Sunday, January 19, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி

மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி

-

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 3

13. சென்னை – மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி

‘நிதி மூலதனம் கொல்லும் ! கம்யூனிசம் வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நவம்பர் புரட்சி விழா சென்னையில் ம.க.இ.க மற்றும் பெ.வி.மு சார்பில் நடத்தப்பட்டது. விழாவில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

இதற்கு பெ.வி.மு சென்னை கிளையின் இணைச் செயலர் தோழர் சித்ரா தலைமை தாங்கி நடத்தினார். ரஷ்யாவில் நடந்த புரட்சியை போல இந்தியாவிலும் ஒரு புரட்சியை நடத்த வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

ம.க.இ.க. தோழர் சோமு வாழ்த்துரையையும், நிகழ்ச்சிகளை பெ.வி.மு. தோழர் செல்வி தொகுத்தும் வழக்கினார்கள்.

புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இளம் தோழர்களின் உற்சாகமான பங்கேற்பு பறை முழக்கத்துடன் சிறுவர்களின் நடனத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பகத்சிங் தன்னுடைய கடைசி நேரத்திலும் இந்த மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்பியதை காட்சியாக நடித்த இளந்தோழர் வெண்மணி பகத்சிங்கை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

‘சீரழிவு பண்பாடு’ என்ற தலைப்பில் பேசிய ம.க.இ.க தோழர் இளவரசி பள்ளிகளில் நடக்கும் விழாக்களில் இப்போது குழந்தைகளை விஜய், அஜீத் போன்று வேடங்கள் போட்டு சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதையும், சிங்காரம் என்ற பெயரில் அழகு பதுமைகளாக வளம் வருவதையும் இடித்துரைத்து பேசினார்.

அடுத்து வந்த ம.க.இ.க தோழர் தாமிரபரணி ‘வேலை கிடைச்சிடுச்சி’ என்ற தலைப்பில் இப்போது சமூகம் உள்ள நிலைமையில் இளைஞர்களுக்கான வேலை அரசியல் மாற்றத்திற்காக போராடுவதுதான் என்று பேசி சென்றார்.

‘அம்மா கைது – தமிழகத்தின் துயரம்’ என்ற தலைப்பில் அம்மாவின் கைது குறித்து கவிதை வாசித்தார் பெ.வி.மு வின் இளம் தோழர் கவி. சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான அம்மாவிற்காக அ.தி.மு.க அடிமைகள் நடத்திய தற்கொலை முயற்சிகள், பேருந்து எரிப்பு, கடைகளை அடித்து நொறுக்கியது, தீ மிதித்தது, மண்சோறு சாப்பிட்டது, போஸ்டர்கள் ஒட்டியது போன்ற அபட நாடகங்களை அம்பலப்படுத்தியது கவிதை.

‘போலி ஜனநாயகமும் நவம்பர் புரட்சியும்’ என்ற தலைப்பில் ம.க.இ.க தோழர் வாசுதேவன், இப்போது நிலவும் போலி ஜனநாயக அரசை தகர்த்து எறியாமல் உழைக்கும் மக்களுக்காக அரசை நிறுவ முடியாது, அதற்காக பாடுபட தோழர்கள் நெஞ்சில் உறுதி ஏற்க வேண்டும் என்று தன்னுடைய கவிதையின் மூலமாக தெரிவித்தார்.

சிற்றுரையில் பேசிய சென்னை கிளை செயலாளர் தோழர் அமிர்தா நம்முடைய ‘விடுதலைக்காக பாதை’ புதிய ஜனநாயக அரசை அமைக்க போராடும் புரட்சி பாதை என்பதையும் அதற்காக போராடும் அமைப்புகளில் உள்ள நாமும் மக்களுடன் தியாகத்திற்கு அஞ்சாமலும், அர்ப்பணிப்புடனும், ஐக்கியமுடனும் இருக்க வேண்டும் அப்போது தான் மக்களும் நம்முடன் புரட்சிக்கு வருவார்கள் என்பதை, தங்களுடைய உயிரையும் கொடுக்க தயங்காத தோழர்களின் தியாகத்தை எடுத்துக்காட்டி விளக்கி பேசினார்.

சிறப்புரையில் பேசிய ம.க.இ.க. தோழர் துரை சண்முகம் ‘புரட்சி அழைக்கிறது நீங்கள் தயாரா?’ என்ற கேள்வியை முன் வைத்து, ஒரு அமைப்பாக சேர்ந்து சமூக மாற்றத்திற்காக போராடும் போது மட்டும் தான் பிரச்சினைகள் என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று சிறுச்சேரி சிப்காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த உமா மகேஸ்வரியின் நிலை என்ன ? சாதாரணமாக இப்போது பள்ளிகளில் – வேலை பார்க்கும் இடங்களில் – பொது இடங்களிலும் பாதுகாப்பற்ற தன்மைதான் நிலவுகிறது. நமக்கு என்ன என்று விட்டுவிட்டால் இது பல மடங்கு அதிகரித்து, அடக்கிப் போகும் நிலைமைதான் வரும். ஒரு அமைப்பாக இருக்கும் போதுதான் இவற்றை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வும் – கடமையும் இருப்பதை உணர முடியும். அதற்கான போராட்டம் உங்களை அழைக்கிறது நீங்கள் வரவேண்டும் என்று பேசியது அரங்கில் வந்த பல குடும்ப பெண்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்ததாக ‘கல்யாண கதை கேளு’ என்ற அம்மாவின் வளர்ப்பு மகனின் கல்யாணத்தை விவரிக்கும் ம.க.இ.க.வின் பாடலை ஜெயலலிதா, சசிகலா, தினகரன் போன்று வேடமிட்டு காட்சிப்படுத்தி தோழர்கள் நடத்திய கலை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

என்றும் அழியாதது, அழிக்கவும் முடியாதது நக்சல்பரி எழுச்சி என்று முழக்கும் பாடலும் தோழர்கள் உணர்வுடன் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

பெ.வி.மு. தோழர்கள் “நவம்பர் 7 என்ற தினமொன்று”; “இந்து மதவெறிக்கு அடையாளம் காவி”; “பொழப்புக்கு வேல இல்ல” போன்ற புரட்சிகர பாடல்களை பாடியது அரங்கத்தில் சிறப்பாக பாராட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பெ.வி.மு தோழர் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பகுதிகளில் முதல் முயற்சியாக ஓட்டப் பந்தயம், எலுமிச்சை ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அதில் பகுதி குழந்தைகளும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த புது முயற்சி தோழர்கள் மத்தியும் அணிகள் மத்தியும் மகிழ்ச்சியான தருணமாகவும் ஐக்கியப்படும் தன்மையாகவும் அமைந்தது.

நன்றியுரை பெ.வி.மு. தோழர் சாந்தி வழங்கினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விழா அரங்கில் குழந்தைகள் வரைந்த ஆசான்களின் ஓவியங்கள், கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் விழா சிறப்பாக முடிந்தது.

நவம்பர் 7 விழாவின் சிறப்புகளையும் கடமைகளையும் நெஞ்சில் ஏந்தி தோழர்கள் உற்சாகமாக கலைந்தனர்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

14. தேனி மாவட்டம்

நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க

nov7-theni-poster

தேனி மாவடட்த்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாள் கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

போடிநாயக்கனூர், தேவாரம், நாராயணத்தேவன் பட்டி,கம்பம்,கூடலூர் ஆகிய கிளை பகுதிகளில் திரளான தோழர்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை அடைய அர்ப்பணித்து பாடுபடவும் உறுதியேற்று நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வி.வி.மு செயல்படும் ஆறு பகுதிகளில் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், பேரணியாக சென்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இறுதியாக கூடலூர் கிளை பகுதியில் மையப்படுத்தி தெருமுனைக்கூட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு தோழர் மோகன் முன்னிலை வகித்தார்.  தோழர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

15. புதுச்சேரி

நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்!

செத்தால் சுடுகாடு போவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்ற போதிலும், பார்ப்பனீயமோ செத்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்ற அறிவியலுக்குப் புறம்பாக மூட நம்பிக்கையை மக்களுக்கு சொல்லி மக்களை மடையர்களாக மாற்றுகிறது. செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அறிவியல் முன்னேறாத காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னேயே மக்கள் உயிருடன் இருக்கும் போதே சொர்க்கத்தில் வாழ்ந்தனர். ஆம், மார்க்சிய வழியில் புரட்சி நடத்தி மண்ணில் சொர்க்கத்தைப் படைத்துக் காட்டியது லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு.

நமது உழைப்பைச் சுரண்டி சேர்த்த சொத்துக்களை தனது வளர்ச்சியாகக் காட்டி திமிராக வலம் வருகிறது முதலாளித்துவம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத கொள்கைகள் மூலம் உலகையே முழுங்கத் துடிக்குது முதலாளித்துவம். அதனால், மக்கள் வாழ்விழந்தவர்களாக வேகமாக மாறிவருகிறார்கள். ஆனால், சுரண்டல் இல்லாத, உழைக்கும் மக்களுக்கே அனைத்தும் சொந்தம் என்ற உன்னத பொதுவுடமைத் தத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட அரசாக இருந்தது அன்றைய அரசு. இன்று, நவம்பர் 7-ன் தேவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதை தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் உணர்த்தி இன்றைய நரக வாழ்க்கையை ஒழித்து மீண்டும் மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைக்க அறைகூவும் விதமாக புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இணைப்பு சங்கங்கள் இயங்கும் பகுதியான வில்லியனூர் பகுதியில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த அரங்கக் கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில புஜதொமு தலைவர் தோழர். சரவணன் தலைமையில் நடந்தது. புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர். பழனிசாமி மற்றும் புதுச்சேரி மாநில இணை செயலாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் ஒரு தோழரின் மகளான நித்யஸ்ரீ நமது நாட்டின் நிலையை எள்ளி நகையாடும், “எங்க நாடு ஆகுது வல்லரசு” என்ற புரட்சிகர பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் தோழர். சரவணன் தனது தலைமையுரையில், “ஒவ்வொருவரும் மத பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். ஆனால், அது கொண்டாடும் நோக்கம் பற்றி தெரியாதவர்களாக உள்ளனர். மத பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களைத் தெரிந்து கொண்டால் நமது வாழ்க்கைக்கு எவ்வளவு நேர் எதிரானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மக்களை மூட நம்பிக்கையில் மூழ்க வைப்பதன் மூலம் அவர்களின் போராடும் குணங்களை மழுங்கடிப்பதாகத் தான் உள்ளது” என்பதை இடித்துரைத்துப் பேசினார். மேலும், “நவம்பர் -7 என்பது தான் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான உன்னத நாள்” என விளக்கிப் பேசினார்.

தோழர். பழனிசாமி தனது உரையில், “நவம்பர்-7 ரசியப் புரட்சிக்குப் பின் அங்கு சட்டம் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டு, அதில் மக்கள் கோரிய திருத்தங்கள் செய்தும் தான் இயற்றப்பட்டது. ஆனால், இன்று மோடியோ தினம் தினம் ஒரு அறிவிப்பின் மூலம் தொழிலாளர் விரோத சட்டங்களை மக்கள் மீது திணித்து வருகிறார். ஏற்கனவே கோவணம் போல் மானத்தைக் காத்து நிற்கும் சட்டத்தைக் கூட அதை அம்மணமாக்கப் போகிறார்” என்பதை விளக்கிப் பேசினார்.

அடுத்தபடியாக, தோழர். லோகநாதன் தனது உரையில், “இன்று மக்கள் படும் பாடுகளுக்குக் காரணங்களைத் தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் கடன் பட்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். ஒரு புறம், அந்த அறியாமையில் மக்களை மூழ்கடித்து போராடாத மொன்னை களாக மாற்றும் அதே சமயம், மறுபுறம், அதே பண்டிகைகளைக் காரணமாக வைத்து, முதலாளிகள் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றனர். மக்கள் தான் இருபுறமும் அடிவாங்கும் மத்தளமாக உள்ளனர். மக்களை, அரசியல் தளத்தில் போராடாத மொன்னைகளாகவும், பண்பாட்டுத் தளத்தில் உணர்ச்சியற்ற மொக்கைகளாகவும் மாற்றி வருகின்றது மறுகாலனியாக்கம். இன்று விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், மின்சாரம் முதல் ஆறுகள், மலைகள், காடுகள், கடல் என அனைத்தும் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விடப்பட்டுவிட்டது. ஆனால், புரட்சிக்குப் பிந்தைய ரசியாவில் மேற்கூறிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பெருகி, வேலை நேரம் குறைக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளை இன்றைய நமது வாழ்நாளோடு ஒப்பிட்டுப் பார்த்து ரசியப் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! செத்த பிறகு தேவையில்லை நமக்கு சொர்க்கம்! வாழும் போதே படைப்போம் இந்த மண்ணில் ஒரு சொர்க்கம்!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, நமது பசிக்காக என்பதாக இல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்பாட்டு உணவாக மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. இந்த அரங்கக் கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக வந்து கலந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு – 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க