privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்

விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்

-

பெண்ணையாற்று மணல் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!
குடிநீரையும்,விவசாயத்தையும் பாதுகாப்போம்!

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்…
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…

பெண்ணையாறு மணல் கொள்ளைமேலே குறிப்பிட்ட பாடல் வரிகளுக்கு இணங்க இயற்கையாகவே உருவாகியுள்ள காடு, மலை, குடிநீர், கிரானைட், தாது மணல், இரும்பு சுரங்கம், பாக்சைட், ஆற்றுமணல், மீத்தேன் வாயு ஆகிய அனைத்து வளங்களும் நிறைந்து கிடந்த நமது தாய்நாட்டின் இயற்கை வளங்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையோடு சூறையாடப்பட்டு நம் நாட்டின் இறையாண்மை அழிந்து ஒரு வேளை உணவுக்காக கூட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படப்போகிறது.

ஏனென்றால் ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு தான் அடிப்படையாக விளங்குகிறது. அந்த உணவின் மூலதனமாக விவசாயம் முன் தேவையாக உள்ளது. அதற்கு அடிப்படை நீர் ஆதாரமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட நீரை பஞ்சு போல் தேக்கி வைத்து கொடுக்கின்ற ஆற்றின் மணலை அரசின் துணையோடு மணல் கொள்ளையர்கள் சூறையாடி வருகிறார்கள்.

மணல் மாபியாக்களின் பிடியில் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மணல் மாபியாக்களின் கொள்ளை எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் மணல் அல்ல இரண்டு குவாரிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ளது. ஆனால், குவாரி உரிமையாளர்கள் ஆற்றில் 10 குவாரி அமைத்து மணல் அள்ளுவதுடன் அந்த குவாரிகளுக்கு இணைப்புச் சாலை போட்டு ஆற்றின் போக்கையே மாற்றி விட்டனர்.

பெண்ணையாறு மணல் கொள்ளை
குவாரிகளுக்கு இணைப்புச் சாலை போட்டு ஆற்றின் போக்கையே மாற்றி விட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலத்துக்கும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டத்துக்கும் நீர் ஆதாரமாக விளங்குவது தென்பெண்ணை ஆறு. சங்கராபுரத்தில் ஆரம்பித்து திருக்கோவிலூர், விழுப்புரம் உளுந்தூர்பேட்டை வழியாக கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலூரில் முதல் மணல் குவாரி அமைக்கப்பட்டது. அப்போதே மக்கள் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்,மணல் குவாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது. எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் லாபத்தை மட்டுமே குறியாக கொண்டு மணல் மாபியாக்கள் செயல்படுவதால் விழுப்புரம் மாவட்டமே பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்ணையாறு மணல் கொள்ளை
மணல் மாபியாக்கள் செயல்படுவதால் விழுப்புரம் மாவட்டமே பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி பாலாறுக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய ஆறு தென்பெண்ணை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலத்துக்கு இந்த ஆற்றின் மூலம் நீர்பாசனம் கிடைக்கிறது. இந்த ஆற்றை நம்பித்தான் பல கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளன. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, என பல  முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து தான் குடிநீர் செல்கிறது. இந்த வளமான ஆறு தான் இப்போது பாலைவனமாகியிருக்கிறது.

  • ஆறுகளில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், இங்குள்ள குவாரிகளில் 12 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளியுள்ளார்கள்.
  • காவிரியை விட பெரிய ஆறு கேரளாவில் உள்ள பெரியாறு. அங்கு மணல் அல்ல ஜே.சி.பி. இயந்திரம் பயன்படுத்த கூடாது. ஆந்திராவில் உள்ள கோதாவரியிலும், கிருஷ்ணாவிலும் ஜே.சி.பி இயந்திரத்துக்கு அனுமதி இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தான் குவாரிக்கு இரண்டு ஜே.சி.பி இயந்திரம் வைத்து கொள்ளையடிக்கிறார்கள்.
  • கூட்டுக்குடிநீர் திட்டம் இருக்கும் இடத்துக்கு 500 மீட்டர் சுற்றளவில் மணல் அள்ளக் கூடாது. ஆனால், இங்கோ, எல்லா விதத்திலும் மணல் கொள்ளையர்களுக்கு சட்டம் வளைந்துள்ளது. மணல் கொள்ளையால் ஆறுகள் வறண்டு, நகரத்தில் உள்ள மக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கூட தண்ணீர் கிடைக்காத அவலம்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் தென் குச்சிப்பாளையம்,  திருப்பாச்சனூர் ஆகிய  இடங்களில் தான் மணல் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், குவாரி உரிமையாளர்கள் இந்த இடங்களில் அள்ளுவதுடன் அனுமதி இல்லாமல் மேலும் 10 இடங்களில் குவாரி அமைத்து மணல் அள்ளி வருகின்றனர்.
  • லாரியில் ஒரு லோடு மணல் ஏற்றினால் இரண்டு யூனிட் மணல் 600 ரூபாய். அதற்கு வரியாக 26 ரூபாய் செலுத்த வேண்டும். 626 ரூபாய் கொடுத்து ஒரு லோடு மணல் ஏற்றி சென்று உள்ளூர் மக்களுக்கு 100 ரூபாய் கூடுதலாக லாபம் வைத்து விற்றால் பரவாயில்லை. ஆனால், மணலை எங்காவது சேமித்து வைத்து கேரளாவுக்கும்,கர்நாடகத்துக்கும் சென்னைக்கும் கொண்டு சென்று விற்கிறார்கள். தினமும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2000 லாரிகளில் மணல் செல்லுகிறது. 626 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் மணல் 15,000 ரூபாய்க்கும்,  20,000 ரூபாய்க்கும் விற்கப்படுவது கொள்ளையில்லாமல் வேறு என்ன?
பெண்ணையாறு மணல் கொள்ளை
மணல் குவியல்

கண்ணை விற்று சித்திரமா? மண்ணை விற்று முன்னேற்றமா?

விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணையாற்றை நம்பி மூன்று போகம் விவசாயம் செய்த விவசாயிகளின் எதிர்காலம் மானம் பார்த்த விவசாயமாக மாறும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது. காரணம் பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.

இதே விஷயத்தை அம்பலப்படுத்தி எமது அமைப்பு சார்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு துண்டு பிரசுரம் குவாரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டது. அந்த பிரசாரத்தின் போது ஒரு சிலர் தவிர அனைவரும் மௌனம் காத்தார்கள். காரணம் அவர்களுடைய வாயை மணல் கொள்ளையர்கள் பணத்தின் மூலம் பூட்டி வைத்திருந்தார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது. சிலர் நம்முடைய பிரச்சாரத்தை கொச்சைப் படுத்தினார்கள், அதாவது “நோட்டீஸ் போடுவிங்க அப்புறம் குவாரிக்காரன் பணம் கொடுத்ததும் கண்டுக்காம போய்விடுவிங்க” எனச் சொன்னார்கள்.

விழுப்புரம் மணல் கொள்ளை - வி.வி.மு பிரச்சாரம்
சமூக விரோத செயல்களில் ஈடுபடாத பெரும்பான்மை மக்களிடம் நிதிபெற்று மக்களுடைய பாதிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடக்கூடிய இயக்கம் தான் வி.வி.மு

இவர்கள் நினைப்பதை போல் எல்லா கட்சிகளும் இதை ஒரு தொழிலாக செய்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் விவசாயிகள் விடுதலை முன்னணி ஒரு சிலர் நினைப்பதை போல மக்கள் எதிரிகளிடம் காசு வாங்கி கட்சி நடத்தும் இயக்கம் அல்ல. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபடாத பெரும்பான்மை மக்களிடம் நிதிபெற்று மக்களுடைய பாதிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடக்கூடிய இயக்கம் தான் வி.வி.மு மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்.

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்!

மணல் கொள்ளையர்களுக்கு குவாரியை சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை பொங்கி வழிகிறதாம். குறிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் பாழடைந்த கோவிலை லட்சக்கணக்கில் செலவு செய்து பளபளக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரை தத்து எடுத்து கொண்டு தினமும் அவருக்கு ரூபாய் 300 கொடுத்து பராமரித்து வருகிறார்கள். லாரி உரிமையாளர்களுக்கு அன்றாட செலவுக்காக தினமும் ரூபாய் 1000 கொடுத்து வருகிறார்கள். சில நேரங்களில் வசதி படைத்த லாரி உரிமையாளர்களே இந்த பணத்தை சுருட்டிக்கொள்வதும்  உண்டு. அதுமட்டுமல்லாமல் வார்டு கவுன்சிலர் , ஊராட்சி மன்ற தலைவர்,  சேர்மன்,  மாவட்ட கவுன்சிலர்,  மற்றும் அந்த பகுதியல் இயங்கும் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5,000 தொடங்கி ரூபாய் 50,000 வரை பணம் கொடுத்து அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆளும் ஆண்டவனாக ( மக்கள் மொழியில்) மணல்கொள்ளையர்கள்  அரசாட்சி செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் பெண்ணையாறு மணல் கொள்ளை
அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆளும் ஆண்டவனாக ( மக்கள் மொழியில்) மணல்கொள்ளையர்கள் அரசாட்சி செய்து வருகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் மேலோட்டமாக பார்த்தாலே மிகப்பெரிய மோசடி என்பதை புரிந்து கொள்ள முடியும். மணல் கொள்ளையர்களுக்கு  நம் மீது ஏன் இவ்வளவு பாசம்? அதன் பின்புலத்தை பார்ப்போம்.

மணல் என்பது இன்றைக்கு விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதை பயன்படுத்தி கொண்டு அரசாங்கத்திடம் 3 யூனிட்டுக்கு ரசீது பெற்றுக்கொண்டு 7 யூனிட் மணல் எடுத்துக்கொள்வது. அதற்கு ரசீது போடும் அதிகாரிகளுக்கு தினமும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் என கீழ்நிலை அதிகாரிகள் தொடங்கி உயர்நிலை அதிகாரிகள் வரை பணப்பரிமாற்ற வேலை நடக்கிறது. இதன் விசுவாசமாக அனுமதி  இல்லாத இடங்களில் எல்லாம் மணல் அள்ளுவது என்ற சட்டவிரோதமான வேலைகள் நடந்து வருகின்றது. மேலும் சட்டப்படி ஒரு மீட்டர் மணல் எடுப்பதை தாண்டி 5 மீட்டர் வரை மணல் எடுக்கும் விதி மீறல்களும் நடந்து வருகிறது.

மணல் கொள்ளையால் எதிர்கொள்ளும் அபாயங்கள்!

மணல் அள்ளுவதினால் ஏற்படும் அபாயத்தை பற்றி நாம் மக்களிடம் விளக்கும் போது சிலர் மேதாவி போல் பேசுகிறார்கள். குறிப்பாக மணல் எடுத்தால் தண்ணீர் வரும்போது சமநிலைக்கு வந்து விடும் என விளக்கம் அளிக்கின்றனர். மலை தொடங்கி கடல் வரை மணல் முழுவதும் சுரண்டிய நிலையில் சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல.   அவர்களை மணல் கொள்ளையர்களின் காசு அப்படி பேச வைக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

pennaiyaru-river-sand-mafia-vivimu-campaign-04இப்படி அதள பாதாளம் வரை மணல் அள்ளப்படுவதால் மிகப்பெரிய அபாயத்தை நாம் சந்திக்க போகிறோம். குறிப்பாக குடிக்க தண்ணீர் கிடைக்காது. நிலத்தடி நீர் வற்றி விவசாயம் அழியும் இதன் காரணமாக ஆடு, மாடு தொடங்கி மனித ஜீவன் வரை செத்து மடிவதும் ஆற்றை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் வரை இலகுவாகி வீடுகள் இடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை உடனடியாக உணர்ந்து இருக்கின்ற நாம் மணலை பாதுகாக்கின்ற வகையில்,  அத்தியூர், வேலியம்பாக்கம், காவனூர் போன்ற பகுதிகளில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த சாதி, மதம், கட்சி, ஊர் என்ற பாகுபாட்டை கடந்து ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் உறுதியாக தடுத்து நிறுத்த முடியும். எடுத்துக்காட்டாக, விருத்தாசலம் பகுதியில் வெள்ளாற்று மணல் கொள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போராடி குறிப்பாக இரவு முழுக்க போராடி குவாரியை இதுவரை செயல்படாமல் தடுத்து வருகின்றனர். அதேபோல் நாமும் ஒரு புது அமைப்பை தொடங்கி தொடர்ந்து போராடுவோம். அதன் மூலம் மண் வளம் மற்றும் நீர் ஆதாரத்தை பாதுகாப்போம்.

பெண்ணையாறு மணல் கொள்ளை
மண் வளம் மற்றும் நீர் ஆதாரத்தை பாதுகாப்போம்.

தமிழக அரசே!

  • 1 மீட்டர் மணல் எடுக்க வேண்டும் என்ற அரசாணை இருந்தும் ஐந்துக்கும் மேற்பட்ட மீட்டர் ஆழம் எடுப்பதை உடனடியாக தடுத்தது நிறுத்து!
  • மூன்று யூனிட் ரசீது பெற்று  ஏழு யூனிட் வரை மணல் அள்ளி செல்லும் கொள்ளை மட்டுமல்லாமல், அதிகாரிகள் துணையோடு அந்த ஒரே ரசீதை பயன்படுத்தி  நாள் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட லோடுகளை ஏற்றி கொள்ளை லாபம் அடிக்கும் மணல் கொள்ளையர்களையும், துணை போகும் அதிகாரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்! சிறையில் அடை!
பெண்ணையாறு மணல் கொள்ளை
கொள்ளை லாபம் அடிக்கும் மணல் கொள்ளையர்களையும், துணை போகும் அதிகாரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்! சிறையில் அடை!

இவண்…

விவசாயிகள் விடுதலை முன்னணி
விழுப்புரம் மாவட்டம்.
தொடர்புக்கு
; 96555 87276