privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு - அழக்கூட முடியவில்லை

TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – அழக்கூட முடியவில்லை

-

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவருவதை ஒரு செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை. 25,000 என்பது வெறும் நம்பர் அல்லவே. அவர்கள் கை, கால், ரத்தம், சதை, உணர்ச்சி கொண்ட மனிதர்கள். நான் அவர்களில் சிலரை தினமும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன், அவர்கள் என் டீம் லீடர்கள் ;  சிரிப்பார்கள், கோபப்படுவார்கள், திட்டுவார்கள். ஏனோ இப்பொழுது மட்டும் உணர்ச்சியற்று நிற்கிறார்கள். ஏன்? தெரியவில்லை.

டி.சி.எஸ் அலுவலகம்எச்.ஆர் அறையிலிருந்து வெளிவரும் அவர்களை நான் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எச்.ஆரைப் போல நானும் உணர்ச்சியில்லாமல், அடுத்த வேலை கிடைக்க “ஆல் த பெஸ்ட்” சொல்ல வேண்டுமா? இல்லை, சோகமாக சிரிக்க வேண்டுமா? மௌனமாக கடந்துவிட வேண்டுமா? அடுத்த சில வருடங்களில் நானும் எச்.ஆர் அறைக்கு அழைக்கப்படுவேன் என்பதால் இப்போதே நடைமுறைகளை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமா? என்ன செய்வது?

என்ன செய்தாலும் இந்த ஆட்குறைப்பும், வேலை நீக்கமும் இந்த ஒரு முறையோடோ, இல்லை டிசிஎஸ் நிறுவனத்தோடு மட்டுமோ முடியப்போவதில்லை. கணினியின் கோப்புகளை “கிளீன் அப்” செய்வது போல நிர்வாகம் தனது இலாபத்துக்கு இடைஞ்சலாக உணரும் போதெல்லாம் எங்களை நீக்குவார்கள். நாங்கள் ரீசைக்கிள் (Recycle) செய்ய முடியாதவர்கள் என்பதால் அதற்கான குப்பைத்தொட்டியில் விசிறியடிக்கப்படுவோம்.

இன்று ஆலோசகர் (consultant – கன்சல்டன்ட்), இணை ஆலோசகர் (Associate Consultant) என்றால் நாளை IT Analyst, Systems Engineer.. என நாங்கள் எல்லோருமே பாதிக்கப்படுவோம். தற்போதைக்கு நமக்கு பிரச்சனையில்லை என்று நிம்மதியாக கடந்து செல்ல முடியாது.

கல்லூரி மாணவராக 21 வயதில் காம்பஸ் இன்டர்வியூவில் (வளாக நேர்முகம்) தெரிவு செய்யப்பட்டு இன்டஸ்டிரியில் நுழைந்தேன். என்னைப்போலத்தான் இப்பொழுது வேலை நீக்கப்பட்டவர்களும் நுழைந்தார்கள்.

பிள்ளைக்கறி உண்பதுபோல அவர்களின் இளம்வயதில் வேலையை உறிஞ்சிவிட்டு இப்பொழுது 30-களில் வேலையைவிட்டு துரத்தப்படுகிறார்கள். இனி அவர்கள் எங்கு செல்வார்கள். நான் எனது 30-களில் இங்கே இருப்பேனா இல்லை துரத்தப்பட்டு விடுவேனா? அப்படி துரத்தப்பட்டால் என்ன ஆவேன்? அப்பொழுது இவர்களைப்போல எனக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பார்கள். வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் இருப்பார்கள். அவர்களை எப்படி பாதுகாப்பேன்? என்று பயமாக இருக்கிறது. துரத்தப்படாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என் திறமைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டுமா? ஆர்க்கிடெக்ட் ரமேஷைவிட திறமையானவர் இருக்கமுடியுமா? அவரையே துரத்திவிட்டார்களே.

