privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விகட்டமைப்பு நெருக்கடி – SOC, CPI (ML) பத்திரிகை செய்தி

கட்டமைப்பு நெருக்கடி – SOC, CPI (ML) பத்திரிகை செய்தி

-

பத்திரிகை செய்தி

திவாலாகிப்போன அரசியல் சமூக கட்டமைவைத் தகர்த்தெறிவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

Communist_Symbolமிழகத்தின் அரசியலில் மட்டுமல்ல, நமது நாடு முழுவதுமான அரசியலிலும் பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான அரசியல் முடிவுகளை, ஜனநாயகபூர்வமான உட்கட்சி அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து, 2015, ஜனவரி 2-3 தேதிகளில் நிகழ்ந்த மாநில  சிறப்புக் கூட்டத்தில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) -இன் மாநில அமைப்புக் கமிட்டி எடுத்திருக்கிறது. அவற்றின் சாரம் வருமாறு:

இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது,  திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted, failed, collapsed and turned into opposite forces) மாறிவிட்டன.

நாட்டின் அரைக்காலனி – அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு,  தரகு முதலாளிய அரசியல் அமைப்பு எதிர்கொண்ட நெருக்கடிகளுக்குத் தீர்வாக ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையும், கட்டுமான மாற்றங்களும் அரசியல் – பொருளாதார – சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி முற்றச் செய்துவிட்டன.

மேற்கண்ட போக்குகள் ஒரு உச்ச நிலையை எட்டி, இன்றைய சமூக கட்டமைப்பின் பொருளாதாரம், அரசியல், பண்பாடு  போன்ற அனைத்து கட்டுமானங்களும், கட்டமைப்பு முழுவதும் தீராத, தீர்வு காண இயலாத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இவற்றின் கையாலாகாத்தனத்தை, காலாவதியாகிப்போன நிலையை, இற்றுப் போனதை, திவாலாகிப் போனதை, தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. நாட்டின் நடப்புகளே இதற்குச் சான்று கூறுகின்றன.

இந்தக் கட்டமைப்பை தாங்கிப் பிடித்து, நியாயப்படுத்தி மக்களிடம் அங்கீகாரம் பெற்றுத் தந்து வந்த ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டமும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூடத் திவாலாகி, தோற்றுப்போய் விட்டன. சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள், கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் மேலும் மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள்  போய்க் கொண்டிருக்கும் பரிதாப நிலையையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர், மற்றும் மத்திய – மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட உயர் அரசுப் பதவிகளை வகிப்பவர்களில் பலர் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக இருந்தும் தண்டிக்கப்படவில்லை; மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் இசுலாமியரைப் பெருந்திரளாகக் கொலைசெய்த கிரிமினலான பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பைக் கீழமை நீதிமன்றங்களிடம் உச்சநீதி மன்றம் தள்ளிவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, தனது வழிகாட்டுதலைத் தானே மீறி 18 ஆண்டுகளாகத் தள்ளித் தள்ளி வைத்தது. அக்கும்பலின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டபோதும், அவசர அவசரமாக உச்சநீதி மன்றம் தலையிட்டு, விதிவிலக்கு(!) என்றே சொல்லிக்கொண்டு, தாராளமான சலுகைகளுடன் பிணையில் விடுவித்தது.

ஜெயலலிதாவைப்போல, மமதாவைப்  போல, ஜெகன்மோகன் ரெட்டியைப் போல, சரத் பவாரைப் போல,   மாயாவதி-முலாயமைப் போல, லாலுவைப்போல, சௌதாலாவைப்போல, எடியூரப்பாவைப்போல,   சந்திரபாபுநாயுடுவைப்போல ஏராளமான அரசியல்வாதிகள்  இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஈடுபட்டுப் பல இலட்சம் கோடி ரூபாய் கள்ளப்பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் வரும்போது அவை அரசியல்  சதிகள் -சூழ்ச்சிகள், அரசியல் பழிவாங்குதல்கள் தாம் என்று கூறி, கூலிப் படையை வைத்துப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

நீதித்துறை, உளவுத்துறை, போலீசு ஆகிய மேலிருந்து கீழ்வரையிலான குற்றத் தடுப்பு – தண்டனை வழங்கும் அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் உச்ச, உயர்நீதி மன்றங்களே தமது பொறுப்புகளைத் தட்டிக்கழித்துத்  தாராளமாக நடந்து கொள்கின்றன. நீதிபதிகளே இலஞ்ச ஊழல், பாலியல் குற்றவாளிகளாக, கிரிமினல் குற்றக்கும்பல்களின் டவாலிகளாக இருக்கின்றனர்;  நீதியே விற்பனை சரக்காகி – நீதித்துறையே நிர்வாணமாகி நிற்கிறது.

இந்திய அரசே ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்ற, ஒரு மிகப் பெரும் கார்ப்பரேட் கொள்ளை நிறுவனமாகிவிட்டது. பிரதமரே அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மாநில முதலமைச்சர்களே அதன் இயக்குநர்களாகவும் செயல்படுகிறார்கள். அம்பானி, அதானி, மிட்டல், பிர்லா, டாடா, ஜிண்டால் போன்ற பெரும் தரகு முதலாளிகள் அரசுப் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்து, பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அந்நியநாட்டு வங்கிகளில் குவித்துவைத்து ஹவாலா மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சட்டமுறைப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் முதலீடுகளை முடக்கிவிடுவதாக மிரட்டுகிறார்கள். உள்நாட்டு, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களின் பழைய, புதிய தரகு முதலாளிகளும் பெருமளவிலான கிரானைட், மணற் கொள்ளையிலும், கனிமவள, உலோகத் தாதுக் கொள்ளையிலும் ஈடுபட்டுக் காடுகளையும் மலைகளையும் நீர்நிலைகளையும் அழித்து நாட்டையே பாலைவனமாக்கி வருகிறார்கள்.

