privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்தருண் விஜயின் தமிழ்த் தொல்லை தினமணியின் கொசுத் தொல்லை

தருண் விஜயின் தமிழ்த் தொல்லை தினமணியின் கொசுத் தொல்லை

-

திருக்குறளும் திருட்டுக் குரலும்!

ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது!

தருண் விஜய் - தினமணி
“பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப்புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.

திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்கு ஆதரவு’ போஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது.

உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார்.

போதாதா? “பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.

திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர் ‘எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்.

இதன்அடையாளமாக, “மத்திய துணை ராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்கள் திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள், அதன் அர்த்தத்தை விளக்குங்கள், மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் ஏராளமான வீரர்களை இழந்ததற்கு படையினருக்கு மனஉறுதி குறைவாக இருந்ததும் காரணமாகும். போர் முறைகள், போர் தந்திரங்கள் தொடர்பாக குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்! அதன் அர்த்தத்தை விளக்குங்கள்” என்று திருக்குறள் என்ற அற நூலை, பார்ப்பன மனு நூல் போல, பகவத்கீதை போன்ற வஞ்சக யுத்தவெறியும், ரத்தவெறியும் பிடித்த நூலைப் போன்றதுதான் என திரிக்க ஆரம்பித்துள்ளார்.

சத்தீஸ்கர், ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களான காடுகள், மலைகள், கனிம வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு சூறையாட மத்தியப் படையினரை கூலிப்படையாக பயன்படுத்துகிறது அரசு. நாட்டு வளங்களை அபகரிக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடும் மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்; வழிகாட்டும் நூலாக அமையும்.

கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே

“அல்லல்பட்டு ஆற்றாத அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை!”

என்று எச்சரித்த திருக்குறள் கேடுகெட்ட அரசுக்கு எதிர் நூலாகும். மக்களின் எதிர்ப்புக் குரலாகும்.

கீதை கொலைநூல்
மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்

ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக் கருவியாகவும், காவி பயங்கரத்தின் திரிசூலமாகவும் திருக்குறளையும், தமிழையும் உருமாற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சதித்தனங்களை தோலுரிக்காமல், வைரமுத்துவும், பல ஆளும் வர்க்க தமிழ் ‘வயிறு’ முத்துக்களும் “ஆகா! வடக்கு வாசல் திறக்கிறது!” என்று வாயைப் பிளந்தால், அட உண்ட கட்டிகளா! அது எதுக்கு? என்று எதிர்த்து இந்த தமிழ் ஆர்.எஸ்.எஸ். களையும் அடையாளம் காட்ட வேண்டும். இந்த ஜந்துக்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் திருவள்ளுவர்

“வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு”

என்று வெளிப்படையான பகைவரை விட, நண்பர் போல் நடிக்கும் பகைவன் ஆபத்தானவன் என்று குறிப்பு காட்டி இருக்கிறார்.

கொலை, கொள்ளை, களவு, சூது, கள்ள உறவு போன்ற சமூகத் தீங்குகளையும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற பார்ப்பனப் பாதகங்களையும், அதைப் பற்றி ஒழுகும் அரசமைப்பையும் அக்காலத்திய நிலைமைக்கேற்ப கண்டித்தும், பொது நோக்கிலான அறத்தோடும் அந்தக்கால உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப மக்களின் ஏக்கமாய் மலர்ந்தும், சூழலுக்கேற்ற பலவீனங்களையும் கொண்டது திருக்குறளின் கருத்துச்சாரம்.

யார் செத்தால் இருந்தால் என்ன சூதாடு! மனைவியையும் வைத்து சூதாடு! போரின் எதிரில் மாமனாயினும் போடு! சகோதரனாயினும் வெட்டு, குத்து‘ என்ற பார்ப்பன வெறிக்கொள்கை கொண்டது பகவத்கீதை, மகாபாரதம்! இவைகளின் பெருமிதத்தில் ஆட்சி நடத்தும் மோடி அரசின் பரிவாரங்கள் திருக்குறள் எனும் மனுநீதியின் பகைநூலை உறவாடிக் கெடுப்பதற்கு ஏற்றாற் போல், உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ராணுவத்திற்கு வழிகாட்டும் நூலாக திருக்குறளைத் திரித்துக் காட்டுவது அனைத்து எதிர் முனைகளையும் ஆரிய பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய, தமிழ்ப்பாசம் அல்ல! இதை திருக்குறளின் மெய்ப்பொருளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக, (குறள் – 780)

“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து”

என்ற குறள் நிச்சயம் ஒரு கூலிப்படைக்கு பொருந்த முடியாது. திருவள்ளுவர் இந்தக் குறளில் சொல்லுவது, “தம்மைக் காத்தவர் அல்லது ஆதரித்தவர் கண்ணீரில் நீர் பெருகுமாறு சாகின்ற சாவு வருமானால் அந்தச் சாவு கெஞ்சிக் கேட்டாவது பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது” என்கிறார். மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் நக்சல்பாரிகளுக்கே இந்தப் பாடல் பொருத்தமடைகிறதே ஒழிய, தன்னை எப்போதும் ஒடுக்கும் மேலதிகாரியை சுட்டுவிட்டு நிம்மதியடையும் ஒரு இராணுவ வீரனுக்கு இது பொருந்துமா?

