Monday, August 15, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி

நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி

-

ல்வி அறிவில் முன்னேறிய மாவட்டமாக விளம்பரப்படுத்தப்படும் குமரி மாவட்டத்தின் தலைநகரிலேயே தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இதை முன்நின்று அரங்கேற்றுவது பி.ஜே.பி. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்து ஆதிக்க சாதியினராக நம்பூதிரிகள், நாயர்களால் மேலாடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்ட நாடார்கள் (ஆண்களும், பெண்களும்) தான் இப்பொழுது அருந்ததிய மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர்.

அருந்ததியர் காலனி
அருந்ததியர் காலனி

இந்து மதத்தின் பெயரால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடி உரிமையை நிலைநாட்டிய நாடார் மக்களைச் சேர்ந்த சிலர்தான் இன்று அதே மண்ணில் இந்து மதத்தின் ஆட்சியை நிறுவ விரும்பும் பி.ஜே.பியுடன் சேர்ந்து அருந்ததியரை தீண்டத்தகாதவராக கூறி ஒடுக்குகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி இருளப்பபுரம். இங்கு அருந்ததியர் மக்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த அருந்ததியர் குடியிருப்பில் சுமார் 10 ஆண்டுகளாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இருளப்பபுரம் ஊர் இந்து நாடார்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஊர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு இருளப்பபுரம் ஊரைச் சேர்ந்த ஏழை நாடார் குடும்பத்தினர் ஒரு சிலர் அருந்ததியர் குடியிருப்பில் குடியேறுகின்றனர். அருந்ததியர்களுக்கு அரசு ஒதுக்கிய இடத்தை ஏனைய சமூகத்தினருக்கு விற்க கூடாது என்பது அரசு வகுத்துள்ள விதி.

அருந்ததியர் குடியிருப்பில் ஏழ்மை காரணமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் விற்க முன் வருகிறார்கள். இந்த விற்பனை சட்ட விரோதம் என்பதால் அருந்ததியர் காலனிக்குள் நிலம் விலை குறைவாகவே கிடைக்கும்.

இருளப்பபுரம் பகுதியில் வேறு எங்கும் நிலம் வாங்கும் அளவு பொருளாதார வசதி அற்ற இருளப்பபுரத்தை சார்ந்த ஏழை நாடார்கள் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், விலை மலிவாக கிடைக்கும் என்பதால் ஒவ்வொருவராக சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிப்படியாக அருந்ததியர் குடியிருப்பில் குடியேறுகின்றனர்.

பொருளாதாரத்தில் அருந்ததியர் மக்களுடன் எவ்விதத்திலும் இவர்கள் வேறுபடவில்லை. இருவருமே பெரும்பாலும் ஏழைக் கூலிகள்தான்.

அதே நேரம் தாங்கள் அருந்ததியரை விட மேல்சாதி என்ற எண்ணம் இவர்களிடமும் ஆழப் படிந்திருக்கிறது. அருந்ததியர் காலனிக்குள் குடியிருந்தால் எங்களையும் சக்கிலியன் என்றுதானே கருதுவார்கள் என்று கூறி வந்தனர் நாடார்கள். இதனால் அருந்ததியர் காலனியை மீனாட்சி நகராக மாற்ற உள்ளூர் பி.ஜே.பியினரின் உதவியால் முயற்சி நடக்கிறது.

3 ஆண்டுக்கு முன்னர் அருந்ததியர் காலனி என்று குறிப்பிட்டு அப்பகுதி மக்களால் நிறுவப்பட்ட பெயர் பலகை கருப்பு மை பூசியும், சேதப்படுத்தியும் அழிக்கப்படுகிறது. அருந்ததிய மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்து உறுதியாக தொடரவே பின் மீண்டும் பழைய பெயர் எழுதப்படுகிறது. ஆனால், அரசு நிறுவ வேண்டிய பெயர் பலகை நாடார் மற்றும் பி.ஜே.பியினரின் எதிர்ப்பால் நிறுவப்படாமல் இருந்தது.

அந்தப் பகுதியில் செயல்படும் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த திரு. குமரேசன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சதா ஆகியோரின் தொடர் நடவடிக்கையால் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் அரசு நிறுவ வேண்டிய பெயர்ப்பலகையை நிறுவ 05-01-2015-ம் தேதி மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பி வார்டு கவுன்சிலர் திருமதி சுதா ராதாகிருஷ்ணனும் அவரது கணவர் பி.ஜே.பியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரும் (இருவரும் நாடார்கள்) தனக்கு ஆதரவாக ஒரு சில இந்து நாடார்களை அழைத்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்துக்களுக்காகவே கட்சி நடத்தும் பி.ஜே.பியைச் சேர்ந்த கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர் தீண்டத்தாகத இந்துக்களாகவே தெரிகின்றனர். இதுதான் இந்து தர்மத்தின் யோக்கியதை அல்லது ஆன்மா.

இந்து நாடார்கள் குடியேறிய பின்புதான் பி.ஜே.பி கவுன்சிலர் அருந்ததியர் காலனிக்கு சாலை வசதி கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இதுநாள் வரை பொதுக்கழிப்பிடம் வேண்டும் என்று அருந்ததியர் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையைச் சேர்ந்த பெண் தாசில்தார் கட்டாயம் பெயர் பலகை வைத்தே தீர வேண்டும் என்று உறுதியாகக் கூறி விட்டார். காவல்துறையும் வேறு வழியின்றி ஒத்துழைத்தது. மேலும் அருந்ததியர் என்ற பெயரை எக்காரணம் கொண்டும் அகற்ற விட மாட்டோம். அருந்ததியர் என்ற அடையாளத்தை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும். என்று அம்மக்கள் உறுதியாக நின்றனர்.

பி.ஜே.பி இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? என்ற கேள்வியை மக்கள் எழுப்பவே சற்று பின் வாங்கியது கவுன்சிலர் தலைமையிலான கூட்டம். போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் நிறுவுவதில் ஆட்சேபணை இல்லை என்று வேறு வழியில்லாமல் நழுவினார்கள் கவுன்சிலரும், அவரது கணவரும். அருந்ததிய மக்களும் பெயர் பலகை நிறுவியே தீர வேண்டும் இல்லையேல் சாலை மறியல் செய்வோம் என்று உறுதியாக இருக்கவே ஒரு வழியாக அருந்ததியர் காலனி பெயர் பலகை நிறுவப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழக வழக்கறிஞர் சதா மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் அருள்மாறன் மற்றும் சிவராஜபூபதி, விடுதலை சிறுத்தை வழக்கறிஞர் கணேஷ், சி.பி.எம் வழக்கறிஞர் மரிய ஸ்டீபன், பி.எஸ்.பி வழக்கறிஞர் ஜவகர், தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சி வழக்கறிஞர் சக்தி ஆகியோர் பெயர் பலகை நடுவதற்கு அருந்ததியர் மக்களுடன் அன்றைய தினம் உறுதுணையாக நின்றனர்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
கன்னியாகுமரி மாவட்டக் கிளை

 1. “மேலும் அருந்ததியர் என்ற பெயரை எக்காரணம் கொண்டும் அகற்ற விட மாட்டோம். அருந்ததியர் என்ற அடையாளத்தை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்”. என்று அம்மக்கள் உறுதியாக நின்றனர்.

  இப்படி இருந்தால் எப்படி சாதி ஒழியும்.
  இந்த சாதி பெயர்கள் படிப்படியாக மறைந்தால் தானே
  எதிர் காலத்திலாவது நாம் மக்களோடு மக்களாகா ஒன்றாக முடியும்

  • நானும் இந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்று தான் வந்தேன். அதற்கு முன்னால் நீங்களே கேட்டு விட்டீர்கள். நாடார் சாதியினர் தம்மை விடத் தாழ்ந்த சாதியினராகிய அருந்ததியர் வாழும் குடியிருப்புகளில் (காரணம் எதுவாக இருந்தாலும்) நிலம் வாங்கி அவர்களின் பக்கத்தில் குடியேறுவது மட்டுமன்றி, சாதிப்பெயரில் ‘அருந்ததியர் காலனி’ என்றிருந்ததை மீனாட்சி காலனி என்று மாற்றியது சாதியொழிப்பை விரும்புகிற அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய செயல் அல்லவா? நாடார்கள் அங்கு குடியேறிய பின்னர், ‘அருந்ததியர் காலனி’ என்ற பெயர்ப்பலகையை நாடார் காலனி என்று மாற்றியிருந்தாலே தவிர, இதில் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது? அருந்ததியர்கள் அவர்களின் சாதி என்ன என்பதை மறந்து விடாமலிருக்க மட்டுமன்றி, அந்த வழியால் போகிற அந்நியர்களுக்கும் அங்குள்ளவர்கள் என்ன சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பறைசாற்றும் பெயர்ப்பலகையும் வேண்டும், சாதியும் ஒழிய வேண்டுமென்றால் சாதி எப்படி ஒழியும்?

   • மேலோட்டமாக பார்க்கும் போது வியாசனின் கேள்வியும் ககையின் ஆலோசனையும் சரியாகத்தான் படுகின்றன.
    அருந்ததியர்களின் தரப்பின் வாதங்கள் என்ன என்று நமக்குத் தெரிந்தால் நல்லது. பதிவில் இருக்கும் வாதம் //அருந்ததியர் என்ற அடையாளத்தை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்// என்பது. இது பல Pros and Cons ஐ அடிப்படையாக எடுத்த முடிவு என்பதை யூகிக்கலாம்.
    பெயர்ப்பலகையில் சாதிப்பெயர் மறையும் என்பது Pros.
    Cons என்ன என்ன என்று யோசிக்கும் போது பல வருகின்றன.

