privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?

மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?

-

ற்றுமணல், தண்ணீர், இயற்கை வளங்கள் அனைத்தையும் யாரும் உருவாக்க முடியாது. இயற்கைத் தாய் மனித குலத்திற்கு வழங்கிய கொடை மட்டுமல்ல; ஆடு, மாடு, மரம், செடி, கொடி, மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது.

அரசு இத்தகைய வளங்களை பாதுகாக்க வேண்டும். மாறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறது மத்திய அரசு.

ஆற்றுமணல் கொள்ளையில் உள்ளூர் கவுன்சிலர் தொடங்கி வட்டம், ஒன்றியம், மாவட்டம், மாநிலம் வரை, கட்சி பொறுப்புக்கு தக்கவாறு கமிசன் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும் தலையாரி முதல், வி.ஏ.ஓ, தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மந்திரி, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தலைமை நிலையச் செயலாளர் வரை அதிகார மட்டத்தில் கமிசன் போகிறது. hrpc-vdm-manal-04

  • பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்து போராடினால் அவர்களை போலீசை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது.
  • மேலும் சாதி பாகுபாட்டை உருவாக்கி மக்களை மோதவிட்டு பிளவுபடுத்துகிறது.
  • எதிர்ப்புணர்வை மழுங்கடிக்க குடும்ப அட்டை மூலம் மக்களுக்கு பணம் வழங்குவது, ஊர் கோவிலுக்கு நன்கொடை, மணல் லாரி ஒன்றுக்கு பஞ்சாயத்துக்கு 100 தருகிறேன் என கமிசன் பேசுவது என கிராம மக்களை தங்கள் ஊர் நலனுக்கு எதிராக தாமே செயல்படும் அவல நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய இரண்டு ஆறுகள் கடலூர் மாவட்டம் முழுவதும் குடிநீருக்கும், விவசாயத்திற்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றன. தற்போது வெள்ளாறு முழுவதும் கருவேப்பிலங்குறிச்சியில் தொடங்கி நேமம், கார்மாங்குடி, மேலப்பாலையூர், கீழப்பாலையூர், சி.கீரனூர், மருங்கூர், தொழூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி வரை, வெள்ளாறு வறண்ட பாலைவனமாக, முட்புதர் முளைக்கும் களிமண் தரையாக மிகக் கொடூரமாக காட்சியளிக்கிறது.

hrpc-vdm-manal-22

இப்பகுதியில் விவசாய பம்ப் செட்டுகள் தண்ணீர் எடுக்க முடியாமல் உதறுகிறது; சுற்று வட்டாரத்தில் குடியிருப்பு பகுதியில் வீட்டு போர்கள் தண்ணீர் இல்லாமல் மீண்டும் பல லட்சம் செலவு செய்து போர் போட வேண்டிய நிலை. மணல் கொள்ளைக்கு ஆதரவு அளித்து விட்டு அவன் பணம் வாங்கி விட்டான், இவன் பணம் வாங்கி விட்டான் என ஒதுங்கி நின்று அதனால் நாமும் ஏதாவது வாங்கினால் என்ன? என்ற காரியவாதமாக சிந்திக்கலாமா? நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?

காடு, மலை, குடிநீர், கிரானைட், தாதுமணல், பாக்சைட், இரும்பு சுரங்கம், மருத்துவம், கல்வி, மின்சாரம், என அனைத்தும் சட்டப்படிதான் கொள்ளையடிக்க தனியாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கொள்கையை ஆதரிக்கின்றன. பாதிக்கப்படும் மக்கள் தனியாக நிற்கிறார்கள். ஆற்று மணலை சுரண்டி நிலத்தடி நீரை அழித்து விட்டு மழைநீரை சேகரிக்க நமக்கு அறிவுரை சொல்கிறது அரசு.

hrpc-vdm-manal-47

ஆற்று மணல்தான் பஞ்சு போல தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது, மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆற்றுமணல் முழுவதும் சுரண்டப்படுவதால் ஆறு சாகடிக்கப்படுகிறது.

கொள்ளையனுக்கு மணல் அனைத்தும் பணமாக, லாபமாக தெரிகிறது. நிலத்தடி நீர் வற்றி விடும்; பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாழாகும்; எதிர்கால சந்ததியினர் குடிநீருக்காக பல மைல் காலி குடத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படுமே. ஆடு மாடுகள் செடி கொடிகள் என்ன ஆகும் என்ற கவலை, பொறுப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இல்லை. ஆனால், அங்கேயே தலைமுறையாக வாழும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கலாமா?

மூன்று அடிதான் மணல் அள்ள வேண்டும் என்ற சட்டம் சொல்கிறது. வெள்ளாற்றில் 30 அடிக்கு மேல் அள்ளப்பட்டு ஆறு முழுவதும் கட்டாந்தரையாக்கப்பட்டுள்ளது. ஏன், மணற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை இல்லை. மாட்டுவண்டியை மடக்கிப் பிடிக்கும் காவல்துறை, தாசில்தார் மணல் லாரியை மடக்கி பிடிக்காத மர்மம் என்ன?

hrpc-vdm-manal-39

தாமிரபரணி, காவிரி, பாலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் பாசன விவசாயிகள், சங்கம் அமைத்து மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் மத்தியில் போராடுவதுடன், உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதி மன்றத்திலும்  100-க்கு மேற்பட்ட வழக்கு தாக்கல் செய்து போராடி வருகின்றனர். இதன் விளைவாக வரைமுறையின்றி மணல் அள்ளுவதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. ஆனால், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு ஆற்று மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுவதுடன் விவசாயிகளை எதிர்த்து வழக்கு நடத்துகிறது.

  • காலை 7 முதல் மாலை 5 மணி வரை தான் மணல் எடுக்க வேண்டும்.
  • தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.
  • நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
  • மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு மீட்டர் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.
  • கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.
  • இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

இதை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் சிறப்புக் குழு என இருக்கிறது. ஆனால்,  மணற்கொள்ளை மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சட்டத்தை, விதிமுறைகளை அதிகாரிகள் மதிக்காத போது பாதிக்கப்படும் மக்கள் மட்டும் ஏன் மதித்து நடக்க வேண்டும்.

hrpc-vdm-manal-13

மணல் குவாரிகளை அரசுதான் நடத்துகிறது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதில் சொல்கிறார்கள்; யார் எதிர்த்தாலும் ஆயிரம், லட்சம் என பணம் கொடுக்கிறார்கள்; மணல் கொள்ளையால் ஆதாயம் பெறும் பினாமி யார் என்ற சொல்ல மறுக்கிறார்கள். கள்ளக் கடத்தல் போல நடக்கிறது மணல் தொழில். புகார் மனு கொடுத்தவரை மிரட்டுவது, நடவடிக்கை எடுத்தால் தாசில்தாரை லாரி ஏற்றிக் கொல்வது, அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல் எதிர்த்தால் கூலிப்படை வைத்து கொலை செய்வது என செயல்படுகிறார்கள் மணல் மாஃபியாக்கள். தனிநபராக கொள்ளையர்களை எதிர்க்க முடியாது. ஆனால், அமைப்பாக, பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கமாக திரண்டால் எவனையும் எதிர்க்க முடியும் என்பதை நாம் புரிந்து கொண்டு போராடினால் வெல்லமுடியும்.

தமிழகம் முழுவதும் கனிம வளக் கொள்ளையை விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இன்றுவரை அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. நிலத்தடி நீரை எடுத்து விட்டு ஓடி விடுவான் மினரல் வாட்டர் கம்பெனி. மணலை அள்ளிவிட்டு ஓடிவிடுவான் மணல் கொள்ளையன். அங்கே நிரந்தரமாக வாழும் நாம் பிள்ளை குட்டிகளை ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக எங்கே ஓடுவது? தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்? கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்திருக்கிறார்கள்.

hrpc-vdm-manal-46

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதி ஏடு, கட்சி பாகுபாடு ஏடு அனைவரும் ஆற்று மணலை பாதுகாப்போம் என களம் இறங்கினால் எத்தகைய அநீதிகளையும் தடுக்க முடியும். மணிமுத்தாறிலும் மணல் கொள்ளை தொடங்கியது. சூழ்ச்சிகளை முறியடித்து பரவளூர் கிராம மக்கள் சாதி கடந்து ஒன்றிணைந்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

manal-kollai-demo-post

நமது வாழ்வாதாரங்களை பாதுகாக்காமல் நமக்கான அரசை உருவாக்காமல் எவ்வளவு உழைத்தாலும் பலன் இல்லை. மணல் கொள்ளை மட்டுமல்ல எல்லா அநீதிகளுக்கும் எதிராகவும் தயங்காமல் சமரசமின்றி போராட வேண்டும். அப்போதுதான் உண்மையான எதிரிகளையும், அவர்களுக்கு உதவும் துரோகிகளையும் இனம் கண்டு விரட்டியடிக்க முடியும். ஆற்றுமணலை மட்டுமல்ல அனைத்து வளங்களையும், வாழ்வாதாரங்களையும் காக்க போராடுவோம் வாரீர்!

தமிழக அரசே

  • அனைத்து மணல் குவாரிகளையும் மூடு!
  • வெள்ளைற்றை கட்டாந்தரையாக்கிய மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?
  • கனிமவளக் கொள்ளையை விசாரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு முழு ஒத்துழைப்பு வழங்கு!

உழைக்கும் மக்களே

  • மானம் இழந்து வாழ்க்கையா? மணல் கொள்ளைக்குப் பணமா?
  • வாங்கிய பணத்தை வீசி எறியுங்கள், மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட வாருங்கள்
  • மணல் கொள்ளைக்கு லஞ்சமா? நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா?

ஆர்ப்பாட்டம்

நாள்: 10-11-14 திங்கள்
நேரம் : மாலை 4 மணி
இடம்: கருவேப்பிலங்குறிச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு – 9360051121, 9003631324