privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

-

35 வயதில் வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்க முடியுமா?

14 வருடங்களாக தடுப்பலைகளில் எதிர் நீச்சல் போட்டு, அழுது, சிரித்து, சோர்ந்து போய், இரவு முழுதும் கண் விழித்து வேலை பார்த்தது எல்லாம் இப்போது அர்த்தமில்லாமல் ஆகியிருக்கிறது.

இனிமேல் புதிதாக தொடங்க வேண்டுமாம். இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடி, அங்கும் படிப்படியாக உள்ளே பொருந்தி போய், நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்ய வேண்டுமாம். இது சாத்தியமா?

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க

இப்படி ஒரு நாள் வரும்னு நினைச்சே பார்த்ததில்ல. ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. “இது மேனேஜ்மென்ட் முடிவு, நான் ஒண்ணும் செய்ய முடியாது. பாருங்க, நானே மன உளைச்சலில் இருக்கிறேன்” ன்னு எச்.ஆர் முறிச்சி சொல்றாரு. எத்தனையோ கடிதங்களில், நீங்க இல்லாம இதை நாம சாதிச்சிருக்க முடியாதுன்னு இவங்க சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைதானா!

யார்கிட்ட போய் சொல்றது, அடுத்து என்ன என்று தெரியவில்லை.

பக்கத்து இருக்கைகளில் இருக்கறவங்க மனசில, நமக்கும் இது போல நடந்திடுமோன்னு ஒரு பயம்; இது வரை நடக்கலைன்னு ஒரு நிம்மதி; நம்மைப் பார்த்து அழவா, சிரிக்கவான்னு ஒரு குழப்பம்; வாழ்த்து சொல்லி, ஒரு செண்ட் ஆஃப் கொடுத்து அனுப்பிடலாம்னு முயற்சிக்கிறாங்க. அவங்க மேல போட்டியோ, பொறாமையோ எனக்கு இல்லை.

எனக்கு ஏன் இப்படி நடந்தது? கல்லூரியில் ஆரம்பிச்சி இந்த இடத்தை வந்தடைய அப்பப்பா எவ்வளவு உழைப்பு, போட்டிகள். அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கி விட்டது.

டி.சி.எஸ் – இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டது கல்லூரி முதலாம் ஆண்டில். எங்கள் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமானது எங்கள் கல்லூரிதான். இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். டி.சி.எஸ் என்றால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்பதையும் அங்குதான் தெரிந்துகொண்டேன்.

டி.சி.எஸ் ராக்ஸ்
இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

பலரின் ரெக்கமன்டேசனுக்கு பிறகு பாங்க் மேனேஜர் கல்விக்கடனுக்கு ஒப்புதலளிக்க, கடனுடன் ஆரம்பித்த கல்லூரி வாழ்க்கை விரைவாக மூன்றாம் ஆண்டை அடைந்தது. அடுத்து காம்பஸ் இன்டர்வியு.

அந்த வயசுக்கே உண்டான சுய சந்தேகம், நாம உண்மையிலேயே வொர்த்துதானா, நம்மையும் ஒரு ஆளா மதிப்பாங்களான்னு கேள்விகள். அதை நிரூபிச்சிக்க ஆட்ட சவடால்கள், போட்டிகள், ஓட்டங்கள், வேகங்கள், தேர்வுகளில் மதிப்பெண் கூடுதல்/குறைவு என்று ஓடிக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை என்பதுதான் அல்டிமேட் அங்கீகாரம் என்று தோன்றியது.

டி.சி.எஸ் தான் எங்கள் கல்லூரியில் அதிக நபர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனம். அதில் அடித்து பிடித்து எப்படியாவது இடம்பிடித்து விடவேண்டும். மூன்றாம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே சில ஆயிரங்கள் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்கான பல புத்தகங்களை வாங்கி குவித்திருந்தேன்.

எங்களுக்கு முன்னர் டி.சி.எஸ்-ல் வேலைக்கு சேர்ந்து, இப்பொழுது வெளியேற்றப்படவிருக்கும் இருக்கும் சீனியர்கள் அவ்வப்போது கல்லூரிக்கு வருவார்கள்.

“தம்பி எப்படியாவது கேம்பஸ்ல செலக்டாயிருங்கடா. அவ்வளவு தான், லைஃப் செட்டிலாகிரும். நம்ம சீனியர் கலை தெரியும்ல. இப்ப யு.எஸ் போயிட்டாரு. “

“அப்டிடியூட்க்கு இப்பவே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிருங்க. ஆர்.எஸ்.அகர்வால்னு ஒரு புக். அதை வாங்கிக்கோ. அதிலருந்துதான் கேப்பான்”

“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

எங்களின் ‘வளர்ச்சி’க்கு அவர்களால் முடிந்த அளவு வழிகாட்டினார்கள்.

டி.சி.எஸ் சென்னை
“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

அப்பாவுக்கோ வேற கவலை – “எல கடைல வச்சி அந்த மேனஜரை பாத்தேன். மூணாவது வருசத்துல ஏதோ இன்டர்வியூ நடக்குமாம்ல. நடந்துச்சானு கேட்டான்?”. இப்படித்தான் அப்பாவை ஏற்றிவிடுவார் அந்த பேங்க் மேனேஜர். மூன்றாண்டுகளில் பேங்க் லோனும் என்னுடன் சேர்ந்து வளர்ந்திருந்தது.

“நம்ம தென்காசி சித்தப்பா பையன் இப்படித்தான் …காம்ப்ஸ்.. அமெரிக்கா. எப்பிடியாவது பல்லக் கடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் நல்லா பிரிப்பேர் பண்ணிட்டா லைஃப்ல செட்டில் ஆகிறலாம்“ என பல சக்சஸ் ஸ்டோரிகளை எடுத்துவிடுவார்கள் சொந்தக்கார ஷிவ்-கேராக்கள். “உங்க பையன் கையில தான் எல்லாம் இருக்கு” என்று தான் அநேகமாக முடிப்பார்கள். அந்த சமய்ங்களில் எல்லாம், பொருள் தெரியாத பார்வையில் என்னை பார்ப்பார் அப்பா.

காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தால் தான் வாழ்க்கை. அதை இழந்தால் அவ்வளவுதான் என்ற நிலைமை. வேலை இல்லை என்பதோடு எதற்கும் லாயக்கில்லாதவன் என்ற முத்திரையும் ஊரார், உறவினர்கள் மத்தியில் குத்தப்படும். கல்விக்கடன் வேறு. வெளிய போய் ஃபார்ம் நிரப்பி அனுப்பி, தெருத்தெருவா சுத்தி கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கணுமான்னு ஒரு பதட்டம்.

கல்விக் கடனை அடைக்க வேண்டும், வீட்டை இடிச்சிட்டு பெரிய வீடா கட்டணும்; அக்கா திருமணம்; ஊர் உறவு மத்தியில எப்படியும் ஒரு ஆளா ஆகவேண்டும்; இதை விட எனக்கு பெரிய ஆசைகள் அப்போது இருக்கவில்லை. இதை நிறைவேற்ற இருக்கும் ஒரே வழி இந்த கேம்பஸ் இன்டர்வியூ; அதுதரப்போகும் ஐ.டி துறை வாழ்க்கை.

அதைப்பெற கடினமாக உழைத்தேன். “டி.சி.எஸ் இன்டர்வியூ கொஸ்டீன்ஸ்” என்று கூகுளில் தேடினால் எத்தனை பக்கம் கிடைக்கும்.அதில் என்னென்ன்ன கேள்விகள் இருக்கும் என்பது வரை எனக்கு அப்போது அத்துப்படியாகியிருந்தது.

எனது முன்னேற்றத்துதாக உழைப்பதாக நினைத்துக்கொண்டு என்னை அறியாமலேயே டி.சி.எஸ்சின் தேவைக்கு உகந்த புராடக்ட்டாக (Product – செய்பொருள்) நான் மாறிக்கொண்டிருந்தேன். அதற்குத்தான் அத்தனை செலவு, அத்தனை முயற்சி.

”யூ ஆர் எ புராடக்ட். யூ ஹவ் டூ செல் யுவர்செல்ஃ” என்று பின்னாட்களில் இதே நிறுவனத்தில் எனக்கு வகுப்பெடுத்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது “யூஸ்&த்ரோ புராடக்ட்” (பயன்படுத்தி விட்டு எறியும் பொருள்) என்பதை அவர்கள் மறைத்து விட்டார்கள். எனக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

இங்கிலீஷ் மீடியம்
இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது.

அடுத்த பிரச்சனை ஆங்கிலம். அப்பா, இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது. அதை சரிசெய்ய சில “ஷிவ்-கேரா”க்களின் ஆலோசனைப்படி தினமும் காலை மாலை மூன்று டோஸ் இந்து பேப்பரை எனக்குள் திணித்துக்கொண்டிருந்தேன். கூடுதலாக “மை நேம் இஸ்….” செல்ஃப் இன்ட்ரோவை மனப்பாடம் செய்துவிட்டிருந்தேன்.

கேம்பஸ் இண்டர்வியூக்கான அந்த நாளும் வந்தது. இரண்டாம் ஆண்டில் படித்த எலெக்ட்ரானிக்ஸ் பாடத்திலிருந்து ஒரு அடிப்படைக் கேள்வி. தேர்வு எழுதியதோடு அதை மறந்து விட்டிருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய ஒரு கேள்வி என அடுக்கடுக்கான பல கேள்விகள்.

சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. இண்டர்வியூ நடந்த ஏ.சி அறைக்குள்ளும் அவ்வளவு வேர்த்திருக்கிறது, டி.சி.எஸ் வேலை இல்லை என்று ஆகி விட்டது! சர்வாங்கமும் தளர்ந்து சோர்வாக வெளியில் வந்தேன். யாரிடமும் பேசவே பிடிக்கவில்லை. நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். “சில சமயம் ஸ்ட்ரெஸ் இண்டர்வியூன்னு வைப்பாங்க, அதுமாதிரி கேட்டிருப்பாங்க. பரவாயில்ல விடு, வேற கம்பெனில கிடைச்சிரும்”னு நண்பர்கள் ஆறுதல் சொன்னாங்க.

இரண்டு நாட்களில் முடிவை அறிவித்திருந்தார்கள். 50 பேர் பட்டியலில் என் பெயருமிருந்தது. அதல பாதாளத்திலிருந்து சிகரத்தில் ஏறி விட்டது போல இருந்தது. ஜிவ்வென்று பறந்தது மனம். கனவில் நடப்பது போல அந்த மாலை கழிந்தது. வீட்டுக்கு வந்து நல்ல சேதியைச் சொல்லி விட்டு செட்டில் ஆனேன். டாடாவின் கரங்களுக்குள் விழுந்து விட்டேன். இனிமேல் நமக்கு விடிவுகாலம்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறேன். மீண்டும் வேலை தேட வேண்டும். மீண்டும் இன்டர்வியூ; வங்கிக்கடன்; கல்விக்கு பதிலாக வீடு, கார் கடன். ஆனால் இப்பொழுது 21 வயது இளைஞன் அல்ல நான். என் இளமையை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே செலவிட்டு தளர்ந்திருக்கிறேன்.

இருண்ட வாழ்க்கை
ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

இனி கல்லூரி நாட்களைப்போல என்னால் மாற முடியாது. அப்படி என்னை தயார்படுத்திக் கொண்டாலும் என் முன் உள்ள வாய்ப்புகள் மிகக்குறைவு.

பணிநீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. ஓரிருவருக்கு கிடைத்தாலும் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும். வேறு நிறுவனங்களிலும் வேலைநீக்க நடைமுறையை தொடர்ந்தால் எம்மை போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்னும் போட்டி அதிகரிக்கும். என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது.

பள்ளிமுடிந்து வரும் குழந்தையிடம் என்ன சொல்வது? நாளை அலுவலகத்திற்கு செல்லவில்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

பேரண்ட் டீச்சர் மீட்டிங்-ன் போது நமக்கு மரியாதை கொடுப்பார்களா? ஃபாதர் நேம் என்ன என்ற கேள்விக்கு அடுத்த வழமையான கேள்வியான “வாட் இஸ் யூவர் ஃபாதர்?” என்று கேட்டால் மற்ற குழந்தைகளின் முன்னால் என் குழந்தை கஷ்டப்பட்டுவிடுவானோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது. முன்னர் எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நிறுவனத்திற்கு வந்த புதிதில். அப்பா தள்ளுவண்டி கடை வைத்திருக்கிறார் என்று சொல்ல கூச்சப்பட்டு “பிசினஸ்” செய்கிறார் என்று பொதுவாக சொல்லியிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்? வேலையே இல்லை என்றான பிறகு தற்போதைய பள்ளியில் படிக்கவைக்க முடியுமா? அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கமுடியுமா? என்பதுதானே கவலைப்பட வேண்டிய விசயம்.

நான் தவறு செய்துவிட்டேன். வேலை நீக்கம் செய்யும்போதே நிறுவனத்துடன் எதிர்த்து போராடியிருக்க வேண்டும். போராடினால் வேலை கிடைத்திருக்குமா? தெரியவில்லை. ஆனால் இப்பொழுது போல வேலைக்கான வாய்ப்பு முழுமையாக அடைக்கப்பட்டிருக்காது என்பது நிச்சயம். இப்போதைய மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொடரும்……

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன)

– ரவி.

தொழிற்சங்கம்
மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை