privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை

ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை

-

it 2பாலாஜி அண்ணா தளர்ந்து போயிருந்தார். நாற்பத்தி ஏழு வயதுக்கு அவர் கண்களின் கீழே வளையமிட்டிருந்த கருமையும், முகமெங்கும் இருந்த சுருக்கங்களும் பார்க்க என்னவோ போல் இருந்தது. முன்னைப் போல் துறுதுறுவென்று அலைபாயும் கண்கள் இல்லை. பத்துப் பண்ணிரண்டு வருடங்களுக்கு முன் எந்த நேரமும் நெருக்கிய புருவங்களோடு நம் கண்களை அவர் ஊடுருவிப் பார்த்தால் பசித்த புலியை நேரிட்டுச் சந்தித்தது போல் இருக்கும்.

“ஏய்… சரியாச் சொல்லு. பொய் சொல்லக் கூடாது. நீ கோஸ்ட் அடிக்கும் போது ப்ரைமரி ஹார்ட் டிஸ்கையும் செகண்டரி ஹார்ட் டிஸ்கையும் சரியாத் தானே செலக்ட் பண்ணினே? அப்புறம் எப்படிடா டேட்டா லாஸ் ஆச்சி. உண்மைய ஒத்துகிட்டா என்னால காப்பாத்த முடியும்… இல்லாட்டா வேலை போயிடும் பரவாயில்லையா?” உணர்ச்சிகளற்ற அவரது இன்றைய முகம் முன்பு ஒரு காலத்தில் நான் செய்த தவறை மறைக்க முயற்சித்த போது அனல் கக்கியது நினைவுக்கு வந்தது.

பாலாஜி சார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட பாலாஜி அண்ணா நான் பொறியியல் படித்து கணினி பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த போது எனது தொழில்நுட்ப பயிற்சியாளராக இருந்தார். கணினித் தொழில்நுட்பத்தில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த ஆசான்.

நாவல் நெட்வேர் என்கிற கணினி இயங்குதளத்தை(Operating system) இன்றைய ஐ.டி தலைமுறையினர் அனேகமாக மறந்திருப்பார்கள். அந்த இயங்குதளத்தில் புழக்கத்தில் இருந்த நாவல் டைரக்டரி சர்வீஸ் (NDS) என்ற நுட்பத்தில் பாலாஜி நிபுணர். பின்னர் அதே தொழில்நுட்பத்தை நாவல் நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 2000 இயங்குதளத்திலிருந்து ஆக்டிவ் டைரக்டரி சர்வீஸ் (ADS) என்ற பெயரில் சந்தைப்படுத்தி நாவலை ஒழித்ததோடு சர்வர் மார்க்கெட் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்தப் போக்கு துவங்கிய இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்க காலத்தில் பாலாஜி எங்கள் கண்களுக்கு அசகாய சூரராக தெரிந்தார். அப்போது தான் பல வங்கிகள் தமது சேவையை கோர் பாங்கிங் (Core Banking) என்று சொல்லப்படும் மையப்படுத்தப்பட்ட கணினி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரத் துவங்கியிருந்தன. அந்த பிராஜக்டுக்காக விண்டோஸ் இயங்குதளத்திலும் ஆக்டிவ் டைரக்டரியிலும் எங்களுக்கு பயிற்சி அளித்தார் பாலாஜி.

it 3ஓரிரு ஆண்டுகளில் (2004 ஜனவரி என்பதாக நினைவு) ஐ.பி.எம் நிறுவனத்திடமிருந்து பாலாஜிக்கு கூடுதல் சம்பளத்துடன் வேலைக்கான அழைப்பு வந்தது. ஐ.பி.எம் வேலையை ஏற்று பெங்களூர் சென்றவரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவில் தகவல்கள் ஏதும் வரவில்லை. அவ்வப் போது பொதுவான நண்பர்களிடமிருந்து சில தகவல்களைக் கேள்விப் பட்டு வந்தேன். ஒவ்வொரு முறை அவரைக் குறித்துக் கேள்விப் படும் போதும் அவர் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதாக அறிந்து கொள்ள முடிந்தது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் சென்ற வாரம் எதேச்சையாக தேனீர் கடை ஒன்றில் வைத்து தான் அவரை நேரில் பார்த்தேன்.

”இப்போதைக்கு வேலை எதுவும் இல்லைடா.. ஆறு மாசமாச்சி. தேடிகிட்டு இருக்கேன், பார்க்கலாம். உனக்கு ஏதாவது லீட் தெரிஞ்சா சொல்லேன்”

ஆச்சர்யமாக இருந்தது.

