privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்திருவண்ணாமலை பாலியல் வன்முறை - HRPC ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை பாலியல் வன்முறை – HRPC ஆர்ப்பாட்டம்

-

திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 29-12-2014 அன்று மாலை மணி 6.30 அளவில் டியுசன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அஸ்வின், வினோத் என்ற இரண்டு பொறுக்கிகள் கத்திமுனையில் ஆட்டோவில் கடத்திசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அம்மாணவியின் வீட்டின் அருகேயே விட்டுவிட்டு இதை வெளியில் சொன்னால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். இதைக் கண்டித்தும் இந்த கிரிமினல்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில்  13.01.2015 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

thiruvannamalai-student-rape-5இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர்.சரவணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்

“2012 -ம் ஆண்டு இறுதியில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு அதற்கு எதிராக நாடுமுழுக்க மக்கள் போராடிகொண்டிருந்தபோது டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் ‘ஹோலிமேன்’ என்ற விழாவில் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் வழக்கறிஞர்கள் முன்னிலையிலேயே அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனத்தை நடத்தி கொண்டிருந்தவர்கள் தான் நீதிபதிகள். திண்டுக்கல் ரீட்டா, சிவகாசி ஜெயலட்சுமி ஆகியோர் உட்பட பல பெண்கள் போலிசாரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளதை எடுத்துக்கூறி பெண்களை பாதுகாக்க வேண்டிய போலிசும், நீதிமன்றமும் பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது குற்றவாளிகளிடமே சென்று நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்காமல் வீதிக்கு வீதி மக்கள் பாதுகாப்பு கமிட்டியை கட்டியமைப்பதன் மூலமாகத்தான் நமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் .

அவரை தொடர்ந்து  AITUC கவுரவத்தலைவர் வே.முத்தையன்,  வழக்கறிஞர் மு.ஜெயபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித்தொடர்பாளர் சாரோன்.சௌந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆ.சக்திவேல், மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையினுடைய வழக்கறிஞர் சு.கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுச்சேரி மாநில புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர்.லோகநாதனும், மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜூவும் சிறப்புரையாற்றினர்.

 

thiruvannamalai-student-rape-4

வழக்கறிஞர் முத்தையன் கண்டன உரையாற்றுகையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து,பாலியல் வன்முறைக்கு அரசுதான் முதல் குற்றவாளி. நாட்டை ஆளும் கட்சிகள் தான் காரணம். இவர்களை தூக்கி எறிந்துவிட்டு கம்யூனிச அரசமைப்பை நிறுவ வேண்டும்’ என்று வலியுறுத்தியும் பேசினார்.

வழக்கறிஞர் சாரோன் சௌந்தர் பேசுகையில் “ஓட்டுக்கட்சிகள் ரவுடிகளை அடியாட்களாக பயன்படுத்திக் கொண்டும், அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டால் காப்பாற்றிக்கொண்டும் அவர்களை கிரிமினல்களாகவே வளர்க்கின்றனர். அப்படிப்பட்ட ரவுடிகளை சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், தேவைப்பட்டால் அவர்கள் வழியிலேயும் சென்று எதிர்கொள்ளத் தயாராகவேண்டும். அதற்கு வீதிக்கு வீதி இளைஞர் கமிட்டிகளை கட்டவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ஆ.சக்திவேல் பேசுகையில் “பழங்குடி பெண்களையும், இரவில் புகார் தெரிவிக்க வரும் பெண்களையும் போலிசே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குகிறது” என்பதை சுட்டிக் காட்டினார். இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ , “181 என்ற எண்ணுக்கு அழையுங்கள் பெண்களை காப்பாற்ற” என்று கூறுவதை கண்டித்தார். ஆபத்து நேரத்தில் தன்னை காப்பற்றிக்கொள்ள பார்ப்பாளா? அல்லது போன் செய்து கொண்டிருப்பாளா ? இது அரசின், ஆளும் வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது, ஆளும் வர்க்கம் சீரழிந்து விட்டது என்பதை காட்டுகிறது” என்று அம்பலப்படுத்தினார்.

thiruvannamalai-student-rape-1

வழக்கறிஞர் கண்ணன் பேசுகையில் “பாலியல் வன்முறையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல் பட்ட வழக்கறிஞர் D.குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் கொடுக்க தற்போதுள்ள மாவட்ட காவல் துறை எஸ்.பியை சந்திக்க முயற்சித்த போது அவரை நேரில் பார்க்க முடியவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்த பிறகுதான் கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்துள்ளனர். ”என்றார்.

சிறப்புரையாற்றிய புதுச்சேரி மாநில புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர்.லோகநாதன் பாலியல் வன்முறைக்கு காரணமான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையை அம்பலப்படுத்தியும், அந்நிய முதலீட்டால் பெண் தொழிலாளிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றும், பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று கூறுவோருக்கு உரைக்கும் விதமாக 2 வயது குழந்தையும், 60 வயது பாட்டியும் எந்த ஆபாச உடைகளை அணிகிறார்கள். அவர்கள் ஏன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் ? இதற்கெல்லாம் காரணம் தனியார்மய உலகமய கொள்கைதான் என்றும், தனியார்மய கொள்கைக்கு எதிராக போராடாமல் பெண்களுக்கு விடிவு இல்லை என்றார் .

thiruvannamalai-student-rape-2

அடுத்து சிறப்புரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழகக்கறிஞர் ராஜூ பேசுகையில் “பாலியல் குற்றம் செய்தவர்களை தூக்கில் போடணும் என்கிறார்கள் தொக்கில் போட்டால் மீண்டும் குற்றங்கள் நடக்காதா ? அல்லது நடக்கவில்லையா ? இதற்கு ஆணிவேர் எது? உலகமயமாக்க கொள்கைதானே? அதை முறியடிக்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கத்திமுனையில் கடத்திசென்று பலாத்காரம் செய்து பின்னர் அப்பெண்ணின் வீட்டின் அருகிலேயே விட்டுவிட்டு போகமுடியம் என்றால் இங்கு இருக்கும் கலெக்டர், மாவட்ட காவல் துறை உட்பட ஆளும் வர்க்கங்கள் தோற்றுப்போய்விட்டது என்றுதானே அர்த்தம்.  பெண்களை இழிவு படுத்தும், ஆணாதிக்கத்தை பரப்பும் இந்து மதத்தை திணிக்கவே ஆளும் வர்க்கங்களும்,அரசும் துடிக்கின்றன. எனவே இவர்களை நம்பாமல், வீதிக்கு வீதி மக்கள் பாதுகாப்பு குழுவை கட்டியமைக்காமல் தீர்வு காண முடியாது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் இணைந்து இதற்கு எதிராக போராடுவோம் வாருங்கள் ” என்று அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக, மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையின் உறுப்பினர் தோழர்.சுந்தர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

thiruvannamalai-student-rape-3பிரச்சார அனுபவங்கள்

தோழர்கள் பேருந்தில் பிரச்சாரம் செய்தபோது ஒரு மக்காச்சோள வியாபாரி குறுக்கிட்டார் அப்போது ஒரு பெண்மணி ‘எங்கள் பிரச்சினைக்காக எந்த கட்சிக்காரனும், அமைப்பும் பேசவில்லை. இவர்கள் பேசுகிறார்கள் குறுக்கிடாதே. உன் வியாபாரத்தை பிறகு செய்’ என்று சொல்லிவிட்டு நிதி கொடுத்தும் ஆதரித்தார் பெரும்பாலானவர்கள் அதரவு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மக்களின் கருத்து:

பிரகாஷ் என்பவர் “எனக்கு இந்த கூட்டம் நடப்பது பற்றி முன்னதாக தெரியாது. இந்த வழியாக போகும்போது நின்று கவனித்தேன். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சிறப்பாக பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வதுதான் சரி இந்த அரசு மக்களுக்கு எதிரானது என்றும், உங்களை போல்தான் போராடவேண்டும் என்றும் புரிந்துகொண்டேன்” என்றார்.

ஒரு பெண் வியாபாரி, “நீங்கள் சொல்வதுதான் சரி இனிமேல் இனிமேல் இந்த பிரச்சனைகளை தீர்க்க போலிசை நம்பாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள தயாராக வேண்டும். இந்த அரசை நம்பக்கூடாது” என்றார்.

ஆர்ப்பாட்ட முழக்கம்:

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறையை
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !

தூக்கில் போடு! தூக்கில் போடு!!
பத்தாம் வகுப்பு பெண்ணைக்கடத்தி
பாலியல் வன்முறையை செய்திட்ட
பொம்பள பொறுக்கிகள்
அஸ்வின், வினோத்தை
தூக்கில் போடு! தூக்கில் போடு!!

ஜாமீனில் விடாதே! ஜாமீனில் விடாதே !!
பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட
குற்றவாளிகள் மீது
குண்டர் தடுப்பு சட்டத்தில்
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!!

தமிழக அரசே! தமிழக அரசே !!
பெண்களை இழிவுபடுத்தும்
ஆபாச பத்திரிகைகளையும்
சினிமா விளம்பரங்களையும்
தடை செய்! தடை செய்!!

இளைஞர்களை சீரழிக்கின்ற
ஆபாச பத்திரிக்கைகள்
ஆபாச இணையங்கள்
நடத்திக்கொள்ள அனுமதித்து
கோடி கோடியாய் கொள்ளையடிக்க
முதலாளிக்கு காவல் நிக்குது
அரசாங்கம்! அரசாங்கம்!!

தமிழக அரசே! தமிழக அரசே!!
இழுத்து மூடு! இழுத்து மூடு !!
பாலியல் குற்றத்துக்கு
மூல காரணமான
டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடு! இழுத்து மூடு!!

சிதம்பரத்தில் பத்மினி
செஞ்சியில் ரீட்டா மேரி
திருகோவிலூரில் பழங்குடிப் பெண்கள்
வேலியாய் சொல்லப்படும்
போலிசே ஊரை மேய்ந்ததை
நாடே காறி துப்புது!
நாடே காறி துப்புது!!

விடிவு இல்லை! விடிவு இல்லை!!
உழைக்கும் பெண்கள் வீதியில் இறங்காமல்
கிரிமினல் ஆணாதிக்கத் திமிருக்கு
விடிவு இல்லை! விடிவு இல்லை!!

முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பெண்கள் மீதான வன்முறையைத் தூண்டும்
தனியார் மாயம், தாராளமயம்,
உலகமய கொள்கைகளை முறியடிப்போம்!

முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!!
பெண்கள் மீதான
பாலியல் வன்முறைக்கும்
கிரிமினல் ஆணாதிக்கத்துக்கும்
முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!!

notice-2
notice-1

தகவல்:

திருவண்ணாமலை மாவட்ட கிளை
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க