Tuesday, March 31, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி

பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி

-

சிப்காட்டின் சிற்றிலையும்
கண் அயர்ந்த தருணம்.
மரணத்தின் சகதி
சுனாமியாய் பாய்ந்து வர
கண் விழிக்காமலே
இன்னதென்று தெரியாமலே
பத்து உயிர்கள்
துடித்து அடங்கிய கொடூரம்!

ராணிப்பேட்டை இரசாயனச் சகதி சுனாமி
ரசாயனக் கழிவால் புரட்டி எடுக்கப்பட்ட அந்த பிணங்களை மனிதர்கள் என்று! இப்பொழுதாவது அடையாளம் காண முடிகிறது அல்லவா?

உயிரோடு
கசக்கிப் பிழியப்பட்ட
பணிக் காலங்களில்
அவர்களை
கண்டு கொள்ளாமல் இருந்த
கண்களால்,
ரசாயனக் கழிவால்
புரட்டி எடுக்கப்பட்ட
அந்த பிணங்களை
மனிதர்கள் என்று
இப்பொழுதாவது
அடையாளம் காண
முடிகிறது அல்லவா?

நெஞ்சை அறுக்கும்
சோகம் இது…
நினைத்தே பார்க்க முடியாத
விதங்களில்
முதலாளித்துவம்
நம்மைக் கொல்லும்
காலம் இது.

இப்படியா
சாவு வரவேண்டும்?
மூலதனத்தால்
மெல்லமெல்ல
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பதை
வாழும் போது
அவர்கள் அறிந்தார்களா?
தெரியவில்லை!
சாகடிக்கப்பட்ட நேரத்திலும்
அவர்கள்
உணர்வதற்கு வாய்ப்பில்லை!

tannery-workஎதற்காக வாழ்கிறோம்
என்பதை தெரிந்து கொள்ளவும்
அவர்களுக்கு நேரம் வாய்க்கவில்லை.
எதற்காகச் சாகிறோம்
என்பதை
அறிந்து கொள்ளவும்
அவர்களுக்கு வாழ்க்கை இல்லை!

இரவில் வந்த
சாவின் இரைச்சல்
அசைக்க முடியாதபடிக்கு
பகலின் வேலைகள்
ஏற்கனவே அவர்களை
பாதி கொன்றிருந்தது.

வாழ முடியாத
வாழ்க்கையின் கனவுகளை
மீளமுடியாத மரணம்
அவர்கள் கண்களிலேயே
புதைந்து விட்டது

நம்மைப்போலவே…
ஒரு தாயால்
பத்து மாதம் பார்த்து பார்த்து
சுமந்து பெத்தவர்களை
நிமிடத்தில்
மூலதனத்தின் லாபவெறி
சிதைத்துவிட்டது.

இரசாயனக் கழிவு
“திட்டமிட்டே…தெரிந்தே தேக்கி வைக்கப்பட்ட மூலதனத்தின் நஞ்சு,ரத்தமும், சதையும் நம்மைப்போலவே சுவாசமும், கற்பனையும் கொண்ட தொழிலாளர்களை மூழ்கடித்தது”

விதிமுறைகளை மீறி
வரையறைகளைத் தாண்டி
திட்டமிட்டே…தெரிந்தே
தேக்கி வைக்கப்பட்ட
மூலதனத்தின் நஞ்சு,
ரத்தமும், சதையும்
நம்மைப்போலவே
சுவாசமும், கற்பனையும் கொண்ட
தொழிலாளர்களை மூழ்கடித்தது
விபத்தா?
இல்லை… இது
திட்டமிட்ட படுகொலை!

இனி என்ன?

ஏழைகளுக்கு
மானியம் தருவதுதான்
அரசின்
வளர்ச்சிக்கு தடை
ஆதலால்
பிணங்களுக்கு
விலை பேசும்
தொழில் வளர்ச்சி தொடரும்…

கொலையாளிகளே
தடயங்கள் சேகரிக்கும்
நாடகம் நடக்கிறது,

மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு
இப்போதுதான்
அங்கே சட்டவிரோத
கழிவுநீர் தொட்டிகளே
கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது!

