Wednesday, December 8, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்

ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்

-

வீடு, அலுவலகம், வீடு என்று எந்திரமயமான வழித்தடத்தில் வாழ்க்கையை கொடுத்திருக்கும் சென்னை மாநகரில் ஞாயிறு என்பது ஒரு தற்காலிக விடுதலை. எந்திரகதியான இயக்கத்திலிருந்து விடுபட்டு எஞ்சிய வாழ்க்கையை தொட்டுப் பார்க்க கிடைத்திருக்கும் ஒரு நாள். ஆகவே அந்த நாளை குறிபார்த்தே அனைத்து சமூக அரசியல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
நிஜபாரதமாதா கூறு போட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டு விட்ட போது பேனர் மாதாதான் அச்சமற்ற இந்துக்களின் ஒரே அடைக்கலமோ!

இதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை 09.11.2014 இரண்டு முக்கிய நிகழ்வுகள். யாருக்கு முக்கியம், எதற்கு முக்கியம்? மோடி அரியணை ஏறி சங்க பரிவாரம் தனது செல்வாக்கைக் காட்ட விரும்பியதால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு. இது முதல் நிகழ்வு. இரண்டாவது எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழா. அதுவும் வெறும் புத்தகமல்ல. மகாபாரதம். இரண்டிலுமே கிருஷ்ணன் இருக்கிறான். முன்னதில் கார்ப்பரேட் கிருஷ்ணனும், பின்னதில் கார்ப்பரேட் உலகம் இளைப்பாறும் பிருந்தாவன இலக்கிய கிருஷ்ணனும் இருக்கிறார்கள். இருவேறு நிகழ்வுகள் என்றாலும் இரு துருவ வேறு அல்ல. ஒன்றின் தொடர்ச்சி அல்லது நீட்சி .

ஆனால் தமிழ்நாட்டில் மோடி அலை சுனாமியாக வீசியதாக அருளிய ஊடகங்களின் பொய் வெளிறிப் போனாலும், அவர்களது கிராபிக்ஸ் கற்பனை இன்னமும் மறைந்துவிடவில்லை. ஆதலால், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் விவாதமாக கொண்டு சேர்க்கப்பட்டது. பின்னது ஊடகங்களில் பேசப்படவில்லை. ஓரிரு பத்திரிகையாளர்களிடம் தொடர்பு கொண்டு ஜெயமோகன் நூல் வெளியீடு பற்றி கேட்ட போது அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. கமல், இளையராஜா பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்த போதும், “அப்படியா, யாரையாவது அனுப்புவார்கள்” என்பதாக முடித்துக் கொண்டார்கள். பிருந்தாவனத்தின் ரசனையும், இந்திரபிரஸ்தத்தின் அரியணையும் அனைவருக்கும் அல்ல.

முன்னது மேன்மக்களுக்கு, பின்னது சாதா மக்களுக்கு……

இதனால் எதற்குப் போவது என்ற குழப்பம். மக்கள் குறித்தா, மேன்மக்கள் குறித்தா… . ஜெயமோகனின் மகாபாரதம் புத்தக வெளியீட்டு விழா எழும்பூர் மியூசியம் அரங்கில் நடக்கவிருக்கிறது என்று தெரிந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகவும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிபதி ராமசுப்பிரமணியன் அனுமதி வழங்க உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
“அரை மணிநேரத்துல விட்டுறுவாங்கள்ள…” – அணிதிரண்ட அச்சமற்ற இந்துக்களின் கவலை!

அதுவும், முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் திறமையாக வாதிட்டது பற்றி நாளிதழ்களில் படித்த போது நீதித்துறையிலும் இந்து உணர்வுள்ள நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. “ஆர்.எஸ்.எஸ் போடும் காக்கி நிக்கர் யூனிஃபார்ம் அவர்களை போலீஸ் அல்லது ராணுவப் படையினர் என்று குழப்பத்துக்கு வழி வகுக்கும்” என்ற வாதத்துக்கு, “போலீஸ் இப்போது அரை நிக்கர் போடுவதில்லை, ஆர்.எஸ்.எஸ்சின் யூனிஃபார் 1920-களில் வடிவமைக்கப்பட்டதையே அவர்கள் இன்றும் போடுகிறார்கள்” என்று தெளிவுபடுத்திய நீதிபதி, “அவர்கள் லத்தி கம்புகளை ஏந்தி வரப் போவதில்லை என்று அவர்களது வழக்கறிஞர்கள் உறுதியளித்திருக்கிறார்” என்றும் கூறியிருந்தார். “ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான பொதுமக்களின் உரிமையை குறிப்பான காரணங்கள் இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது” என்று உச்சநீதி மன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ராமசுப்பிரமணியம்.

‘அம்மாவுக்கு’ பிணை வழங்கி லீகல் பாயிண்டுகளை உருவாக்கிய நீதித் துறை ஆர்.எஸ்.எஸ்-க்கு மட்டும் சளைத்து விடுமா என்ன? ஆனாலும் ராம சுப்பு அரசியல் சட்டத்தை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் வரலாற்றையும் கரைத்து குடித்திருக்கிறார். ஆகவே ஏப்பமும் பெருசுதான்.

எழும்பூர் செல்வதற்கான பேருந்து சொல்லி வைத்தது போல மியூசியத்தைத் தாண்டிதான் சென்றது. மேம்பாலத்தைக் கடக்கும் போது மியூசியம் தியேட்டரினுள் வெளிச்சமும் கூட்டமும் தென்பட்டன. பிருந்தாவனத்திற்கே உரிய ரம்மியத்தை அதாவது மேன்மக்கள் பங்கேற்கும் ரசனைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் அங்கே காட்சிகள் உருவாக ஆரம்பத்திருந்தன.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
“மோடியும் லேடியும் இருக்கும் போது என்ன செய்துவிடுவார்கள்” – அரைமணி நேர கைது எனும் குருஷேத்ர யுத்தத்திற்கு தயாராகும் வீர இந்துக்கள்

ஆனாலும் மியூசியத்தை தவிர்த்து விட்டு அடுத்த வரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் நோக்கியே நடையை போட்டேன். குழந்தைகள் மருத்துவமனைக்குள் அந்த நேரத்திலும் கூட்டம் தெரிந்தது. பார்த்து ரசிப்பதற்குரிய உடல்களையோ உடல் மொழியையோ அங்கிருக்கும் ஏழை பாழைகள் கொண்டிருக்கவில்லை. நூறடிதூரத்தில் பிருந்தாவனக் காட்சியில் மெய்மறந்தவர்களுக்கு இந்த மெய் நிச்சயம் எரிச்சலூட்டும்.

மருத்துவமனை வெளியே மழைத் தண்ணீரோ, சாக்கடை தண்ணீரோ தேங்கியிருந்தது. வெளியில் கிடந்த பெஞ்சுகளில் சில ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். விளம்பரம்தான் என்றாலும் ‘சுவட்ச் பாரத்’ வெளிச்சம் இங்கே எல்லாம் வருவதற்கு வாய்ப்பில்லை.

சாலையைக் கடந்து ருக்மிணி லட்சுமிபதி சாலையில் திரும்பும் இடத்தில் தடுப்பு வைத்து மறித்திருந்தார்கள். ஒரு பெரும் போலீஸ் படையே நின்றிருந்தது. அதிக ஆள் நடமாட்டமே இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் போல அரை டவுசர் அணிந்த யாரும் நடமாடுவது போல தெரியவில்லை. போலிசு படை யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இவ்வளவு குவிக்கப்பட்டிருக்கிறது? குஜராத்திலும், கோவையிலும் காக்கி சட்டை நிறுவனம், காக்கி பேண்டின் பாக்கெட்டில் பஞ்சாமிர்தம் அருந்திக் கொண்டே சா (Saw)வரிசை படங்களை பார்த்ததோ இயக்கியதோ நினைவுக்கு வந்தது.

வழியில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் மாலை நேர பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அதற்குள் மக்கள் நிரம்பியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் போடும் போதும் அருகிலேயே ஆமென் சொல்வதை சாத்தியப்படுத்திய தந்தை பெரியாரின் தமிழக மண் கொஞ்சம் பெருமை அளித்தது. ஆனாலும் இது எத்தனை நாளைக்கு? சிலுவைக் கோவிலை சிவன் கோவிலென இடிக்கவும், பேசவும், அதற்கு தத்துவ விளக்கம் கொடுக்கவும் கூடிய கோமான்கள் எழும்பூர் மியூசியத்தில் இருக்கும் போது பெரியாரின் நினைவு மட்டும் என்ன சாதிக்கும்?

ரோட்டின் ஒரு புறம் வரிசையாக மாநகர போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 32-க்கும் குறையாத பேருந்துகளை வாடகைக்குப் பிடித்து வந்திருக்கிறார்கள். ஒரு பேருந்தில் 40 பேர் வைத்தாலும் 1,200 பேருக்கும் அதிகமான கூட்டம். ஒரு கோடிப் பேர் வாழும் சென்னையில் ஒரு ஆயிரம் பேர்தான் இந்து ஞான மரபின் மானம் காக்க குழுமியது ஷத்திரிய இந்துக்களுக்கு நிச்சயம் வருத்தம் அளித்திருக்கும். ஆனால் எழும்பூர் மியூசியத்தில் 500 பேர் கூடியிருந்தார்கள் என்றால்  அது பிராமண இந்துக்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும். என்ன இருந்தாலும் ஊர்வலம், தடை, சிறை என்றால் அது சூத்திர-பஞ்சம இந்துக்களின் கடமை அல்லவா?

ஆர்.எஸ்.எஸ் பேரணி
தமிழிசை ரொட்டுல உக்காந்தாதான் சூத்திர சுயம்சேவக்குகள் அடுத்த தேர்தல்ல ஓட்டு கேக்க வேலை செய்வாங்க! ஆனாலும் தியாகம் தியாகம்தான்.

மைதானத்தை நெருங்க நெருங்க போலீஸ் கூட்டம் நிறைய தெரிந்தது. மைதானத்துக்குள் போகும் வழியில் பலர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். “என்ன மீட்டிங் முடிந்து விட்டதா” என்று கேட்டதும் “இல்ல, இல்ல இன்னும் நடக்குது” என்று மலையாளம் கலந்த தமிழில் பதிலளித்தார். கம்யூனிச வாடை உள்ள சேட்டன்கள் சென்னை டீக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இந்து தர்ம வாசனை உள்ள மலையாளிகள் சங்க பரிவார அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்ததும் பொருத்தமானதே.