    1. அருந்ததியர்கள் இந்திய சமூகத்தின் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். மற்ற தலித் மக்களும் கூட இவர்களை சமத்துவமாக நடத்துவதில்லை. Reservation share லும் கூட இவர்களால் தங்கள் பங்கை பெற முடியாமல் இருக்கிறது. உள் ஒதுக்கீடு கேட்டு நீண்ட காலம் போராடி சில ஆண்டுகளாக கல்லூரிக் கல்வியில் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. வேலைவாய்ப்பில் இன்னும் அந்த நிலை வரவில்லை என்றே நினைக்கிறேன். வரும் காலத்தில் அது நடக்கலாம். மற்ற தலித் மக்கள் சிலர் இதற்கு எதிராக இருக்கிறார்கள். வழக்குகள் கூட போட்டிருக்கிறார்கள். இன்னிலையில் இடத்தின் பெயர் மாற்றம் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் கூட சிக்கலை ஏற்படுத்தலாம். இப்படித்தான் நமது அதிகார வர்க்கம் இருக்கிறது. உன்மையான ஆதிவாசிகளுக்கும் தலித் மக்களையும் சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் அலைய விடுவார்கள். விசாரனை செய்வோம் என்று வரமாட்டார்கள். ‘அருந்ததியர் காலனி’யில் வசிப்பவர்களை அவ்வளவாக அலைய வைக்கமுடியாது.
    2. அங்கே வசிக்க வந்திருக்கும் நாடார்களும் அருந்ததியர்களிடம் சமத்துவம் பேணும் நிலையில் இல்லை. பெயர் மாற்றம் செய்யப்பட்டால், அருந்ததியர்களிடமிருந்து நிலம் கைமாற்றப்படுவது மேலும் அதிகமாகும். வன்முறையின் மூலம் கூட சில கைமாறுதல்கள் ஏற்படலாம். சில ஆண்டுகளில் அருந்ததியர்கள் அங்கே சிறுபான்மையாக்கப்பட்டு தற்போதைய நிலையை விட அதிகமாக தீண்டாமை போன்ற வன்கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்.
    3. பெயர்ப்பலகையில் சாதி இல்லாவிட்டால் இந்த சமூகம் அவர்களை சமத்துவமாக பார்க்க ஆரம்பித்து விடாது. புதிய நகர் வாசி என்றாலும் நாடாரா அருந்ததியரா என்று கேட்டுத்தான் அதன்படிதான் நடந்து கொள்வார்கள்.
    4. Etc. More points later as per need.

  • அருந்ததியர் அங்கு பெரும்பான்மையாக அங்கு இருப்பதால் அருந்ததியர் காலனி என்பதற்கு பதில் அந்த காலனிக்கு அருந்ததியனரே வேறொரு பெயர் வைக்கலாம். அவர்களில் சிறந்து விளங்கிய மனிதர்களின் பெயரை வைக்கலாம்.

   அனைவரும் சாதிப்பெயரை எல்லா இடங்களிலும் தவிர்ப்பது நல்லது.
   பிராமணாள் ஓட்டல், ஐயங்கார் பேக்கரி, தேவர் மெஸ் போன்ற சாதிப்பெயர் பலகைகள் இல்லாமலிருந்தால் நல்லது.

 2. தெற்க்கே :
  ஆதிக்க நாடார் சாதியின் அராஜகம் + ஹந்து மதவாத பா ஜ க = சாதிய ,மதவாத கூட்டணி

  மேற்க்கே
  ஆதிக்க வெள்ளாள கவுண்டர் சாதியின் அராஜகம் + ஹந்து மதவாத பா ஜ க = சாதிய ,மதவாத கூட்டணி

 3. நாடார் இன மக்கள் மார்பு கச்சய்க்கு பார்பனரிடம் வரி கட்டியது எல்லாம் மரந்து போய் விட்டனர என்ரெ கருதுகிரேன்.

 4. சாதி ஒழிய வேண்டும் என்றா மீனாட்சி நகர் என்று பெயர் மாற்றம் செய்ய நாடார்கள் முயற்சி செய்கிறார்கள் ? அருந்ததியர் என்ற பெயரை அவமானமாக கருதுவதால்தான் இந்த முயற்சி !
  அருந்ததியர் என்ற பெயர் எங்களை இழிவுபடுத்தவில்லை! மாறாக எங்களிடம் நடந்தகொள்ளும்விதம் தான் எங்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்கின்றனர் !

 5. சாதி ஒழிய வேண்டும் என்றா மீனாட்சி நகர் என்று பெயர் மாற்றம் செய்ய நாடார்கள் முயற்சி செய்கிறார்கள் ? அருந்ததியர் என்ற பெயரை அவமானமாக கருதுவதால்தான் இந்த முயற்சி !
  அருந்ததியர் என்ற பெயர் எங்களை இழிவுபடுத்தவில்லை! மாறாக நாடார்கள் எங்களிடம் நடந்தகொள்ளும்விதம் தான் எங்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்கின்றனர் அருந்ததியர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க