தொழிலார் நல ஆணையத்துக்கோ
தொழிலாளிகளாக சில மனிதர்கள்
அங்கு இருந்திருப்பதே
இப்போதுதான்
தோலுக்கு உரைத்திருக்கிறது!

insider-tanneryகால்கட்டு, கைகட்டு
வாய்கட்டை
வாழும்போதே
சட்டத்தால் சரிக்கட்டிய
சட்டம்-ஒழுங்கு
மீண்டும் ஒரு முறை
பிணங்களை பரிசோதிக்கிறது!

உண்மைகள்
மீண்டு விடக் கூடாதென்று!
உரிமைகளை பிணமாக்கிய
ஒவ்வொரு அரசுத் துறையும்
பிணங்களின் உரிமைகளை
பாதுகாக்க வந்துவிட்டன.

போயசு கழிவிற்கு
கோயில் கோயிலாக
பூசை செய்யும் அமைச்சர்களுக்கு
இப்பொழுதுதான்
ராணிப்பேட்டை சிப்காட்டில்
ரசாயன கழிவிருப்பதே
தெரிந்திருக்கிறது!

எல்லாமே
இப்பொழுதுதான் தெரிந்ததுபோல
அரசும், ஆளும் வர்க்கமும்
நடிக்கிற நடிப்பில்
வெளிப்படும் கழிவு
அமிலத்தை விட கொடியது!

ராணிப்பேட்டை மட்டுமா?

நாடெங்கும்
மூலதன லாபவெறியின்
ரசாயனத் தொட்டிகள்
நம்மைச் சுற்றி
எழுப்பப்பட்டுள்ளன…

ஐ.டி நிறுவனங்கள்
தகவல் தொழில்நுட்ப (I.T.) நிறுவனங்கள்… இங்கெல்லாம் கொத்தடிமைகளாக பிணைக் கைதிகளாக நம்மைப் பிடித்து வைத்திருக்கிறது மூலதனத்தின் ரசாயனம்.

ஆந்திரா அரிசி ஆலைகள்…
பெங்களூர் கல் குவாரிகள்
மகாராஷ்ட்டிரா மிட்டாய் கம்பெனிகள்…
குஜராத் உப்பளங்கள்..
கூர்கான் தொழிற்சாலைகள்…
திருப்பூர் சாயப்பட்டறைகள்…
கோவை பஞ்சாலைகள்…
திருப்பெரும்புதூர் பன்னாட்டுக் கம்பெனிகள்..
தகவல் தொழில்நுட்ப (I.T.) நிறுவனங்கள்…

இங்கெல்லாம்
கொத்தடிமைகளாக
பிணைக் கைதிகளாக
நம்மைப் பிடித்து வைத்திருக்கிறது
மூலதனத்தின் ரசாயனம்.

வேறு வேறு விதமாய்
அது வெடித்துக் கொல்வதை
உணர
வெறும் மனித உணர்வு
மட்டும் போதாது
வர்க்க உணர்வு வேண்டும்!

கூட்டுக் கொலையாளிகளின்
வர்க்கக் கொடூரத்தை
காட்டிச் சென்றுள்ளார்கள்
கழிவில் துடித்த தொழிலாளிகள்

செத்துப்போன தோலின்
ரசாயன நஞ்சை விட,
நிலைமைகள் உணர்த்தும்
உண்மைகளை உணராத
உயிருள்ளவர் தோலின்
உணர்ச்சிகள் அபாயகரமானவை…

மெட்ரோ தொழிலாளிகள் 2
அதிரும் எந்திரங்களின் ஒலியில் மெட்ரோ ரயில் பணிகளில் சத்தமில்லாமல் கொல்லப்படுபவர்கள் எத்தனை?

