Friday, January 17, 2025
முகப்புகட்சிகள்தி.மு.கஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் மறைவு – ம.க.இ.க அஞ்சலி !

ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் மறைவு – ம.க.இ.க அஞ்சலி !

-

mss pandian 3ய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் டில்லியில் நவம்பர் 10 அன்று மாலை மறைந்து விட்டார். 1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் பற்றிய கட்டுரை ஒன்றை எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் அவர் எழுதியிருந்தார். ம.க.இ.க வின் அந்தப் போராட்டத்தைப் பற்றி மட்டுமின்றி, அதன் அரசியல் பின்புலத்தையும் விளக்கிச் சென்றது அக்கட்டுரை. அந்தக் கட்டுரையின் வழியாகத்தான் எம்.எஸ்.எஸ் பாண்டியன் எங்களுக்கு  அறிமுகமானார்.

1990 களின் துவக்கத்தில் நாங்கள் முன்வைத்த பார்ப்பன பாசிசம் என்ற கருத்தாக்கத்தையும், அதனை கருத்தியல் ரீதியாக முறியடிப்பதற்கு இந்து மதத்தின் ஆன்மாவான பார்ப்பனியத்தை தாக்க வேண்டும் என்பதையும் மார்க்சிய லெனினிய அமைப்புகளே ஏற்றுக்கொள்ளத் தயங்கிய அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. (இப்போதும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை). தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மரபு குறித்து கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத, அதே நேரத்தில் “மைய நீரோட்டத்தில் சேர மறுக்கும்” தமிழகம் குறித்து ஒருவித வெறுப்பும் கசப்புணர்ச்சியும் கொண்டிருந்த “வட இந்திய மனோபாவத்தை” அசைப்பதற்கும், வட இந்திய அறிவுத்துறையினருக்கு திராவிட இயக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்கும் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரிதும் உதவின.

90 களில் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இல் அவர் பணியாற்றிய காலத்தில்  அவரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்தைக் கொண்டிருந்தபோதும், புலிகள் இயக்கத்தையும் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமற்ற தமிழினவாத அரசியலையும் அவர் விமரிசினக் கண்ணோட்டத்துடனேயே அணுகினார்.

இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது. பாண்டியன் அதில் வெற்றி பெற்றிருந்தார். எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும் திராவிட இயக்கம் என்று அங்கீகரிக்கும் பார்ப்பனியர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கும், இடைநிலைச் சாதிகளின் பார்ப்பன எதிர்ப்பு நீர்த்துப்போய் அவர்கள் நிறுவனமயமாவதைப் புரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்கள் பயன்படும். குறிப்பாக, 19 ஆம் நூற்றாண்டில் நாடார் சாதியினர் தீண்டத்தகாதோராக நடத்தப்பட்டதையும், அவர்களது முன்னேற்றத்தில் கிறித்தவ மிசனரிகளின் பாத்திரத்தையும் பற்றிய வரலாற்றை, என்.சி.இ.ஆர்.டி யின் 9 ஆம் வகுப்பு பாடநூலிலிருந்து நீக்க வேண்டுமென்று நாடார் சங்கங்களும் ஓட்டுக்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்த போது, இந்தக் குரலின் பார்ப்பன அடிவருடித் தன்மையை அவர் கூர்மையாக அம்பலப்படுத்தினார்.

1996 இல் அனைத்திந்திய புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அதன் கருத்தரங்கில் அவர் ஒரு பேச்சாளர். அன்று உடல்நலக் குறைவால் அவரால் உரையாற்ற இயலாத போதிலும், வராமலிருப்பது சரியல்ல என்று கருதி நிகழ்ச்சியில் வந்து அவர் கலந்து கொண்டதும், நக்சல்பாரி அமைப்பினர் மீது அவர் காட்டிய மதிப்பும் மறக்கமுடியாதவை. பார்ப்பன பாசிசத்தின் வெற்றிமுகம் குறித்தும், ஜனநாயக இயக்கங்களின் பின்னடைவு குறித்தும் அந்நாட்களில் அவர் வெளிப்படுத்திய வருத்தமும் மறக்கமுடியாதது. அறிவுத்துறையினரிடம் நிலவும் அகம்பாவம் சிறிதுமற்ற அவரது இயல்பான உரையாடும் முறையையும், இதமான நட்புணர்வையும் நினைக்கையில் அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரம் அதிகரிக்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

