திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பால் விலை ஏற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பால் விலையை லிட்டருக்கு ரூ 10 உயர்த்தி உள்ளது, அரசு. இதனை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் கண்டித்தத்துடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நமது அமைப்பின் சார்பிலும் திருச்சி பகுதியில் இப்பிரச்சனையை மக்களிடம் விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்து விலை உயர்வு அன்று நகரம், புறநகர், கல்லூரி, கடைவீதி என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
அதன் பின் 3.11.2014 நகரின் மையப் பகுதியில் உள்ள சிக்னலில் பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கபட்டது. ஆயிரக்கணக்கான நபர்களை சந்தித்து பேசப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் சிலர் தமக்காக தான் விலை உயர்த்தப்பட்டது என அப்பாவித்தனமாக கூறினர்.
- பருத்திக் கொட்டை, புண்ணாக்கு மானிய விலையில் தருவதற்கும், விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த அரசுக்கு வேறு வழி இல்லையா?
- மொட்டை அடிச்சவனுக்கும், மொளப்பாரி தூக்கினவனுக்கும் பல கோடிகளை ஒதுக்கிய பணத்தை ஏன் பால் உற்பத்தியாளர்களுக்கு தரக்கூடாது
பால் விலையை உயர்த்தி தான் இதை செய்ய வேண்டுமா? இது மக்களை மோதவிடும் தந்திரம் என விளக்கப்பட்டது.
இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்கிறதா என்கிற தோரணையில் அமைப்பு பிரசுரத்தை பெற்றுக் கொண்டனர். இது போல தவறான கண்ணோட்டத்தில் கேள்வி கேட்பவர்களிடம் பொறுமையாக விளக்கப்பட்டது. அ.தி.மு.க கொடி கட்டிய காரிலும் பிரசுரம் வழங்கி விளக்கப்பட்டது. விருப்பம் இல்லாமல் பிரசுரம் மட்டும் பெற்றுச் சென்றனர். காலை முதல் மாலை வரை பிரசுரம் வழங்கியது நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“பால் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி! ஆவின்-க்கே பால் ஊற்ற அரசு செய்த சதி” என்ற தலைப்பில் 05.11.2014 அன்று திருச்சி பாலக்கரை இராமகிருஷ்ணா பாலம் அருகே காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் தோழர். பவானி தலைமை ஏற்று நடத்தினார். ம.க.இ.க தோழர் ஜீவா, மனித உரிமைப் பாதுகாப்பு மைய தோழர் காவேரி நாடன், ம.க.இ.க-வின் மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.. ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள் போராட்ட உணர்வை மக்களிடையே விதைத்தது. இவ்வார்ப்பட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள், பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர்.
தோழர் பவானி பேசும் போது:
இந்த பால் விலை உயர்வினால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பருத்திக் கொட்டை, புண்ணாக்கிற்கு அரசு மானியத்தை ரத்து செய்ததன் விளைவு, விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. அவர்களால் முடியாத நிலையில் ஆடு மாடுகள் பேப்பரை தின்னும் அவலநிலைதான் இருக்கின்றது என்றார்.
ம.க.இ.க தோழர் ஜீவா பேசும் போது:
“போதிய தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஆவின்பால் கொடுக்க பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவுக்கு ஆவின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அரசாங்கம் அதிலும் கலப்படம் செய்வதுடன் அதன் விலையையும் ஏற்றி குழந்தைகளுக்குக் கூட வஞ்சனை செய்கிறது. தண்ணீரைக் கூட இலவசமாக வழங்காத அரசிடம் நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். தண்ணீர், கல்வி, மருத்துவம், போன்றவற்றைக் கூட இலவசமாகத் தர முடியாது என்று சொல்லும் இந்த அரசு எதற்கு? இதற்கெதிராக ஒரு போராட்டம் இல்லை. ஆனால், ஜெயலலிதா ஒரு கிரிமினல் குற்றவாளி. அவர் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து 22 பேருந்துகள் எரிக்கப்பட்டன. இந்த இழி நிலை மாற நாம் போராட வேண்டும். இந்த அநீதியான ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கும் நக்சல்பாரிகளே இந்த தேசத்தைக் காப்பவர்கள்” என்றார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டத் தலைவர் காவிரி நாடன் பேசுகையில்:
“பால் விலை உயர்வு மட்டுமல்ல, மின்கட்டணமும் உயரப்போகிறது. மக்களின் கருத்துக் கேட்டே மின் கட்டண உயர்வு என்று சொல்லி நடத்தும் கருத்த கேட்புக் கூட்டம் ஒரு நாடகமே. மீனவ சமூகம் பாதிப்பு, இலங்கை அரசு அனைத்தும் இவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நடத்துகிறது. விடுதலை புலிகளுக்கு ஆயுதம், மருந்து கொடுத்தார்கள் என மீனவர்களை சிறை வைத்தது அரசு. ஆனால், சிங்கள ராணுவத்திற்கு நிதி, ஆயுதம் கொடுத்து லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றது இந்திய அரசு, இதற்கு என்ன தண்டனை? காங்கிரசுக்கு மாற்றாக பாஜக என மக்கள் நினைத்தனர். இவர்கள் அனைவரும் நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகளே!” என்றார்.
தோழர்.காளியப்பன் பேசும் போது:
“எந்த பரிசீலனையும் இல்லாமல் விலையை ஏற்றியிருக்கிறது அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிதி தர வேண்டும். ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என காரணம் கூறுகின்றனர். இது சரி என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆவின் நிறுவனம் ஏன் நட்டத்தில் இயங்குகிறது? அப்படி இயங்கினாலும் விலையை ஏன் உயர்த்த வேண்டும்” என தோழர் கேள்வி எழுப்பினார்.
“25 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியே நம்பியே உள்ளது. கல்வி மருத்துவம் எப்படியோ அப்படி பாலும் அடிப்படை தேவை. பால் நோயாளிகளுக்கு மருந்தாகவும் குழந்தைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியில் 2-ம் இடத்தில் இருந்தும், மக்கள் சத்து பற்றாக்குறையுடன் உள்ளனர். நாட்டு மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டிருந்தால் விலை ஏறியிருக்காது. பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லை. மக்களின் வயிற்றிலடிப்பதே பெரிய பயங்கரவாதம். அரசின் அடிப்படை நோக்கம், ஆவின் நிறுவனத்தை முடிவிட்டு, தனியாருக்கு கொடுப்பதே. இது மட்டுமின்றி பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு. எல்லா துறைகளையும் நட்டத்தில் இயங்குவதாக காட்டி தனியாருக்கு தாரைவார்க்கின்றது. இதை மக்கள் போராட்டத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும்” என சிறப்புரையாற்றினார்.
பாய்லர் பிளன்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் தோழர் சுந்தர்ராஜ் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
விலை உயர்வை கண்டு விரக்தியடைந்து வீட்டுகுள் முடங்காமல் வீதியில் இறங்கி போராடும் போது இந்த அரசின் சதி செயலை அம்பலப்படுத்தவும், அரசு பணிய வேண்டிய நிர்ப்பந்தமும் குறைந்தபட்சம் விலையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். மக்கள் வீதியில் இறங்கி போராடுவதன் மூலமே இந்த அரசின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வைக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
மக்கள் கலை இலக்கியக் கழகம் வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாழ்க!
பெண்கள் விடுதலை முன்னணி வாழ்க!
மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனை ஓங்குக!
புதிய ஜனநாயக புரட்சி வெல்க!
பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடித்து
ஆவின் பாலுக்கு விலை உயர்வு
பச்சத்தண்ணியில் காசு பொறுக்கும்
பாதகத்தி ஆட்சியிலே
பாலுக்கு விலை ஏறுதுன்னு
புலம்பாதே! புலம்பாதே!
இடுப்புக் கோவணம் உருவுவதற்கும்
எதிர்காலத் திட்டம் வருது
மறவாதே! மறவாதே!
ஆரோக்கியா, திருமலான்னு
தனியார் நிறுவனத்தை வளர்க்காதே!
ஆவினுக்கு பாலை ஊத்தி
பச்சிளம் குழந்தைகளின்
வயிற்றிலடிக்காதே! வயிற்றிலடிக்காதே!
பருத்திக்கொட்டை, புண்ணாக்கு
மானியத்தை வெட்டாதே!
மாடுகளின் மடியறுத்து
பொறுக்கித் தின்ன அலையாதே!
ஏய்க்காதே! ஏய்க்காதே!
பால் உற்பத்தியாளர் பெயராலே
பால் விலை உயர்வுன்னு ஏய்க்காதே!
தனியார் பாலின் கொள்கைக்கு
துணை போவதை மறைக்காதே!
அரசுத்துறைகள் நட்டமென்று
ஆட்டையை போட நினைக்காதே!
ஆவின் நிறுவனம் நட்டமாம்!
மின் வாரியம் நட்டமாம்!
போக்குவரத்து துறையும் நட்டமாம்!
பொது துறைகளே நட்டமாம்!
இது அரசுத்துறைகளை இழுத்துமூட
அரசே நடத்தும் நாடகம்!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
ஆவின் பாலில் கலப்படம் செய்து
2000 கோடி கொள்ளையடித்த
அ.தி.மு.க அமைச்சர்கள்
துணை போன அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தனியார்மயம், தாராளமயம்
தாலியறுக்க வந்தாச்சு!
சேவைதுறைகளையும் ஒழித்துகட்ட
உலகவங்கி சொல்லியாச்சு
கல்வி, மருத்துவம் தனியாராச்சு
ஆலைகள், சாலைகள் தனியாராச்சு
விவசாய மானியம் பறிபோச்சு
பாலும் மோரும் பறிபோகுது,
பார்த்துக் கொண்டிருந்தா தீராது!
வீதியில் இறங்கி போராடு!
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
தனியார்மயம், தாராளமயம்
உலகமய தாசர்களை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!
தனியார்மய, தாராளமய
உலகமய கொள்கைகளை
கிழித்தெறிவோம்! கிழத்தெறிவோம்!
ஏறுது ஏறுது விலைவாசி!
காரணம் யாரு நீ யோசி
மோடி, லேடி கேடிகள் ஆட்சி!
தேவையான்னு மாத்தி யோசி!
விலைவாசி ஏறுன சோகத்தில்
வீதியை நொந்து சாகாதே!
அமைப்பாய் திரண்டு போராடினா
அரசை பணியவைத்த வரலாறுண்டு!
பாலு விலை ஏறுதுன்னு
ஓட்டுகட்சிகள் அலறுது பாரு!
தனியார் மயமே காரணமுன்னு
சொல்ல மறுப்பது ஏன்னு கேளு!
தி.மு.க, அ.தி.மு.க வுக்கும்
காங்கிரஸ், BJP க்கும்
வேறு வேறு கொள்கை அல்ல!
தனியார் மயத்தை புகுத்துவதில்
எல்லாம் கூட்டு களவாணிகளே!
பறிமுதல் செய்! பறிமுதல் செய்!
ஆவின் பாலில் கொள்ளையடித்த
அ.தி.மு.க காலிகளின்
அதிகாரிகளின், அமைச்சர்களின்
சொத்துகளை பறிமுதல் செய்!.
செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
திருச்சி மாவட்டம்.