உள்ளே போய் பார்த்தால், ஒரு 1,000 பேர் இருப்பார்கள். அதில் பாதி பேர் காக்கி அரை நிக்கர் போட்டவர்கள். சிறு சிறு கும்பல்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். அரை நிக்கர் போட்டு, தலையில் கூம்புத் தொப்பியும் (ஆர்.எஸ்.எஸ் சீருடை) வைத்திருந்த ஒருவரைச் சுற்றி ஏழெட்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். தேசத்தை கட்டியமைப்பது, அன்னியரை விரட்டியடித்தல் என்று பேசிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால், “வேன் வந்தா நம்ம வேனான்னு பார்த்து ஏறணும். எல்லாரும் ஏறிட்டாங்களான்னு பார்த்துக்கணும்” என்று ஊருக்கு போகும் பிரச்சனையை பேசிக் கொண்டிருந்தார்கள். இந்து தர்மம் காக்கத்தான் என்றாலும் இல்லற தர்மம் காக்க ஊர் போய் சேரவேண்டுமல்லவா?

மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்து சோகையாக பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவேளை ஊர்வலம் தடை என்பதால் ஏற்பட்ட சோகப் பெருக்கின் காரணமாகவா அந்த சோகை? ஆனால், மைக்கில் ஒருவர் பாடுவது மட்டும்தான் சத்தமாக வந்தது, 1,000 பேர் கூடிய கூட்டத்தில் ஏழெட்டு பேர் கூட கோரஸ் பாடவில்லை.

மைக்காரர் “சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, கிராமம் அனைத்தும் தவபூமி” என்று உணர்ச்சியை பொழிய முயற்சித்து பாடிக் கொண்டிருந்தார். வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தார். மைக்கின் குறையா அல்லது அவரது குரலின் குறையா என்று தெரியவில்லை. கூடியிருந்த 99% பேர் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தவபூமியான கிராமங்களை அழிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை பாஜக ஏற்றுக் கொண்டு காங்கிரசுக்கு போட்டியாக அமல்படுத்தும் போது அங்கே சந்தனம் புழுதியாக மணக்கிறது என்பதை எந்த இந்துதான் ஏற்பான்?

ஆர்.எஸ்.எஸ் பேரணி
எத்தன மணிக்கு ஊருக்கு போவோம்! நம்ம வண்டி எங்க நிக்குது?

ஆர்.எஸ்.எஸ் சீருடை போட்டிருந்த ஒருவர் தன்னந்தனியாக, பரிதாபமாக உட்கார்ந்திருந்து பாடல் வரிகளை திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். உலகின் வாழ்க்கையும், உணர்ச்சியும் எங்கே போய்க் கொண்டிருக்கும் போது புராதன இனக்குழுவின உணர்ச்சிகளும், ஆரம்ப கால சொத்துடமை ராஜ்ஜியங்களின் ராஜதந்திரமும் மோதிக் கொள்ளும் பாரதத்தை பத்து வருடம் தனியாக சொல்லப் போகும் ஜெயமோகனைப் போலத்தான் இவரா? இல்லை யார் வந்தாலும் எங்களது சாதகத்தை விடமாட்டோம் என்று உறுதியேற்கும் முன்குடுமி வைத்து முன் கோப நம்பூதிரிகளின் இலட்சிய மாதிரிகளா?

சற்று தொலைவில் 4 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு பையன் ஸ்மார்ட் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். அதனால் என்ன, இதெல்லாம் அந்தக் காலத்தில் மகாபாரதத்தில் கண்டுபிடித்த கருவிகள்தானே? இல்லை வெண்முரசைத்தான் ஸ்மார்ட் போனில் படிக்க முடியாதா?

“என்ன மீட்டிங் எதுவும் இல்லையா, பாட்டா பாடிக்கிட்டு இருக்காங்களே”

“மீட்டிங் இல்லை, இது பேரணி. அது எல்லாம் முடிஞ்சாச்சு, எங்கள இப்ப அரெஸ்ட் பண்ணியாக்கும் வெச்சிருக்கு”

“ஏன்?”

“கோர்ட்ல அனுமதி கொடுத்த பொறகும், பேரணிக்கு கிளம்பியதும் எல்லாத்தையும் பிடிச்சி இங்க அடைச்சிட்டாங்க, சுத்தி பாருங்க போலீசு நிக்கிறாங்கள்ள”

“அப்படின்னா எல்லாரும் புழல் சிறைக்கு போவாங்களா?”

“அதெல்லாம் இல்லை, இப்போ விட்டுருவாங்க. ஆனா, இத வச்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூட போடலாமோ. நம்ம மாநிலத்திலதான் ஒரு முதலமைச்சர் இருக்கே, அவங்களுக்கு இந்துக்கள்னாலே பிடிக்காது. இந்து ஓட்டு வேண்டாமாம், அதான் தடை பண்ணிட்டாங்க. இனி பாருங்க நல்ல வளர்ந்திருவோம்.”

கவனியுங்கள் ஒரு இந்து பரிவார தொண்டரின் உத்தி இந்துக்களின் ஓட்டுக்களைத்தான் குறி வைக்கிறது. அப்படி ஓட்டுக்களை வாங்கி ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் சங்கபரிவாரங்கள் ஒருபுறம். மறுபுறம் இந்து மேன்மக்கள் இளைப்பாறும் பிருந்தாவன கதாகலாட்சேபத்தை ஜெயமோகன் நடத்துகிறார். இதுதான் இந்து தர்மத்தின் “கேயாஸ் தியரியோ?”.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
ராஜராஜசோழன் பெயரை போட்டே ஆயிரம் பேருதானா! இதுக்கு ரஜினி போரை போட்டா கூட ரெண்டு ஆயிரத்தையாவது தேத்தலாமே!

