privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாட்டுக்கறி விருந்துடன் தமிழக நவம்பர் புரட்சி தின விழாக்கள்

மாட்டுக்கறி விருந்துடன் தமிழக நவம்பர் புரட்சி தின விழாக்கள்

-

1. அதிராமபட்டினம்

விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாள் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தம்பிக்கோட்டை, மழவேனிற்காடு, அண்ணாநகர், அதிராம்பட்டினம் ஆகிய கிளை பகுதிகளில் திரளான தோழர்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை அடைய அர்ப்பணித்து பாடுபடவும் உறுதியேற்று நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Created with Nokia Smart Cam

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை

2. தருமபுரி

ஏழை மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உன்னத நாள்
உழைக்கும் மக்களின் பொன்நாள்

நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க

வம்பர் 7 ரசிய புரட்சி நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் இயங்கி வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வி.வி.மு செயல்படும் எட்டு பகுதிகளில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும், கிராமங்களில் பேரணியாக சென்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக இளைஞர்களுக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மூன்று கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக K அக்ரகாரம் கிளை பகுதியில் மையப்படுத்தி பொதுக்கூட்டம் போல மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு தோழர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தோழர் சிவா, வட்டாரக் குழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.

தோழர் சக்திவேல், பு.மா.இ.மு “புதியதோர் உலகைப் படைக்க புரட்சிப் பாதை வேண்டும்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

தோழர் பாலன், பு.மா.இ.மு,  “பகத்சிங் கனவை நினைவாக்குவோம்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

தோழர் அற்புதம், பு.மா.இ.மு “நாங்க சும்மா இருந்தாலும் நாடு எங்களை விடுவதில்லை” என்ற துரை சண்முகம் எழுதிய கவிதை வாசித்தார்.

எட்வின், இலக்கியா போன்ற சிறுவர்கள் புரட்சிகர பாடல் பாடினார்கள்.

இறுதியாக நவம்பர் 7 சிறப்பையும் புதிய ஜனநாயகப் புரட்சியின் தேவையையும் பற்றி தோழர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். விளையாட்டு பரிசு பொருட்கள் கொடுத்தும், பொதுமக்கள் மற்றும் தோழர்களுக்கு உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம் வட்டம்
9943312467

3. கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பாக 97-வது ரசியப் புரட்சி நாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சி துவக்கமாக வாகனபிரிவு சார்பாக தோழர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தி அனைவருக்கும் இனிப்பும் தேநீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்புரை நிகழ்த்தி அனவைருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தோழர் ஆனந்த் ராஜ் தலைமையேற்க தோழர் விஜயன் சிறப்புரையாற்றினார்.

பகல் 12 மணிக்கு அனைத்துப் பகுதி தோழர்களையும் ஒன்றிணைத்து அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது. தோழர் ஆனந்தராஜ் முன்னிலையில் தோழர் யுவன் சிறப்புரையாற்றினார். தோழர்களும் தோழரின் குழந்தைகளும் எழுச்சிமிகு புரட்சிகர பாடல்களை பாடி அனைவருக்கும் உணர்வூட்டினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். தோழர்கள் தத்தமது குடும்பத்துடன் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. மேலும், இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் புதிய தோழர்களாக கலந்து கொண்டார்கள். புரட்சிகர பாடலும் உரைகளும் இவர்களை அமைப்பாக உயர்த்த உதவும் வகையில் அமைந்தன.