அதேசமயம், அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாகவும், எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாகவும் உள்ளன.  இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகாரவர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைக்கும்போது, அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைகள் தரும் ஆதாரங்கள் இருந்தும், சட்ட நியதிப்படி நடந்து கொள்வதற்குப் பதில் சமரசமாக முடிவுகள் எடுக்கின்றது.

குறிப்பாக, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், குஜராத் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கம் பரவியுள்ள மாநிலங்களில், இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள் ஆகிய நிறுவனங்கள்  நடத்தும் போலி மோதல் கொலை வழக்குகளில் இதற்கான சான்றுகளைக் காணலாம். பயங்கரவாத, பிரிவினைவாத பீதி கிளப்பி மக்களுக்கு எதிராக கடுமையான பெருந்திரள் கண்காணிப்பு, அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. கிரிமினல் குற்றக் கும்பல்கள் – ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் – போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறிமிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக  உற்பத்திப் பின்னடைவு, தேக்க-வீக்கம்,  அன்னிய செலாவணிப்  பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாதவாறு கடும் நெருக்கடிக்குள்,  சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டது. ஆலைமூடல், ஆட்குறைப்பு, கட்டணச் சுமையேற்றியும், விலைவாசியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் விண்ணை முட்டுவதாக எகிறச்செய்தும், அரசே ஏழை-எளிய மக்களின் தலையிலேறி மிதிக்கின்றது. மக்களுக்கு  கல்வி, அடிப்படைப் பொதுச் சுகாதாரம்- மருத்துவம், குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு எல்லாம் கானல்நீராகவே உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி   மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் ஆதாயத்துக்காக குவிக்கப்படுகின்றன.

ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்கமுடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின்  உச்ச நிலையை எட்டிவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பாசிசப் பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அவற்றுக்கு வழமையான வழக்கு மன்றங்களில் நீதி கிடைக்காதென்பது உறுதியாகிவிட்டது.  இயற்றப்படும் புதிய சிறப்புச் சட்டங்களும் அமைக்கப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் சிறப்பு விசாரணை ஆணையங்களும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கிடப்பில் போட்டு, ஊற்றிமூடுவதற்கான குறுக்கு வழிகளாகிவிட்டன. இந்த அக்கிரமங்கள், அநியாயங்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லையே, என்றும்  எதையாவது செய்து இவை எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும் என்ற கோபாவேசத்துடனும் மக்கள் குமுறுகின்றனர்.

இந்த அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றுவதன் வெளிப்பாடாக, மக்கள் தனித்தனிப் போராட்டங்களில் தன்னெழுச்சியாக ஈடுபடுவது பெரிதும் அதிகரித்து வருகின்றது. எனினும், அவர்கள் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும், தொடர்பையும் ஒருங்கிணைந்த முறையிலானவையாக தொகுத்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டங்களிலேயே அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களும் ஊடகங்கள் மூலம் பல்வேறு வகைகளில் மக்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. தாது மணற்கொள்ளை, ஆற்று மணற்கொள்ளை, மீத்தேன் எரிவாயு எடுப்பு, எரிவாயுக் குழாய் அமைப்பு, காவிரி நீர்  முதலான பல்வேறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காகத் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் ஈடுபடும் மக்களிடம், அவற்றுக்கிடையிலான பொதுத் தன்மையையும் உறவையும் தொகுத்துப் பார்க்கவேண்டிய அவசியத்தையும், தனித்தனித் தீர்வுகளை நாடும் போராட்டங்களுக்குப் பதிலாக, புரட்சிகர அரசியல் தீர்வுகளைக் கொண்ட பொது முழக்கங்களை முன்வைத்துப் போராடவேண்டியதன் முக்கியத்துவத்தையும்  புரியவைக்கவேண்டும்.

மோடி போன்றவர்கள் அன்றாடம் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சு அல்லது அறிவிப்பின்  மூலம்  மக்களிடையே விவாதத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை உருவாக்குகிறார்கள். பார்ப்பனப் பாசிசக் கும்பல் ஆத்திரமூட்டும் மதவெறி நடவடிக்கைகளின் மூலம் மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திட்டமிட்டே திருப்புகிறது. அதே நேரத்தில்  தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்திப் பணியவும் வைக்கிறது.  இதனை முறியடிக்கும் விதத்தில், நாடும் மக்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம், கட்டமைப்பு நெருக்கடியே என்ற ஒருங்கிணைந்த, முழுமையானதொரு பார்வையை மக்களுக்குக் கற்றுத்தருவதன் மூலம், புதிய, அவசியமான, விவாதத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை நாம் மக்கள் முன்பு வைத்திட வேண்டும்.

அதாவது, நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டதை, அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டதை மக்களிடம் கொண்டு செல்வதுடன், ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத்  தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்களைத் திரட்டவேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களின் அதிகாரத்தை மையப்படுத்துகின்ற ஒரு புதிய, அவசியமான பொது அரசியல் அரங்கத்தைக் கட்டி, முழக்கங்களை வகுத்து மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் புரட்சிகர இயக்கத்திற்குரிய பொறுப்பும் கடமையுமாக இருக்கிறது.

ஆழமான விவாதத்திற்குப் பிறகு, உடனடிக் கடமை குறித்த இம்முடிவை ஒருமனதாக நிறைவேற்றி,  மாநிலச் சிறப்புக் கூட்டம் புரட்சிகர எழுச்சியுடன் நிறைவுற்றது.

இவண்,
செழியன்,
செய்தித் தொடர்பாளர்,
மாநில அமைப்புக் கமிட்டி,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி  (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்),
தமிழ்நாடு.