சட்டையில் ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000-வது ஆண்டு விழா என்ற பேட்ஜ் அணிந்திருந்தார், அந்தத் தொண்டர்.

“ராஜேந்திர சோழன் முடிசூட்டு விழாவுக்குத்தான் இந்த பேரணியா”

“ஆமா, ஆனா தமிழ்நாட்டில யாருக்கும் அந்த மன்னர புடிக்காதாம். ஏன்னா, அவருதான் இந்துமதத்தை வளர்த்தாராம்.”

பரவாயில்லையே, இந்த இடத்தில் தமிழ் ஆர்.எஸ்.எஸ் அதாவது தமிழினவாதிகளும் இந்தி(து) ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரு மாதிரியாகத்தான் சிந்திக்கின்றது.

“நீங்க எல்லாம் எந்த ஊரு, எத்தனை வருசமா ஆர்.எஸ்.எஸ்ல இருக்கீங்க”

“கன்னியாகுமரில மார்த்தாண்டம். எங்க ஊர்ல எல்லாரும் ஆர்.எஸ்.எஸ்தான்”

“நீங்க யூனிஃபார்ம் போடலையா?”

“நாங்க கொண்டு வரலை. அதான் எங்களை இங்க வச்சிருக்காங்க. நாங்கெல்லாம் வரலைன்னா எல்லாரையும் ஜெயிலுக்கே கொண்டு போயிருப்பாங்க. இவ்வளவு பேர் இருக்கறதாலதான் இங்க வைச்சிருக்காங்க”

பரவாயில்லை ஆயிரம் பேருக்கே காவல் துறை பயப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். எனில் குஜராத்தில் காவல் துறை ‘பயந்து’ போய் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு போட்டியாக வேலை செய்வதும் நியாயம்தான்.

“அப்படியா, படிக்கிறீங்களா, வேலை செய்றீங்களா”

“இங்கதான் ஏர்போர்ட்ல வேலை செய்றோம். பெருங்குடில தங்கியிருக்கோம்”

“ஓ, கெவர்ன்மெண்ட் வேலையா”

“இல்ல, இல்ல ஒரு காண்டிராக்டர் வேலைதான்”

ஆர்.எஸ்.எஸ் பேரணி
வேனிலும் கிருஷ்ணன், வெண்முரசிலும் கிருஷ்ணன், குருஷேத்ரத்திலும் கிருஷ்ணன்!

“ஏன் ஊரை விட்டு இங்க வேலைக்கு வாரீங்க. அதுவும் உங்க கன்னியாகுமரி எம்.பி அமைச்சாரகவும் இருக்காரு. மோடியும் மேக் இன் இந்தியான்னு ஊரு பூராவும் தொழிற்சாலையா கட்டி குவிக்கப் போறாருன்னு பேசுறாங்களே?”

“எங்க ஊருக்கு அதெல்லாம் வராது, புல்லட் டிரெயின் இருக்குல்ல, அத கன்னியாகுமரி வர கொண்டு வரதுக்கு முயற்சி பண்றாங்களாம்”

அடேயப்பா, பூனா – அகமதாபாத் புல்லட் டிரெயினுக்கே 50,000 கோடி என்றால் காசி – கன்யாகுமாரிக்கு நிச்சயம் 50 லட்சம் கோடி செலவாகும். ஆகட்டுமே, இனி விஷ்ணுபுரவாசிகள் சடுதியில் புல்லட்டில் வந்து பிருந்தாவன நிகழ்வுகளை அடிக்கடி நடத்தலாம்.

“இன்னைக்கு இங்கயே பக்கத்துல மகாபாரதம் புத்தகம் வெளியீட்டு விழா நடத்துகிறாங்களே, அது பத்தி தெரியுமா”

“தெரியாதே”

“ஜெயமோகன், உங்க மாவட்டத்துக்காரருதான். மகாபாரதத்தை 4 புத்தகமா எழுதியிருக்கிறாராம். அதை வெளியிடுகிறார்கள்”

“அப்படியா, தெரியாதே”

என்ன செய்வது சூத்திர இந்துவுக்கு விதிக்கப்பட்ட அறிவுத் தேடலில் பார்வதிபுரத்து கடாட்சம் இருக்குமென்பது யாராவது எதிர்பார்த்தால் அது அநீதி!

ஆர்.எஸ்.எஸ் பேரணி
குருஷேத்ர யுத்தத்திற்காக தரையில் சூத்திர இந்துக்கள்! சாணக்கிய தர்மத்திற்காக பிருந்தாவன குஷன் சேர்களில் சாத்திர இந்துக்கள்!

இதற்கு மத்தியில் அரை நிக்கர் யூனிஃபார்ம் போட்ட ஏழெட்டு பேர் அணிவகுப்பு நடத்த முயற்சித்திருந்தார்கள். “ஏக், தோ ” என்று இப்படி அப்படி கொஞ்சம் நடந்தார்கள். வரிசையும் இல்லை விறைப்பும் இல்லை. இதற்கு மானமிகு வைகோவின் கருஞ்சட்டை படை கூட பரவாயில்லை. அதனால் என்ன கூட்டணி தளபதி எனும் முறையில் கலிங்கத்து புயலை கமலாலயம் பக்கம் கொண்டு வந்து பயிற்சி எடுத்தால் போயிற்று!

