Wednesday, January 26, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை

மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை

-

டலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில், உள்ள கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் கார்மாங்குடி மணல்குவாரியை மூடக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆற்றில் இரு கரையில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து மக்களை திரட்டி 11.11.2014 அன்று மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மணல் கொள்ளைக்கு எதிராக இளைஞர்களிடமும் கார்மாங்குடி, மருவூர் வல்லியம், மேலப்பாளையூர், சக்கரமங்களம் ஆகிய கிராமங்களில் இரவு நேரங்களில் பொது மக்களை திரட்டியும், ஆற்று மணல் கொள்ளையை பற்றி மட்டுமின்றி அனைத்து இயற்கை வளங்கள் கொள்ளையிடப்படுவது பற்றியும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், இதற்கு உடந்தையாக இருப்பதையும் விளக்கி பேசினோம். ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக் கணக்கான மக்கள் விபரங்களை அமைதியாக கேட்டதுடன் இந்த கொள்ளைக்கு எதிரான போராட்டத்திற்கு வருவதாக தெரிவித்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

24.11.2014 விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி மனு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் படி டாடா ஏஸ், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் பெருந்திரளாக மக்கள் வந்திருந்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விருத்தாசலம் வட்டாட்சியர், “மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு செல்கிறேன்” என்று கூறிய போது, “உங்களிடம் மனு கொடுக்க வேண்டும். அதனால் நீங்கள் வருவது அவசியம்” என தெரிவித்ததும், அவர் பாதியிலே திரும்பி அலுவலகத்திற்கு வந்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆங்காங்கே இருந்த மக்கள் முழக்கத்தின் மூலம் ஒன்று கூடி தாசில்தார் அலுவலக வாயிலுக்கு சென்றனர். கிராம மக்களும், நாமும் எழுப்பிய முழக்கங்கள் அதிகார வர்க்கத்தின் கேளாத செவிகளுக்கு உறைத்தது. சொந்த வேலையாக பத்திர அலுவலகம், தாசில்தார் அலுவலகம், டிரசரி அலுவலகங்களுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்ட முழக்கங்களை கேட்டு திகைத்து நின்றனர். பெருமளவில் போலீசும் குவிக்கப்பட்டிருந்தது, பத்திரிகையாளர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்து இருந்தனர்.

தாசில்தார் நேரடியாக மக்களை சந்தித்து மனு வாங்க வேண்டும் என்று கோரியதும் அவர் வெளியில் அழைத்து வரப்பட்டார். அனைத்து கிராம மக்களும், நாமும் அலுவலக வாயிலில் அமர்ந்து அலுவலகம் முழுவதும் எதிர் ஒலிக்கும் வண்ணம் முழக்கங்கள் எழுப்பினோம். கார்மாங்குடி, கீரனூர், மேலபாளையூர், வல்லியம் ஆகிய கிராமங்களின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் கையொப்பமிட்டு கோரிக்கை மனு தனித்தனியே தாசில்தாரிடம் கொடுக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஊர் மக்கள் தாசில்தாரிடம், “பலமுறை புகார் கொடுத்தும் ஏன் மணல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என கேள்வி எழுப்பினார்கள். “இரவில் காவல் துறை மிரட்டுவதை கண்டித்தும், ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் ஏன் நடவடிக்கை இல்லை” என்று தாசில்தாரிடம் கேள்வி கேட்க, “நான் மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என மக்கள் மத்தியில் உறுதி அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கோரிக்கை மனு கொடுத்தபிறகு, கிராம மக்கள் “அடுத்த கட்ட போராட்டத்தை இன்னும் அதிகமான போராட்டமாக அறிவியுங்கள், மக்களை திரட்டுகிறோம்” என்றார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மனித உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜு மக்களிடம், “போராட்டம் அறிவிப்பது பெரிதல்ல, அதிக மக்களை திரட்டுவதற்கு நீங்கள் செயல்பட வேண்டும். வருகிற 1-ம் தேதி திங்கள் கிழமை மணல் குவாரியை நிரந்தரமாக மூடுகின்ற போராட்டத்தை நடத்துவோம். எங்கு நடத்துவோம், எப்படி நடத்துவோம் என்பதை உங்கள் ஊர் முக்கியஸ்தர்கள், மூலம் அறிவிக்கிறோம்” என பேசியதுடன் மக்கள் கலைந்து சென்றனர்.

காலை 11 மணிக்கு ஆரபித்த போராட்டம் 1 மணிவரை நீடித்தது.  மக்கள் சிலர், “உங்களை நம்பிதான் நாங்கள் வந்துள்ளோம், ஓட்டு கட்சிகள் கூப்பிட்டு இருந்தால் நாங்கள் இவ்வளவு பேர் வந்திருக்க மாட்டோம்! ஏன் என்றால் எங்களை கொண்டு போய் வித்து இருப்பார்கள்” என கூறினார்கள்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க