இறுதியாக, அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

பார்ப்பன பண்பாட்டு பண்டிகைகளுக்கு மத்தியில் நவம்பர் புரட்சிநாள் விழா என்பது பாட்டாளி வர்க்க திருவிழா பண்பாட்டு நிகழ்ச்சியாக, தனியார்மயம், தாராளமயம், ஒழிப்பு, மேலாதிக்க அமெரிக்க பார்ப்பன பாசிசத்தை ஒழிக்க பாட்டாளிகள் ஒன்றிணைவதின் அவசியத்தை அனைவருக்கும் இந்நிகழ்ச்சி உணர்த்தியது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்,
பாலன்

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்

4. கோவை – நவம்பர் புரட்சி தின விழா

கோவை சின்னவேடம்பட்டி CRI கம்பெனி அருகில் உள்ள தனியார் இடத்தில் நவம்பர் புரட்சி தின விழா கொண்டாட முடிவு செய்தோம். கோவையின் விசேச காவல்துறை அராஜகம் காரணமாக சரவணம்பட்டி காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். வழக்கம் போல் அனுமதி மறுத்தார்கள்.

“என்ன காரணம்..?” எனக் கேட்டால், “கமிஷனர் உத்தரவு. அதற்கு மேல் எங்களிடம் எதுவும் கேட்க வேண்டாம்” என காவல் நிலையத்தில் கறாராக கூறிவிட்டார்கள்.

CRI முதலாளியின் நிர்ப்பந்தம் காவல் துறையின் மேலிடத்தில் மிகவும் பலமாக உள்ளது என்பதை அறிந்தோம்

“ஒலிபெருக்கி இல்லாமல் தனியார் இடத்தில் நடத்துவோம்” என்றோம்.

உடனே காவல் துறை, “சின்னவேடம்பட்டி ஊருக்குள் வேண்டுமானால் தண்ணீர் டேங்க் மைதானத்தில் நடத்துங்கள்” என்று ஜனநாயகமாக (!?) சொன்னார்கள்.

எப்படியும் இவர்கள் CRI கம்பெனி அருகில்தான் நடத்துவார்கள்; ஊருக்குள் போக மாட்டார்கள் என்று சரவணம்பட்டி காவல் துறை சாதுர்யம் காட்டியது.

“நாம் உடனே ஊருக்குள் நடத்துகிறோம்” என்று எழுதிக் கொடுத்தோம். உடனே காவல் துறை திடுக்கிட்டு மேலே கேட்டுச் சொல்கிறோம் என பின்வாங்கினார்கள். பின்னர் வேறு வழி இல்லாமல் 5-ம் தேதி இரவு அனுமதி வழங்கினார்கள். ஒரு நாளில் நோட்டீஸ் போஸ்டர் அடிப்பதிலிருந்து அணிதிரட்டல் வரை எல்லா ஏற்பாடும் செய்து 7-ம் தேதி மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.

மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் திலீப் தலைமை தாங்க சின்னவேடம்பட்டி மக்கள் ஆங்காங்கே இருந்தவாறே கவனிக்க தெருமுனை நிகழ்ச்சியாக ஆரம்பித்து பொதுக்கூட்டமாக மாறியது.

டுகெதர் கம்பெனி துணைத் தலைவர் தனது அனுபவங்களை, முதலாளித்துவ பயங்கரவாதத்தை விளக்கினார்.

ஃபெரோலிங்க்ஸ் செயலாளர் தோழர் நித்தியானந்தன் முதலாளியின் வீட்டை முற்றுகையிட்ட அனுபவத்தை சொல்ல கூட்டம் களை கட்டியது.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்க முருகன் மில் தலைவர் தோழர் ரங்கசாமியும் இணைச் செயலர் ஜெகநாதனும் பாட்டாளி வர்க்கத்தின் கம்பீரத்துடன் பேசினார்கள்.

கம்போடியா மில் கிளைச் செயலாளர் தோழர் மோகன்ராஜ் நவம்பர் புரட்சியின் சிறப்பு, யூனியன் கார்பைடு அராஜகம், மோடியின் தொழிலாளர் விரோத போக்கு என சகல அம்சங்களையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினார்.

CRI கிளைச் செயலர் தோழர் குமாரவேல் “புஜதொமு சங்கத்தின் அரசியல் எங்களை வளர்த்தது, எங்களுக்கு சுய மரியாதையை கற்றுக் கொடுத்தது, நவம்பர் 7 நிகழ்ச்சியை எங்கள் பகுதியில் நடத்தியது பொருத்தமான முடிவு” என்றார்.

இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி பேசுகையில்,

கோவையில் நடந்த புஜதொமு சங்கத்தின் வீரமிக்க போராட்டத்தை இணைத்துச் சொல்லி, 1917 நவம்பர் புரட்சி தொழிலாளர்களுக்கு என்ன செய்தது அதன் சாதனை என்ன? கோவையில் நவம்பர் 7 ஐ எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும், காவல்துறை இராணுவம் போன்றவற்றை எப்படி பாட்டாளி வர்க்கம் கையாள வேண்டும் என்றும், நமது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் நம்பிக்கையூட்டும் படி ஒரு மணி இருபது நிமிடங்கள் பேசினார். நவம்பர் புரட்சியின் எழுச்சி பகுதி முழுவதும் பரவும்படி பேசினார். பகுதி மக்களின் ஆதரவு, CRI முதலாளியின் பித்தலாட்டதை தோலுரித்தது. இவையெல்லாவற்றையும் CRI முதலாளியை தனிமைப்படுத்தும் இலக்கில் பேசி நிறைவு செய்தார்.

பின்னர் கோவை மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் நடந்த புரட்சிகர கலை நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி மக்களை நமது அமைப்பின் பக்கம் திருப்பும் வகையில் அமைந்தது.

பின்னர் அனைவருக்கும் இனிப்பு காரம் தேநீர் வழங்கப்பட்டது. சி‌ஆர்‌ஐ கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி நன்றி சொல்ல நவம்பர் புரட்சி தின விழா கம்பீரமாக நிறைவடைந்தது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

5. மதுரை – நவம்பர் புரட்சிதின விழா

துரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் நவம்பர் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா அரங்கக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

விழாவிற்கு புஜதொமு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கி நடத்தினார். தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியுடன் காலையில் துவங்கிய விழா முதலில் கத்தி திரைப்படம் விவாதிக்கப்பட்டது. விவாதத்தை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனிராஜ் தலைமை தாங்கி ஒருங்கிணைத்தார்.

கத்தி திரைப்படம் போலியான கார்ப்பரேட் எதிர்ப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை அரசே அனுமதித்து சொந்த நாட்டு மக்களை கொள்ளையிட அனுமதித்து வருகிறது. ஆனால் படமோ மிகவும் செயற்கையாக விஜயின் கதாநாயக பிம்பத்துக்காக கார்ப்பரேட் எதிர்ப்பை வைத்து பின்னப்பட்டுள்ளது. நிஜத்தில் விஜய் கோக்கின் தூதராக இருந்து கொண்டு படத்தில் மட்டும் கோலா கம்பெனியை எதிர்த்து போராடுவது போல் நடிப்பதை மிகப்பெரிய மோசடி என்று பல்வேறு தோழர்கள் தம் கருத்தை கூறினார்கள் . இதே கருத்தை விவாதத்தை ஒருகிணைத்த தோழர் லயோனல் அந்தோனிராஜ் அவர்களும் விவரித்து உரையாற்றினார்கள்.

திரைப்பட கலந்துரையாடல் முடிந்தவுடன் மதியம் மாட்டுகறி விருந்து நடைபெற்றது. மதிய நிகழ்வாக மதுரை புமாஇமு தோழர் அன்பழகன் “விளையாட்டும் அரசியலும்” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். விளையாட்டில் ஏழை மற்றும் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதை உதாரணங்களோடு அம்பலப்படுத்தி, சோசலிசத்தில் மட்டுமே திறமையான வீரர்கள் ஜொலிக்க முடியும் என்பதை விளக்கி பேசினார்.

உசிலம்பட்டியை சேர்ந்த விவிமு தோழர் கயல்விழி “இன்றைய சமூக நிலையில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை”யை பற்றி பேசினார். பெண்கள் வீட்டில் ஓய்வின்றி வேலை பார்ப்பது பற்றியும், அவர்களின் மீதான மத, சாதி வன்முறைகள் பற்றியும், உசிலை வட்டாரத்தில் கொளரவ கொலைக்கு பலியான விமலா தேவியை உதாரணமாக காட்டியும் பேசினார்.

