privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னை பல்லாவரம் : போராடாமல் கழிப்பறை கூட இல்லை

சென்னை பல்லாவரம் : போராடாமல் கழிப்பறை கூட இல்லை

-

ல்லவபுரம் நகராட்சியில் திருநீர்மலை போகிற வழியில் ஜி.எஸ்.டி பிரதான சாலையை ஒட்டியுள்ளது காமராஜ் நகர் பகுதி. பல்லவபுர நகராட்சியின் 3-வது வார்டாக உள்ள இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றன.  பெரும்பாலும் அருகிலுள்ள நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாகவும், உதிரி வேலை செய்பவர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் உள்ள உழைக்கும் மக்கள்தான் இவர்கள்.

இங்கே பெரும்பாலான குடும்பங்களுக்கு கழிவறை வசதி கிடையாது. அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் முட்புதரையே கழிவறையாக பயன்படுத்தும் அவலநிலைதான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்பகுதியின் முன்பாக பணக்காரர்கள் வசிப்பதற்காக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் “ஒலிம்பியா” அடுக்குமாடி குடியிருப்பை அமைக்க, அந்நிறுவனத்திடம் எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காமராஜ் நகர் பகுதி மக்களின் கழிவறை பிரச்சினை பெரிதாக தெரியவில்லை என்பது இயல்பான விசயம்தான்.

இம்மக்கள் கழிவறையாக பயன்படுத்தும் அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. அதிகாரிகளின் உதவியோடு பல்லாவரம் பகுதியில் உள்ள திமுக, அதிமுக வைச் சேர்ந்த பெருச்சாளிகள் இவ்வேலைகளில் ஈடுபட்டு வருவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில், அதிர்ச்சியடைந்த மக்கள் இப்பிரச்சினையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். பிரச்சினையின் உடனடி முக்கியத்துவத்தை உணர்ந்த தோழர்கள் உடனே ஊர்க்கூட்டத்தை கூட்டி, மக்களிடத்தில் ஓட்டுக் கட்சிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தி, போராட அறைகூவினார்கள். அதன் பொருட்டு போராட்டக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது.

அடுத்த நாளே மக்களிடம் நிதி திரட்டி பிரச்சினையை விளக்கி பல்லாவரம் முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வீச்சான பிரச்சாரன் கொண்டு செல்லப்பட்டது.

அதே சமயம் எதிரிகளிடத்திலும் சலசலப்பை உருவாக்கியது. அவர்கள் தொலைபேசி செய்து மிரட்டிப் பார்த்தார்கள். அருகில் உள்ள பகுதியான கல்யாணிபுரம் பகுதியில் அதிமுக வைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், அமைப்பிற்கு தொடர்பு கொண்டு, “கழிவறை கட்டுவதற்காக ஏற்கனவே 20 லட்சம் ஒதுக்கப்படுள்ளது, இடம் தான் இல்லை. ஆனால் நீங்கள் செய்வது அவதூறு செய்வதாக இருக்கிறது, வழக்கு தொடுப்போம்.” என்று மிரட்டிப் பார்த்தார்.

எப்போதோ 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் பகுதி மக்களுக்கு இந்த ஒதுக்கம் இந்தக் கணம் வரை  தெரியாது. இதைத் தெரிந்து கொண்ட மக்கள் முன்னிலும் கோபமாக நினைக்கத் துவங்கினர்.  இப்படி அவர்கள் மிரட்டல் மூலம் புதுப்புது திரை மறைவு  துர்நாற்றங்களை வெளியே கொண்டு வந்தார்கள்.

பிறகு “பல்லாவரம் அதிமுக எம்.எல்.ஏ தன்சிங்கை பார்த்துப் பேசலாம் வாங்க” என்று சமரசம் செய்யப் பார்த்தார்கள். மக்களும் தோழர்களும் அதை ஏற்காமல் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள்.  பகுதி மக்கள் ஓட்டுப் பொறுக்கிகளை காறி உமிழ்ந்தனர்.

பல்லாவரம் காமராஜ் நகர்
பகுதி மக்கள் ஓட்டுப் பொறுக்கிகளை காறி உமிழ்ந்தனர்.

தொடர்ச்சியாக, 05-12-14 அன்று காலை பல்லவபுர நகராட்சிக்கு புமாஇமு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் 20 இளைஞர்கள் முழக்கமிட்டு சென்றனர். நகராட்சித் தலைவர் இல்லாததால் கீழ்நிலை அதிகாரியிடம் மனுவை அளித்தோம். இதை எப்படியோ மோப்பம் பிடித்த ராஜேஷ் அங்கேயும் வந்து தன்னை அம்பலப்படுத்திக் கொண்டார்.

மக்களிடம் வந்து “நீங்க ஏன் இங்க வந்தீங்க, நாங்க செய்து தருகிறோம்” என்று நைச்சியமாக பேசிப் பார்த்தார். மக்களோ “இவ்வளவு நாட்கள் எங்க போன, இன்னிக்கு வந்து பேச வந்துட்ட” என்று திட்டி அனுப்பினர். அங்கு வந்திருந்தவர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டுப் போனார்.  இம்மனு கொடுக்கும் நிகழ்வின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது.

பல்லாவரம் காமராஜ் நகர்
“இவ்வளவு நாட்கள் எங்க போன, இன்னிக்கு வந்து பேச வந்துட்ட”

சிறிது நேரத்தில், நகராட்சித் தலைவர் நிசார் அகமது தோழர்களை தொடர்பு கொண்டார். பகுதி நிலைமை அவரிடத்தில் விளக்கப்பட்டது.  செவ்வாய்க்கிழமை (09-12-14) காலை 10.00 மணிக்கு காமராஜ் நகர் பகுதிக்கு நேரில் வந்து புறம்போக்கு இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பல்லாவரம் காமராஜ் நகர்
மக்கள் ஓர் அமைப்பின் கீழ் திரண்டு தொடர்ச்சியாக போராடத் தொடங்கியவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.

இவ்வளவு ஆண்டுகளாக அம்மக்கள் தங்கள் பிரச்சினையைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத, அக்கறையில்லாத நகராட்சியும், அரசியல்வாதிகளும் இப்போது அம்மக்கள் ஓர் அமைப்பின் கீழ் திரண்டு தொடர்ச்சியாக போராடத் தொடங்கியவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.

மக்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக நின்று போராடும்பொழுது தான் நிர்ப்பந்தத்தை உருவாக்கி சாதிக்க முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

இது முதற்கட்ட வெற்றி மட்டுமே. தொடர்ச்சியாக அருகில் உள்ள பகுதி மக்களையும் ஒன்றிணைத்து பரவலான போராட்டமாக இதை மாற்ற வேண்டியுள்ளது.

பல்லாவரம் காமராஜ் நகர்
மக்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக நின்று போராடும்பொழுது தான் நிர்ப்பந்தத்தை உருவாக்கி சாதிக்க முடியும்
  • உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!
  • மக்கள் போராட்டத்தின் மூலம் நிர்ப்பந்தப்படுத்துவோம்!
  • சாதித்து முடிப்போம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க