அன்புக்குரிய நண்பர்களே, தோழர்களே!
மனித உரிமைகளுக்கான போராட்டக்களத்தில் 11-ம் ஆண்டில் நுழைகிறோம்.
தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு கொள்ளையடிப்பது, சுற்றுச் சூழலை நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக அரங்கேறி வருகிறது. மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படுகின்றன. உரிமைகளைக் காப்பதற்காக எமது அமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
- கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு மக்களுடன் களத்தில் நின்று போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
- தூத்துக்குடி, நெல்லை மாவட்டக் கடலோரம் முழுவதும் நடைபெற்று வரும் தாதுமணல் கொள்ளையில், தமிழக அரசு பாதுகாத்து வரும் கொள்ளையன் வைகுண்டராசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழகம் தழுவிய பிரச்சாரம்,பொதுக்கூட்டம் மறியல் போராட்டங்கள் நடத்தினோம். உண்மையறியும் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு மக்களுக்குத் தெரிவித்தோம். நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை நடத்தி வருகிறோம்.
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே பி.ஆர்.பி கிரானைட்ஸ் நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி பியூன் முதல் கலெக்டர் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து நடத்திய கொள்ளையை அம்பலப்படுத்தி அதற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
- அரசே நடத்துவதாகக் கூறிக் கொண்டு தனியாருக்குத் துணைபோகும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறோம்.
- தில்லை நடராசர் கோவிலில் தீட்சிதப் பார்ப்பனர்கள் கடைப்பிடித்த மொழித் தீண்டாமையை எதிர்த்துப் போராடி சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட அனைவரும் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டி உள்ளோம்.
- பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இன்றளவும் இருந்துவரும் கோவில் கருவறைத் தீண்டாமையை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் உருவாக்கி மதுரை மீனாட்சி கோவில் சன்னதிக்குள் நுழைந்தது உட்பட தொடர்ந்து பல போராட்டங்களும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடத்திக் கொண்டிக்கிறோம்
- கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தாய் மொழிவழிக் கல்வியை ஆதரித்து “தனியார் பள்ளிகளை இழுத்து மூடு! அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து !” என்ற கோரிக்கையை முன்வைத்து- சமச்சீர் கல்விக்காக உச்சநீதிமன்றம் வரை வாதாடி வெற்றிபெற்றோம். மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் கைதாகி சிறைக்குள் தள்ளப்பட்டோம்.
- சாதித் தீண்டாமை வன்கொடுமைகள், சிறுபான்மையினர் மீதான அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக அரசு மற்றும் சாதி வெறியர்களின் கோபத்துக்கும் மிரட்டலுக்கும் அஞ்சாமல் களத்தில் நின்று சமரசமின்றி போராடி வருகிறோம். குறிப்பாக பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி நத்தம் காலனி வன்னிய சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டம், உசிலம்பட்டி பூதிப்புரத்தில் விமலாதேவி கவுரவக்கொலை இவற்றுக்குக் காரணமானவர்களைக் கொலை வழக்கில் கைது செய்யக்கோரிப் போராடி வருகின்றோம்.
- “மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது. அவரது ஊழல் முறைகேடுகள் காரணமாக அவரைப் பணி நீக்கம் செய்யவேண்டும்” என்று கோரி பல்கலைக் கழக வாயில் முன்பும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், பேராசிரியர் சீனிவாசனைக் கூலிப்படையை வைத்துக் கொலைவெறித்தாக்குதல் நடத்திய வழக்கில் சாட்சிகளாய் நின்றும் போராட்டங்கள், கைதுகள் தொடர்கின்றன.
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைத்த மோடி அரசை எதிர்த்து போராடும் அதே வேளையில் நீதித்துறை ஊழல், சி.டி செல்வம், சி.எஸ்.கர்ணன் போன்ற நீதிபதிகள் பகிரங்கமாக நீதியை விலை பேசுவதைக் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் நடத்திய வெறியாட்டங்களைக் கண்டித்தும் இயக்கங்கள் மேற்கொண்டோம்.
- ஒடுக்கப்படும், உரிமைகள் மறுக்கப்படும் இலங்கைத் தமிழர்களுக்காவும் தமிழக மீனவர்களின் உரிமைகளுக்காகவும் தமிழகத்தில் வதைபடும் ஈழ அகதிகளுக்காகவும் தொடந்து குரல் எழுப்பி வருகிறது எமது அமைப்பு.
இப்படி எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதன் மூலம் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள, படித்த அறிவுஜீவிகள் மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களிடமும் நன்கு அறிமுகமாகியுள்ளது எமது மையம். பல தரப்பினரும் அமைப்பில் இணைந்து மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.
11-ம் ஆண்டு விழா நிகழ்வுகளுக்கு வருகை தரவும். மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஆர்வமுடையவர்கள் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் எங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளவும் தோழமையுடன் கோருகிறோம்.
11ம் ஆண்டில் மதுரைக் கிளை…
கருத்தரங்கம், நாடகம், ஒளிக் குறுந்தகடு வெளியீடு
6.12.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணி
மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை
கருத்தரங்கம் மாலை 5.00 மணி
தலைமை:
ம. லயனல் அந்தோணி ராஜ்,
மாவட்ட செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
சொத்து குவிப்பு வழக்கு :
தண்டனை ஜெயலலிதாவுக்கா தமிழ்ச் சமுதாயத்துக்கா?
தோழர். மருதையன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் –தமிழ்நாடு
தாது மணல் –கிரானைட் –ஆற்று மணல் கொள்ளை: சகாயம் குழு விசாரணையை முடக்கும் அரசு! தீர்வு என்ன?
வழக்கறிஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மையம் வீதி நாடக இயக்கம் நடத்தும்
‘’கெளரவக் கொலை!’’ –நாடகம்
தாது மணல் கொள்ளை டி.வி.டி. வெளியீடு
நன்றியுரை
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
துணைச் செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
அனைவரும் வருக!
மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு,
மதுரை மாவட்டக்கிளை,
150- இ, ஏரிக்கரை சாலை,
கே.கே.நகர்,
மதுரை- 625020
பேச: 9443471003