“தானத்தில் சிறந்தது அன்னதானம். அது இந்து மதத்துக்கு மட்டும் தனிச்சிறப்பானது இல்லை. சீக்கிய மதத்தில் கூட, குருத்வாராக்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. நமது நோக்கம் பசித்தவர்கள் புசிக்க வேண்டும் என்பதுதான்” – 2002-ம் ஆண்டு கோவில்களில் சாப்பாடு போடும் திட்டத்தை தொடங்கி வைத்த போது ஜெயலலிதா பேசியது.
சாலைப்பணியாளர்களை வயிற்றிலடித்து, அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்து பூரித்த ஜெயா “குறைந்த பட்சம் 500 கோயில்களில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்கள் மனதார வயிறார சாப்பிட்டுப் போக வேண்டும்” என்று ‘கனிவுடன்’ பேசவும் செய்தார்.
மயிலாப்பூர் அக்ரகாரம், கபாலீஸ்வரர் கோயிலில் திட்டத்தை தொடங்கி வைத்து, பா.ஜ.க தலைமையில் இந்து அமைப்புகளைச் சேர்த்து, பார்ப்பனர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு 19 வகை பதார்த்தங்களுடன் ஜெயலலிதாவே பரிமாறி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வர் இவர்தான் என்று சங்க வானரங்கள் குதூகலத்தில் துள்ளின. இந்து முன்னணி இராம கோபாலன் செல்லுமிடமெல்லாம் ‘அம்மா’ புகழ் பாடினார். திருப்புகழுக்கு போட்டியாக இந்த மதர் புகழ் வளர்ந்து வந்தது.
12 ஆண்டுகள் ஆகிவிட்டது.
கோயில் அன்னதானம் தொடர்ச்சியாக, எப்படி நடக்கிறது? யார் யார், சாப்பிட வருகிறார்கள்? இந்து தர்மவான்கள் இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்குகிறார்களா? யார் இதை வழி நடத்தி, கண்காணிக்கிறார்கள்? இதன் ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்? – தெரிந்து கொள்ள, கோயில்களில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களாக வரிசையில் நின்றோம்.
பிச்சை எடுப்பதை விட கேவலம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் பிச்சைக்காரர்களிடம், “அன்னதானம் சாப்பிடப் போகவில்லையா?” என்று கேட்ட போது,
“என் பொழைப்ப கெடுக்காதப்பா, நீ கெளம்பு. பலராமா (பக்கத்தில் இருப்பவரிடம்) நான் அப்பவே சொல்லல, இன்னைக்கு நான் வந்த நேரம் சரியில்லன்னுட்டு. அங்கங்க போறது எல்லாம் எங்க தலை மேல விடியிது. நீ வேற கேள்வி கேட்க வந்துட்ட”
என்று நம்மை முறைத்தார்.
சென்னை வடபழனி கோவிலில் 45 வருடமாக பிச்சை எடுக்கும் சந்திரா,
“என்னை எல்லாம் அன்னதானத்தில விட மாட்டானுக. எனக்கு அந்த சோறு வேண்டாம். அவனுங்க கிட்ட போய் நான் ஏன் சாப்பிடணும். இங்க உட்கார்ந்தா நான் 2 பேருக்கு சோறு போட்டுட்டு போவேன்.”
என்று கோபமாக பேசினார்.
இங்கே அன்னதானத்துக்கு டோக்கன் வழங்கும் தர்மராஜன் என்ற குருக்களிடம, “ஜெயலலிதாவின் தொடக்க விழாவில் சம்பிரதாயமாக உட்கார்ந்து சாப்பிட்ட பார்ப்பனர்கள் இப்போது அன்னதானத்தில் சாப்பிட வருகிறார்களா” என்று கேட்டோம்.
“இதெல்லாம் இங்க வந்து கேட்கக் கூடாது. கோயில்ல வந்து சாதி பார்க்கக் கூடாது. சாமி கும்பிட்டு, சாப்பிட்டு போகணும். கோயில் அய்யரு, தரிசனம் செய்ய வர்றவங்கள இங்க சாப்பிட அனுப்பி விட்டிருக்கான். அவன் ஏன் வந்து சாப்பிடவில்லை என்று கேட்கக் கூடாது. சாப்பிடுபவன் என்ன சாதி என்று நாங்க பார்ப்பதில்லை”
என்றார். அன்னதானத்துக்கு ஆள் அனுப்புவதுதான் அய்யரின் வேலையே தவிர கூட உட்கார்ந்து சாப்பிடுவதில்லையாம்.
“எவ்வளவோ வேலை இருக்கு. சோறு போடுற வேலை மட்டும் இல்ல எங்களுக்கு. ஆண்டவன்தான் எங்கள அனுப்பி வெச்சிருக்கான். பெரிய பாக்கியம். அவனவன் சாப்பாட்ட ஆண்டவன் எழுதி வெச்சிட்டான்” என்றார். அதாவது ஏதுமற்றவர்களுக்கு அன்னதானம், மத்தவாளுக்கு வீட்டு சாப்பாடு!
“ஆண்டவன் எழுதி வெச்சிட்டான் என்றால் 10 மணிக்கு வந்தாத்தான் சோறு, 12 மணிக்கு வந்தா இல்லை என்று நீங்க, ஏன் தனியா எழுதி வைக்கிறீங்க” என்றோம். அவசர அவசரமாக, ஆண்டவனின் பாக்கியத்தை தள்ளுபடி செய்து நம்மை அனுப்பி வைத்தார்.
கோயிலில் சாப்பாடு போடும் ஊழியர்கள் நடந்து கொள்வதும் இந்த வகையிலேயே இருக்கிறது. சினிமா தியேட்டரில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முரடர்கள் போல், அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள். சாப்பிடுபவர்களை கவுரவமான முறையில் நடத்தக் கூடாது என்று பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள் போல் அடியாள், வேலை பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் கச்சியப்பேஸ்வரர் கோயிலில், சாப்பாட்டுக்கு காத்திருக்கும் கோமதி சமையல் வேலைகளுக்கு போகின்றவர்.
“எப்போதாவது நினைத்தால் சாப்பிட வருவேன். பசிக்கு சாப்பிடுவேன், வீட்டு சாப்பாடு போல இருக்கும் என்று சொல்ல முடியாது. வீட்டில் சின்ன பாத்திரத்தில் செஞ்சா டேஸ்டா இருக்கும். மொத்தமாக 100 பேருக்கு செஞ்சா அவ்வளவுதான்.”
என்று தனக்குதானே சமாதானம் கூறிக் கொண்டார்.
“மொத வாட்டி வச்சிட்டு போறாங்களே… திரும்பவும் கேட்டா, போடுவதற்கு ஆளில்லை. சாப்பாட்டை தூக்கி கொண்டு வரும் வேலையையும் எங்களையே செய்ய சொல்லறாங்க தண்ணீர் கேட்டால், நம்மையே தண்ணீர் ஊத்தச் சொல்வானுங்க. சாப்பாடுன்னா உட்கார வைச்சு போடணும் இல்லையா. அப்படி ஒழுங்கா போடுவது இல்லை.”என்றார்.
இந்தக் கோவிலில் அன்னதான திட்டத்திற்கான ஊழியர் என்பவர் ஒரே ஒரு சமையல்காரர் மட்டும்தான். கோயிலில் துப்புரவு செய்யும் பெண் ஊழியர்கள் பாத்திரம் கழுவுவது, எச்சிலை எடுக்கும் வேலைகளையும் செய்கின்றனர். ஒரு வேளை இதனால்தான் இங்கே ‘மேன் மக்கள்’ சாப்பிடுவதில்லை போலும்!
ரூ 3,500 தொகுப்பூதியத்தில் கோயில் பராமரிப்பு, வாடகை வசூல், நிர்வாக வேலைகளை செய்யும் ஊழியர்கள் சாப்பாடு பறிமாறும் வேலையும் செய்ய வேண்டும். இவர்களிடமிருந்து எரிச்சல்தான் முதலில் இலையில் விழுகிறது. பிறகுதான் அன்னதானம்.
10 வருட சர்வீஸ் உள்ள 50 வயது சமையல்காரர், அவரே பரிமாற வருகிறார். அவருக்குத்தான் யார் யாருக்கு எவ்வளவு வைப்பது என்று தெரியும் என்று சமாளிக்கிறது கோயில் நிர்வாகம்.
12 ஆண்டுகளுக்கு முன்பு 19 வகை பதார்த்தங்களுடன் ஆயிரக்கணக்கான மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அன்னதானம், இப்போது ஒரு நாளைக்கு ஓரிரு ஐட்டங்களுடன் 50 பேர் என்று எல்லா கோவில்களிலும் வற்றி விட்டது. கிட்டத்தட்ட பிச்சை போல நடத்தப்படும் இந்த தானத்தை ஜெயாவுக்காக அன்னதானமென காட்ட, படாத பாடுபடுகிறது இந்து அறநிலையத்துறை.
உண்மை அறிய வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள். கோயில்படியில் பிச்சை எடுப்பவர்களை எல்லாம் இந்து மதத்தை தகர்க்க வந்த தீவிரவாதிகள் போல் செக்யூரிட்டி உளவுப்படை மூலம் கண்காணிக்கிறது. காஞ்சி கச்சியப்பேஸ்வரர் கோயில் செக்யூரிட்டியாக பணி புரியும் 60 வயதான மணி, அன்னதானம் சாப்பிட வருபவர்களை விரட்டுவதற்காக கையில் கம்புடன் சுத்துகிறார்.
“இங்க போனா சாப்பாடு நிச்சயம்னு வந்திர்றாங்க. 10 மணிக்கே, டாஸ்மாக் கடை தொறந்துர்றான். அங்க கிடைச்ச எச்சய வாங்கிக் குடிச்சிட்டு, இங்க சாப்பிட வந்துர்றாங்க. இங்க 50 பேருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு. புதுசா வர்றவங்களுக்கு கொடுப்போமா அல்லது தினமும் வந்து உட்கார்ந்திருக்கும் கும்பலுக்குக் கொடுப்போமா, பெரிய தலைவலியா இருக்குது.
அன்னதானம் பசியை தீர்க்க இல்லை, கடவுளுக்கு படைப்பது. தெய்வத்தை வணங்கிட்டு சாப்பிடுகிற ஒன்றுதான் அன்னதானம். பிரசாதம் போல சார் இது. ஆனால், இவங்க வயிறு நெறையணும்னு நினைக்கிறாங்க. நாலு பேரு வந்துட்டா, அவங்களுக்கும் போடணும் என்கிற எண்ணம் இல்ல. எனக்கே வையின்னு கேட்கிறாங்க. ஒரு பிடி கம்மியா இருந்தாலும் போதும்னு சாப்பிடறது கிடையாது”
– என்று இந்து ஞான மரபு தர்மத்தின் அளவை ஸ்கேல் வைத்து அளந்து மட்டுப்படுத்துவதை விளக்கினார்.
“சில பேரு வெளியூரிலிருந்து வருவாங்க, ‘நாங்க எச்ச இலை எடுத்து போடுறோம், சாப்பிடுகிற எடத்தை பெருக்குகிறோம்’ என்கிறார்கள். அவங்க மனுசங்க. புண்ணியமா நெனைச்சி வேலையை செய்றாங்க. ஆனா, இவங்க என்ன நினைக்கிறாங்க, நமக்கு கவர்ன்மென்ட் சோறு போடுது, யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள். 50 பேர் சாப்பாடை 60 பேருக்கு நிரவ வேண்டியிருக்கிறது. பல பேரை திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு. சாப்பாடு கம்மியாகத்தான் இருக்கும் என்று சொன்னா கேட்பது கிடையாது.” என்று எச்சில் இலைக்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள இரத்த உறவையும் x தொடர்ந்து நடக்கும் போரை கீதை போல விளக்கினார்.
கோவில்களில் மதிய உணவுக்கான டோக்கன் வாங்குவதற்கு சாதாரண கீழ்மட்டத் தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று காலை பத்தரை மணிக்கே நெரிசல். வடபழனி கோவிலில் செக்யூரிட்டி வேலை செய்பவர்கள், கல்யாண வேலை, பாத்திரம் கழுவுபவர்கள், கொத்தனார், பெயின்டர் வேலை செய்பவர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று சினிமா கலைஞர்கள். 30 வயதிலிருந்து 70 வயது வரையிலானவர்கள் அன்னதானத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அதிலும் இவர்களெல்லாம் வேலைக்கு போகிறவர்கள்தான். வேலையற்ற நாட்களில், வேலைக்கு செல்லும் நாட்களிலும் ஓட்டலில் சாப்பிட அதிகம் செலவழிக்க வேண்டும் என்று பல்வேறு சிரமங்கள் காரணமாகவே இங்கு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பலருக்கு வீட்டில் வழியில்லை ஏன் வீடே இல்லை எனும் ஆதரவற்ற நிலையும் இருக்கிறது. அதனால்தான் அவர்களிடம் பேசிப்பார்த்தால் கடும் கோபமும், எரிச்சலும் அடைகிறார்கள். அன்னதானத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் அவற்றை அதிகப்படுத்துகிறது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
முதல் 100 டோக்கன்களுக்குள் நாம் சேர்ந்து விட வேண்டும் என்ற கவலையோடு உட்கார்ந்திருக்கின்றனர். புதிதாக யாராவது வந்து விட்டால் நமக்கு இல்லாமல் போகுமோ என்ற பதட்டம் அடைக்கின்றனர்.
வரிசையில் நின்ற சித்தாள் வேலை பார்க்கும் காமாட்சி,
“என்னை என்னா கேட்கிற, நீ சாப்பிடணுமா போய் சாப்பிடு. வயசானவங்க வந்தா கவனிப்பதில்லை. சின்ன வயசுக்காரங்களைத்தான் வேலையிலயும் சேர்த்துக்கிறாக. வயசானவங்களுக்கு எங்க வேலை கொடுக்கிறான். போன் பேசத் தெரியுமா, தலை நிறைய பூ வைச்சிருக்கயா. அவங்கதான் வேணுமாம். இங்க சோத்து இடத்திலையும் அதே நிலைதான். கூட்டத்தில நின்னா சாப்பிட முடியல.”
அன்னதானத்திற்கு கூட ஐடி துறை போல ஆள் பார்த்து எடுக்கிறார்கள் என்பது ஆச்சரியமானதுதான்.
அதிகமாக மக்கள் வந்தால் அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். புதியதாக யாராவது சாப்பிட வந்தால் நாய்ச்சண்டைதான் நடக்கிறது. இவர்களுக்குள் சண்டை வருவதை கோயில் நிர்வாகம் ரசிக்கிறது.
அவர்களில் பலர் காலை சாப்பாடு சாப்பிடாமல் வந்தவர்கள், முகத்தில் பசிக் களைப்பு தெரிந்தது. கேள்வி கேட்கும் போது, “கேள்வி கேட்க வந்துட்டியா” என்று எரிந்து விழுந்தார்கள்; சலிப்புடன் திட்டினர். வெறுப்புடன் பார்த்தனர். அனுசரணையாக கேட்கும் கேள்விக்குக் கூட எதிரியைபோல் பதில் சொல்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். கோயில் அன்னதானத்தை பிச்சை போலவே உணர்கிறார்கள்.
அவர்களிடம் நேரடியாக பேசினாலும் யாரும் “அன்னதானம், தருமம்” என்பது புண்ணியமாக உணரவில்லை. டாஸ்மாக்கில் மறைந்து இருந்து குடிப்பது போல இதைக் கருதுகின்றனர். சமூகத்தின் அவமான மையமாக இந்த அன்னதானக் கூடம் இருக்கிறது என்று தெரிந்து தமது சுய கவுரவத்தை விட்டு, தன்மானத்தை விட்டு எல்லாவற்றையும் இழந்துதான் ஒரு வேளை சோற்றை வரிசையில் நின்று சாப்பிடுகின்றனர். அவர்கள், கண்களிலும், முகத்திலும் கவுரவம் பாதிக்கப்பட்டது மிகப்பெரிய பிரச்சனையாக தெரிகிறது, பசி கூட இரண்டாம் பட்சமாக இருக்கிறது. சாப்பிடும் இடத்தில் தெரிந்தவர்களோ சொந்தக்காரர்களோ பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களை வதைக்கிறது.
சாப்பாடு கவுரவமான முறையில் இருக்கிறதா என்று கேட்ட போது வயிறு நிரம்புவதைத்தான் முக்கியம் என்கிறார்கள். முறையாக போடுகிறார்களா என்ற கேள்வியே தேவையற்றது என்கிறார்கள். பல பேர் வீட்டில் சாப்பிட முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பவர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தவர்கள், ஆதரவற்றவர்கள், குடும்ப உறுப்பினரால் புறக்கணிக்கப்பட்டவர்கள். பெரும்பான்மையானவர்கள், வேலையற்றவர்கள்.
காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் சந்தித்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்த 50 வயதான ஆர் பாண்டியன்
“எனக்கு கல்யாணம் ஆகவில்லை. இரவில் செக்யூரிட்டி வேலை செய்கிறேன், செக்யூரிட்டி வேலை முடித்ததும் போவதற்கு இடமில்லை. காலையில் 10 மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவேன். துட்டு இருந்தா ஓட்டலுக்கு போக முடியும். இல்லாத குறைக்கு இங்க வந்து சாப்பிட்டுட்டு போவேன்.
சாப்பிட்டு விட்டு, தெரிஞ்ச கடையருகில் படுத்துக் கொள்வேன். மாலையில் வேலைக்கு போய் விடுவேன். 1,500 ரூபாய் சம்பளம். அதை டீ, இட்லி சாப்பிட செலவழிக்கிறேன். காலையில் பொதுவாக சாப்பிடுவதில்லை”
என்றார். இரவு முழுவதும் காவல் வேலை செய்யும் ஒருவருக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட போதுமான சம்பளம் கிடைக்காத அவலம்தான் அவரை அவமானங்களை தாங்கிக் கொண்டு, அன்னதானத்தில் சாப்பிட நிற்க வைத்திருக்கிறது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அன்னதான நன்கொடைக்கு வருமான வரி விலக்கு கொடுத்தால்தான் போதுமான நன்கொடையாளர்கள் முன்வருவார்கள் என்று இந்து தர்மம் வழங்கும் புண்ணியம், சொர்க்கத்திற்கு குறுக்கு வழி காண்பிக்கிறார்கள், கோயில் பார்ப்பனர்கள்.
“இதற்காக கோயிலில் அன்னதான உண்டியல் வைத்திருக்கிறோம். அதில் மாதத்துக்கு ரூ 4,000, 5,000 வருகிறது. அதையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொண்டு சாப்பாடு செய்கிறோம். சாப்பாடு போட விரும்பினால், ஒரு நாள் சாப்பாடு செலவு 1,250 ரூபாய் கொடுத்தால் உங்கள் பெயரில் அன்னதானம் போடுவோம். ரூ 20,000 மேல் கொடுத்தால் போர்டில் பெயரை எழுதி கௌரவிப்போம்.” என்று ஆள் பிடிக்கிறார்கள்.
அறநிலையத்துறையின் கோவில்கள் 36,488 உள்ளன. மடங்கள், ஆதீனங்கள் கட்டுப்பாட்டின் கீழ் 58 கோவில்கள் உள்ளன. 4,78,347 ஏக்கர் நிலம் கோவில்களுக்கு சொந்தமாக உள்ளது. ரூ 58.68 கோடி வருமானம் வருகிறது. ஆனால், அன்னதானம் போடுவதற்கு இந்து தர்மத்தின் காவலர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். மயிலாப்பூர் கோவிலிலிருந்து திருச்செந்தூர் வரை கோவில் சொத்தை இதே இந்து தரும கனவான்கள்தான் சூறையாடுகிறார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
காஞ்சி சங்காராச்சாரி ஜெயேந்திரன், அன்னதான திட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. அதன் பேரில் பெங்களூர் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல கோடி ஆட்டையைப் போட்டு, கார்ப்பரேட் ஆடிட்டோரியம் போல் அன்னதான கூடம் கட்டி வைத்திருக்கிறார். அந்த பளபளக்கும் நவீன கட்டிடத்திலும், வரிசையில் நின்று நாங்கள் சாப்பிட்டதோ வழக்கமான குண்டு அரிசியும், நீர்த்த சாம்பாரும்தான். நெய்யிலேயே முங்கி எழும் ‘பால பெரியவா’ குஸ்தி பயில்வான் போல உலா வரும் மடத்தில் அதிதிகளுக்கு கிடைக்கும் அன்னதான லட்சணம் இதுதான். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திருட்டு வருமானம் உள்ள மடமிது என்பது குறிப்பிடத்தக்க்து.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜெயா அரசின் உத்தரவின் பெயரில் யானைகளுக்கான சிறப்பு முகாம். யானைகளுக்கு அமைச்சர்கள், கற்பூரம் காட்டி மாலை போட்டு வரவேற்கிறார்கள். அங்கு, சிறப்பான சமையலறை, உணவறை, கால்நடை மருத்துவர், யானைகளுக்கான – பாகன்களுக்கான மருத்துவம் என்று கவனிக்கின்றனர். யானைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மூலிகைக் குளியல், நோய் எதிர்ப்பு சூரணம், குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானைக்கு தினமும் ஃபில்டர் காஃபி என்று ஜெயலலிதாவின் பார்ப்பன தர்மம் யானை விட்டையிலும் மணக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை தண்டித்த மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பில் வெளியாகியுள்ள விபரப்படி – ஜெயலலிதா வீட்டில் வளரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இறக்குமதி செய்த வெளிநாட்டு நாய்களுக்கு நாளொன்றுக்கு 8 கிலோ ஆட்டுக்கறி வாங்கியிருக்கின்றனர். காலையில் 8, மாலை 10 – மொத்தம் நாளொன்றுக்கு 18 லிட்டர் பால் வாங்கியிருக்கின்றனர்.
வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் நாய்களுக்கும் பூலோக சொர்க்கம். பார்ப்பன கருணையில் அல்லது ஏதோ மலையாளத்து ஜோசியன் சொன்னதால் கஜமுக யாக இலாபம் வேண்டி கோவில் யானைகளுக்கும் ராஜமரியாதை.
ஆனால், ஏழை, ஆதரவற்ற மக்கள் பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா வீட்டு நாய்க்கும் கீழானவர்கள். உழைக்கும் மக்கள் வாழும் தமிழ்நாடு ஒருவேளை கஞ்சிக்கு கையேந்தும் மானமற்ற மனிதகூட்டம் நிரம்பி வழியும் திறந்தவெளி கொட்டடி.
பார்ப்பனக் கொழுப்பு வழியும் பாசிச ஜெயா அரசின் கோயில் அன்னதானமும் அங்கு ஒரு வேளை சோற்றுக்காக பறிபோகும் தமிழர்களின் தன்மானமும் மெய்ப்பிப்பது இதைத்தான்.
கோவில் என்றால் மனசுக்கு ஒரு நிம்மதி, ஆறுதல், புனிதமான மூடு, நறுமணம், தெய்வீக சூழல், பாசிட்டிவ் திங்கிங் என்று இழப்பதற்கு ஏராளம் வைத்துக் கொண்டு கவிதை பாடும் வர்க்கத்திற்கு இது புரியுமா?
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கையேந்தி சாப்பிடுவதை தெருநாய்கள் போல அடித்துக் கொண்டும், அவமானத்தோடும் சகித்துக் கொள்ளும் அளவு வாழ்க்கை அவர்களை வதைக்கிறது. அவர்களைப் பொறுத்த வரை கோவில் அன்னதானம் என்பது பணக்காரர்களின் கல்யாண விருந்தில் மிச்ச மீதியாக எறியப்படும் எச்சிலைதான்.
“அதிதி தேவோ பவ” – விருந்தினரை ஆண்டவன் போல நடத்தும் நாடு இது என்று உள்ளொளியில் உடான்ஸ் விடும் இந்து ஞான மரபு அறிஞர்கள் இனி அதை “அதிதி நாயே பவ” என்று மாற்றி எழுத வேண்டும்.
– வினவு செய்தியாளர்கள்
Wonderful coverage.
Thanks a lot.
என்ன தான் மக்கா சொல்ல வரீங்க? யார் வந்தாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் 19 வகை பதார்த்தம் வெச்சு போட்டா தான் அன்னதானமா? உங்க எழுத்துல கொஞ்சம் நேர்மை இருக்கா?
//அதாவது ஏதுமற்றவர்களுக்கு அன்னதானம், மத்தவாளுக்கு வீட்டு சாப்பாடு!//
அப்போ நான் IT கம்பெனில வேலை பாத்துட்டு தினமும் அன்னதான உணவை சாப்பிட்டா என்ன சொல்லுவீங்க? அவளோ சம்பாதிச்சும் பாரு இல்லாதவனுக்கு போடற சாப்பாட்டை வந்து திங்கரான்னு விமர்சனம் பண்ண மாட்டீங்க? எனக்கு என் வீட்டில் சாப்பாடு இருக்கு, அன்னதானதுல போய் சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. நான் இல்லாவிட்டால் வேறு ஒரு பசித்த மனிதன் உண்ணுவான். அது தான் நடக்க வேண்டும். இதே நீங்க சொல்றா மாதிரி எல்லா அய்யரும் அன்னதானத்தில் சாப்பிட்டா ரிப்போர்ட் எப்படி எழுதி இருப்பீர்கள் தெரியுமா? ஏழைகளுக்கு என்று கொண்டு வரப்பட்ட அன்னதான திட்டத்தில் பார்பனியம் தின்று கொழுக்கிறது என்று தலைப்பு வந்துருக்கும். நின்னாலும் குத்தம், நடந்தாலும் குத்தம்.
திட்டத்தை இன்னும் நல்லதாக செய்ய முடியுமா? கண்டிப்பா! அதுக்கு பணம் தேவை. அதை ஒதுக்கினாலும் உடனே உங்களுக்கு பத்திகிட்டு வரும். பாசிச அரசு எல்லா பணத்தையும் கோவிலுக்கு செலவிடுகிறது என்ற ரிப்போர்ட் வரும் வினவில். போதிய காசு ஒதுக்காமல் நன்கொடை கேட்கும் நிலைமையில் திட்டம் இருப்பதை தான் வினவு //இதற்காக கோயிலில் அன்னதான உண்டியல் வைத்திருக்கிறோம். அதில் மாதத்துக்கு ரூ 4,000, 5,000 வருகிறது. அதையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொண்டு சாப்பாடு செய்கிறோம். சாப்பாடு போட விரும்பினால், ஒரு நாள் சாப்பாடு செலவு 1,250 ரூபாய் கொடுத்தால் உங்கள் பெயரில் அன்னதானம் போடுவோம். ரூ 20,000 மேல் கொடுத்தால் போர்டில் பெயரை எழுதி கௌரவிப்போம்.” என்று ஆள் பிடிக்கிறார்கள்// என்று சொல்கிறது.
எல்லாத்துலயும் குத்தம் கண்டுபிடிக்க மட்டும் அலைந்தால் அது மட்டும் தான் தெரியும். இதே ரெபோர்டின் முடிவை கொஞ்சம் மாற்றி எழுதி பாக்கலாமா?
ஒரு வேலை உணவு கிடைத்தால் போதும் என்று நினைக்கும் மக்களுக்கு ஏதோ அது திட்டத்தில் கிடைக்கிறது, அந்த உணவு வேறு மேல் குடி மக்களுக்கு செல்வதில்லை. ஆனா இந்த நிலைமை மாறனும். பசி என்பது ஒழிய வேண்டும். அன்னதானத்துக்கு வருபவர்கள் பசித்த வயுறுடன் உணவை எதிர் பார்த்து வராமல், நிறைந்த மனதுடன் இறைவனை எதிர்பார்த்து வந்தால் தான் இந்த திட்டம் முழுமையான வெற்றி என்று கூற முடியும். திட்டம் ஒருவாராக செயல் படுகிறது. ஆனா அது செயல்பட வேண்டியது இப்படி அல்ல. இந்த திட்டம் இல்லாதவர்களின் பசியை போக்கும் திட்டமாக மட்டும் இருக்கும் வரை நம் அனைவருக்கும் அது வெட்க கேடாகவே இருக்கும்.
தப்பை சுட்டிகாட்டும் போது அதில் இருக்கும் சரியையும், நல்லதையும் சுட்டி காட்ட வேண்டும். அதுக்கு பேர்தான் unbiased report. முடிஞ்சா செய்ங்க. இல்லாட்டி மத்த பிரச்சார பீரங்கிகளோட நீங்களும் சேர வேண்டியது தான்.
அன்னதானத்தில் கருவாடு இல்லை. பார்பனர்களின் கருவாடு பகை
பதிவைப் படிக்கத் துவங்கியதும் பல கோயில்களுக்குச் பார்த்து நிறைய குறைகளைச் சுட்டிக் காட்டுவார் எதிர்பார்த்தேன். குறைகள் தென்படவில்லை போலும்.
துவக்கு விழாவைப் பற்றி கமெண்டு. அதில் ஒன்றும் புதிது இல்லை. ஒரு உணவகத் திறப்பு விழாவுக்கு வருபவருக்கு sweet வழங்குவது போல.
அய்யர் மற்றவர்களை சாப்பிட அனுப்புவது சரிதானே? இல்லாதவர்க்குப் போகவேண்டிய சோறை கொழுத்த பார்ப்பனன் தின்றுவிட்டு ஏழைகளை பட்டினி போட வேண்டுமா?
//“சில பேரு வெளியூரிலிருந்து வருவாங்க, ‘நாங்க எச்ச இலை எடுத்து போடுறோம், சாப்பிடுகிற எடத்தை பெருக்குகிறோம்’ என்கிறார்கள். அவங்க மனுசங்க. புண்ணியமா நெனைச்சி வேலையை செய்றாங்க. ஆனா, இவங்க என்ன நினைக்கிறாங்க, நமக்கு கவர்ன்மென்ட் சோறு போடுது, யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள். 50 பேர் சாப்பாடை 60 பேருக்கு நிரவ வேண்டியிருக்கிறது. பல பேரை திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு. சாப்பாடு கம்மியாகத்தான் இருக்கும் என்று சொன்னா கேட்பது கிடையாது.” என்று எச்சில் இலைக்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள இரத்த உறவையும் x தொடர்ந்து நடக்கும் போரை கீதை போல விளக்கினார்//
செஞ்சட்டைகளாலும் கருஞ்சட்டைகளாலும் மிதிபடும் இந்து மதத்தில் அடிப்படை நெறியை உணர்ந்த சாமானியர் இன்னும் உள்ளனர் என்று கேட்க மகிழ்ச்சி.
//[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்//
படங்கள் பார்த்தால் உணவு சுத்தமான இடத்தில் பரிமாறப்படுகிறது. அங்கு பந்தியில் காத்திருப்போர்களிலும் சிலர் நடுத்தட்டு போலத் தெரிகின்றனர். அவர்கள் ஒன்றும் //கையேந்தி சாப்பிடுவதை தெருநாய்கள் போல அடித்துக் கொண்டும், அவமானத்தோடும் சகித்துக் கொள்ளும் அளவு வாழ்க்கை அவர்களை வதைக்கிறது. அவர்களைப் பொறுத்த வரை கோவில் அன்னதானம் என்பது பணக்காரர்களின் கல்யாண விருந்தில் மிச்ச மீதியாக எறியப்படும் எச்சிலைதான்// என்று எண்ணும் வண்ணம் இல்லை.
உண்மையிலேயே பலவேறு அரசுத் திட்டங்கள் நூறு காசு செலவழித்தால் பதினொரு காசு தான் இலக்கை அடைகிறது என்று சொல்கிறார்கள். இந்த பார்ப்பன ஜெயா அரசு துவங்கிய திட்டம் வினவு பதிவில் குறைகள் நிறையச் சொல்ல இயலாவண்ணம் செயல் படுவது கண்டு மகிழ்ச்சி. பதிவுக்கு .நன்றி.