privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்

பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்

-

_Korean_Air_Cargo_ரேசன் அரிசியில் புழுவோ, வண்டோ, கல்லோ, மண்ணோ இருந்தாலும் காந்தியாய் சகித்துக் கொள்ளும் தேசமே! இந்தக் கதையை படி!

ஹுண்டாய் காரில் ஹார்லிக்ஸ் குடும்பத்தின் மகிழ்ச்சியோடு பயணிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு கொரியா என்றதும் ஒரு நேசம் வரும்! இருங்காட்டு கோட்டை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் ஹுண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு என்ன வரும்? இந்தக் கதையை படித்தால் தெரியவரும்.

பச்சமுத்துவின் புது யுகத்தில் கொரிய தொடரை பார்த்து கண்ணீர் விடும் மக்களே, இதுவும் ஒரு கொரியக் கதைதான்!

கொரியன் ஏர் லைன்ஸ் கம்பெனி – தென் கொரியாவின் மிகப்பெரும் விமான நிறுவனம். சியோலில் தலைமை அலுவலகத்தை கொண்டிருக்கும் கொரியன் ஏர், 45 நாடுகளில் 130 நகரங்களை இணைக்கிறது. உலக அளவில் முதல் 20 பெரிய விமான நிறுவனங்களில் கொரியன் ஏரும் உண்டு. அதே போல இதன் சரக்கு போக்குவரத்து விமான சேவையும் முன்னணியில் வருகிறது.

1946-ம் ஆண்டு கொரிய தேசிய விமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, 1969-ல் தனியார் மயமாகி கொரியன் ஏர் – ஆக இயங்கி வருகிறது. நிறுவனத்தின் பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களில் பெரும்பாலோனோர் தலைநகரம் சியோலில் வாழ்கின்றனர்.இப்பேற்பட்ட பிரம்மாண்டமான விமான கம்பெனியை தலைமை தாங்கி நடத்துபவர், சோ யாங் ஹோ (Cho Yang-ho).

இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு
இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு

வாத்தியார் பையன் படிக்கமாட்டான் என்பது மேன்மக்களின் குடும்பத்தினருக்கு பொருந்தாது. ஆடம்பரத்தையும், அதற்கு காரணமான பொருளாதாரத்தையும், அதிகார ஒழுங்கோடு கற்றுணரும் வாரிசுகள் தந்தை வழியில் தலையெடுப்பார்கள்.

அதன்படி அன்னாரது 40 வயது மகள் சோ ஹைன் அஹ் (Cho Hyun-ah) கொரியன் ஏர் நிறுவனத்தின் துணைத்  தலைவராக பணியாற்றுகிறார். நிறுவனத்தில் பயணிக்கும் விமானங்களின் சேவைப் பணிகளை அம்மணி கவனித்துக் கொள்கிறார். உலகாளாவிய தொழிலில் இருப்பதால் ஹீதர் (Heather) எனும் ஆங்கிலப் பெயரில் அழைக்கப்படுவதை இவர் விரும்புகிறார். ராயல் தொழிலில் ராயல் பொறுப்பில் இருக்கும் போது பெயரும் ராயலாக இருக்க வேண்டுமல்லவா!

வெள்ளிக்கிழமை (5.12.2014) அன்று கொரியன் ஏரின் ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் இருந்து சியோலை நோக்கி கிளம்புகிறது. 250 பயணிகளும், 20 ஊழியர்களும் விமானத்தில் இருக்கின்றனர். அவர்களில் அம்மணி சோ-வும் உண்டு.

அம்மணிக்கு உணவு வழங்கிய ஒரு ஊழியர் மேகடாமியா எனும் பருப்பு வகையை பாக்கெட்டோடு தட்டில் வைக்கிறார். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் இந்த இனிப்பு பருப்பு என்ன எப்படி என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஏதோ பாதாம், முந்திரி போல வைத்துக் கொள்ளுங்கள்.