  1. தற்போதைய பண்பாட்டு அரசியல் நெருக்கடிகளுக்கு இடையில் அவரை இழந்திருப்பது எல்லா முற்போக்கு அரசியல் செயல்பாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துயரமும் சுணக்கமும் ஆகும்… வெறும் 57 வயதே ஆன அவர் மேலும் பல்வேறு எழுத்து/ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார், அதற்காக வேலைகளும் செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அவரது “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present” (2008) & “The Image Trap: M G Ramachandran in Films and Politics” (1992) ஆகிய புத்தகங்கள் மிகச் செறிவானவை, தமிழகத்தின் சமூக அரசியல் வரலாற்றை கூர்மையுடன் ஆய்வு செய்தவை.
    “அறிவுத்துறையினரிடம் நிலவும் அகம்பாவம் சிறிதுமற்ற அவரது இயல்பான உரையாடும் முறையையும், இதமான நட்புணர்வையும் நினைக்கையில் அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரம் அதிகரிக்கிறது.” என்று கூறப்பட்டிருப்பது முற்றிலும் உண்மை. தனக்குக் கிடைக்கும் ஆய்வுத் தரவுகளை (Sources and Data) மறைத்துவைத்துக் கொண்டு வேலைசெய்வது என்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் பொதுவாக உள்ள ஒரு நடைமுறை. இதற்கு விதிவிலக்காக இவர் தனது தரவுகளை மாணவர்களுக்கும் கொடுத்து மேலுமேலும் எழுதத் தூண்டி ஊக்குவித்த அறிய பண்பாளர்.
    சென்ற வருடம் அசுரர் வாரவிலாக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதும்போது மறக்காமல் ம.க.இ.க.வின் “அசுர கானம்” பாடல் தொகுப்பை மேற்கோள் காட்டியிருந்தார். வினவு தளத்திலும் புரட்சிகர அமைப்புகளின் பத்திரிக்கைகள்/உரைகளிலும் இருந்து செய்திகளைத் திருடிப் பேசும்/எழுதும் பலர் கூட ம.க.இ.க. என்று சொல்லக் கூட தயங்கும் நிலையில் பேராசிரியர் பாண்டியனின் நேர்மையும் துணிவும் பாராட்டுக்குரியன.

    இறுதியாக, “இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது. பாண்டியன் அதில் வெற்றி பெற்றிருந்தார்.” என்பது அவருக்கான சரியான அஞ்சலியும் அங்கீகாரமும் ஆகும்.

    நன்றி.

  2. எம்.எஸ்.எஸ் பாண்டியனுக்கு செலுத்தப்படும் அஞ்சலிகள் மூலமே அவரை முதன்முதலாக அறிந்து கொள்கிறேன். அவரது பணிகளை அவரை அறிந்தவர்கள் குறிப்பிடுவதை படிக்கும் போது இந்துத்துவ எதிர்ப்புக்கு பயன்படக்கூடிய எத்தகைய ஆற்றல் வாய்ந்த ஒருவரை இழந்து நிற்கிறோம் என்று அறிய முடிகிறது. பெருந்துக்கம் ஒன்று கனக்கிறது. எம்.எஸ்.எஸ். பாண்டியனுக்கு இறுதி வணக்கம்.

  3. 1993-ல் ம.க.இ.க வின் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தைப் பற்றி எம்.எஸ்.எஸ். பாண்டியன் EPW வில் எழுதிய கட்டுரை..

    MSS Pandian’s article about PALA’s protest to enter the sanctum santorum of Trichy Srirangam Temple im 1993.

    https://app.box.com/s/ww2au9u0gi2gp9ixn3k3

  4. சுக்தேவ் போலவே பேராசிரியர் பாண்டியன் இறந்த பின்பே அவரை அறிந்து கொள்வதில் தலைக்குனிவாக உள்ளது.ஹிந்து போன்ற ஊடகங்கள் அவரை இப்போது வெளிச்சமிடுவதில் முரண் ஏதும் தென்படவில்லை.திருவரங்க கோவில் நுழைவு போராட்டத்தை ஆங்கில ஊடகங்களில் செம்மையாக அறிமுகம் செய்ததற்கு கைமாறாகவேனும் அவர் வாழும் காலத்தில் அவரை வினவும் பு.ஜ,பு .க போன்ற பத்திரிக்கைகளும் அறிமுகம் செய்திருக்க வேண்டுமல்லவா? இப்போது கூட இயக்குனர் ருத்ரையா மறைவிற்கு பின்னும் கூட அவரைப்பற்றி நல்லதோ கெட்டதோ ஒருவார்த்தை வரவில்லையே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க