ரமேஷை எனக்கு தனிப்பட்ட முறையிலே தெரியும். நன்றாக பழகுவார். அவரைத்தான் நாங்கள் டீமின் பில்லர் (தூண்) என்று வேடிக்கையாக அழைப்போம். மிகவும் திறமையானவர். பல தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். நாங்கள் பல மணிநேரம் போராடி வழிதெரியாமல் இருக்கும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு சில விநாடிகளில் தீர்வு கண்டுபிடித்துவிடுவார். கடுமையாக உழைப்பவர். நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதும் அவர் அலுவலக கியூபிக்களில் தான் இருப்பார், காலை அலுவலகம் செல்லும்போதும் அங்குதான் இருப்பார். மனுஷன் வீட்டிற்கு போவாரா என்று சந்தேகமாக இருக்கும். ஆனால் சட்டை மட்டும் மாறியிருக்கும். சரி வீட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவரும் கூட வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘ஜாவா’வை கரைத்து குடித்திருப்பது நம் வேலையை காப்பாற்ற உதவாது என்பது மட்டும் தெரிகிறது.

டி.சி.எஸ் லாபமும், ஊதியமும்
டி.சி.எஸ் லாபமும், ஊதியமும்

இரவுபகலாக வேலை செய்தால் அப்ரைசலில் நல்ல பேண்ட் கிடைக்கும் என்ற எண்ணம் சிறிது காலத்திற்கு முன்னர் தான் தகர்ந்தது. “C” தான் போட்டார்கள். எனது ரேட்டிங்கை ஏற்கவில்லை என்பதற்கான பட்டனை அழுத்தினேன். மானேஜர், சூப்பர்வைசர்கள் அழைத்து பேசினார்கள். அடுத்த முறை நல்ல ரேட்டிங் தருவதாகவும், ஆன்சைட்டிற்கு என் பெயரை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்கள். அவ்வளவுதான் அந்த பிராசஸ் முடிந்துவிட்டது. நமக்கு ஆத்ம திருப்தி ஏற்படவேண்டும் என்பதற்காக அந்த பட்டனைவைத்திருக்கிறார்கள். வேறு பயன் எதுவுமில்லை.

இப்பொழுது “D” பேண்ட் போட்டுவிடக்கூடாதே என்பதற்காக தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் அமெரிக்கனுக்கு 24×7 சப்போர்ட் கொடுக்கவேண்டும். அது தீபாவளியோ, பொங்கலோ, கல்யாணம், காதுகுத்தோ எதுவுவாக இருந்தாலும் சரி அது நமக்குதானே. அவனுக்கில்லையே. அந்த நாட்களில் எல்லாம் அலுவலகத்திற்கு செல்ல பழகியிருக்கிறேன். ஆரம்பத்தில் மானேஜரிடம் நல்ல பெயர் வாங்க நானாக போட்டுக்கொண்ட மண் இது. இப்போது அதுவே வாடிக்கையாகிவிட்டது. என்னை கேட்காமலேயே இது போன்ற நாட்களில் என் பெயரை தான் அறிவிக்கிறார்கள். அமெரிக்க விசா நடைமுறைகளாலும், டீம் பாலிட்டிக்ஸ்னாலும் ஆன்சைட் கூட கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

இதுநாள் வரை அப்ரைசல், ஆன்சைட் கேரட்டுகளைத் தொங்கவிட்டு நயமாக பேசி வேலை வாங்கினார்கள். இனி பிங்சிலிப்பை காட்டி மிரட்டுவார்கள் என்பது மட்டும் தான் என் கண்முன்னால் தெரிகிறது. அவர்கள் மிரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நானே மிரண்டுபோய் தான் இருக்கிறேன். அப்ரைசரின் “D” பேண்ட் என்னை வேலையைவிட்டு நீக்கும் வல்லமை வாய்ந்தது என்றால் அவர் என்னை எப்படி நடத்துவார்.

ஏற்கனவே என் சுயமரியாதையை பல சந்தர்ப்பங்களில் சீண்டி பார்த்திருக்கிறார்கள். இனி அப்படி நடந்தால் குறைந்தபட்ச எதிர்ப்பை தெரிவிக்ககூட முடியாதோ? நான் எதை செய்வதாக இருந்தாலும் “D” பேண்டும் வேலை நீக்கமும் என கண்முன்னால் வந்து மறையுமே. அனிச்சை செயலாக எதிர்த்துபேசிவிட்டால்? அதையும் கூட கட்டுப்படுத்திதான் ஆகவேண்டுமா? சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்வது கூட இனி குற்றமாகிவிடுமே, என்ன செய்வது?

கிளையண்ட் சாட்டிஸ்பேக்சன், டெலிவரி, டிப்ளாய்மண்ட் என்று பல பெயர்களை கூறி இன்னும் இன்னும் வேகமாக ஓட வைப்பார்கள். இறுதியில் எப்படியும் தோற்கடிக்கப்படவிருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டே வேகமாக ஓடும் என் நிலையை கண்டு எனக்கே பரிதாபமாக இருக்கிறது. இப்போதைக்கு தப்பிக்க வேகமாக ஓட வேண்டுமா?. அதனால் என்ன பயன்?

டி.சி.எஸ் அலுவலகம்
டி.சி.எஸ் அலுவலகம்

அமெரிக்க வாடிக்கையாளரின் தகவல் பாதுகாப்புக்கும் (Information security), நெட்ஒர்க் பாதுகாப்புக்கும் (Network security) இரவு பகலாக வேலை பார்க்கிறேன். அதை தெரிந்துகொள்ள தடித்தடியான புத்தகங்களும் இருக்கின்றன. எனது சொந்த பணிபாதுகாப்புக்கு ( Job security) என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு இதுநாள் வரை தெரிந்திருக்கவில்லை. எந்த புத்தகத்தில் அதை படிப்பது?

அனைத்தும் தெரிந்தவனாக நினைத்துக்கொண்டு ஐ.டி கண்ணாடி கிணற்றின் தவளையாகவே இருந்திருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிறுவனத்தை எவ்வளவு நம்பினேன். இத்தனை பேரின் வாழ்க்கையை அழித்து அன்பிட் (Unfit) ஆக்கிவிட்டு “Fit For Life” என்று அலுவலகத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஜாப் செக்யூரிட்டி இல்லாமல் இருக்கும் எங்களிடம் “Safety first” என்று இன்றும் விளம்பரம் செய்கிறார்கள். இதை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதை எதிர்த்து எங்களால் ஒன்று செய்ய முடியவில்லை என்பதை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது. பஸ் ஸ்டிரைக் என்று சொன்னார்கள். ஏதோ எம்பிளாயீஸ் பிராப்ளமாம். குறைந்தபட்சம் அவர்கள் பிரச்சனையை வெளியில் சொல்லமுடிகிறது அவர்களால். எங்களால் அது கூட முடியவில்லையே. கூடி அழமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்.

யார் யாருக்கு வேலை பறிக்கப்பட்டுள்ளது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அந்த நபர்களைத்தாண்டி, அந்த டீமை தாண்டி யாருக்கும் தெரியாதே. ஒன்று கூடி போராட தேவையில்லை; ஒன்றுகூடி அழக்கூட எங்களால் முடியவில்லையே. வேலை போனவருக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியவில்லையே. ஏன் இப்படி தனித்தனி தீவுகளாக இருக்கிறோம்? என்று நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. ஆனால் டீம் ஒர்க் என்பதை பற்றி நாள் கணக்கில் வாய் கிழிய பேசுகிறார்கள். டீம் பில்டிங், டீம் ஸ்பிரிட், மயிறு மட்டை என்று ஃபிரெஷ்ஷர்கள் பலருக்கு நானே வகுப்பெடுக்கிறேன்.

காய்கறி விற்பவரில் ஆரம்பித்து, மூட்டை தூக்குபவர் வரை தங்கள் பிரச்சனைக்காக ஒன்று கூடி ஏதோ செய்கிறாகள். போராடுகிறார்களோ இல்லை மனு கொடுக்கிறார்களோ ஏதோ ஒன்று செய்கிறார்கள். ஏன் நாங்கள் மட்டும் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறோம்.

எங்களைப்போல மெத்த படிக்காத, சாதாரண மூட்டைதூக்கும் தொழிலாளியால் முடிவது ஏன் எங்களால் முடியவில்லை?

நீங்கள் சொல்வது போல சங்கம் வைப்பதால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது இல்லாமல் எங்கள் குரல் கூட வெளியில் கேட்காது என்பது தான் உண்மை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும்போது இது மட்டும் தான் ஒரே வழியாக தெரிகிறது.

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன, பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

– ரவி

(படங்களை இணையத்தில் எடுக்கப்பட்டவை)

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை