Thursday, May 1, 2025

தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

-

ண்ணீர் இயற்கையின் சொத்து. அதனை யாரும் உருவாக்க முடியாது. ஆனால் நீரை விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறது காட்ஸ் (GATS) ஒப்பந்தம். இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய நீர்க் கொள்கையின்படி நிலம் உங்களுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு கீழே இருக்கும் நீர் அரசுக்குத்தான் சொந்தம். இதுவரை ஆற்று நீரை மட்டுமே முதலாளிககுக்கு தாரை வார்த்த அரசு இப்போது நிலத்தடி நீரையும் தாரை வார்க்க உள்ளது.

thanneer-front thanneer-back

இந்நிலையில் 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தண்ணீர் தாகத்திற்கா அல்லது இலாபத்திற்கா” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீட்டை கீழைக்காற்று வெளியீட்டகம் 2-ம் பதிப்பாக கொண்டு வந்துள்ளது.

பெக்டெல், சூயஸ் போன்ற நிறுவனங்களின் உலகளாவிய ஆதிக்கம், மறுபுறம் அரசுத் துறைகளை வேண்டுமென்றே நட்டத்தில் ஓட வைத்து தனியாருக்கு மாற வைப்பது போன்றவற்றை  அம்மா குடிநீருக்கு பழகும் எவரும்  புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். காசு இருந்தால் மருத்துவம், தண்ணீர் என எல்லா சேவைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை விரிவாக விளக்குகிறது இந்நூல்.

இந்தப் புத்தகம் மணற்கொள்ளை எப்படி ஆற்றின் போக்கை பாதிக்கிறது, நீரை உறிஞ்சி வைக்கும் பாக்டீரியாக்கள் எப்படி காணாமல் போகிறது போன்றவற்றையும் விளக்குகிறது.  நிலத்தடி நீர்மட்டம் குறைவது, ரியல் எஸ்டேட் கொழுப்பது போனவற்றையும் புரிந்து கொள்ள  முடிகிறது.

தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில், பொலிவியாவின் கொச்சபம்பாவும், தென்னாப்பிரிக்க மக்களி “ப்ரீ பெய்டு” முறைக்கு எதிராக நடத்திய போராட்டம்,  பிலிப்பைன்சின் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல். நீரை உறிஞ்சி லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் முதலாளிகள் எப்படி நட்ட ஈடு என்ற பெயரில் அநியாயமாக மக்களின் வரிப்பணத்தில் இருந்து காசு வாங்கிக் கொண்டு சென்றார்கள் என்பதை புத்தகம் அம்பலப்படுத்துகிறது.

இந்திய அளவில் கோக்கிற்கும், பெப்சிக்கும் தண்ணீர் எப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது , குறிப்பாக தமிழகத்தில் காணாமல் போன ஆறுகள் பற்றியும் சென்னையில் மறைந்து போன 48 ஏரிகளைப் பற்றியும் விளக்குகிறார்கள். தில்லி, திருப்பூர், சென்னை என்ற நகர உதாரணங்களும், தாமிரபரணி கோக்கிற்கு தாரை வார்க்கப்பட்டதையும், பெப்சிக்கு பாலாறு தாரை வார்க்கப்பட்டதையும் பற்றி சொல்கிறார்கள்.

தண்ணீர் இனிமேல் விற்பனைப் பண்டம் தான் என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் இந்த பத்தாண்டில் நடந்துள்ள மாற்றம். ஆனால் எல்லா தண்ணீரும் விற்பனைக்குத்தான் என்ற நிலை வந்தால் எப்படி சமாளிக்க முடியும்.

இருக்கும் விலைவாசியில் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழைகள், தண்ணீரை குடித்து பசியாற்றுவது கூட இனி சாத்தியமற்ற நிலை என்ற சூழலில் இப்புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. தனியார்மய காலத்தில் ஓட்டுச்சீட்டு அரசியலால் இதற்கு தீர்வு கிடையாது என்பதையும், ஒப்பந்தங்கள் எல்லாமுமே அதிகாரிகளால் மட்டுமே கையெழுத்திடப்படுகிறது, அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது என்பதை காட் ஒப்பந்தம் மூலமாக நிரூபித்திருக்கிறது புத்தகம்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க கூடாது என்ற நமது மரபும், தண்ணீர் கேட்டவனுக்கு மோரே கலக்கிக் கொடுத்த பழைய மரபும் அழிந்து, ‘தண்ணீர் இல்லை’ என தேநீர்க் கடைகளும் கைவிரிக்கும்படி மாறி வரும் சூழல், நமது தண்ணீர் உரிமையை பாதுகாக்க நம்மை அழைக்கின்றன.

தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

விலை : ரூ 30/-
பக்கங்கள் : 72