“வேன் வந்ததும், தங்களோடு கூட வந்தவர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று பார்த்து விட்டு ஏறவும்” என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சரி கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது என்று வெளியில் வர முயற்சித்தேன்.

ஒருவர் தொலைபேசியில், “அரெஸ்ட் ஆயாச்சு, இங்க ஸ்டேடியத்தில வச்சிருக்காங்க, பாதி பேர சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு கொண்டு போயிருக்காங்க” என்று சீரியசாக பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு அம்மா, தொலைபேசியில், “ஆமா, ஒரே குழப்பம், கணவர் ஒரு இடத்தில், மனைவி ஒரு இடத்தில்னு ரெம்ப கஷ்டம்” என்று யாரிடமோ புலம்பிக் கொண்டிருந்தார்.

சென்னை  நகரின் ரம்மியமான நவம்பர் மாதத்தில் நடக்கும் இந்த செல்லக் கைதுக்கே இத்தனை புலம்பல் என்றால், காஷ்மீரில், குஜராத்தில், முள்ளிவாய்க்காலில் அலறும் சோகங்கள் இவர்கள் காதில் வெறுப்பாக விழத்தானே செய்யும்? அது வெறுப்பல்ல, விவேகம், வாழ்வின் அடிமுடி அறியாத தேடல் மாரத்தான் என்று தத்துவ விளக்கம் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
ராஜஸ்தான் தலைப்பாகையுடன் வந்திருக்கும் சேட்டு இந்துக்கள், வேடிக்கை பார்க்கும் தமிழ் இந்துக்கள்!

மியூசியம் நோக்கிப் போகும் சாலையில் அரை நிக்கர் யூனிஃபார்ம் போட்ட 2 பையன்களும், இன்னொருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். வேகமாக போய் அவர்களை எட்டிப் பிடித்து விசாரித்தேன்.

“ஆமாங்க, எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணி வச்சிட்டாங்க” என்று தளர்ந்து போய் கூறினார், அந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தந்தையானவர்.

“ஏன், என்ன விஷயமாம். கோர்ட்லதான் உத்தரவு வாங்கியாச்சாமே” என்று கேட்டதும்,

“ஆமா, அது கொடுத்திருக்காங்க. ஆனா, இன்னைக்கு காலையில 11 மணிக்கு வடபழனில ஏதோ கட்சி பிரச்சினை பண்ணினாங்களாம். அதுதான் டிவில எல்லாம் பிளாஷ் நியூசாம். அதான் பேரணியை தடுத்து அரெஸ்ட் பண்ணி வச்சிட்டாங்க”

இங்கே அவர் சொன்னது மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வடபழனியில் நடத்திய ஆர்ப்பாட்டம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அல்லவா?

“நீங்க எந்த ஊரு, என்ன செய்றீங்க”

“இங்க அயனாவரம்தான். வெயிங் மெசின் சர்வீஸ் பார்க்கிறேன்”

“தினமும் ஷாகா போவீங்களா”

“தெனம்லாம் யாருங்க போக முடியும். ஞாயித்துக் கிழமைகள்ள போவோம். காலையில 6 மணியிலருந்து 8 மணி வரை உடற்பயிற்சி, பாட்டு எல்லாம் நடத்துவாங்க” என்றார்.

வெண்முரசு நூல் வெளியீடு
விஜய்டிவியில் வெண்முரசு நிகழ்வு! பாபநாசமா கொக்கா!

பரவாயில்லை இனி நித்தம் ஷாகா போகாமலே ஆர்.எஸ்.எஸ் படையில் சேர முடியும். இந்த விதி பிருந்தாவனத்திற்கும் உண்டு. பங்குச்சந்தை குறித்து அசைபோடும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதலாளியே, ஜெயமோகனின் வெண்முரசை சிலாகிக்கிறாரில்லையா?

எனினும் இந்த சூத்திர இந்துவுக்கும் வெண்முரசு கூட்டம் குறித்தும், ஜெயமோகன்  பற்றியும் தெரியவில்லை. அது பிரச்சினையில்லை. இல. கணேசனும், வானதி சீனிவாசனும் படித்து திளைக்கும் ஜெயமோகன் மகாபாரதத்தை ஒரு சாதா இந்து படித்தால் அதன் தரம் என்னாவது? இல்லை படித்தால்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா?

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம். ஊர்வல புராணம் முடிந்து விட்டது. புத்தக வெளியீட்டு விழாவையும் பார்த்து விடுவோம் என்று மியூசியம் வாயிலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது, இணைய உலகின் இந்து ஞானமரபு கனவான்களான ஜடாயு, ஹரன் பிரசன்னா, பத்ரி போன்ற ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் பேரணியில் கலந்து கொண்டு கைதாகியிருப்பார்களா அல்லது கமல்ஹாசனையும், இளையராஜாவையும் பார்க்க புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பார்களா என்ற சந்தேகம் வந்தது. நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத்தான் போயிருப்பார்கள் என்று நினைத்தால் பின்னர் புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்களில் அவர்கள் தெரிந்தார்கள்.