பாக்கெட்டுக்காக பொங்கியெழுந்த அம்மணி சோ
பாக்கெட்டுக்காக பொங்கியெழுந்த அம்மணி சோ

அந்த விமான கம்பெனி ரூல்ஸ்படி இந்த பருப்பு வகைகளை (nuts) பாக்கெட்டிலிருந்து பிரித்து தட்டில் கொட்ட வேண்டுமாம். பாக்கெட்டில் இருந்தாலும் நட்டுதான், கொட்டினாலும் நட்டுதானே எல்லாவற்றுக்கும் மேலாக கழியும் போது அது ஷிட்டுதானே, இதிலென்ன பிரச்சினை என்று நாம் யோசிக்கலாம்.

ஆனால் ராயல் அம்மணிகள் நம்மைப் போல காட்டுமிராண்டிகள் இல்லை. ஏன் உறை போட்டு நட்டு வைத்தாய் என்று வைத்தவரை கேள்வி கேட்டு திட்டி திக்குமுக்காட வைத்தார். பிறகு அந்த ஊழியர் தடுமாறவே உடன் உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை பிடித்து கேள்வி கேட்டார்.

பிறகு விமானத்தின் தலைமை பைலட்டிடம் சொல்லி கிளம்பிக் கொண்டிருந்த விமானத்தை நிறுத்த சொன்னார். அதன்படி ராயல் அம்மணியின் உத்தரவுப்படி விமானம் திரும்பி தலைமை சேவை ஊழியரை தரையிறக்கிவிட்டு பின் பறந்தது. இதனால் சியோலுக்கு 11 நிமிடங்கள் தாமதமாம்.

என்னடா இது, நமது பேருந்துகளும், ரயில்களும் மணிக்கணக்கில் தாமதாகும் போது கடல் கடந்து நாடு கடந்து போவதற்கு 11 நிமிட தாமதமெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நீங்கள் யோசிக்கலாம்.

நீங்களெல்லாம் மாதக்கணக்கில் தாமதமாக போனாலும் இந்த உலகம் நின்று விடாது. ஆனால் கணநேர தாமதத்தில் கூட முதலாளித்துவத்தின் மேன் மக்கள், சில பல மில்லியன் டாலர்களை இழக்கலாம். ஆகையால் இது தங்க தாமதம்.

இதுவரை உலகம் கண்ட விமான சரித்திரத்திலேயே இத்தகைய திரும்புதல் நடக்கவில்லையாம். அதாவது தொழில்நுட்பக் கோளாறு, பயணிகளின் படுமோசமான உடல்நிலை இன்னபிற அவசர காரணங்களுக்காக மட்டுமே விமான தலைமை பைலட் இப்படி விமானங்களை தரையிறக்குவார். அதில் நட்டுக்களை பாக்கெட்டோடு போட்டார் என்ற ‘குற்றத்திற்காக’ விமானம் திரும்பியது இதுவே முதல் முறை.

உணவு பரிமாறும் ஊழியர் தவறிழைத்தார் என்பதை நம்மூர் பார்க் ஷெர்ட்டனில் ஒதுங்கி காபியோ, பீரோ குடிக்கும் கனவான்களெல்லாம் கண்டிப்பாக ஏற்பார்கள். ஆதலால் அமெரிக்க, கொரிய கனவான்களுக்கும் அது பிரச்சினையே இல்லை.

ஆனால் 11 நிமிடத் தாமதம்? இது மற்ற கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் பிரச்சினையல்லவா? உடன் கொரியா துவங்கி, கனடா வரை இந்த ‘நட்டு ரிடர்ன்’ குறித்து ஊடகங்கள் பேசத் துவங்கின. ஏதோ ஒரு வகையில் விமரிசனங்கள் வர ஆரம்பித்த பிறகு கொரியன் ஏர் பதில் சொல்லியது.

