Friday, August 12, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் - நேரடி ரிப்போர்ட் !

இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !

-

இராணிப்பேட்டை :

விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.

ரவு 12.10 மணி. தூங்கிக் கொண்டிருந்த அவர்களை, சேறும் சகதியுமான இரசாயனக் கழிவு திடீரென சுனாமியாய் தாக்குகிறது; என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்களை புதைத்து மூடிய கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; சகதியில் இருந்த இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; அருகில் இருந்த தொழிற்சாலை பேனல் போர்டு உள்ளிட்ட மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி பரவிய மின்கசிவு தப்பிக்க சிறிதளவு வாய்ப்பிருந்திருந்தால் அதையும் காலி செய்கின்றன; அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

இரசாயன சகதி சுனாமி
இரசாயன சகதி சுனாமியில் கொல்லப்பட்டவர்கள் (படம் : நன்றி தினத்தந்தி)

அவர்கள் மேற்கு வங்க மாநிலம் மிதினாப்பூரிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதைவிட கான்பூரைச் சேர்ந்த ஒரு முதலாளியால் இராணிப்பேட்டையில் இயங்கும் ஆர்.கே.லெதர்ஸ் என்கிற தனது தோல் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை.

தொழிற்சாலைகளுக்கு புதிதாய் வேலைக்கு வருபவர்களுக்கு உடனடியாக வீடு கிடைக்காது என்பதால் அவர்களை தொழிற்சாலையிலேயே தங்க வைப்பது வழக்கமாம். 2015 சனவரி மாதம் 30-ம் தேதி அன்று  வந்து சேர்ந்த அவர்களும் இரவு ஆலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1500 கிமீ தூர நெடுந்தொலைவு தொடர்வண்டிப் பயணக் களைப்பில் இருந்த அவர்கள் அனைவரும் ஆர்.கே லெதர் ஆலையில் தோலுக்கு சாயம் ஏற்றும் உருளைகளுக்கருகில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.கே லெதர் ஆலைக்கு அருகில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு சகதியை சேகரிக்கும் தொட்டியின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து சுமார் 4 டன் வரையிலான  நிறை கொண்ட சகதி சுனாமி போல வெளியாகியிருக்கிறது.

விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.

மிதினாபூர் மாவட்டத்தின் வித்யாபூர் சல்பதவானி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான அபீப் கான், அவரது மகன்கள் 25 வயதான அலி அக்பர் மற்றும் 23 வயதான அலி அங்கர், பல்ராம்பூரைச் சேர்ந்த 27 வயதான ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர் 18 வயதான குதூப் கான் மற்றும் அக்ரம், அசியான், ப்யார், ஹபீப் ஆகிய அவர்கள் ஒன்பது பேருடன், தொழிற்சாலை இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு ஆரணி தாலுகா கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சம்பத் (45) என்பவரையும் சேர்த்து பத்து பேரை பலிவாங்கியுள்ளது இந்தச் சகதி சுனாமி.

சம்பவ இடத்தில் இருந்த 21 வயதான அமீனுல் அலிகான் மற்றும் 50 வயதான ரவி என்ற சூப்பர்வைசர் இருவர் பிழைத்துக் கொண்டனர். வெளியில் ஓடிச்சென்ற தொழிலாளிகள் தகவல் தெரிவித்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்;

தீயணைப்புப் படை வீரர்கள்
போராடி 2 உயிர்களை காப்பாற்றிய தீயணைப்புப் படை வீரர்கள் (படம் : நன்றி thehindu.com)

தொட்டியிலிருந்து வெளியான கழிவுச் சகதி 60 அடி அகல சாலையில் 300 அடி வரை 3 அடி உயரத்துக்கு தேங்கியிருக்கிறது. தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடனும், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தும் அதன் உதவியுடன் நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை மீட்புப் பணியில் ஈடுபட்டனர்; உயிர் பிழைப்பதற்காக தொழிற்சாலையின் உயரமான சுவரின் மீது ஏறியிருந்த ரவியை மீட்டனர்.

ranipet-leather-waste-disaster-14தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கழிவுநீரில் மூழ்கியதாலும், தொடர்ந்து துர்நாற்றம் வீசியதாலும் அவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 10 பேரின் உடல்களையும் ஒவ்வொன்றாக மீட்டனர். உடல்கள் அனைத்தும் சகதியில் சிக்கியதால் தோல்கழிவுகள் ஒட்டியபடி கருப்பு நிறத்தில் காணப்பட்டன.

ranipet-leather-waste-disaster-10 இந்த கழிவுச் சுனாமி எங்கிருந்து வந்தது?

பச்சைத் தோலை பதப்படுத்தப்பட்ட தோலாக (வெட்புளூ -wet blue) மாற்றும் தோல் தொழிற்சாலைகள்  இராணிப்பேட்டை – முத்துக்கடைக்கு கிழக்கில் பெருமளவில் இயங்குகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலை அழகுபடுத்தப்பட்ட தோலாக (finished leather – ஃபினிஷ்ட் லெதராக) மாற்றும் தொழிற்சாலைகள் இராணிப்பேட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் பெருமளவில் உள்ளன. அழகுபடுத்தப்பட்ட தோலை பொருட்களாக (காலணி, செருப்பு உள்ளிட்ட) மாற்றும் சில தொழிற்சாலைகளும் ராணிப்பேட்டையில் இயங்குகின்றன.

இவற்றில் முதல் இரண்டு வகை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து அதிக அளவு உப்பு (சோடியம் குளோரைடு), சுண்ணாம்பு, அமிலம் மற்றும் குரோமியம் உள்ளிட்ட இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது. அழகுபடுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து பலவகையான உப்புகள், சாயங்கள், நிறமித் துகள்கள், கொழுப்பு இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது.

1980-களிலும், 1990-களிலும் இந்த கழிவுநீரை பெயரளவுக்குக் கூடச் சுத்திகரிக்காமல் வெளியேற்றி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கின இந்தத் தொழிற்சாலைகள். விவசாயம் பாழ்படுவது, கால்நடைகள் உயிரிழப்பு என அழிவுகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கவே மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் தோல் தொழிற்சாலை முதலாளிகளின் நிதியைக் கொண்டு ராணிப்பேட்டே சிட்கோ தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் (RANIPET SIDCO FINISHED LEATHER EFFULENT TREATMENT COMPANY LTD) டிசம்பர் 6, 1990-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் சுத்திகரிப்பு ஆலை தனியாரின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு

சுற்று வட்டாரத்தில் செயல்படும் பயனியர் லெதர், ஆன்ட்லர் லெதர்ஸ், வசந்த் லெதர்ஸ், ஆர்.கே.லெதர்ஸ், ஐ.வி.லெதர்ஸ், அலெக்கியா லெதர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோல் அழகுபடுத்தும் ஆலைகளின் இரசாயனக் கழிவ நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது; கழிவுகளிலிருந்து நீர் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, சேறும் சகதியுமான இரசாயனக்கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுகின்றன; நாளடைவில் காய்ந்த பிறகு அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றன.

கூழ் போன்ற இந்தச் சகதி பல வகையான நச்சு இரசாயனங்கள் கலந்தது. இதை நிலத்தில் புதைத்தால் அவை நிலத்துக்கடியில் பரவி பல கிலோமீட்டர் தூரம் வரை நஞ்சாக்கி விடும். ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் சகதி மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்க 100 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட தொட்டிக்கு 15 அடி உயரத்தில் முக்கால் அடி தடிமனில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளார்கள். இதைத்தான் கழிவு நீர்த்தொட்டி என்கிறார்கள்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சுத்திகரிக்கப்படும் கழிவுகளை சேகரிக்கும் இடம்.

ஏற்கனவே காய்ந்து போன மலை போல குவிந்துள்ள கழிவுகள் அகற்றப்படாததால் இடமின்மை காரணமாக புதிய கழிவுகளைக் கொட்ட ஆறு மாதங்களுக்கு முன்புதான் தென்பகுதியில் ஒரு சுவர் எழுப்பி உள்ளார்கள். அந்தச் சுவர்தான் தற்போது உடைந்து உள்ளிருந்த கழிவுகள் ஒரே நேரத்தில் வெளியேறி சுனாமியைப் போல சீறிப்பாய்ந்து பத்து உயிர்களை பலிவாங்கி உள்ளது.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடம்

விபத்தா? கொலையா?

அதிக அளவில் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டதால் சுவற்றில் ஏற்கனவே ஆங்காங்கே கசிவுகள் ஏற்பட்டுள்ளதையும் காண முடிந்தது. கழிவுகள் கசியாமல் இருக்க சுவற்றின் உட்புறமாக கருப்பு நிற பாலிதின் ஷீட்டுகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கசிவுகளைப் பார்த்தாவது எச்சரிக்கை அடைந்திருந்தால் இத்தகைய விபத்தை தடுத்திருக்க முடியும்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இரசாயனக் கழிவு சேற்றில் ஒரு பகுதி.

சுத்திகரிப்பு ஆலையில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர்த் தொட்டியின் சுற்றுச் சுவர் மற்றும் அங்கே அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் காய்ந்து போன கழிவுகள் இவற்றை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. எந்தவித பாதுகாப்பும் இன்றி ஒரு நிலையம் எப்படி இயங்குகிறது? தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது.

தொழிற்சாலைக்குள் தேங்கியிருக்கும் இரசாயன கழிவு சகதி
தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?

நடந்தது விபத்தல்ல. தெரிந்தே நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. இதற்குக் காரணமானவர்களை கைது செய்வதோடு மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் குற்றவாளிகள் அனைவரையும் கொலை வழக்கில் கைது தண்டிக்க வேண்டும்.

இங்கே நடந்த உயிர்ப்பலிக்கு யார் காரணம்?

தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?

சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?

சுத்திகரிப்பு நிலையம்
சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?

மிகமோசமாக இயக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காரணமா?

ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?

இரசாயன கழிவு சகதி
ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?

அரசு அதிகாரிகளும் அரசு நிர்வாகமும், சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தும் தனியார் நிர்வாகமுமே முதல் நிலைக் குற்றவாளிகள். தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடத்தை ஏற்படுத்தி தராமல் ஆலைக்குள்ளேயே அவர்களை தங்கவைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி இரண்டாம் நிலைக் குற்றவாளி.

ராணிப்பேட்டை துயரம்
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.

பலி வாங்கும் மறுகாலனியாக்கம்

ஆலைகள் தொடங்கினால் வேலை வாய்ப்பு பெருகும்; மக்களிடம் காசு புழங்கும்; அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்; அதுவும் தோல் பொருட்களை செய்து ஐரோப்பியர்களுக்கு ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி கிடைக்கும் என்று நம்மை ஆளும் அரசுகளும், மேற்கத்திய உலகுக்கு சேவை செய்யும் தரகு முதலாளிகளும் கூக்குரலிடுகிறார்கள். இப்படிச் சொல்லித்தான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளையும் இரசாயனத் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள்.

இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சி
இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com )

தோல் பதனிடுதல், அழகுபடுத்தல் இவற்றுக்கான ஆலைகள் வெளிப்படுத்தும் இரசாயனக் கழிவுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் வலுக்க, அவற்றை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன பன்னாட்டு நிறுவனங்கள். பளபளப்பான தோல் பொருட்களை செய்வித்து மேற்கு நாடுகளுக்கு இறக்குமதி செய்து ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்கின்றன அந்நிறுவனங்கள்.

அவர்களுக்காக நமது மண்ணையும், நீரையும், மக்களின் உயிரையும் பணயம் வைத்து உள்நாட்டில் தொழில் செய்யும் முதலாளிகள் தமது பங்காக கணிசமான லாபத்தை குவித்துக் கொள்கின்றனர். சந்தைப் போட்டியைத் தூண்டி விலைக்குறைப்பு என ஒரு புறமும், உயர்ந்த விலையிலான இரசாயனங்கள், எந்திரங்களை விற்பது என்று மறுபுறமும் அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டையும் சிறுமுதலாளிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

தோல் கண்காட்சி
மேற்கத்திய வசதிக்காக பளபளக்கும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com)

10 தொழிலாளர்களை கொடூரமாக கொன்று குவித்த விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னையில், உயிர்ப்பலி நடந்து 24 மணி நேரத்துக்குள், ஜனவரி 31-ம் தேதி மாலை 6 மணிக்கு 30-வது இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஏற்றுமதி சாதனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 30 ஆண்டுகளாக இந்திய மண்ணும், நீரும், மக்களும் சிறுகச் சிறுக கொல்லப்பட்டு வரும் சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு
ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு (படம் : நன்றி http://www.livescience.com/4226-world-10-polluted-places.html )

இந்தியாவின் தோல் துறையின் முக்கியமான உற்பத்தி மையமாக வேலூர் மாவட்டம் உள்ளது. தோல் தொழிற்சாலைகள் கக்கும் கழிவுகளால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீரும் நிலமும் கெட்டுப் போனதால் வேளாண்மை அற்றுப் போனது. நிலத்தடி நீரைக் குடிக்கும் மக்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள்கூட நோயினால் அவதியுறுகின்றன. காற்றும் நஞ்சாகிப் போனதால் நுரையீரல்களெல்லாம் நடுங்குகின்றன.

நூற்றுக்கணக்கான ஆலைகள் குவிந்து இயங்கும் இராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதி ஏரிகளின் நீர் நிலைகளில் முற்கால மன்னர்களின் மனைவிமார்கள் நீராடியது அந்தக் காலம். உலகின் ஆக மோசமான மாசடைந்த நகரங்களில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது இந்தக் காலம்.

இரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் குவிந்துள்ள ராணிப்பேட்டையின் பகுதிகளில் காற்றையே வடிகட்டித்தான் சுவாசிக்க வேண்டும். வடிகட்டிய காற்றுகூட நுரையீரலைத் துளைத்துவிடும் என்பதால் எதிர்காலத்தில் இப்போது குடிநீருக்கு கொடுப்பது போல காற்றைக்கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். “காற்று வேண்டுமா காசை எடு; இல்லையேல் ஊரைவிட்டே ஓடு!” என்பதுதான் எதிர்காலமாக இருக்கும். எங்கே ஓடுவது?

இது போன்று விவசாயம் அழிக்கப்பட்டு வாழ்க்கை பறிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் பிற வடமாநில கிராமங்களிலிருந்து சோற்றுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் இயங்கும் நகரங்களை நோக்கி பஞ்சம் பிழைக்க ஓடுகின்றனர். எந்தவித பணிப்பாதுகாப்பும் இன்றி, கொலைக்களங்களாக இயங்கும் தொழில் மையங்களில் தொழிலாளர்கள் பலி கொடுக்கப்படும் சம்பவங்களின் தொடர்ச்சிதான் ராணிப்பேட்டையில் இப்போது நடந்திருக்கும் கொடூர சம்பவம்.

நெஞ்சை உருக்கும் இத்துயரச் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் 30.01.2015 சனிக்கிழமை ராணிப்பேட்டை சிப்காட் பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தனர். சுமார் 150 பேர் கைதாகி பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாண்டு போனவர்கள் வடஇந்தியர்கள்,  இஸ்லாமியர்கள் என்பதால் பிற கட்சிகள் இந்த உயிர்க்கொலைகளை அலட்சியப்படுத்துகின்றனரா?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட உத்தரவிட்டிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டிருந்த 79 உறுப்பினர் ஆலைகளையும் மூடியிருக்கிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சுனாமியை நினைவுபடுத்தும் வெளியேறிய கழிவின் ஒரு பகுதி.

தமது கடமையை புறக்கணித்து, மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோவதற்கு துணை நிற்கும் தமிழக, மேற்கு வங்க மாநில அரசுகள் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சில லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் நிறுவனங்களின் சங்கமும் சில லட்சங்களை அறிவித்துள்ளன. அரசும், முதலாளிகளும் தோல் கண்காட்சிக்கு மட்டும் செலவிடும் தொகையில் ஒரு துளிதான் இந்த நிவாரணத் தொகை.