வெண்முரசு நூல் வெளியீடு
மோடிக்காக தெருவில் இறங்கி பெருக்கிய உலகநாயகன், ஜெயமோகனுக்காக மேடையில் ஏறி வார்த்தைகளால் குளிப்பாட்டுகிறார்! களத்திலும் கருத்திலும் கமல்!

அதுவும் ஒரு குறையல்ல. பிருந்தாவனத்தில் இளைப்பாறும் மேன்மக்கள்தான் சாதா இந்துக்களை அணிதிரட்டி ஆடவைத்து ஆட்சியை கைப்பற்றும் சாதுர்யம் படைத்தவர்கள். அவர்களைப் போய் போர்க்களத்தில் அதுவும் அரைமணிநேர கைது விவகாரத்தில் சிக்கவைக்க நினைப்பது பெருங்கேடு!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்த விவகாரம் ஊடகங்களில் பிரம்மாண்டமாக விவாதிக்கப்பட்ட போது வெண் முரசுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லையா என சிலர் கேட்கலாம்.

பாபநாசம் படத்திற்கு ஒரு பிரமோசனாக வெண்முரசு விழாவை விஜய் டீவியில் போடுவதற்கு உலக நாயகனும், உலக ஊடக அதிபர் முர்டோச்சின் தமிழ் தரகர்களும் பேசி முடித்து விட்டார்கள். ஆக படத்துக்கு படம், இலக்கியத்துக்கு இலக்கியம்.

ஆனால் இந்த சாமர்த்தியம் இவ்விதமாக மட்டும் புரிந்து கொண்டிருக்க யாராலும் முடியாது. ஏனெனில் விழாவில் பேசிய கமல் ஜெயமோகனை புகழ்ந்து தள்ளியதை பார்த்தால் இங்கே படைப்பாளி அல்லவா சிங்கம் என்று தோன்றும். ஆனால் அந்தப் பணிவும் இந்த மார்க்கெட்டிங்கையும் பார்த்தால் இது இதுதான் உண்மையான மகாபாரதத்தை புரிந்து கொள்ள வேண்டிய இடம். மற்றபடி இது விஷ்ணுபுரத்தின் தலைமறைவு உறுப்பினரானா நீயா நானா ஆன்டனியால் நடந்தாக நினைத்தாலும் குற்றமில்லை. விசயம் நடப்பதுதான் முக்கியம். யாரால் என்று யாராவது பேசிக் கொள்வது பிரச்சினை அல்ல.

வெண்முரசு நூல் வெளியீடு
சூத்திர இந்துக்களை இயக்கும் சாத்திர இந்துக்கள், வெண்முரசு கொட்டிய வெற்றிகரமான தருணத்தில்! இந்த சிந்தனை குழாமில் யார் யாருக்கு மோடியின் ஜாக்பாட் கிடைக்கும்?

ஆகையால் கமல் மோடியின் ‘சுத்த’ இயக்கத்தில் மனமுவந்து கலந்து கொண்டிருப்பதையும் பார்த்தால் பிருந்தாவனமும், இந்திரப்பிரஸ்தமும் ஏற்கனவே ஒரு அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

எனினும் தமிழகம் முழுக்க ஒரு 5,000 சூத்திர பஞ்சம இந்துக்கள் கூட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாரில்லை எனும் போது, பத்துவருட மகாபாரத தவத்தின் கூடவே பத்து இலட்சம் இந்துக்களை சேர்ப்பதற்கும் முயல வேண்டும்.

கைது எபிசோடை முடித்துக் கொண்ட வானதி சீனிவாசன் அவசரம் அவசரமாக ஜெயமோகன் நிகழ்வில் கலந்து கொண்டதை பார்க்கும் போது மேற்சொன்னது சரிதான் என்று தோன்றியது.

மேலதிகமாக சென்ற தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகன், தானைத்தலைவர் மோடியை ஆதரித்ததாக வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் வானதி சீனிவாசன்! இதை வெண்முரசு வேந்தரும் மறைமுகமாகக் கூட மறுக்கவில்லை.

பிறகென்ன, கிருஷ்ணன் சாமர்த்தியமாக சிரிக்கிறான்.

–    அப்துல்

 1. அடடா , வினவு நண்பர்களை சந்திக்காமல் போய்விட்டேனே ?

  நேரமே வந்திருக்கலாமே ?

 2. ஆர்எஸ்எஸ் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் நியாயம்.

  ஜெயமோகன் விழா பற்றிய விமர்சனத்தை ஏற்க முடியவில்லை. ஒருவர் புராதன இலக்கியம் ஒன்றை தனக்கு தோன்றியவாறு எழுதி, புத்தகமாக்கி வெளியிடுவதில், அதற்கு ஒரு விழா நடத்துவதில் உங்களுக்கு ஏன் இத்தனை பிரச்சனை? நீங்கள் ஏன் உங்களுக்கு பிரியமான, உலகுக்கு உபயோகமானது என நீங்கள் கருதும் “மூலதனம்” போன்றதொரு புத்தகத்தை விளக்கி நூல் எழுதி, வெளியிட்டு விழா எடுக்க கூடாது? இந்த அக்கப்போரை விட அது பயனுள்ளதாக இருக்கும். என் கடன் சாணி வாரி அடிப்பதே என்ற நிலையில் இருப்பது சரி அல்ல.

  // என்ன செய்வது சூத்திர இந்துவுக்கு விதிக்கப்பட்ட அறிவுத் தேடலில் பார்வதிபுரத்து கடாட்சம் இருக்குமென்பது யாராவது எதிர்பார்த்தால் அது அநீதி! //

  ஜெமோ விழாவுக்கு வந்தவரை ஜாதிவாரி கணக்கெடுத்து விட்டு மேற்படி வரியை எழுதுவதே நேர்மையான செயல்.

 3. ஜெயமோகனின் வெண்முரசு விழா பற்றிய வினவின், வினவுக்கே உரிய தனித்தன்மையான விமரிசனமாக இருக்கும் என்று வந்தால், முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கான விமரிசனத்தை முழுமையாகப் பங்கீடு செய்துவிட்டு அப்படியே வெண்முரசு விழாவுக்கும் போய்வந்தேன் என்று சொல்லிமுடிப்பதாக இருக்கிறது. தலைப்பை ஆர்எஸ்எஸ்ஸின் குருக்ஷேத்திரம் என்று மட்டுமே வைத்திருக்கலாமே.
  முடிந்தால் வெண்முரசு விழாபற்றித் தனியாக எழுதுங்கள்.

 4. வெங்கடேசன்,

  //ஜெயமோகன் விழா பற்றிய விமர்சனத்தை ஏற்க முடியவில்லை. ஒருவர் புராதன இலக்கியம் ஒன்றை தனக்கு தோன்றியவாறு எழுதி, புத்தகமாக்கி வெளியிடுவதில், அதற்கு ஒரு விழா நடத்துவதில் உங்களுக்கு ஏன் இத்தனை பிரச்சனை?//

  புராதன இலக்கியம் என்று மட்டுமா ஜெயமோகன் இதை எழுதி வெளியிடுகிறார், அதை விழுந்து விழுந்து ஆதரிப்பவர்கள் ஆதரிக்கிறார்கள்? இணையத்தில் தேடினால் இதுதான் கிடைக்க வேண்டும், இளைய ராஜாவும், கமல்ஹாசனும் ஒளிவட்டம் போட்டாவது சில புத்தகம் கூடுதல் விற்க வைக்க வேண்டும் என்று லோ லோ என்று அலைகிறார்களே, அது ஏன்? ஏதோ புராதன இலக்கியம் எழுதினோம், புக்கு போட்டோம என்று இருக்க வேண்டியதுதானே!

  தமிழிலேயே இதை விட புராதனமான இலக்கியங்கள் கொட்டிக் கிடக்க ஜெயமோகன் உள்ளிட்ட இந்துத்துவர்கள் மகாபாரதத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதற்கான காரணம் என்ன?

  இந்த கேள்விகளுக்கான விடைதான் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையும்.

  பார்ப்பான் படிக்க வேண்டும், சத்திரியன் ஆள வேண்டும், சூத்திரன் உழைக்க வேண்டும், பஞ்சமன் மனிதனே இல்லை என்ற வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப் பிடிப்பவை மகாபாரதமும் அதில் அடங்கிய பகவத் கீதையும். அதுதான் லோகதருமம் என்று ஏற்றுக் கொண்டு அனவரும் இன்முகத்துடன் தமது கருமத்தை செய்ய வேண்டும் என்று நிறுவுவது மகாபாரதம். தருமன் கடைப்பிடித்த, கிருஷ்ணன் போதித்த, அர்ஜூனன் கேள்வி கேட்ட தருமத்தின் சாராம்சம் இதுதான் என்பதால்தான் சுயமரியாதை உள்ளவர்கள் எல்லாம் இந்த புராதன இலக்கியத்தை தூக்கிப் பிடிப்பதை எதிர்க்கிறார்கள்.

  ஜெயமோகன் மகாபாரதம் எழுத வேண்டும், கமலஹாசன் தசாவதாரத்தில் நடிக்க வேண்டும், துப்புரவுத் தொழிலாளி சாக்கடையில் இறங்க வேண்டும், தயாரிப்பு உதவியாளர் டீ கொடுக்க வேண்டும். அதுதான் அவா அவா தருமம், அதை ஏற்றுக் கொண்டு இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் தற்கால உட்கிடக்கை.

  //நீங்கள் ஏன் உங்களுக்கு பிரியமான, உலகுக்கு உபயோகமானது என நீங்கள் கருதும் “மூலதனம்” போன்றதொரு புத்தகத்தை விளக்கி நூல் எழுதி, வெளியிட்டு விழா எடுக்க கூடாது? இந்த அக்கப்போரை விட அது பயனுள்ளதாக இருக்கும். என் கடன் சாணி வாரி அடிப்பதே என்ற நிலையில் இருப்பது சரி அல்ல.//

  நீங்கள் நிச்சயம் மகாபாரதம் நூல் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மூலதனம் நூலை படித்திருக்கிறீர்களா? இரண்டையும் எந்த அடிப்படையில் ஒப்பிடுகிறீர்கள்? மகாபாரதம் ஒடுக்குபவரின் உரிமையை மதம், தர்மம், நம்பிக்கை, மரபு, தத்துவம், சடங்கு, வாழ்க்கை என்று முன்வைக்கிறது. மூலதனம் ஒடுக்கப்படுவரின் விடுதலையை விடுதலைக்கான வழியை அந்த வழியை அறிவியல்பூர்வமாக நிறுவி பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக மாறுகிறது. அதன்படி மகாபாரதம் ஒடுக்குபவரின் ஆயுதம் அதே நேரம் கூர்மையிழந்த வலுவிழந்த ஆயுதம். உங்களுக்கு எந்த ஆயுதம் வேண்டும்?

  //ஜெமோ விழாவுக்கு வந்தவரை ஜாதிவாரி கணக்கெடுத்து விட்டு மேற்படி வரியை எழுதுவதே நேர்மையான செயல்.//

  பல்வேறு சாதிகளில் பிறந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் நவீன வர்ணாசிரமத்தின் மேல்தட்டுகளில் இருப்பதுதான் அவர்களை ஜெமோவிற்கு ஆரத்தி எடுக்க வைக்கிறது என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமலே நீங்கள் மேற்கோளிட்ட வாக்கியம் சரியானதே என்று நினைக்கிறேன்.

 5. அமர் சித்ர கதாவில் மகாபாரத நூல்கள் அதிகம் உள்ளன. சன் டிவி தற்போது மகாபாரத தொடர் வெளியிடுகிறது. பாரதக் கூத்து பரவலாக நடை பெற்ற காலம் உண்டு. ஜெமோ தவிர மற்ற பலருக்கும் இந்நூலின் மீது ஈர்ப்பு உண்டு. வர்ணாஸ்ரமத்தை வளர்க்கவா? இல்லை. அந்நூலை ‘வர்ணாஸ்ரமம்’ என சுருக்க முடியாது. மகாபாரதம் ஒரு பிரமாண்டமான, சுவாரஸ்யமான, பரந்துபட்ட கதைகள் கொண்ட, நுணுக்கமான நூல். இதனால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே ஜெமோ இதை எழுத முனைந்துள்ளார் என்பது என் கருத்து.

  நானூறு பக்கம் விரல் ஓடிய நூல் எழுதிய பின், அதை விளம்பரப்படுத்த அவருக்கு உரிமை இல்லையா?

  மூலதனமும், மகாபாரதமும் ஒன்றல்ல. அவருக்கு விருப்பமான மகாபாரத்தை அவர் எழுதுகிறார். உங்களுக்கு விருப்பமான மூலதனம் பற்றி நீங்கள் எழுதுங்கள். நாட்டுக்கு உபயோகமாக இருக்கும். இரண்டும் தேவை. உங்களது பாட்டாளி வர்க்க ஆயுதம் சிறப்பாக செயல்பட்டு, அந்த வர்கத்தினர் பொருளாதார ரீதியில் முன்னேறும் பொது, அவர்களும் பாரதம் படிப்பர்.

  அதென்ன நவீன வர்ணாஸ்ரமம்? வர்க்க வேறுபாடும் வர்ணாஸ்ரமமும் ஒன்றா? உழைக்கும் வர்க்கம் கஷ்டப்படும் போது தொல்காப்பியத்திற்கு உரை எழுதிக் கொண்டு இருந்தவரை என்ன செய்யலாம்?

 6. பாவாடைக்குள் ஒளிந்து கொண்டு எழுதிய இந்த கட்டுரையும் இருளாய் கருப்பின் உருவாய் இருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை , மேலும் உங்களை போன்று ஹிந்துதுவதை அளிக்க நினைப்பவர்கள் பலர் கல்லறைக்குள் சென்ற வரலாறும் தமிழக ஹிந்துக்களுக்கு தெரியும் என்பதால் உங்கள் கட்டுக்கதை பெரிய மாற்றத்தை கொடுக்காது , மெம்மேலும் மெருகேற தான் செய்யும் !

 7. ஹிந்து பாசிசப் பார்ப்பனீயத்தை பற்றி அண்ணா அன்றே (திராவிடநாடு – 29.03.1942)சொன்னார்:

  http://www.annavinpadaippugal.info/katturaigal/indhu_hitlarism.html

  “ஹிந்து ஹிட்லரிசம் எவ்வளவு சாதாரண காரியத்திலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கிறது தெரியுமோ, சென்ற வாரத்துப் பத்திரிககளில் ஒரு அரிய செய்திகண்டேன். அகோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகள், வைணவத் தோழர்களுக்கோர் தாக்கீது பிறப்பித்துள்ளார். கிராப்புத்தலை அநாசாரமாம், இனி, வைணர்கள், தலையில் குடிமிதான் வைக்கவேண்டுமாம்! கிராப்புத் தலைகளைக் காணச்சகிக்க வில்லையாம். இத்தகைய சாதாரண விஷயங்களில் கூட நுழைந்துவிடுகிறது ஹிந்து ஹிட்லரிசம். பார்ப்பனப் புரோகிதர்கள னைவரும் ஹிந்து ஹிட்லரிசத்தின் கெஸ்ட்டாப்போக்கள்! நமது பழமை விரும்பிகள் அனைவரும், அதற்கு ஐந்தாம் படைகள்! தோந்திகள் அதன் பாராசூட் படையினராவர்! ஏனெனில் அவர்கள் மாயத்தைப் பற்றிப்பேசிவிட்டு, மண்டல வாசிகளின் மனத்தில் பாரசூட் படையினர்போல குதித்து விடுகின்றனர். இவைகளைக் கடந்து முன்னேறும் விறுவிறுப்பான துருப்புகள் தேவை ஹிந்து ஹிட்லரிசத்தை முறியடிக்க பிரிட்டிஷார், இந்நாட்டு மக்கள், ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்கிகொண்டதைக் கண்டே, இங்கு ஆளமுடியும் எனத்துணிந்தனர்.”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க