மலிவு விலைக்கு புகழ் பெற்ற சீனத்தில் பொருள்கள் மட்டுமல்ல, மரணமும் கூட மலிவுதான்! சீன நிலக்கரி சுரங்க விபத்துக்களில் கடந்த இருநாட்களில் மட்டும் 37 பேர் இறந்திருக்கின்றனர்.
தென்மேற்கு சீனத்தில் இருக்கும் குய்சு மாகாணத்தின் சோங்லின் நிலக்கரி சுரங்கத்தில் 11 தொழிலாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்து 27.11.2014 நடந்தது. பெரும் சப்தத்துடன் சுரங்கத்தில் வெடிச்சத்தம் கேட்ட போது 19 தொழிலாளிகள் பணியில் இருந்தனர். மீதி எட்டுப் பேரை மீட்கும் பணி நடைபெற்று வந்தாலும் உத்திரவாதமில்லை.
இதற்கு முந்தைய தினம் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில் உள்ள ஹெங்டா சுரங்கத்தில் குறைந்தது 26 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இந்த விபத்து நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பு சிறிய நிலநடுக்கம் இங்கே ஏற்பட்டது. 60க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
எலக்ட்ரானிக் தொழிலும், விண்வெளிக்கு வான்கோள்களை அனுப்புவதிலும் சாதனை படைத்ததாக பெருமைப்படுவது சீனத்தின் வழக்கம். அத்தகைய சாதனையாளர்கள் தமது சுரங்க தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட உறுதிப்படுத்தவில்லை.
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 33,000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் மட்டும் 1000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2012-ல் 1,384 பேர் மரணம்.
மேற்கத்திய நாடுகளின் பேரங்காடிகளில் விற்கப்படும் அனைத்துவ விதப் பொருட்களும் சீனாவில்தான் தயாரிக்கப்படுகிறது. மலிவான உற்பத்திக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் சீன அரசு செய்து கொடுப்பதால் உலகின் வேறெந்த நாடுகளையும் விட இங்கே தயாரிப்பு செலவு குறைவாயிருக்கிறது. அமெரிக்கா தொட்டு ஐரோப்பா வரை அன்றாட வாழ்வு சீனப்பொருட்களின்றி இல்லை. அது போன்று மேற்குலகம் நுகராமல் சீனப் பொருளாதாரம் இல்லை.
இதனாலேயே சீனாவிற்கு பெரும் அளவில் மின்வசதி தேவை. அதற்காக நிலக்கரி சுரங்கங்களுக்கு பேரிலக்கு உருவாக்கப்படுகிறது. அதை அடைய நிர்ப்பந்தமும் அதிகம்.
இந்த சுரங்கங்களில் பல சட்டவிரோதமானவை என சீன அரசு சால்ஜாப்பு சொல்வது வழக்கம். இணையத்திலேயே கண்காணிப்பு தடைகள் வைப்பதை சாத்தியப்படுத்தும் சீன அரசிற்கு இந்த சட்டவிரோத சுரங்கங்கள் ஏன் கண்ணில் தெரிவதில்லை?
ஆக கம்யூனிசம், சோசலிசம் என்ற பெயரில் மலிவான உழைப்பை சுரண்டியே சீன ஆளும் வர்க்கம் தனது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது. அதற்கு இத்தகைய இரத்த பலிகள் தேவைப்படுகின்றன. இந்த நரபலியை தடுத்து நிறுத்துமளவு அங்கே தொழிலாளி வர்க்கம் அரசியல் ரீதியாக அணி திரளவில்லை.
அது வரை உலகம் நுகர்வதற்கு சீனத் தொழிலாளி தனது உயிரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ?