முஸ்லிம் மக்கள் தங்கள் ஊர்வலம் பவானா செல்லாது என்று அக்டோபர் 28-ம் தேதியன்று போலீஸ் முன்னிலையில் உறுதிமொழி வழங்கினர். இந்த சூழ்நிலையில் மகா பஞ்சாயத்துக்கான அவசியமே இல்லை என்று கருதுகிறார்கள் முஸ்லிம்கள். ஆனால், மகா பஞ்சாயத்தின் நோக்கம் வேறானது. அங்கு மிகத் தெளிவாக வன்முறைக்கு வழிகாட்டப்பட்டது. அங்கு குழுமிய அனைவரிடமிருந்தும் ஒரு டைரியில் மொபைல் தொலைபேசி எண் வாங்கப்பட்டது. என்ன செய்ய வேண்டும் என்பது அவர்கள் வழங்கிய தொலைபேசி எண்ணில் 4-ம் தேதி காலையில் சொல்லப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான வீடியோ ஆதாரம் ஊடகங்களிடம் இருக்கிறது.

மொஹரம் ஊர்வலத்தை முஸ்லிம்கள் தங்கள் பலத்தை காண்பிக்க நடத்துகிறார்கள் என்றும் இந்த ஊர்வலம் செல்லும் பவானா சந்தையில் இந்துக்களின் வணிகம் அன்று பாதிக்கப்படும் என்று வெளியில் காரணம் கூறினர், இந்து மதவெறியர்கள். மேலும், மொஹரம் அன்று முஸ்லிம்கள் ஏந்தி வரும் ஆயுதங்களால் தாங்கள் அச்சமடைவதாகவும் கூறுகிறார்கள்.

எங்கள் பகுதி வழியாக தஸியா ஊர்வலம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது குறித்து நிர்வாகத்துக்கு ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். ஊர்வலம் நடந்தால், வன்முறை வெடிக்கும். அதற்கு போலீஸ்தான் பொறுப்பு” என்று வெளிப்படையாக மிரட்டியிருக்கிறார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிங்.

ஜே ஜே காலனியில் ஒரு மொஹரம் ஊர்வலம்
ஜே ஜே காலனியில் ஒரு மொஹரம் ஊர்வலம்

மொஹரம் இசுலாமிய நாள்காட்டியின் முதல் மாதம். மொஹரம் (தஸியா) ஊர்வலம் என்பது முஸ்லிம்களின் தொன்மக் கதையில் வரும் முகமது நபியின் பேரன் ஹுசைன் அலி ஈராக்கில் ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜாகித்தின் கெடுபிடிகளுக்கு எதிராக கர்பாலா என்னுமிடத்தில் போரிட்டு மடிந்ததை நினைவுகூரும் ஒரு துக்க ஊர்வலம். தஸியா என்பது ஹுசைனின் சமாதி மாதிரியை ஏந்தி செல்லும் மதச் சடங்கு. உலகம் முழுவதும் ஷியா முஸ்லிம்கள் இதனை பின்பற்றுகிறார்கள். தங்களை தாங்களே அடித்துக் கொள்ளும் சுயவதைக்கு தான் ஆயுதங்களையும், சாட்டையையும் மொஹரம் தினத்தில் ஷியாக்கள் பயன்படுத்துகிறார்கள்.

சன்னி முஸ்லிம்கள் மொஹரம் தினத்தை மோசஸ் எகிப்திய நாட்டின் கொடுங்கோலரசன் பார்வோனை வெற்றி கண்ட நாளாக கருதுகிறார்கள். மொஹரம் ஷியாக்களுக்கு துக்க நாளாகவும், சன்னி முஸ்லிம்களுக்கு கொண்டாட்ட நாளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த சன்னி முஸ்லிம்கள் ஷியாக்கள் போன்று வெளியே வருவதில்லை. எனவே ஒரு துக்க நாளை நினைவுகூறும் சடங்கிற்கு இந்து மதவெறியர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டது. இந்துக்களின் வணிகம் பாதிக்கப்படுகிறது என்று இந்து மதவெறியர்கள் கூக்குரலிடுவதிலும் உண்மையில்லை. மொஹரம் தினத்தை ஒட்டி வாங்கப்படும் பொருள்களுக்காக வணிகம் உயர்கிறது. உணவு வகைகள், இனிப்புகள் தயாரிப்பது என்ற வகைகளில் அனைத்து தரப்பு வணிகர்களின் வியாபாரமும் மொஹரத்தை ஒட்டி அதிகரித்து இருப்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறது.

மொஹரம் தினமான 04.11.2014அன்று மக்கள் தங்களின் இயல்பான கூட்டுணர்வாலும், மதநல்லிணக்க உணர்வாலும் ஆர்.எஸ்.எஸ்– பா.ஜ.க.வின் கலவர சதியை முறியடித்தனர். கடுமையான போலீஸ் கண்காணிப்புக்கு உட்பட்டு மொஹரம் ஊர்வலம் திரிலோக்புரி மற்றும் பவானாவில் அமைதியாக நடந்துள்ளது. தங்கள் உடலை புண்ணாக்கி நடந்து வந்த முஸ்லிம்களுக்கு இளைப்பாற சிற்றுண்டி கடைகள் அமைத்து தங்கள் இணக்கத்தை வெளிப்படுத்தினர் இந்துக்கள். தண்ணீர் பந்தல்கள் அமைத்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். உழைக்கும் இந்து மக்களான திரிலோக்புரி மக்கள் முஸ்லிம்களுடன் சில தூரங்களுக்கு நடக்கவும் செய்தனர்.

போலீஸ் காவல்
போலீஸ் காவல்

திரிலோக்புரியை அடுத்து உடனடியாக பவானாவை திட்டமிட்டதால் சில ஊடகங்களும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் விழிப்பாக இருந்து இந்து மதவெறியர்களின் சதித்திட்டம் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளிக்கொணர்ந்து இந்து மதவெறியர்களை பின்வாங்க செய்தனர். எனினும் இந்து மதவெறியர்களால் இந்த சமூகத்துக்கு ஏற்படும் ஆபத்து என்பது தலை மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருப்பதை மறுக்கவியலாது. பத்தாண்டுகளுக்கு மேலாக பவானாவின் சந்தை பகுதிக்குள் ஊர்வலம் சென்று வந்துள்ளார்கள், ஷியா முஸ்லிம்கள். அப்போதெல்லாம் ஏற்படாத அச்சம் இப்போது எப்படி திடீரென வருகிறது என்று கேட்டதற்கு, ‘முன்பு எங்கள் உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் இருந்தது; இப்போது அப்படியில்லை’ என்றுள்ளார்கள். இதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று மோடியை காட்டிக் கொடுக்க தயங்கவில்லை மோடியின் செல்லக் குட்டிகள்.

என்.டி.டி.வி விவாதத்தில் மகா பஞ்சாயத்தில் வெளிப்படையாக ஒரு மதவெறி கலவரத்துக்கு அழைப்பு விடுத்ததை உடனிருந்து கவனித்த போலீஸ்காரர்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று வினவியதற்கு போலீஸ் துறையில் இணை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல் பெரைரா இவ்வாறு குறிப்பிட்டார். ”ஒரு டிராஃபிக்கில் வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபரை எட்டிப் பிடிக்க முடியாது. வாகன எண்ணை தான் குறித்துக் கொள்ள முடியும். மகா பஞ்சாயத்தில் பேசியவர்களின் வன்முறை பேச்சை கேட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் நிலையும் அது தான்” என்றார். தனது அருவருப்பு மிகுந்த பேருருவால் தன்னை உற்று நோக்கும் அனைவரிடமும் இயலாமையை தோற்றுவித்து அனைத்து அரசு நிறுவனங்களையும் கீழ்ப்படியச் செய்துள்ளது இந்துத்துவம். நம்மை அசுரர்களாக நிரூபித்து எழுந்து நிற்பதன் மூலமே இந்த கொலைகாரர்களை வீழ்த்த முடியும்.

– சம்புகன்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க