Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருச்சியில் மோடியின் 'தூய்மை' இந்தியா திட்டம்

திருச்சியில் மோடியின் ‘தூய்மை’ இந்தியா திட்டம்

-

திருச்சியில் நரேந்திர மோடியின் ‘ தூய்மை ‘ இந்தியா திட்டத்திற்க்காக BJP கட்சியின் தொண்டர்கள் நகர் சுத்தி தொழிலாளர்களின் விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை (02.11.14) கணக்கிட்டு ‘சுத்தம் செய்ய’ உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவிற்கு வந்தனர். வந்த 25 பேரில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மினிஸ்டர் சட்டையும் பார்த்த சாரதி வேட்டியும் உடுத்தியிருந்தனர். மற்றவர்கள் பேண்ட் சட்டையுடனும் தெருவிற்குள் நுழைந்தனர். அவர்கள் தெருவிற்குள் நுழைவதற்கு முன்பே அவர்கள் மேல் அடித்திருந்த “சென்ட்” தெருவிற்குள் நுழைந்தது.

தூய்மை இந்தியா
கார்ட்டூன் – நன்றி http://ajanrnair.blogspot.in/

புத்தம் புதிய விளக்குமாறு குச்சி (கை வலிக்காமல் இருக்க விளக்குமாறு குச்சியிலும் துணி சுற்றப்பட்டிருந்தது ) சட்டி, பையுடன் நவீன கேமிரா என ஆயுதங்களுடனும், நெற்றியில் செந்தூரமும், சந்தனமும் மணமணக்க தெருவைக் கூட்ட தயாரானார்கள். இவர்களைப் மக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.

சற்றும் எதிர்பாராத பாஜக காரர்களை பார்த்து மக்கள் கலை இலக்கியக் கழக தோழர். சீனிவாசன், “தெருவைக் கூட்ட தினமும் வருவீர்களா” என்று கேட்டதுமே உளற ஆரம்பித்தனர்.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா, பணம் பண்ணும் இந்தியா – கார்ட்டூன் : நன்றி http://www.downtoearth.org.in/content/swachh-bharat-abhiyaan

 

“ம்… வருகிறோம்” என்றனர்.

“நாட்டை குப்பையாக்குவது யார் தெரியுமா?” என்று கேட்டதற்கு

“நாம்தான்” என்றனர்.

நமது தோழர், “நாம் என்று சொல்லாதீர்கள்; மோடி என்று சொல்லுங்கள், இல்லை என்றால் மோடியைப் பார்த்தே கேளுங்கள்” என்றார்.

உடனே அவர்கள் அனைவரும் கோரசாக பேச ஆரம்பித்து விட்டனர். சிலபேர் “ஏய், அவர் ம.க.இ.க காரர்” என்றதும் சற்று சுதாரித்துக் கொண்டனர்.

என்றாலும் நமது தோழர் அவர்களை விடுவதாக இல்லை.

“குஜராத்தில் பழைய குப்பையை உடைத்து அந்த துறைமுகத்தையே அசுத்தம் செய்ய வைத்தது யார்? தூய்மை இந்தியா பேசும் உங்க மோடி., போபாலில் விஷ வாயுவால் 23 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகத்தான் பிறக்கிறது. காரணம் இன்னும் அந்த ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை. அங்கு போங்க – துடப்பக்கட்டையோடு” என்றார்.

இத்தகைய எதிர்ப்பை எதிர்பார்க்காத பாஜக காரங்க, “இது தனி மனித ஒழுக்கம் பற்றிய பிரச்சினை. ஒவ்வொரும் மாறவேண்டும் என்று நாங்க சொல்லுகிறோம்” என்றனர்.

“தனிமனித ஒழுக்கம் என்று மக்கள் மீது பழி போடாதீங்க; காத்தையும், மண்ணையும் கெடுத்தது நீங்கள்தானே” என்று சத்தமாக பேசியதும் அக்கம் பக்கம் இருந்த மக்கள் அருகில் வந்து கூட ஆரம்பித்து விட்டனர். சரி வேறு இடத்திற்கு போகலாம் வாருங்கள் என்று கூட்டமாக கிளம்பிவிட்டார்கள் அடுத்த சூட்டிங்கிற்கு.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க