மதுரை பெவிமு தோழர் ராணி, அவர் எப்படி அமைப்புக்குள் வந்தார் என்ற அனுபவத்தை பற்றி பேசினார். தோழர்களின் அர்பணிப்பான போராட்டமும் மக்களை நேசிக்கும் தன்மையையும் பார்த்து, தானும் அமைப்புக்குள் செயல்பட வேண்டும் என்று முடிவுக்கு வர ஈர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய பகுதியில் டாஸ்மாக்கிற்கு எதிராக பெவிமு சார்பாக சுவரொட்டி ஒட்டியதால் காவல் துறை வழக்கு பதிந்து தேடிய போது முதலில் தாம் பதட்டப்பட்டதையும் அதற்கு தோழர்கள் தைரியத்தையும் ஆதரவும் நம்பிக்கையும் தந்து போராட ஊக்கமளித்ததை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார்.

விவிமு வின் உசிலை வட்டாரச் செயலர் தோழர் குருசாமி “இந்து பாசிசத்தின் இளைய பங்காளியான சாதியவாதிகள்” என்ற தலைப்பில் பேசினார். பார்ப்பனவாதிகளை எதிர்ப்பது போல இடைநிலை சாதிகளை எதிர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இடைநிலை சாதிகளை எதிர்ப்பது என்பது நம்கண் முன்னால் நம் அருகில் இருப்பவர்களை எதிர்ப்பது. இது மிகப் பெரிய போராட்டம். அதில் தோழர்களின் சமரசங்களை விமர்சனத்துக்குள்ளாக்கினார். மேலும் சாதியவாதிகள் எவ்வளவு அபாயகரமாக‌ வளர்ந்து வருகிறார்கள் என்பதை எச்சரிக்கை செய்தும் அதை முறியடிப்பது புரட்சிக்கு எவ்வளவு அவசியமானது என்ற அவசியத்தை விளக்கி பேசினார்.

ம.உ.பா. மையத்தின் மதுரை மாவட்ட இணைசெயலாளர் வாஞ்சிநாதன் தோழர்கள் அரசியல் வேலை செய்வதில் நம்முடைய மனத்தடைகள் என்ன? என்பதை சுட்டிக்காட்டி பேசினார். அதில் இன்று பாசிசம், கார்ப்பரேட் பயங்கரவாதமும் பரவி வருகின்ற சூழலில் தோழர்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக, உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்கின்ற உணர்வு இல்லாமல் இருப்பது பற்றியும், குடும்பத்தில் தோழர்கள் செய்து கொள்ளும் சமரசங்களையும் விமர்ச்சித்து சுட்டிக்காட்டியும், எதிரிகள் எவ்வளவு தீவிரமாக வேலை செய்கிறார்களோ அதை விட தீவிரமாகவும் அறிவுபூர்வமாகவும் செயலாற்றினால்தான் வெற்றி சாத்தியம் என்று எச்சரிக்கை செய்து பேசினார்.

இறுதியாக மகஇக வின் மாநில் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் “கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டும் மறுகாலனியாக்க சூழலில் நவம்பர் புரட்சியின் இன்றைய தேவையும் ” என்ற தலைப்பில் பேசினார்.

முதலாம் அகிலம் உருவாகியதில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் பாரிஸ் கம்யூன் எழுச்சியை மார்க்ஸ்ம் ஏங்கல்ஸ்ம் ஆதரித்ததையும் மேலும் 2-வது அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் ஏகாதிபத்திய விசுவாசிகள் ஆனதை தோழர் லெனின் எவ்வாறு அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தினார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்.

