Tuesday, June 28, 2022
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் சி.ஐ.டி.யு துரோகம் : பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளிகள் !

சி.ஐ.டி.யு துரோகம் : பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளிகள் !

-

துரோகத்திற்கெதிராக கலகம் : சி.ஐ.டி.யு -விலிருந்து வெளியேறி  பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளர்கள்!

திருச்சி இரயில்வே குட்செட்டில் 23.1.2015 அன்று காலை அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை கண்டித்தும் சி.ஐ.டி.யு விலிருந்து வெளியேறி பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளர்களை வரவேற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலர் சுந்தர்ராசு தலைமை உரையாற்றி சி.ஐ.டி.யுவிலிருந்து விலகி பு.ஜ.தொ.மு வில் இணைந்த சுகுமார் செட் தொழிலாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டத்தலைவர் தோழர் காவிரிநாடன் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் சதித்தனத்தையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை இந்திய பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடவே ! என்பதை விளக்கியும் பேசினார்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் காவிரிநாடன்

பு.ஜ.தொ.மு வில் இணைந்த சுகுமார் செட் நிர்வாகி தோழர் தனக்கொடி பேசும்போது…

“நாங்கள் பு.ஜ.தொ.மு- வில் இணைந்ததாக சொல்றீங்க. அப்படியல்ல நாங்கள் CITU-வின் வஞ்சகத்தால… எங்க வேலை உரிமையைப் பறிக்க முயற்சித்த அந்த சங்கத்துக்கிட்டேயிருந்து பாதுகாப்பு தேடி பு.ஜ.தொ.மு-வுல தஞ்சமடைஞ்சிருக்கோம்-ங்கறதுதான் சரி.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் தனக்கொடி

எல்லாத் தொழிலாளிகளுக்காகவும் உண்மையிலேயே அக்கறையோட போராடுவது சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்தான். இந்த சங்கத்தோட ‘உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ரெண்டு வருசத்துக்கு முந்தியே இந்த சங்கத்துல இணைய நாங்க விருப்பப்பட்டோம். அப்ப எங்க செட் பொறுப்பாளரா இருந்த திரு. மூசா, சி.ஐ.டி.யு-வ உருவாக்கி அதுக்கு தலைவரா நான் இருக்கும் போதே வேற சங்கத்துக்கு நீங்க போறது சங்கடமா இருக்குன்னாரு. அதனால நாங்க வரல.

ஆனா அவர் இறந்தவுடன் ‘அண்ணன் எப்ப சாவான்; திண்ண எப்ப காலியாகும்னு’ காத்திருந்த சில மேஸ்திரிங்க “ஒருத்தர் செய்யும் வேலையை மற்றவர் பறிக்க கூடாது”-ங்கற ஒப்பந்தத்தை மீறி சுயநலனுக்காக எங்கவேலையை பறிக்க நினைச்சாங்க! CITU சங்கமும் இந்த அடாவடித்தனத்துக்கு ஒத்துப் போகுது.

என் வேல…என் வேல-ன்றியே சங்கம் பேசிவிடலனா வேலைவந்திருக்குமா? சங்கத்த மீறி எப்படி வேலை செய்வன்னு பார்க்கறேன்னு சங்கத்தின் மாவட்ட தலைவரான நீங்களே (சி.ஜ.டி.யு தலைவர் ராஜாவே) மிரட்டிறீங்க! … கேக்க நாதியில்லன்னு இழிவுசெய்து எங்க வேலையப் பறிக்க நினைச்சீங்க…. அதனாலதான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில தஞ்சமடைந்திருக்கோம்.

நா கேட்குறேன்….நியாயமான கூலி கேட்டுப் போராடிய வெண்மணி தியாகிகள் நினைவாக கட்டப்பட்ட ‘வெண்மணி இல்லத்திலேயே’ (சி.ஜ.டி.யு திருச்சி மாவட்ட அலுவலகம்) ரவுடிகள வச்சி மிரட்றீங்க. சங்கத்துக்கு எங்க தொழிலாளர்கள் சந்தா கொடுக்கலையா? கட்டிடநிதி, கட்சி நிதியின்னு நீங்க கேட்டபோதெல்லாம் காசு கொடுக்கலையா? கூப்பிட்ட போதெல்லாம் போராட நாங்க வரலையா? சங்கம் பேசி விட்டதாலேயே இன்னைக்கு சங்கத்துக்கிட்ட வேலய ஒப்படைன்னு கேட்டா இது அடாவடி இல்லையா? குட்செட்டுல வேல செய்யிற எல்லா மேஸ்திரிகளையும் கூட்டி கூட்டத்தப் போடுங்க! நியாயத்தை அவர்கள் சொல்லட்டும்” என்று கூறி முடித்தார்.

அடுத்து பேசிய சு.ப.தொ.சங்கத்தின் சிறப்புத்தலைவர் ராஜா, “சி.ஐ.டி.யு-வின் பாரபட்சமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இமாம் மேஸ்திரி மற்றும் தொழிலாளர்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அணுகிய போதுதான் 2006 – ல் சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தை துவங்கினோம். சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமில்லாமல் குட்செட்டின் அனைத்து தொழிலாளர்களின் நலனில் காட்டிய அக்கறையைப் பார்த்து சின்னையன் செட் தொழிலாளர்கள் இணைந்தனர். இன்று தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க ஈ.எஸ்.ஐ – பி.எஃப் துவங்கி பாரபட்சமின்றி பலருக்கும் உதவியது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் அரசு சலுகைகளை பெறுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. வேலையிடத்தில் குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படைவசதிகளுக்காகவும் அடையாள அட்டை, பணி நிரந்தரம் போன்ற உரிமைகளுக்காகவும் போராடிவருகிறது.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் ராஜா

எல்லா தொழிலாளர்களின் நலன் என்ற போர்வையில் சுகுமார் செட் வேலையைப் பறிக்க முயற்சிக்கிறீர்களே, வேலையில்லாத தொழிலாளர்களுக்காக உண்மையிலேயே அக்கறையிருந்தா, சி.ஐ.டி.யு கிளை செயலாளர் சிவா தினசரி வேலைக்கு போறாரே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ஒருநாள் தன்வேலையை பிரித்து தரவேண்டியதுதானே? எங்க சங்கத்தின் செயலர் இரத்தினம் எத்தனை முறை உங்கள் சங்க தொழிலாளர்களுக்கு வேலைகளை விட்டுக் கொடுத்துள்ளார். நன்றி உணர்ச்சி இருந்தால் சிந்தித்துபார்!” என முகத்தில் அறைந்தார்போல் இடித்துரைத்தார்.

மேலும், “2014 – 2016 க்கான கூலி பேச்சுவார்த்தையை முதலாளிகளும், சி.ஐ.டி.யு-வுமே விரும்பாத சூழ்நிலையில் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் தானே முறையாக கடிதத்தை கொடுத்து கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தோம். அப்போதும் கூட சி.ஐ.டி.யு தலைவர் ராஜா “ எங்க ஆளுக வேல வந்தா போதும் கூலி உயர்வுன்னு பேசி வேல வராம செய்திடாதீங்கன்னு சொல்றாங்க” என்று சொல்லி தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரிகளின் கோரிக்கைப்படிதான் நடந்து கொள்கிறேன் என்பதாக நியாயம் பேசி தனது முதலாளி வர்க்க சேவையை மூடி மறைக்க முயன்றார் இதே CITU தலைவர் ராஜா.

சி.பி.எம் வேட்பாளர் ஸ்ரீதருக்கான நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக முதலாளிகளிடம் தேர்தல் நிதி பெற்றதற்கு நன்றிக் கடனாக தொழிலாளர்களின் கூலி உயர்வைக் கோராமல் துரோகமிழைக்க துடித்த போது உறுதியாக நின்று தொழிலாளர்களை பாதுகாக்க 30% கூலி உயர்வை பெற்றுத் தந்தது எமது சங்கம்.

நேற்றுவரை உங்கள் சங்கத்தில் இணைந்து உங்களோடு உழைத்த சுகுமார் செட் தொழிலாளர்களின் வேலையை அடாவடியாக பறிக்கச்சொல்லி பாரபட்சமாக ஆணையிடுகிறீரே இதுதான் சங்கத் தலைவருக்கு அழகா? இரயில்வே போலீசும், C&F (Clearing and Forwarding) கான்ட்ராக்டர்களும் “நீங்கள் செய்வது முறையல்ல. இது சுகுமார்செட் வேலை” என்று கூறியபோதும், உங்கள் சங்கத்தில் இப்போதும் இருக்கும் தொழிலாளர்கள் பலரும் கூட இது நியாயமில்லை. அடாவடியானது என்று பேசுகின்றனர். அதைக்கூட உணர முடியாமல் சங்க தலைவரே ரவுடித்தனத்தில் இறங்கி தொழில் சூழலைக் கெடுக்கிறீரே இது சரியா?

1967 நக்சல்பாரி கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தான் சொன்ன கொள்கைக்கு மாறாக சென்ற போது உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம் என்ற கொள்கையை சரியாக நடைமுறைபடுத்துவதற்காக துவங்கப்பட்டதுதான் எமது நக்சல்பாரி அமைப்பு. அன்றைக்கு போலீசு மந்திரியா இருந்த ஜோதிபாசு கட்சியின் ஊழியர்களையே போலீசை வைத்து கொன்றொழித்தார். அந்த துரோகம் இன்று வரை தொடர்கிறது.

எங்கெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளும் சி.ஐ.டி.யு-வும் துரோகம் செய்கிறதோ அங்கெல்லாம் தொழிலாளரைக் காப்பதற்காக எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிறக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த குட்செட்டில் எமது சங்கத்தை துவங்கும் போது, கொடி மரம் ஊன்றுவதற்காக வெட்டப்பட்ட குழி எவனப் புதைக்கிறதுக்குன்னு கேள்வியெழுப்பி மிரட்டிப்பார்த்தீர்கள். ஆனால், உங்கள் கொடி மரம், பெயர்ப்பலகையை உங்கள் தொழிலாளர்களே தூக்கியெறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது” என்று கூறி முடித்தார்.

இடையிடையே ம.க.இ.க-வின் மையக் கலைக்குழு தோழர்கள் தொழிலாளி வர்க்க உணர்வூட்டும் எழுச்சியான பாடல்களைப் பாடி சிறப்பித்தனர். கிளை செயலர் இரத்தினம் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தோழர் ரத்தினம்

முன்னதாக, 7.1.2015 அன்று சி.ஐ.டி.யு–விலிருந்து தாங்கள் விலகுவதை கடிதமாகவும் சுவரொட்டி போட்டு ஒட்டியும் தொழிலாளர்களுக்கு தெரிவித்தனர்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்

பொது அறிவிப்பு

சுகுமார் செட் (SWC) தொழிலாளிகளாகிய நாங்கள் அனைவரும் மேஸ்திரி திரு. மூசா இருந்தவரை சி.ஐ.டி.யு சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தோம்.

தற்போது, நாங்கள் செய்து வந்த எஸ்.டபிள்யூ.சி அரிசி வேலையை அபகரிக்கும் நோக்கத்துடம் சி.ஐ.டி.யு சங்கமும் அதன் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜாவும் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அதிலிருந்து 07.01.2015 முதல் விலகி விட்டோம்.

நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்துள்ளோம் என இதன்மூலம் அறிவிக்கிறோம்.

எனவே, எமது செட் தொடர்பான எந்த விவரங்கள், பேச்சு வார்த்தை பற்றியும் இனி சி.ஐ.டி.யு சங்கத்தை தொடர்புகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
சுகுமார் செட் (CWC) தொழிலாளர்கள்,
ரெயில்வே குட்செட், திருச்சி

சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் (TPGY)
இணைப்பு : புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 9698930113

இதைப் பார்த்து அரண்டு போன சி.ஐ.டி.யு ராஜாவின் கையாட்கள் சுவரொட்டிகளை கிழிக்கவேண்டும், ஒட்டியவர்களை ஒப்படைக்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என லாரிகளை இயக்க விடாமல் அகராதி செய்ததுடன் வேலை செய்வதையும் தடுத்தனர்.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
கலைக்குழு பாடல்

சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் ராஜா, “இது தொழிற் சங்க நடைமுறையில் புதியதல்ல. சி.ஐ.டி.யு சங்கத்தில் செயல்பட்ட தாங்கள் சங்கத் தலைமையின் சர்வாதிகார போக்கை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து விட்டோம் என செட்டின் பெயர், முகவரியோடு அறிவித்துள்ளனர். சி.ஐ.டி.யு தலைவர் ராஜா பெயரைப் போட்டுத்தானே அடிக்க முடியும்? தவறு செய்யும் பிரதமரையும் முதலமைச்சரையும் நீதிபதிகள் பெயரை சுவரொட்டியில் போட்டு ஒட்டுவதுதான் எங்கள் நடைமுறை . அதைத்தான் இப்போதும் செய்கிறோம். எப்போதும் செய்வோம். மறுப்பிருந்தால் நீங்களும் சுவரொட்டி போட்டு ஒட்டுங்கள்” என எச்சரித்தார்.

ரெயில்வே போலீசார் மற்றும் சி&எஃப் காண்ட்ராக்டர்கள் மத்தியில் இதை அம்பலப்படுத்தியதுடன், “வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். மீறித் தடுத்தால் இவர்களைக் கைது செய்யுங்கள்” என எச்சரிக்கவே சி.ஐ.டி.யு-வினர் வாலாட்ட முடியாமல் திரும்பிச் சென்றனர். சி.ஐ.டி.யு-வின் அடாவடித்தனம் முறியடிக்கப்பட்டு வேலை அமைதியாக நடந்தது.

சுமைத் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
கலைக்குழு

பு.ஜ.தொ.மு-வில் இணைந்த தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமையை நிலைநாட்டியதுடன் இந்த சங்கத்தில் ஒவ்வொரு விசயத்திலும் கருத்து கேட்டு விவாதிக்கும் உரிமையும் கிடைத்த (இந்த சாதாரண உரிமை கூட இல்லாமல் இருந்த போலிகளின் சங்க நடைமுறையை என்னவென்பது?) இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வேலை செய்கின்றனர்.

தகவல்
சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க