மக்கள் நலனை பாதுகாக்காத, கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசு உறுப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள், எதிர்த்து வாதிட பல லட்சம் ரூபாய் ஊதியத்தில் முதலாளிகளின் வழக்கறிஞர்கள், ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சில தீர்ப்புகள், அவற்றை அமல்படுத்துவதற்காக பல நூறு கோடி ரூபாய் அரசு மானியம், வெளிநாட்டு சுத்திகரிப்பு நுட்ப நிறுவனங்களின் சுரண்டல், சுத்திகரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்று கட்டுப்படுத்த வேண்டிய அரசு உறுப்புகளின் ஊழல் என்று அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள், முதலாளிகள் என்று இந்த ஒட்டுமொத்த கட்டமைப்புமே தொடரும் இந்த படுநாசத்தை இணைந்து நடத்துகின்றனர்.

தோல் துறை முதலாளிகளும், அவர்கள் சேவை செய்யும் மேற்கத்திய எஜமானர்களும், குளிரூட்டப்பட்ட வர்த்தக மையத்தில் வணிக பேரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவர்களது லாபத்துக்காக கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள், தகப்பனையும் இரண்டு மகன்களையும் ஒரே நேரத்தில் இழந்த குடும்பத்தை சென்றடையும்; இரண்டு சகோதரர்களையும் இழந்த குடும்பத்தை சென்றடையும். கொல்லப்பட்டவர்களுக்கு வாய்க்கரிசியாக முதலாளிகளும் அரசும் போட்ட சில லட்சம் ரூபாய்களும் விரைவில் அந்தக் குடும்பங்களை போய்ச் சேர்ந்து விடலாம்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
கழிவால் மூழ்கடிக்கப்பட்ட ஆர்.கே லெதர்ஸ் ஆலையும் சாலையும்

ஆனால், நம் நாட்டையும், மக்களையும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு அடகு வைத்து தரகு வேலை பார்க்கும் இந்த அரசமைப்புக்கு எதிராக மக்கள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடாத வரை, உயிரின் விலை என்னவென்று குற்றவாளிகளுக்கு உணர்த்தாத வரை, பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுக்காத வரை இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சாலைகளை மூழ்கடித்து நிற்கும் கழிவுகள்

பேஸ்புக்கில் புகைப்படத்தொகுப்பு

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

Ranipet-Murder-2இது தொடர்பான செய்திகள்

 

  1. ராணிப்பேட்டை உலகிலேயே முதல் 10 அதிபயங்கர மாசுபட்டநகரமாக, வாழத்தகுதியில்லாததாக வருடாவருடம் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆதாரம் :

    http://www.worstpolluted.org/projects_reports/display/51
    http://www.dnaindia.com/india/report-ranipet-among-world-s-top-ten-polluted-cities-1087070

  2. இந்த அநியாயம் மட்டுமல்ல, இன்னமும் கேட்கபடாமல், கவனிக்கபடாமல் ஏராளமான சங்கதிகள் உள்ளன இந்த தோல் தொழிற்சாலைகளில் !

  3. தொழிற்சாலைக்குள் தூங்க அனுமதித்தது மாபெரும் தவறு . Industrial safety act ஐ சுத்தமாக கடைபிடிக்கவில்லை . வேளச்சேரி கறிக்கடை கால்வாயில் தவறி விழுந்த சிறுவனுக்கு நீதியாக கறிக்கடை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.ஆட்சியாளர்கள் மற்றும் நிறுவனத்தின் கவன குறைவால் 10 தொழிலாளர்கள் உயிரை விட்டுளார்கள் இவர்களுக்கு என்ன நீதி ?

  4. இந்த படுகொலைகளில் பலருக்கும் பங்கு உண்டு. குறைந்த பட்ச தேவைகளை மீறி நுகர்வேர் யாவருக்கும் இதில் பங்கு உண்டு. மிகையான Sophistication வேண்டுவோருக்கும் இதில் மிகையான பங்கு உண்டு.

    நமக்கும் நம் சுற்றுப்புரத்திற்கும் பாதுகாப்பான தொழில்களை மட்டுமே நாம் செய்யவேண்டும். உற்பத்தி என்ற இந்த விசச்சுழற்சியை உடைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம் விடுதலை பெறவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க