“அட… உங்களுக்கேவா வேலை இல்லை? சும்மா தமாஸ் பண்ணாதீங்க பாஸ்.”

”உனக்கு கேட்க தமாசா இருந்தாலும் அது தான்பா உண்மை.”

”இல்லையே, நான் அப்பப்ப கேள்விப்பட்ட வரைக்கும் நீங்க அடிக்கடி கம்பெனி மாறிகிட்டே இருந்தீங்க… ஒவ்வொரு தடவை கம்பெனி மாறும் போதும் நல்ல சம்பளத்துக்கு மாறியிருக்கீங்க… அப்புறம் எப்படி வேலை போகிற நிலைமைக்கு வந்தீங்க?”

”உண்மைய சொல்லப் போனா… நான் ஒரு பிரமிட் மேல ஏறிகிட்டு இருந்தேன்.. நீ பிரமிட் பார்த்திக்கே இல்ல? அதுக்கு மேலே போகப் போக உயரம் அதிகமாகிட்டே இருக்கும்.. அதே நேரம் இடம் குறைஞ்சிகிட்டே இருக்கும்.. புரியுதா?”

“புரியலையே பாஸ்”

it 1”இப்ப டி.சி.எஸ்ஸோ காக்னிசண்டோ இல்ல இது மாதிரி எந்த கம்பெனியா இருந்தாலும் எடுத்துக்க. அவனுக்கு கீழ் மட்டத்துல ஒரு ஆயிரம் எல்-1 ரிசோர்ஸ் (L1 – resource – முதல் கட்ட தொழில்நுட்ப அறிவுள்ள ஆற்றல்கள் அல்லது மனித வளங்கள்) தேவைப்பட்டால் அதில் 40 சதவீதம் தான் எல்-2 ரிசோர்ஸ் தேவை. அதாவது 400 பேர். அதுக்கு மேல எல் – 3 ரிசோர்ஸ் ஒரு 40 பேர் தேவை. அதுக்கும் மேல எஸ்.எம்.இ (SME – Subject Matter Experts / துறை சார் வல்லுனர்) ஒன்னோ ரெண்டோ பேர் தான் தேவை. ஒரு இன்ஜினியர் குறிப்பிட்ட ஒரு ஸ்கில் செட்ல (Skill set) எல்-1ல துவங்கி எஸ்.எம்.இயா முடிய சுமாரா எட்டுலேர்ந்து பத்து வருசம் ஆகும்… அது தான் அவனோட கேரியர் கிராஃப். அதுக்குப் பின்னே மேனேஜ்மெண்டுக்கு போகலாம்.. இல்லேன்னா ப்ரீசேல்ஸா (pre-sales – விற்பனைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குபவர்) போகலாம்.. முடியலைன்னா பிரமிடோட உச்சிலேர்ந்து கீழ விழுந்து தான் ஆகனும், என்னை மாதிரி”

”சரி பாஸ் நீங்க எல் – 2லயோ எல்- 3லயோ கொஞ்சம் வருசத்தை இழுத்து அடிச்சிருக்கலாமே…?”

“செய்திருக்கலாம்.. ஆனா அப்ரெய்சல் அவ்வளவா எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு வருசமும் ஒரு குரோத் காட்டியாகனும் இல்ல? நான் நம்ம கம்பெனியில இருந்து போன கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆச்சி.. ரெண்டு பசங்க. அவங்க படிப்பு… பொண்டாட்டியோட செலவு.. வீடு வாங்கினது.. கார் வாங்கினது.. இப்படி கமிட்மெண்டுக்கு மேல கமிட்மெண்டா சேர்ந்து கிட்டே போகுதில்லே? அதை ஈடுகட்டனும்னா நான் அடுத்த கட்டத்துக்கும் அடுத்த கம்பெனிக்கும் மாறித்தானே ஆகனும்?”

”அதான் நிறைய கம்பெனிகள் இருக்கே? ஒவ்வொரு லெவலுக்கும் நாலஞ்சி கம்பெனி மாறினாலே வருசத்த ஓட்டிடலாமே?”

“இல்லடா.. ஒரே லெவல்லே இருந்து இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆனா சம்பளத்துல அந்தளவுக்கு ஹைக்(Hike – உயர்வு) இருக்காது. ஒரு குறிப்பிட்ட ஸ்கில் செட் உள்ள ஒரு ரிசோர்சுக்கு இவ்வளவு தான் சம்பளம்னு ஒரு ஸ்டேண்டர்ட் இருக்கில்லே… அது எல்லா கம்பெனி ஹெச்.ஆருக்கும் (HR – Human resources / நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும், சம்பளம் நிர்ணயம் செய்யும் வேலையைச் செய்யும் மனித வளத் துறை) இந்த ஸ்டேண்டர்ட் என்னான்னு தெரியும் இல்ல?”

”சரி, நீங்க மேனேஜ்மெண்ட் லைன்ல போக முயற்சி செய்யலையா?”

it 5“அதுக்கு தனியா ஐ.டி.ஐ.எல், பி.எம்.பி, சிக்ஸிக்மான்னு தனியா படிக்கனும். டெக்னிக்கலா படிக்கறது வேற இது வேற.. எனக்கு செட் ஆகலை. அதுவுமில்லாம மேனேஜ்மெண்ட் சைட்ல போக என்னோட சுபாவமும் ஒத்துக்காது. அப்படியும் வேற வழியில்லாம பிராஜக்ட் மேனேஜர் வேலைக்கு நாலஞ்சி இண்டர்வ்யூ போய் பார்த்தேன்… தேர்வாகலை.”

”ஆன் சைட் போக ஏதும் முயற்சி செய்யலையா?”

”உனக்கே தெரியுமே… இங்க அப்பாவுக்கு வயசாயிடிச்சி. நான் மட்டும் தான் ஒரே பிள்ளை. இந்த நிலைமைல அவரை அங்கே கூட்டிப் போகவும் முடியாது விட்டுட்டு போகவும் முடியாது..”

”சரி என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”

”இன்னும் முடிவு செய்யலை. வீட்டு லோனுக்கு தவணை கட்டி நாலு மாசமாச்சி. காரை விக்க முடிவு பண்ணிட்டேன். அந்தக் காசை வச்சி கொஞ்ச நாள் ஓட்டலாம். வீட்டை என்ன செய்யறதுன்னு தெரியலை. பசங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க. இந்த வருசம் முடிய இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கு. அது வரைக்கு முயற்சி செய்து பார்த்துட்டு வீட்டையும் வித்துட்டு ஊருக்கே போகலாமான்னு ஒரு யோசனை இருக்கு. பாக்கி இருக்கிற லோன் போக ஏழெட்டு லட்சம் கிடைக்கலாம். வர்ற காசுல ஊர்ல போயி ஏதாவது சின்னதா பிசினஸ் செய்யலாம்னு நினைக்கிறேன்…”

”அவ்வளவு தானா?”

”……..” நீண்ட மௌனம் ஒன்றே பதிலாக வந்தது.

“ம்?” உறைந்து போயிருந்தவரை லேசாக உசுப்பினேன்.

“ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது. ரொம்ப யோசிச்சா டிப்ரஷன்ல விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு… சரி, உன் நெம்பர் குடு… பின்னாடி பார்க்கலாம்”

பாலாஜி அண்ணா சென்று விட்டார். ஐ.டி வாழ்க்கையின் நிலையாமை பணிப் பாதுகாப்பின்மை குறித்தெல்லாம் முன்பே தெரிந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை செவுளில் அறைந்து உணர்த்திச் சென்றார் பாலாஜி. காலையில் துவங்கி மாலையில் முடிவுரும் பட்டாம்பூச்சின் வாழ்க்கை போல் ஐ.டி துறையின் வாழ்க்கை ஓரிரு பத்தாண்டுகளிலேயே முடிவுக்கு வருவதை அங்கும் இங்கும் கேள்விப்பட்டிருந்தாலும் அணுக்கமான ஒருவரின் முடிவை முதன் முறையாக நேரில் காண்கிறேன்.

சரியாக அந்த சந்தர்பத்தில் கழிவறையில் பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படும் மலம் துடைக்கும் காகிதம் போல் அருவறுப்பாக உணர்ந்தேன். சொந்த வாழ்க்கையை மறந்து பிறந்து வளர்ந்த சமூகத்தை மறந்து சமூக கடமைகளை மறந்து எவனோ ஒரு அமெரிக்கனுக்கு உழைத்துத் தேய்ந்து இளமையைத் தொலைத்த பின் தூக்கியெறியப்படும் அவலம் எனக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த ஆசானுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா என்ன? – யோசிக்கிறேன். நீங்களும் யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

– சுகுமாரன்.