மேலும் இன்று நாடு மீண்டும் காலனியாகி வருகின்ற சூழலில் நவம்பர் புரட்சி எவ்வாறு நமக்கு உத்வேகமளித்து நம்முடைய நாட்டிலும் அத்தகைய தொரு புரட்சி தேவை என்பதை நமக்கு முன் உள்ள சூழல்களையும் சவால்களையும் ஒப்பிட்டு விளக்கி பேசினார்.

உரைகளுக்கிடையே தோழர்கள் ஆசை, திருமுருகன், கலைசெல்வி ஆகியோர் புரட்சி தினம் மற்றும் சமூக அவலங்களை பற்றியும் தாம் எழுதியிருந்த கவிதகைளையும், மேலும் சிலர் புரட்சிகர பாடல்களையும் பாடினார்கள். பெவிமு தோழர்கள் “சாதி வெறியர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த வீராங்கனை விமலா தேவி”யின் போராட்டத்தை சிறு நாடகமாக நடத்தி காட்டினார்கள்.

இறுதியில் சர்வதேச கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

6. தஞ்சை – மனித குல வரலாற்றில் மகத்தான நாள் நவம்பர் ஏழு!

“மனித குல அறிவாற்றலை அறிவுச் சொத்துடமை என்ற பெயரில் தனி உடமையாக்கி கொள்ளையடித்து வளர்ச்சியை தடுக்கிறது முதலாளித்துவ சமூகம். அதற்கு நேர் எதிராக மனித குல அறிவு வளர்ச்சியின் தொடர்ச்சியை, தனது அறிவியல் அனுபவத்தை, ஆற்றலை உலகெங்கும் பரவலாக்கி மனித குலம் முழுமையும் வளர்த்தது சோசலிச சமூகம்” என்றார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன்.

மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சியின் 97-ம் ஆண்டுவிழா தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. காலையில் தஞ்சை கீழ வாசலில் ம.க.இ.க தஞ்சை மாநகர பொருனர் தோழர்.அருள் தலைமையில் ம.க.இ.க செயற்குழு உறுப்பினர்கள் தேவன் இராசேந்திரன், தமிழ்ச்செல்வன் முன்னிலையில் ம.க.இ.க கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாலையில் இரயிலடியில் ம.க.இ.க மாநகரச் செயலர் தோழர்.இராவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தோழர்.காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

மனித குல வரலாற்றில் மகத்தான நாள் நவம்பர் ஏழு. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களால் இழிவு படுத்தப்பட்ட ரஷ்ய நாட்டின் பாட்டாளி வர்கமும், விவசாயிகளும் இணைந்து, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர் தோழர்.லெனின் தலைமையில் மனித குலம் கண்டிராத சமத்துவ சமுதாயத்தை படைத்தனர். உலகிற்கே வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசாக சோவியத் ரஷ்யா விளங்கியது. ஏகாதிபத்திய காலனிய சுரண்டலிலிருந்து விடுபட காலனிய நாடுகளுக்கு உதவியது. சீனா, கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பாட்டாளி வர்க்க அரசுகள் அமைய துணை நின்றது.

ரஷ்ய மக்களின் உழைப்பும், பாட்டாளி வர்க்க சர்வதேச கண்ணோட்டமும், இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதார, அறிவியல் வளச்சி பெற பேருதவி புரிந்ததை யாரும் மறுக்க முடியாது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பொக்காரோ பிலாய் இரும்பு ஆலை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.

உலகமயம் என்ற போர்வையில் மேல்நிலை வல்லரசுகள் இந்திய வளங்களை கொள்ளையடிக்கும் இன்றைய மறு காலனியாக்கச் சூழலை ஒப்பிட்டால் சோவியத் ரஷ்யாவின் உதவி எவ்வளவு மகத்தானது என்பது விளங்கும்

இரண்டு கோடி ரஷ்ய மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பாசிச ஹிட்லரின் கோரத் தாக்குலிலிருந்து உலக மக்களை காப்பாற்றினார்.

முதலாளித்துவவாதிகள், அற்ப அறிவு ஜீவிகள் கம்யூனிசம் தோற்றுவிட்டது, அது பிறந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்று கதைத்தாலும் கை கொட்டி மகிழ்ந்தாலும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை ஒழிக்கப்படும் வரை மார்க்சிய – லெனினியத்திற்கு மரணமில்லை முதலாளித்துவம் ஒழிக என்றும் முழக்கம் அமெரிக்க தெருக்களிலேயே ஒலிக்கத் தொடங்கி இருப்பதே இதற்கு சாட்சி.

தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்று பெருங்கூச்சலோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் மறு காலனியாக்க சூழலின் மார்க்சிய – லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடித்து புரட்சிகர போராட்டத்திற்கு அணி திரள்வது மட்டுமே இன்று நம் கண் முன்னே உள்ள ஒரே ஒரு தீர்வு என்று கூறி புரட்சிகர அமைப்புகளில் அணி திரள அறை கூவல் விடுத்தார்.

ம.க.இ.க தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்தோடு மக்கள் அணி திரண்டு ஆதரவளித்தனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்

7. வேலூர்- 97 -ம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா!

ருஷ்யாவில் மாமேதை லெனின் அவர்கள் தலைமையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோசலிசப் புரட்சியின் 97 -ம் ஆண்டு விழா வேலூர் தோட்டப்பாளையத்தில் நவம்பர் 7, 2014 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர் கிளையின் சார்பாக தெருமுனைக் கூட்டமாக பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

விழாவை தலைமை ஏற்று நடத்திய ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தனது தலைமை உரையில், இன்றைய மோடி அரசு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து அவர்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைச் சாடினார்.

தோழர்.வாணி விழாவில் சிறப்புரையாற்றினார். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அதிகரித்து வரும் காய்கறி- மளிகை ஆகிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சாமான்யர்கள் படும் அவதிகளை எடுத்துரைத்தார். ஒரு பக்கம் கல்வி – சுகாதாரம் – மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு புறக்கணிப்பதும், மறுபக்கம் தனியார் முதலாளிகள் இத்துறைகளில் கொள்ளையடிக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் இவை யாவும் மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதற்கான காரணம் தாராளமயத்தின விளைவுதான் என்பதை தனது உரையில் முன்வைத்தார்.

அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வந்தால் பன்னாட்டுக் கம்பெனிகள் பல்கிப் பெருகும்; வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள்; அவ்வாறு வந்த நோக்கியா நிறுவனம் 24,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடித்த பிறகு திடீரென கம்பெனியை இழுத்து மூடியதால் முப்பதாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத் தெருவில் நிற்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம் என்பதை தனது உரையில் நிறுவினார்.

மரத்தடியில் சரகுகளை மட்டுமே கூட்டித் திரியும் மோடியும் – தமிழிசை சௌந்தரராஜனும் நாறிக் கிடக்கும் நகராட்சிக் கால்வாய்களையும், பேருந்து நிலைய கக்கூசுகளில் குவிந்து கிடக்கும் மலக்குவியல்களையும் கூட்ட முன்வரவேண்டியதுதானே என கேள்வி எழுப்பி மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மோசடியை எள்ளி நகையாடினார்.

சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினால் மட்டுமே சாராயத்தினால் ஏற்படும் கேடுகளை ஒழிக்க முடியும் என்பதை எழுச்சியோடு தனது உரையில் எடுத்து இயம்பினார். மேலும் பெருகி வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சாதி மறுப்புத் திருமணங்களில் நடைபெறும் கௌரவக் கொலைகள், சிறு வயதிலேயே நடைபெறும் கட்டாய குழந்தைத் திருமணங்கள் போன்ற பல்வேறு சமூகப் கொடுமைகளைச் சாடிய அவர் 97 ஆண்டுகளுக்கு முன்பு ருசியாவில் நடைபெற்ற புரட்சியைப் போன்று இந்தியாவில் புரட்சி ஒன்றை நடத்தாமல் மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து மக்கள் விடுபட முடியாது; எனவே அத்தகையதொரு புரட்சிக்காகப் போராடும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற புரட்சிகர அழைப்புகளில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

விலைவாசி உயர்வைச் சாடி ”உப்பு வெலக் கூடிப் போச்சண்ணே“ என்கிற பாடலையும், மோடியின் முன்னேற்றத்தைச் சாடி ”நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு” என்கிற பாடலையும் விழா மேடையில் தோழர்கள் பாடினர்.

விழாவில் தோழர். துரை.சண்முகம் அவர்களின் ”ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!” என்கிற கவிதையை தோழர்.முத்துராமன் வாசித்தார்.

இறுதியில் தோழர்.அகிலன் நன்றி உரை கூறி விழாவை முடித்து வைத்தார். அதன் பிறகு அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பும் காரமும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

விழாவையொட்டி மக்களிடையே பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது ஒரு புதிய நல்லதொரு புரட்சி விழாவாக இருந்ததாகவும், நாலு விசயங்களை தெரிந்து கொள்கிற விழாவாகவும் இருந்ததாக விழாவில் கலந்து கொண்டு மக்கள் குறிப்பாக பெண்கள் கருத்து தெரிவித்தனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

8. தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட்த்தில் கோவிபட்டியில் உள்ள முடுக்கலான்குளத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 7 ஐ எளிமையாக கொண்டாடினர்.

காலை 8.00 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பங்கேற்க, சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும், நம் நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிட்டும் விளக்கவுரையாற்றப்பட்டது. உடனே வண்டியை எடுக்காமல் சுமார் 15 நிமிடம் காத்திருந்து நமக்காக ஒத்துழைத்த பேருந்து ஓட்டுனர் உள்பட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அன்று மாலையில் 10 பேர் பங்கேற்ற அறைக்கூட்டமும் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக மாலை 5.00 மணியளவில் தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 12 பேர் கலந்துகொண்ட அறைக்கூட்டத்தில் “ஸ்டாலின் சகாப்த்தம்” குறுந்தகடு காண்பிக்கப்பட்டு, நம் நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிட்டு விளக்கப்பட்டது. கலந்துரையாடல் பாணியில் கேள்வி பதிலாக பேசப்பட்ட இக்கூட்டம் 2.30 மணி நேரம் நடந்தது. இங்கு நடத்தப்படும் முதல் நவ. 7 நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

அதே போல் நெல்லையிலும் 20 மாணவர்களுக்கு இரண்டு அறைக் கூட்டங்களாக எடுக்கப்பட்டது.

9. ஒசூர்

லகின் முதல் சோசலிச குடியரசு நாளான நவம்பர் 7 ஐ ஓசூரில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் சேர்ந்து டி.வி.எஸ் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான கொத்தகொண்டப்பள்ளியில் உழைக்கும் மக்களோடு இரண்டறகலந்து அவர்களுடன் ஐக்கியப்பட்டு எழுச்சிகரமாக கொண்டாடின. உழைக்கும் மக்கள் தன்னார்வத்துடன் பேதமின்றி கலந்துக்கொண்டு தங்களின் பங்களிப்பை செலுத்தினர். 07.11.2014 மாலை 5 மணியளவில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கூடியிருந்த மக்களிடையே ஒரு பொதுக்கூட்டம் போல முறையாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ரசியாவில் புரட்சிக்கு முன் இருந்த சுரண்டல் அவல நிலைமைகளை பட்டியலிட்டு எடுத்துரைத்து அதனை அடியோடு ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களை அரியனையில் அமர்த்தி பூவுலக சொர்க்கமாக நிகழ்த்திக்காட்டிய வரலாற்றை தொகுத்து கூட்டத்தில் எளிமையாக உரையாற்றப்பட்டது. அந்த நாளை நாம் நமது நாட்டில் ஒரு திருவிழாவை போல கொண்டாடி மகிழ்வதோடு நில்லாமல் அவ்வாறு இங்கும் ஒரு புரட்சியை சாதித்துக்காட்டவேண்டும் என்ற உறுதிமொழியோடு களத்தில் போராட அழைப்புவிடுவதாகவும் இக்கூட்டம் அமைந்திருந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 02.11.2014 அன்று காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடத்தப்பட்ட சிறுவர், பெரியவர், பெண்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கோபால் நன்றியுரையாற்றினார்.