அம்மணியின் அப்பா யாங் ஹோ
அம்மணியின் அப்பா யாங் ஹோ

பிரான்சிலிருந்து திரும்பிய கம்பெனி தலைவர் அதாவது அம்மணியின் அப்பா உடன் தலைமை நிர்வாகிகளை கூட்டி நட்டு பிரச்சினையை விவாதித்திருக்கிறார். ஊடகங்களின் அழுத்தம் காரணமாக மனமிரங்கிய அம்மணி தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா கடிதம் கொடுத்ததை அப்பா ஏற்றிருக்கிறாராம். ஆனால் அம்மணி தனது உதவி தலைவர் பதவியை விடவில்லை. சேவைத்துறை பொறுப்பு எனும் பதவியை மட்டும் விட்டிருக்கிறார். இனி அவர் வேலையில்லாமல் ஹாயாக சம்பளத்தை மட்டும் பெறலாம். என்ன ஒரு தியாகம்!

பருப்பு பறிமாறலைத் தாண்டி விமானம் தாமதம், சக பயணிகள் எரிச்சல் எனும் அம்சம் மேலோங்கிய நிலையில் “நடந்த நிகழ்விற்கு முழு பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகுகிறேன்” என்று அம்மணி கூறியிருக்கிறார்.

அதே நேரம் நியூயார்க் விமான நிலையத்தில் சேவை பணியாளர் பொறுப்பிலிருப்பவரை இறக்கி விட்டது தலைமை பைலட்டுதான், அம்மணி அல்ல என்று கம்பெனி சமாளித்திருக்கிறது.  மேலும் பருப்பு பறிமாறியவர் முறையான வழிகாட்டுதல்களை அறிந்திருக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்க வேண்டியிருந்ததாம். இல்லையேல் பாக்கெட் பருப்பை சாப்பிட்டு மாரடைப்பு வந்திருக்குமோ என்னமோ!

மன்னிப்பு கேட்பதாக இருந்தால் நேரடியாக கேளுங்கள், பொறுப்பை மாற்றிவிடாதீர்கள் என்று இதை கொரியன் ஏர் பைலட் சங்கமே கண்டித்திருக்கிறது.

இறக்கி விடப்பட்ட அந்த மூத்த ஊழியர் மூன்று மாதங்களுக்கு எந்த கொரியன் ஏர் விமானத்திலும் ஏறக் கூடாதாம். அதன்படி அவர் கம்பெனியை விட்டு அவராகவே விலகிவிட வேண்டும்.

ஏழைகள் புளுத்துப் போன ரேசன் அரிசியை சாப்பிடுவதோ, அரசு மருத்துவமனையில் அறுத்துப் போட்டுவிட்டு நூல் இல்லை என்பதோ எங்கேயும் பிரச்சினை இல்லை. ஆனால் நட்சத்திர விடுதிகளிலோ இல்லை போயிங் விமானத்திலோ பருப்பு பாக்கெட்டை உடைக்கவில்லை என்றால் கூட ஊழியர்களை நையப் புடைக்கிறார்கள்.

போராடும் மக்களை சுட்டுக் கொல்லும் உலகநாடுகளின் போலீசு வரை, ஊழியர்களை வதைக்கும் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை பூமியில் இதுதான் மேன்மக்களை ஆட்சிசெலுத்தும் அதிகாரப் பண்பு.

எந்தா வேண்டே என்று கேரள சர்வர் கேட்டதை வைத்து அறம் பாடினார் எழுத்தாளர் ஜெயமோகன். ஜெயா கார் பவனி காரணமாக டிராபிக்கில் மாட்டியதால் அரசியல் பேசியவர் ரஜினி. இவர்களைப் போன்றவர்கள் கொரிய அம்மணியின் அறச்சீற்றத்தை புரிந்து கொள்வார்கள்.

இப்போது இந்த உலகம் இவர்களுக்குரியது. நமக்குரியதாக மாற்றுவது எப்போது?

–    வேல்ராசன்