சிஆர்பிஎஃப்
ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!

இதுமட்டுமல்ல, படைமாட்சி என்ற அதிகாரத்தில் (குறள் – 766)

“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு”

அதாவது வீரம், மானம், மக்களுக்கு துன்பம் செய்யாத விழிப்படையும் போர்த்தெளிவு – இந்தப்போர் ஏன்? எதற்கு? யாருக்கு? என்ற தெளிவு, அரசியல் நான்குமே படைக்குப் பாதுகாப்பு என்கிறார். சாதாரண வீரப்பன் வேட்டையிலேயே கோழி, ஆடு, பெண்கள் என்று குதறும், ஏன் இந்த சண்டை என்று கேள்வி கேட்க உரிமையில்லாத இந்த ஆளும்வர்க்க படைக்கு எதிர்க்குரலாகத்தான் திருக்குறள் ஒலிக்கிறது.

இதுமட்டுமல்ல (குறள் – 769) இல்

“சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை”

என்கிறார். ஒரு ஒப்பீட்டுக்குச் சொன்னால் கம்யூனிஸ்டுகளைத் தவிர ஒரு படைக்கும் இந்த யோக்கியதை கிடையாது. அதாவது “கீழ்த்தரமான பண்புகளும் தலைமையின் மீது அளவு கடந்த வெறுப்பும், வறுமையும் இல்லாத படையையே வெல்லும்” என்கிறார். காஷ்மீரத்திலே இந்த ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!

இவைகள் மட்டுமல்ல, படைமாட்சி, படைச்செருக்கு, அரண், உட்பகை… என்று எந்த அதிகாரங்களிலும் திருவள்ளுவர் காவி தருண்விஜய் கக்குவதுபோல, போர்வெறி, போர்த்தந்திரம், போர் முறை என்ற அடிதடி அர்த்தத்தில் குறளே இயற்றவில்லை, கருவிகளைக் கையாளும், வஞ்சகத்தை அரங்கேற்றும் பார்ப்பன படு பாதக பகவத்கீதை போல கொலை நூலாக இல்லாமல், போர் பற்றிய இடத்திலும் அறநெறி, ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பிலான தற்காப்பு நிலை, தாக்க வேண்டிய நிலைவரினும் அதிலும் முறைமை என்ற கோணத்திலேயே குறட்பாக்கள் உள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு கூலிப்படையாக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அரசுக்கு எதிராகத்தான் அந்த நிலையிலும் பேசி இருக்கிறது திருக்குறள்.

(குறள் – 557) -இல்

“துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு”

திருவள்ளுவர்
குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.

என்று இரக்கமற்ற அரசனை சாடியும், (குறள் – 736) – இல்

“கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா;
நாடுஎன்ப நாட்டின் தலை”

என்று இயற்கையை அழிக்கும் காவி, கார்ப்பரேட் அரசை கண்டிப்பது போல், எது நாடு? எது வளர்ச்சி? என்று கேள்வி கேட்க குறிப்பு காட்டி உள்ளார் வள்ளுவர். இந்த திருடர்களுக்கும், திருக்குறளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை!

எல்லாவற்றுக்கும் மேலே

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகு இயற்றியான்”

என்று பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு மக்களை தள்ளிய அரசு/ இயற்றியவன் அலைந்து கெட்டொழிக என்று ஒலிப்பதுதான் குறள். இந்த சுரண்டல் அரசை ஒழிக்கும் நக்சல்பாரிகளின் குரலுக்கு ஆதரவாய் ஒலிக்கிறதே ஒழிய தேசியத் திருடர்களுக்கு ஆதரவாக இல்லை.

காவிப் பயங்கரவாதிகளை கண்டுகொள்ளும் விதமாக

“தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண் நீரும் அனைத்து”

என்று குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.

திருக்குறளின் ஆரியப் – பார்ப்பன எதிர்ப்பு பரிமாணங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்; ‘தமிழ் திருக்குறள்’ எனும் பெயரில் எதிரிகள் கைக்கு தமிழகம் நழுவாதிருக்க மக்களிடம் ஆரியப் – பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிரான அரசியல் உணர்வினை வளர்ப்போம்!

– துரை.சண்முகம்