privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?

அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?

-

அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம்.
அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம்.

உத்திர பிரதேசத்தில் மீண்டும் சங்க பரிவாரத்தின் கலவர திட்டம். முசாஃபர் நகர் கலவரக் காட்சிகள் இம்முறை அலிகாருக்கு மாற்றம்.

அலிகார் முசுலீம் பல்கலைக்கழக வாயில் முன்பு, “ஜாட் ராஜா – மகேந்திர பிரதாப் சிங்கின் பிறந்த நாளை, டிசம்பர் 1 கொண்டாடுவதாக” பாரதிய ஜனதா அறிவித்திருக்கிறது. இவ்வறிவிப்பை வெறுப்பை உமிழும் எரிபொருள் என்று மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எதிர்த்திருக்கிறது.

ஆனாலும் மாநிலத்தை ஆளும் கட்சியை விட மத்தியை ஆளும் கட்சியின் பலம் பெரிதல்லவா! அதுவே பாஜக என்றால்….?
‘ஜாட் அரசனி’ன் பிறந்த நாளை திடீரென கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

உபி பாஜக தலைவர் லக்ஸ்மிகாந்த் பாஜ்பாய்
உபி பாஜக தலைவர் லக்ஸ்மிகாந்த் பாஜ்பாய்

இந்த புண்ணிய அறிவிப்பை வெளியிட்டவர் பாஜக தலைவர் லக்ஸ்மிகாந்த் பாஜ்பாய். “அலிகார் முசுலீம் பல்கலைக்கழக நிறுவனர் நாளை சர் சையத் நாள் என்று கொண்டாடுவது போல, பல்கலை கட்ட நிலம் கொடுத்த ராஜா மகேந்திரனின் பிறந்த நாளை கொண்டாடுவதில் என்ன தவறு” என்று கேட்கிறார். இதற்காகவே அவர் கடந்த வாரம் அலிகாருக்கு விஜயம் செய்து உள்ளூர் கட்சி கிளையை தயாராகுமாறு உத்திரவிட்டிருக்கிறார்.

இதை முதலமைச்சர் அகிலஷ் யாதவ் எதிர்த்திருப்பதையெல்லாம் அவர் சட்டை செய்யவில்லை. “எந்த அரசு குறித்தும் எனக்கு பயமில்லை. பல்கலை அரங்கினுள்ளே ஜாட் ராஜா பிறந்த நாளை கொண்டாடுவது நடந்தே தீரும்” என்கிறார். மோடி அரசின் கைங்கரியத்தில் இந்த சவடால் ஒன்றும் வெற்று முழக்கமாகி விடாது.

சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ சமீருல்லாகான் “ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் பகைமை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, முசாஃபர் நகர் போல அலிகாரை குறிவைத்திருக்கிறது பாஜக. இது குறித்து முதல்வர், அமைச்சர் மற்றும் சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இப்படி ராஜா மகேந்திரரின் பிறந்த நாளை கொண்டாடியதெல்லாம் இதற்கு முன்பு இல்லை” என்கிறார்.

முன்னுதாரணம் இல்லை என்றாலும் அப்படி உருவாக்குவதுதான் சங்கபரிவாரத்தின் வேலை. மோடி ஆட்சியில் இது கூட செய்யாமலா இருப்பார்கள்?

இதற்கிடையில் அலிகார் பல்கலை நிர்வாகம் பாஜ்பாயின் ‘வரலாற்று’ கண்டுபிடிப்பை மறுத்திருக்கிறது. மொகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியின் ஒரு அறையை இந்த ராஜாவின் தந்தை ராஜா கான்ஷியம் சிங் கட்டியிருக்கிறார். மற்றபடி அந்த கல்லூரி இராணுவத்துக்கு பாத்தியப்பட்ட 74 ஏக்கரில் கட்டப்பட்டது. அதுவும் இந்த ராஜா மகேந்திரர் பிறப்பதற்கு முன்னாடி என்று நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.

மேலும் அலிகார் பல்கலைக்கு நன்கொடை அளித்த அனைவரது பெயரும் அங்கே கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. பாஜக கொண்டாடும் ராஜா இங்கே படித்த முன்னாள் மாணவர் என்பதைத் தாண்டி வேறு தொடர்பு இல்லை. அடுத்து மொகமதன் ஆங்கிலோ ஒரியண்டல் கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு இந்த ராஜா 1977-ல் வந்திருக்கிறார்.

அவரும் கூட பிற்பாடு இந்தமதவெறிக் கூட்டம் தனது பெயரை வைத்து கலவரத்திற்கு அடிபோடுமென்பதை கற்பனை செய்திருக்க வாய்ப்பில்லை.

ராஜா மகேந்திர பிரதாப் சிங்
ராஜா மகேந்திர பிரதாப் சிங்

அலிகார் பல்கலையின் துணைவேந்தரும், ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலுமான சமீருதின் ஷா அறிக்கையை படியுங்கள். அதில் “ராஜா மகேந்திர பிரதாப்பின் பிறந்த நாளை பல்கலை வளாகத்தில் கொண்டாடுவதால், கலவரத்திற்கான பதட்டம் ஏற்படும், பல்வேறு பிரிவினர்கள், கட்சிகள் மோதும் சூழ்நிலை உருவாகும்” என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அலிகார் பல்கலை மாணவர் சங்கமும் இந்த கொண்டாட்டத்தை பல்கலை வளாகத்தில் ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. பல்கலை நிர்வாகம் நேரடியாக பாஜக பெயரை குறிப்பிடவில்லை. அப்படி அறிவிக்குமளவு இங்கே ஜனநாயகம் இல்லை.

தூணிலும், துரும்பிலும் பெருமாள் இருக்கிறானோ இல்லையோ சங்க பரிவாரத்தின் பார்ப்பனிய பாசிசம் தயாரித்திருக்கும் வரலாற்று மோசடிகள் ஏராளமிருக்கின்றன. அவை எங்கு எப்போது ரிலீசாகும் என்பது சங்க பரிவாரத்தின் ரவுடிப் படை தயாராகும் நேரத்தைப் பொறுத்தது.

உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

கண்டுகொள்ளாமல் விட்டால் வரலாற்றில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நாம் அடிமைகள்!

மேலும் படிக்க: