Saturday, April 17, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் - பாஜக சியர்ஸ்

டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்

-

raman-footwear-rulesகுஜராத் கலவர சாதனைக்காக உலகப் ‘புகழ்’ பெற்றிருந்த மோடிக்கு விசா கொடுக்காமல் இருந்து வந்த அமெரிக்கா பின்பு ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் யாரையும் வரக்கூடாதென்று சொல்ல மாட்டோம் என சுபம் பாடியது. ஆனந்தக் கண்ணீர் தளும்பமோடியும் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டீ சாப்பிட்டு, என்ஆர்ஐ-க்கள் மத்தியில் சமோசாவும் முழுங்கிவிட்டு வந்து விட்டார். மற்றவரிடமெல்லாம் சவுண்டும், சண்டமாருதமும் செய்யும் பாஜக கூட்டம் அமெரிக்கா என்றால் மட்டும் ஒரு அடிமைக்குரிய லாவகத்துடன் பேசும்.

ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவிற்கு கூறு போட்டு விற்று வந்த மன்மோகன் சிங்கை மவுன சிங் என்று கேலி செய்த பாஜக இன்று மன்மோகனே வெட்கப்படும் அளவுக்கு அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஒபாமாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச ஹாட் லைன், அமெரிக்க ஆயுதங்களை இறக்குமதி செய்வது, அமெரிக்க படைகளுடன் கூட்டு பயிற்சி, முத்தாய்ப்பாக அணுசக்தி ஒப்பந்தம் என்று கைப்பிள்ளையின் சாதனயை அடுக்குகிறார்கள். அமெரிக்க அதிபருடன் ஹாட்லைனில் பேசுவதில் என்ன சாதனை? “என்னய்யா வால்மார்ட் வந்து நாளாச்சு இன்னும் சில்லறை வணிகத்தில் அனுமதிக்காம என்ன பண்றீங்கன்னு” ஒபாமா சத்தம் போடுவதற்கும் மோடி “சரி ஜி உடன் செய்கிறோம்” என்று சரணம் பாடுவது போக இந்த ஹாட் லைனில் குஜராத் லட்டு செய்வது எப்படி என்றா பேசுவார்கள்?

தொழில் நுட்பம், கூட்டுத் தயாரிப்பு என்ற முறையில் அமெரிக்க பாதுகாப்பு தளவாட முதலாளிகள் இந்திய மக்கள் பணத்தை எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டுவார்கள்? மேக் இன் இந்தியா, இலாபம் பை அமெரிக்கா என்று கண்டிசன் அப்ளைதான் போடவேண்டும். பிறகு கூட்டுப் பயிற்சி. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க இராணுவத்தை பலப்படுத்தவே இந்த பயிற்சி. சீனாவை அச்சுறுத்தும் வண்ணம் ஏற்கனவே கொரியா, ஜப்பானுடன் கூட்டு பயிற்சி செய்யும் அமெரிக்கா இப்போது கிரமமாக இந்தியாவுடனும் செய்யும்.

கடைசியில் அணுசக்தி ஒப்பந்தம். இனி அமெரிக்க முதலாளிகள் காலாவதியான மற்றும் கடும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு சக்தி உலைகளை இந்திய மக்களின் தலையில் கட்டுவாரகள். பல ஆயிரம் கோடி ரூபாயை இதற்கென நாம் கட்ட வேண்டியிருக்கும். விபத்து நடந்தால் அதுவும் இந்திய அரசின் பொறுப்பிலேயே இருக்கும் என்று முடித்திருப்பார்கள். இது தொடர்பாக எதிர்ப்பு வந்த போது வந்த பேச்சு எதுவும் இப்போது காணோம். இந்த டீலை இந்த விசயத்தில் எப்படி முடித்தார்கள் என்பதை எவரும் அறிவிக்கவில்லை.

இப்படி பாரத மாதாவை முழுதாக தூக்கி அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு,  ஓபாமா விஜயத்தை மோடியின் மாபெரும் சாதனை என்று கூப்பாடு போடுவதை பார்த்தால் எஜமானால் கொல்லப்பட்ட அடிமையின் எழவு வீட்டில் வந்து போகும் எஜமானின் விஜயத்தை அடிமைகளின் குடும்பம் கொண்டாடுவதை போல இருக்கிறது.

இப்படி புதுதில்லியில் அடிமைத்தனத்தை சிலேகிக்கும் கூட்டம் பெங்களூருவில் ஊழலை ஆராதித்திருக்கிறது.

ஹாராஷ்டிரா, அரியானா வரிசையில் தமிழகத்தை கபளீகரம் செய்ய யோக்கியனின் செண்ட் அடித்துக் கொண்டு வருகிறது பா.ஜ.க. ஊழல் வழக்கில் வீழ்ந்து கிடக்கும் அதிமுகவையோ இல்லை ஜெயாவையோ பெயரிட்டு சொல்லக் கூட பயப்படும் இந்த வீராதி வீரர்கள் தங்களை ஊழல் எதிர்ப்பு போராளிகளாக காட்டிக் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்திப்பதற்கு மட்டும் ஜெயா அருள் பாலித்திருக்கிறார்.  அந்த வகையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வந்த வீராங்கனையை சந்தித்து ஊழலுக்கு ஜே போட்ட யோக்கியர்கள் இவர்கள் மட்டுமே.

மேனியில் புனுகையும், தகரப்பொடியையும் பூசிக் கொண்டு வந்தாலும் வாயிலிருந்து வீசும் கஞ்சா நெடியை மறைக்க முடியுமா? பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் யோக்கியதையை புகழ் மணக்கச் செய்து வருகிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.

தென்னிந்தியாவில் முதன்முறையாக 2008-ம் வருடம் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை பெற்றிருந்த பா.ஜ.க, இந்தியா கண்டிராத வெட்கக்கேடான ஒரு கர்நாடகா ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது. அதற்கு ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்று பெயர். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்பது மாற்றுக் கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பது. பிறகு மீண்டும் அவர்களை பா.ஜ.க சார்பில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்யும் கீழ்மையான அரசியல் விளையாட்டு. பா.ஜ.க.வின் வலையில் விழுந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடி ரூபாய் தரப்பட்டது. இதன்மூலம் சட்டசபையில் தனது அறுதி பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.க. இந்த ‘ஆபரேஷன் லோட்டஸுக்கு’ புரவலாக செயல்பட்டவர்கள் ரெட்டி சகோதரர்கள் என்ற சுரங்க மாஃபியா கும்பல்.

ஜனார்தன் ரெட்டி சிறைமீளும் காட்சி
சிறையிலிருந்து ஜனார்தன் ரெட்டி வெளியேறும் கோலாகலம்

ரெட்டி சகோதரர்கள் மொத்தம் மூவர். கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர். நான்காவதாக ஸ்ரீராமலு என்பவர் இணைந்தார். ஸ்ரீராமலு இவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கூட்டுக் கொள்ளையர். ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகன்களாக பிறந்த ரெட்டி சகோதரர்கள் முதலில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினர். 1999-ம் வருடம் பெல்லாரியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட சுஸ்மா ஸ்வராஜை ஆதரித்தனர். கைமாறாக பெல்லாரி மாவட்ட பா.ஜ.க தலைவரானார், கருணாகர ரெட்டி.

திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ரெட்டி சகோதரர்கள். அரசியலுடன் தொழிலையும் கைகோர்த்து வளர்த்தார்கள். ஆந்திராவின் ஒபுலப்புரம் சுரங்கங்கள் 2000-ம் வருடம் இவர்கள் கைக்கு வந்தன. ஓபுலப்புரம் சுரங்கங்கள் ஓபுலப்புரத்தை சேர்ந்த ராகவ ரெட்டி என்பவருக்கு சொந்தமானது. அவருடைய சுரங்கங்களை முதலில் குத்தகைக்கு எடுத்தனர், ரெட்டி சகோதரர்கள். இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து பெரிய லாபம் கிடைக்காத போது அவற்றை வேறோரு நபருக்கு சிலகாலம் உள்குத்தகை விட்டனர்.ஒரு மெட்ரிக் டன் இரும்புத் தாதின் விலை 200 ரூபாயிலிருந்து 2700 ரூபாயாக உயர்ந்த போது மறுபடியும் மீட்டனர். அதன் பிறகு பெருத்த லாபத்தை சம்பாதிக்கத் தொடங்கினர், ரெட்டி சகோதரர்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களை கடந்து பெல்லாரி வரையிலும் சுரங்க நிறுவனங்களை விரிவாக்கினர். சுரங்க நிறுவனங்களிலிருந்து ஒரு நாளின் வருமானம் 6 கோடியாக வரத் தொடங்கியது. ஆந்திராவின் முதலமைச்சராக அப்போதிருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடன் கள்ளக் கூட்டு வைத்து தமது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினர்.

