Tuesday, September 17, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவேதாரண்யம் - வி.வி.மு போராட்டம் - அதிமுக ரவுடிகள் தாக்குதல்

வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்

-

நாகை மாவட்டம் – வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தன்னை எதிர்த்தோ யாரும் எதையும் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ என்.வி. காமராஜ். ஆளும் கட்சியும் போலீசும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு இவ்வாறு செய்வது தமிழகம் முழுவதற்குமே பொருந்தும் என்பது வேறு விசயம்.

கடந்த சில வாரங்களாக, “காவிரியின் குறுக்கே அணைக்கட்ட கூடாது”, “தமிழக மீனவர்கள் 5 பேர் தூக்கை ரத்து செய்வது”, “பால்விலை – மின்கட்டண உயர்வை ரத்து செய்வது” ஆகிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, ஏட்டு முதல் எஸ்.பி வரை செருப்பு தேய நாம் நடந்தாலும் ஒவ்வொரு மனுவையும் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி வந்தது வேதை நகர போலீசு.

காரணம் கேட்டால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்து விடுமாம்.

  • காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாதென்றால் கர்நாடக அரசு வந்து கலகம் செய்து விடுமா?
  • தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய போராடினால், ராஜபக்சே வந்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடுவாரா?

இல்லை. பிறகு என்ன பிரச்சனை?

“பால்விலை-மின்கட்டண உயர்வு பற்றி பேசினால் மக்கள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி ‘அவதூறாக’ பேசி விடும் வாய்ப்பு இருப்பதாலும், இதனால் உணர்ச்சி வசப்படும் எம்.எல்.ஏ வின் தொ(கு)ண்டர்கள் தகராறு செய்தால் கலவரம் ஏற்பட்டு விடும்” என்று நீட்டி முழக்கினார் டி.எஸ்.பி சார்லஸ்.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து தரப்பட்ட கடிதமோ 30(2) காவல்சட்டம் அமலில் இருப்பதாக கூறி பல்லிளித்தது.

இனி மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டி- துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம் செய்து, “நவம்பர் 17 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்து”வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டோம்.

‘சட்டத்தை நாமே கையில் எடுத்துக் கொண்டதாக ‘ பதறிய போலீஸ் எஸ்.ஐ 17-ம் தேதி காலையிலேயே போன் செய்து சமரசம் பேசினார். இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அறிவித்து சுமார் 150 தோழர்கள் வேதாரண்யத்தில் ஒன்று திரண்டனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசிய எஸ்.ஐ, “மேல் இடத்திலேயே கூறி விட்டார்கள், உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து நடத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வேதாரண்யம்-மேலவீதி பெரியார் சிலையில் இருந்து செங்கொடிகளுடன் முழக்கமிட்டு கொண்டே சென்ற பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தை வந்து அடைந்தவுடன் ஆர்ப்பாட்டமாக மாறியது. வேதாரண்யம் வட்டார வி.வி.மு ஒருங்கிணைப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்க, தோழர் கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை வி.வி.மு வட்டார செயலர் தோழர் மாரிமுத்து, பு.மா.இ.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் காவிரிநாடன் பேசுகையில், “விலைவாசி உயர்வால் சாமான்ய மக்கள் படும் அவஸ்தையையும், தங்களின் நியாயமான உரிமைகளுக்காக கூட போராட முடியாதபடி மக்கள் எப்படி அடக்கி  ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் எனக்கு முன்னால் பேசியவர்கள் பேசி சென்றிருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் வி.வி.மு வை செயல்பட விடாமல் முடக்குவதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்கிவிடலாம் என கருதி எம்.எல்.ஏ வின் ஆட்கள் செய்து வரும் அராஜகங்களை தோலுரிக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக போராடியதற்காக வி.வி.மு தோழர் தனியரசுவின் கடையை அடித்து நொறுக்கியும், பொருட்களை சூறையாடியும், அடுத்தடுத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வி.வி.மு வின் அரசியல் செயல்பாடுகளை முடக்க எம்.எல்.ஏ கண்ட கனவு பொய் ஆகி போனது. இதோ மீண்டும் மக்கள் பிரச்சனைக்காக களத்திலே நாங்கள் வந்திருக்கிறோம். தாதுமணல் வைகுண்டராஜனை அவனது கோட்டைக்குள்ளேயே சென்று அவன் சிண்டைப் பிடித்து உலுக்கியவர்கள் நாங்கள், பேச்சில் அல்ல களத்திலே நிற்கும் வீரர்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் பேசுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது, ‘காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு..’ என போஸ்டர் அடித்து ஒட்டிய அதிமுக வினரை விமர்சித்து பேசினார். “ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவிக்காக தமிழகத்தின் உரிமையை அடகு வைக்கத் துணியும் இந்த அடிமைகளை எம்.எல்.ஏ-எம்.பி க்களாக தேர்ந்தெடுத்து இருக்கும் மக்களே, அடுத்தடுத்து அறிவிக்கப்படும் விலைவாசி-மின்கட்டண உயர்வு அறிவிப்புகள் உங்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்” என்று மக்களையும் விமர்சித்து பேசினார்.

“யாரையும் தாக்கி பேச வேண்டாம், மனம் புண்படும் படி பேச வேண்டாம்” என அறிவுரை வழங்கிய போலீசின் யோக்கியதையையும் கண்டித்து பேசினார்.

vedaranyam-demo-1“ஆவின் பாலை திருடி, பாதிக்குபாதி தண்ணீரை கலந்து விற்ற அதிமுக வைத்தியை தாக்கிப்பேசாமல் வேறு எப்படி பேசுவது? விலை உயர்வுக்கு காரணத்தை வேறு எப்படி விளக்குவது?”

“அதிமுக எம்.எல்.ஏ க்கள் என்ன உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா? என்.வி காமராஜ் சில ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண உப்பளத் தொழிலாளி. இன்று கோடிகளுக்கு அதிபதி. மூட்டை தூக்கி சம்பாதித்த சொத்தா இவ்வளவு? பல்லாயிரம் பேருக்கு, ஆடம்பரமான முறையில் சமையல் செய்து தன் வீட்டு திருமண நிகழ்ச்சியை நடத்த எங்கிருந்து வந்தது பணம்?” என்று அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார்….

“அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதால் உடனடியாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஜனநாயகமே இடிந்து விடும்” என்று காவல்துறையினர் பதறி ஆர்ப்பாட்ட மைக்கை அடாவடியாக ஆப் செய்ய… தோழர்கள் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட தள்ளுமுள்ளு ஆனது.

இவ்வாறு கருத்துரிமையின் லட்சணத்தை அம்பலப்படுத்திய தோழரின் பேச்சு முடிய, தோழர் வெங்கடேசன் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

vedaranyam-demo-3‘அம்மா’ வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள். ஆர்ப்பாட்டம் முடிந்து வேனில் திரும்பிச்சென்ற தோழர்கள் மீது மருதூர் இரட்டைக்கடைவீதியருகே காமராஜன் அண்ணன் மகன் அசோக், பாபு மற்றும் சில காலிகள் குவாட்டர் பாட்டில்களை வீசியும், கல்லெறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தோழர்கள் திரும்பிச் சென்ற வேனை அதிமுக காலிகள் பின் தொடர்ந்து வருவது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தும் கூட அவர்கள் பாதுகாப்பு தரவில்லை. பாட்டில் வீச்சில் வேனில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த தோழர் காந்தி காயமடைய, இன்னொருவரின் கையில் கல் பட்டு தெறித்து காயமானது. உடனே அருகில் இருந்த வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி தோழர்களும், வழக்கறிஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதைக்கு நிலைமையை சமாளிப்பதற்காக மனு ரசீது மட்டும் வழங்கி தோழர்களை அனுப்பி விட்டு, ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக 8 தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு.

இந்த ஆர்ப்பாட்டத்திலேயே கலந்து கொள்ளாத மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அம்மா போலீசு அதிமுக காலிகளுக்கு அரணாக நிற்கிறது.

மீண்டுமொரு பெரிய தாக்குதலுக்கு எம்.எல்.ஏ வின் ஆட்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. பேச்சுரிமை, கருத்துரிமை, சட்டத்தின் ஆட்சி என்று இதற்கு மேலும் யாரேனும் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் கூறட்டும் இனி இந்த சட்ட வரம்புகளுக்குள் நின்று போராட முடியுமா? அல்லது மக்களே அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமா என்று……..

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
வேதாரண்யம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க