இரவு உணவாக மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின் இறுதிவரை கலந்து கொண்ட ஒரு தொழிலாளி இதுதான் உண்மையான மகிழ்வான விழா. நான் இனி இதுமாதிரியான விழாவினில் தவறாமல் வருடம்தோறும் எங்கிருந்தாலும் வந்து கலந்துக்கொள்வேன் என்றும் வழமையான தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை புறக்கணிப்பேன் என்றும் அறிவித்துச் சென்றதே இந்த நவம்பர் தின விழா நிகழ்சியின் வெற்றியை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர்.
தொடர்புக்கு-9788011784

  1. மனிதகுல வரலாற்றில் பொன்னான நாளில் மானிலமெங்கும் விழா எடுத்தது அருமை . ஓர் பணிவான வேண்டுகோள்: முடிந்த வரை இது போன்ற நாளில் எந்த உயிருக்கும் துன்பம் தராத உணவை அளிக்க முயற்சிப்பது எல்லோருக்கும் நலம் தரும் — முடிந்த வரை எல்லா உயிரையும் நம் உயிர் போல் கருதுவோம் — எளிய மனிதனின் உணவு எந்த உயிருக்கும் துன்பம் தராததாக வேண்டும் ………

  2. பள்ளீக்குப் போகும் சிறு குழந்தைகளையும் கூட்டத்திற்குக் கூட்டி வந்து ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள்…

    “நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க” – இப்ப்டி ஒரு முழக்கமா மாட்டுகறி விருந்து போட்டு ஆள் சேர்த்தா இப்படித்தான்…

  3. வினவு தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், சாலையில் வண்டியில் செல்லும்போது கொடி பிடித்து செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் இது தேவையில்லாமல் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்ப்படுத்தும். மேலும் இது ரவுடி தானம் போல் காட்சியளிக்கிறது.
    நன்றி

  4. தொழிளாளர் ஒற்றுமைநல்ல விஷயம் ஆனால் பசு நமது தாயி அதை கொன்று சாப்பிடுவது மா பாவம்! அதை மட்டும் செயியவேண்டாம்..

    • ////பன்றி கறி எப்போ? டோலர்கள் சாப்பிடுவார்களா////

      பன்றி கறி இஸ்லாமியத்திற்கு எதிரானதாக கூறப்படுகிறது. ஆகையால் “வினவு” தோழர்கள் அதனை வழிமொழிய மாட்டார்கள்!!சாப்பிடவும் மாட்டார்கள். இஸ்லாமியர்களை கூட்டடத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதால்தான் மாட்டுக்கறி மட்டும் பரிமாறப்பட்டுள்ளது.

  5. ///அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது////
    எபோலா என்ற நோய் இன்று ஆப்பிரிக்க கண்டத்தை ஆட்டிப்படைக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? அசைவ உணவுகளால்தான் இதுபோன்ற நோய்கள் வருவதாக கூறப்படுகிறது! ஆடு கோழி இவைகளால் இந்த நோயின் பாதிப்பு அவ்வளவாக இல்லை. ஆனால் மாடு எருமை ஆகிய மிருக கறிகளால்தான் எபோலா நோய் பரப்பு அதிகம் என்று கூறுகிறார்கள். இந்த சூழலில் இங்கும் எபோலா நோயை பரப்பும் தோழர்களுக்கு மிக்க நன்றிகள்!!!!!!!!!

  6. சுகர் என்றோரு நோய் பரவலாக மனித குலத்தை ஆட்டி வதைக்கிறது. அதற்கு பிரதான காரணம் சமச்சீர் உண்வு தவிர்க்கும் மரக்கறி மடமையே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க