‘கிளாஷ் ஆஃப் க்ளேன்ஸ்’ இணைய விளையாட்டில் மற்றவரின் செல்வங்களை கவர்ந்து வருவது போல, அடுத்தவர்களின் சுரங்கங்களுக்கு தமது அடியாள் படையை அனுப்பி அவர்களின் இரும்புத் தாதுகளை கொள்ளையிட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டனர். மேலும், சில சுரங்க நிறுவனங்களின் உரிமையாளர்களை மிரட்டி தம்முடன் இணைத்தும் அடாவடி செய்தனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநில அரசுகளை கைக்குள் போட்டுக் கொண்டு பந்தய ஆட்டம் போட்டனர்.

பட்டாபிராம ராவ்
சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராம ராவ்

ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லை வழியில் எங்கெங்கு இரும்புத் தாதுகள் கிடைக்கின்றனவோ அங்கிருந்து அவற்றை வெட்டி எடுத்து ஓபுலப்புரம் சுரங்கத்தில் பதுக்கி வைத்ததை செயற்கைக்கோள் படங்கள் வெளிக்கொணர்ந்தன. ‘இந்தியாவில் வேறெந்த துறையிலும் நடைபெற்ற ஊழலை விடவும் இது அதிகமானது’ என்கிறார், லோக் ஆயுக்தா நீதிபதியாக செயல்பட்ட சந்தோஷ் ஹெக்டே.

எதிர்ப்புக் குரல்களை அடக்கியும், நசுக்கியும் வந்த ரெட்டிகளின் கழுத்தில் மணியை கட்டியவர் அவர்களிடம் பணிபுரிந்த ஆஞ்சனேயா என்பவர். பெல்லாரியை சேர்ந்த ஆஞ்சனேயா, ஓபுலப்புரம் சுரங்க நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் நடவடிக்கைகள் மீது தான் திரட்டிய தகவல்கள் அனைத்தையும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கினார். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக ரெட்டி சகோதரர்களின் பல்வேறு முறைகேடுகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தன.

2011- வருடம் வெளிவந்த லோக் ஆயுக்தா அறிக்கையின் படி 2.98 கோடி மெட்ரிக் டன் இரும்புத் தாது முறைகேடான முறையில் வெட்டப்பட்து. இதன் மூலம் அரசுக்கு ரூ 16,500 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரும்புத் தாதுவை வெட்டிக் கடத்தியதில் ரெட்டி சகோதரர்கள் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

தமது கொள்ளையை சுமூகமாக கொண்டு செல்ல ‘இடரில்லா ஒழுங்கு முறையை’ ( zero risk system ) ஏற்படுத்தி இருந்தனர். இதனை எந்த அளவுக்கு கச்சிதமாக செயல்படுத்தியுள்ளனர் என்பதற்கு உதாரணமாக 2011-ம் வருடம் மத்தியப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி 2012-ம் வருடம் பிணையில் விடுதலையாக சி.பி.ஐ நீதிபதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சம்பவம் எடுத்துரைக்கிறது, ஆந்திர உயர்நீதிமன்றம். லஞ்சம் பெற்ற சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமராவை கைது செய்ய உத்தரவிட்டது. ஜனார்த்தன ரெட்டி பிணையையும் ரத்து செய்தது. அன்று தாமதப்பட்ட விடுதலை இந்த 23-ந் தேதி ஜனார்த்தன ரெட்டிக்கு கைகூடியுள்ளது. ரெட்டிகளின் பணத்தில் தற்போது குளிப்பாட்டப்பட்டவர்கள் யார்யார் என்று தெரியவில்லை.

ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு போயஸ் தோட்டத்தில் முடங்கிக் கிடக்கும் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக அரசு வழக்கறிஞரை தான் கைக்குள் போட்டு அவருக்கு அபராதம் பெற்றுத் தரத் தான் முடிந்தது. பா.ஜ.க.வில் சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.

ஊழல் ராணி ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பாஜக நிறுத்தியிருக்கும் வேட்பாளரே ஐந்தாறு சுயநிதிக் கல்லூரிகள் முதலாளி என்பதிலிருந்து இவர்களின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. கர்நாடகாவிலிருந்து ஊழல் முடைநாற்றம் வீசும் காவி கும்பலை தமிழகத்தில் நாம் அனுமதிக்க போகிறோமா?

–  சம்புகன்

இது தொடர்பான செய்திகள்

  1. யப்பா சுப்பு கொஞ்சம் நிறுத்துறியா… சுரங்கங்களின் மூலம் அடித்த ஆயிரக்கணக்கான கோடி ஊழலை நியாய படுத்த முயற்சி செய்யாதீர்கள்… மாறன் செய்தது குற்றம்தான்… ஆனால் ஒரு குற்றம் இன்னொரு குற்றத்தை நியாயபடுத்தாது… நியாயபடுத்தவும் கூடாது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க