privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் - HRPC ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்

-

  • வெள்ளாற்றை கட்டாந்தரையாக்கிய மணல் கொள்ளையர்கள்-தண்டனை என்ன?
  • தமிழக அரசே மணல் குவாரிகளை உடனே மூடு

என்ற கோரிக்கைகளை முன்வைத்து 10-11-14 திங்கள் அன்று மாலை 4.30 மணியளவில் அதிகமாக மக்கள் கூடுமிடமான கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

manal-kollai-demo-poster-2

பெருந்திரளாக விவசாயிகள், பொது மக்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து அதிகளவில் கலந்து கொண்டார்கள். போராட்டதிற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை ஏற்று நடத்தினார். அருகில் விருத்தாசலத்தில் இருந்தாலும் பல மாதங்களாக நடந்த மணல் கொள்ளைக்கு தாமதமாக வருகிறீர்கள் என கிராம மக்கள் நேசத்தோடு கடிந்து கொண்டதற்கு அமைப்பின் சார்பில் வருத்தம் தெரிவித்து ஆற்றின் இரு கரையிலும் உள்ள மக்களிடம் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்த அனுபவத்தை விளக்கினார்.

“அனைத்து மக்களும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என விரும்புகின்றனர். தலைமை ஏற்று போராட்டம் நடத்த உரிய நபர்கள் இல்லாததால் மணல் கொள்ளை தொடர்கிறது. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மணல் கொள்ளையை மூடும் வரை தொடர்ந்து போராடும்.

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடினோம். காவல் துறைக்கு எதிராக போராடினோம், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு எதிராக போராடினோம் எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதை இந்த நேரத்தில் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் எங்களுக்கு அந்தப் பண்பை, துணிவை வழங்கியிருக்கிறது.

பொதுப்பணித்துறைக்கு 40 லாரிக்கு மணல் கணக்கை காட்டிவிட்டு 400 லாரி மணல் கணக்கில் வராமல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால்தான் அதிகாரிகள் முதல் யார் எதிர்த்தாலும் பணம் வீசி எறியப்படுகிறது.  நமது வீட்டு பொருளை கொள்ளையடிக்க நமக்கு லஞ்சம் கொடுக்கிறான். நாம் இத்தகைய சூழ்ச்சிக்கு பலியாகாமல் போராட வேண்டும் ” என உரையாற்றினர்.

அவரைத் தொடந்து கார்மாங்குடி பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் உரையாற்றும் போது, “மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன்தான் மணல் கொள்ளைக்கு காரணம்.  லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு எதிராக செயல் படுகிறார். அதிகாரிகளிடம் பேசுவது, மணல் கொள்ளையர்களிடம் பேசுவது, மக்களிடம் பேசுவது என மூன்று செல் வைத்திருக்கிறார். அனைத்திற்கும் புரோக்கராக செயல்படுகிறார். கட்சிகளை நம்பி பயனில்லை. தி.மு.க செய்ததை அ.தி.மு.க விரைவாக செய்கிறது. எந்தக் கட்சியும் மணல் கொள்ளையை தடுக்க முன்வராது. நாம் தான் போராட வேண்டும் எத்தகைய போராட்டத்திற்கும் நான் மக்களை திரட்டி கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.” என்று கூறினார்.

மருங்கூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி உரையாற்றும் போது, “வருபவர்கள் எல்லோரும் மணல் கொள்ளையை தடுப்பது போல் பேசி கடைசியில் பணம் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். நீங்களும் அது போல் இருந்தால் என்னை அழைக்காதீர்கள் என்று கூறினேன். ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மைய நண்பர்கள் தங்கள் அமைப்பைப் பற்றி விளக்கிச் சொன்னதும் அவர்களைப் பற்றி நான் விசாரித்தேன். அதன்பிறகுதான் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட உரிய போராட்டம் நடத்த வேண்டும்” என பேசினார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார் காவல் துறையை மிகவும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், “நாம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது இந்தப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளையும் உள்ளூர் ஓட்டுக்கட்சிகளையும் அம்பலப்படுத்தவும்தான். இதற்கு ஆதரவான அதிகாரிகளும், அரசாங்கமும் நல்லவர்கள் போலவும், இதை எதிர்த்து போராடும் மக்களும் அமைப்புகளும், தீவிரவாதிகள் போலவும் அரசாங்கம் சித்தரிக்கிறது” என்று பேசினார்.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இளங்கோவன் உரையாற்றும் போது, “படத்தில் வரும் வசனம் போல எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்.  என்ன உண்மை என்றால் இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்தப் பகுதி மக்களுக்கு சொந்தமானது, இந்த ஆற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கும் கொள்ளையனுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு உணவளிக்கும் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு சொந்தமானது. அதை இந்தப் பகுதி மக்கள் தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு போராட வேண்டும். நாங்கள் மணல் லாரியை மறித்து போராடினோம். காவல் துறையினர், ‘மறிப்பவர்கள் மட்டும் நில்லுங்க, வேடிக்கை பார்ப்பவர்கள் தனியே போங்க’ என்றவுடன் நானும் சிலரும்தான் மறியலில் இருந்தோம். அனைவரும் விலகிவிட்டனர் இப்படி போராடினால் எபப்டி வெற்றி பெற முடியும்” என பேசினார்.

அறிவரசன் என்ற இளைஞர் பேசும் போது, “இந்த மணல் கொள்ளை பற்றி பலமுறை அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்தும், புகார் மனு எழுதியும் எந்த வித பயனும் இல்லை. மாறாக மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று மனு போடும் என்னை 20-க்கும் மேற்பட்ட போலீஸ் வீட்டுக்கு வந்து ‘உனக்கு மட்டும் 144 தடை போட்டிருக்கிறோம்’ என்று மிரட்டுகிறது. ஆனால், ஒரு கொலை நடந்ததை விசாரிக்க 2 போலீஸ் மட்டும் வருகிறது. இது தான் மணல் கொள்ளையனின் அடியாள் போலீஸ் என்பதை நிரூபித்தது. இங்குள்ள 2 பெரிய கட்சிகளும் 2 ஜாதிக் கட்சிகளும் நான்தான் வீரன், சூரன், பெரிய புடுங்கி என்று மார்தட்டி கொள்ளும். இப்ப எல்லாரும் எங்கடா போனீங்கள்” என்று தன்னுடைய உணர்வை வெளிபடுத்தி ஆவேசமாக பேசினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவர்களைத் தொடர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேசும் போது

“மணல் கொள்ளையால் இந்த பகுதி எந்தளவு பாதிக்கப்படுகிறது. என்று இங்கு பலரும் பேசினார்கள். கருவேப்பிலங்குறிச்சி தொடங்கி கார்மாங்குடி வரை ஆற்றில் மணல் இல்லை வெறும் களிமண்தான் தெரிகிறது. இப்போதே 150 அடியில் உள்ள போர்வெல் ஆட்டம் கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து குடிக்க தண்ணீர் கிடைக்காமல் குடங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நமது விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று விட்டு ஊரைகாலி செய்து பஞ்சம் பிழைக்க நகரத்துக்கு கூலிகளாக ஓட வேண்டிய அவல நிலை ஏற்படும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு

மணல் அள்ளுவது அரசாங்கம். நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி கொள்வது நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்காது. மக்கள்தான் போராடி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். எந்த ஓட்டுக் கட்சியும் இதற்காக போராட மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கொள்ளையை ஆதரிக்கின்றன. சட்டப்படிதான் அனைத்தும் நடக்கிறது. மேலும் இதில் அவர்களுக்கும் கமிஷன் போகிறது. உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் VAO, தலையாரி, தாசில்தார், கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தலைமை நிலைய செயலாளர் வரை அனைவருக்கும் இதில் பங்கு போகிறது. அதனால் யாரும் போராடவோ, தடுத்து நிறுத்தவோ முன் வரமாட்டார்கள். இதைப் புரிந்து கொண்டு மக்களாகிய நாம் தான் போராடி தடுத்து நிறுத்த வேண்டும்.

மணல் கொள்ளையாகட்டும், வாக்களிப்பதற்காகட்டும் அற்ப பணம் 1000, 2000 வாங்குவதிலா நம் வாழ்க்கையை நடத்துகிறோம். வருடம் முழுவதும், பிள்ளைகளை படிக்க வைப்பது, நல்லது கெட்டது பார்ப்பது என அனைத்திற்கும் நாம் குடும்பத்தோடு இரவு பகலாக உழைக்கிறோம். அந்த வருமானத்தில்தான் நாம் குடும்பத்தை நடத்துகிறோம்.

ஆனால் மணல் கொள்ளை மட்டுமல் அனைத்து வளங்களும் கொள்ளை போகிறது. கல்வி, மின்சாரம், மருத்துவம், குடிநீர் என மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் அனைத்தையும் பாதுகாத்து வழங்குவதற்கு பதிலாக தனியார்மயமாக்கி ‘காசுள்ளவன் வாங்கட்டும் இல்லாதவன் செத்து போகட்டும்’ என அரசின் தனியார்மயக் கொள்கை தாராமயக் கொள்கை சொல்கிறது. மோடி அரசோ, மன் மோகன் சிங் அரசோ, அதி.மு.க.,  தி.முக எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்காக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆற்றுமணல் கொள்ளை இவற்றை விசாரிக்க சகாயம் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்திரவிட்டது. தமிழக அரசு அந்தக் குழுவை நடத்த விடாமல் எல்லா முட்டுக்கட்டைகளையும் போடுகிறது.

வெள்ளாறு மட்டுமல்ல தாமிரபரணி, காவிரி, பாலாறு, கொள்ளிடம் என அனைத்து ஆறுகளும் சாகடிக்கப்படுகின்றன. விவசாயிகள் சங்கத்தினர் அமைத்து மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதுடன் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்து பேராடி வருகிறார்கள். தமிழக அரசோ மணல் கொள்ளைக்கு ஆதரவாக விவசாயிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறது. ஆற்றில் 3 அடிக்கு மேல் மணல் அள்ளக் கூடாது. இரண்டு பொக்லைன்தான் பயன் படுத்த வேண்டும். ஆனால் சட்டத்தை யார் மதிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தின் நீர் மட்டம் செமி கிரிட்டிகல் (அரை நெருக்கடி நிலை) என வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களிடம் கருத்து கேட்டபிறகு தான் மணல் எடுக்க வேண்டும். ஆனால் எந்த மக்களை கலந்து பேசினார்கள். மணல் கொள்ளையை எதிர்த்து போராடியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தடுத்து நடவடிக்கை எடுத்த கோட்டாட்சியர், தாசில்தார், துணை ஆய்வாளர், ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர்கள் கொலை மிரட்டலை சந்தித்தனர்.

குடிநீருக்காகதான் மூன்றாம் உலகப் போர் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அரசோ நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு பதிலாக தனியார் கொள்ளைக்கு திறந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் தீவிரவாதி என மிரட்டி பொய் வழக்கு போட்டு மக்களை அச்சுறுத்துகிறது.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களின் அனைத்து வாழ்வாதார போரட்டங்களுக்கும் உறுதுணை யாக இருக்கும். காவல் துறையின் மிரட்டலைப் பற்றி கவலை வேண்டாம். அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். இத்தகைய மணல் கொள்ளையை எதிர்க்க அமைப்பாக திரண்டு இடை விடாமல் தொடர்ந்து போராடினால் கண்டிப்பாக குவாரிகளை மூட முடியும். விருத்தாசலம், மணிமுத்தாறு பகுதியில் கிராம மக்கள் ஒற்றுமையாக திரண்டு போராடி குவாரியை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். வேலுர் பாலாறு மணல் குவாரிகளுக்கு எதிராக போராடிய மக்கள் மணல் கொள்ளையனிடம் வாங்கிய பணம் 1.5 லட்சம் ரூபாயை திருப்பி வீசி எறிந்துள்ளனர். அத்தகைய மான உணர்வுதான் அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளையும், அச்சுறுத்தும். வேட்டியிலும், மீசையிலும் இல்லை மானம், நாம் வாழும் காலத்தில் அநீதிகளுக்கு எதிராக நாம் என்ன செய்தோம் என்பதில்தான் இருக்கிறது. வெற்றி தோல்வி உறுதியான பிறகுதான் போராடுவது என்பது அறியாமை, சுதந்திரத்திற்காக போராடிய திப்பு, கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், வ.உ.சி. ஆகியோர் போராட்டத்தின் தியாகத்தில்தான் சுதந்திரம், சுயமரியாதை, நாட்டுப் பற்று உயிர்ப்புடன் இருக்கிறது.

உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இந்த பகுதி மக்களும் ஒற்றுமையுடன் திரண்டு போராட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் மணல் அள்ளுவதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் போட வேண்டும். உங்களுடைய அனைத்து போராட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உறுதுணையாக களத்தில் இருக்கும் என உறுதியளிக்கிறோம்” என பேசினார்.

கூட்டத்தின் இறுதியில் நமது அறிவிப்பை ஏற்று பல விவசாயிகள் போராட்டத்திற்கு தங்கள் பெயரை பதிவு செய்தனர். நன்கொடை அளித்தனர். ஒன்றும் செய்ய முடியாதா? என ஏங்கிய மக்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது ஆர்ப்பாட்டம். அதிகளவில் போலீசு பாதுகாப்புக்கு நின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தமிழக அரசே! தமிழக அரசே!
கைது செய், கைது செய்!
மணல் கொள்ளையர்களை, கைது செய்!

நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!
மணல் கொள்ளையை, தடுக்காத
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!.

வேடிக்கை பார்க்குது, வேடிக்கை பார்க்கது,
மாவட்ட நிர்வாகமே
மொத்தமா, வேடிக்கை பார்க்கது.
மணல் கொள்ளையை, வேடிக்கை பாக்குது!

போச்சு போச்சு- அய்யோ போச்சு
குடிநீர்போச்சு, விவசாயம்போச்சு,
தூக்கம் போச்சு, நிம்மதி போச்சு
கொள்ளையடிக்கிறான், கொள்ளையடிக்கிறான்,
ஆற்றுமணலை கொள்ளையடிக்கிறான்,
இரவு பகலா கொள்ளையடிக்கிறான்
நாதியில்ல நாதியில்ல,
தடுப்பதற்கு நாதியில்ல,…

3 அடிக்கு அனுமதி வாங்கி
30 அடிக்கு அள்ளுறான்
தாசில்தாரும், டி.எஸ்பியும்
மாட்டுவண்டிய மடக்கிறாங்க
மணல் லாரிய அனுப்புறாங்க
யாருக்கடா அரசாங்கம், வெங்காய அரசாங்கம்.

போராடுவோம் போராடுவோம்!
மணல் குவாரிகளை,
மூடும்வரை போராடுவோம், போராடுவோம்

கொள்ளை போகுது கொள்ளை போகுது
மணல் கொள்ளை தட்டிக் கேட்டால்
போலீசு வருது பொய் வழக்கு போடுது
கனிம வளம், நீர்வளம்
பொதுப்பணித்துறை வருவாய்த்துறை
அதிகாரி எங்கே? அதிகாரி எங்கே?
எத்தனை துறை இருந்தாலும் வக்கில்ல வக்கில்ல
மணல் கொள்ளையை தடுக்க
வக்கில்ல, வக்கில்ல

அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்
போலீசு லட்டிக்கும், பொய் வழக்குக்கும்
அஞ்சமாட்டோம்,..

போராடுவோம் போராடுவோம்!
மணல் குவாரிகளை,
மூடும்வரை போராடுவோம், போராடுவோம்

மடப்பயலே, மடப்பயலே
புரிஞ்சுக்கடா மடப்பயல
எல்லையில்ல, எல்லையில்ல
காத்துக்கும் தண்ணிக்கும்
எல்லையில்ல, எல்லையில்ல
சொந்தமடா சொந்தமடா
அனைத்து உயிருக்கும் சொந்தமடா…

அனுமதியோம் அனுமதியோம்
மண்ணையும்,மக்களையும் காட்டிக்கொடுத்து
மணல் கொள்ளைக்கு, காசுவாங்கும்,
துரோகிகளை அனுமதியோம்.

புறக்கணிப்போம், புறக்கணிப்பாம்!
விவசாயத்தை, அழித்து விட்டு
குடிநீருக்கு வேட்டு வைக்கும்,
மணல் கொள்ளைக்கு ஆதரவளிக்கும்
பஞ்சாயத்து தலைவரை புறக்கணிப்போம்!
கவுன்சிலரையும்,கட்சிகாரனையும் புறக்கணிப்போம், புறக்கணிப்போம்!

தீர்மானம் போடு! தீர்மானம் போடு!
மணல் குவாரிகளை மூடுவதற்கு
பஞ்சாயத்தில தீர்மானம் போடு
ஒன்றியத்தில தீர்மானம்போடு
மாவட்ட கவுன்சில தீர்மானம் போடு!
மாவட்ட ஆட்சியரே உத்திரவு போடு!

அரசியல்வாதிக்கு பல லட்சம்
எதிர்த்து கேட்டால் உனக்கும் பங்கு
மானம் இழந்து வாழ்க்கையா?
மணல் கொள்ளைக்கு லஞ்சப்பணமா?
வீசி எறிவோம் வீசி எறிவோம்
வாங்கிய பணத்தை
வீசிஎறிவோம் வீசிஎறிவோம்…

கைது செய் கைது செய்
வெள்ளாற்றை கட்டாந்தரையாக்கிய
மணல் கொள்ளை மா பியாக்களை கைது செய்
துணை நின்ற அதிகாரிகளை கைது செய்! கைது செய்!

manal-kollai-demo-poster-1

தகவல்:
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க