அதிரும் எந்திரங்களின் ஒலியில்
மெட்ரோ ரயில் பணிகளில்
சத்தமில்லாமல்
கொல்லப்படுபவர்கள் எத்தனை?
விண்ணை முட்டும்
நகரத்து
கட்டிட கவர்ச்சிக்காக
பளபளக்கும்
வண்ணக் கலவையில்
கலந்த
இளரத்தம் எவ்வளவு?

எண்ணூர் பவுண்டரிகளின்
இரும்புக் குழம்பில்
அடையாளம் தெரியாமல்
கரைந்துபோன முகங்கள் எத்தனை?

கண்ணுக்கு நேரே
வாழ்வின் அதிர்ச்சிகளை,
பிறரின் துன்பங்களை
கண்டும் காணாத மனம்
சாவின் அதிர்ச்சியில்
உறையும் என்று!

நம்பாமல் செத்தவர்களின்
பார்வை,
நம்மையும் குற்றம் சாட்டுகிறது!
ஒன்று தற்கொலை
இல்லையேல் கொலை
என்று நெருக்கும்
இந்தக் கட்டமைப்பை
நொறுக்கும் சக்தியை
தேடித் தவித்து
உணர்ச்சிகளை எழுப்புகின்றன
அந்தப் பிணங்கள்.

யாருக்கு வேண்டும்
உங்கள் அனுதாபம்?
ஒட்டுமொத்த குடும்பமே
ஊருக்கு பிணமாகத் திரும்பும்
கொடுமையின் காரணங்களை
தட்டிகேட்க முடிந்தவர்கள்
கிட்ட வாருங்கள்!

மேற்கு மிதினாப்பூர் குடும்பங்கள்
யார் பெற்ற பிள்ளைகளோ அவர்கள்? இல்லை… நம் வர்க்கத்து கருவறையில் வந்த உடன் பிறப்புகள்!

இறந்தவர்களுக்கும்
நமக்கும் என்ன உறவு?
“அங்கே இருப்பவர்களும்
நம்மைப்போல
உழைத்து வாழும் மனிதர்கள்தானே”
என்ற நம்பிக்கையில்தானே
அவர்கள்
வந்திருப்பார்கள்.

யார் பெற்ற
பிள்ளைகளோ அவர்கள்?
இல்லை…
நம் வர்க்கத்து கருவறையில்
வந்த உடன் பிறப்புகள்!
உழைக்கும் இனமாய்
தேநீர் கடையிலும்..
கையேந்தி உணவகத்திலும்
கடைத்தெருவிலும் …
ஒன்று கலந்தவர்கள்

அன்வர் கான்
தனது மகன் 46 வயதான அன்வர் கானையும், 22 வயதான அலி அக்பர் கான், 19 வயதான அலி அஸ்கர் கான் இரண்டு பேரன்களையும் அன்வர் கான் மேற்கு வங்க கிராமத்தில்…

பிணமாய்
மேற்கு வங்கம் திரும்புவது
ஏற்க கூடியதா?
அபிப்கான்
அவரது மகன்கள்
அலிஅக்பர், அலி ஆஸ்கார்
சகோதரர்கள் ஷாஜகான், குதூம்
சுக்குர், ஏசியாம்,பியார்
அக்ரம்- கண்களோடு
கண்ணமங்கலம் சம்பத்
விழி குளறி
மூச்சு துடித்த அந்த நேரம்,
என்ன நினைத்திருப்பார்கள்?
யாரை அழைத்திருப்பார்கள்?
என்ன சொல்லி துடித்திருப்பார்கள்?

மூழ்கடிக்கப்பட்டவர்களால்
சொல்ல முடியவில்லை…
தேக்கி வைக்கப்பட்டிருக்கும்
மூலதனத்தின் சாவுத் தொட்டிகளுக்கிடையே
மீதமிருப்பவர்களே
நீங்கள் சொல்லுங்கள்!
கழிவாய்த் தேங்கி
உடையக் காத்திருக்கும்
இந்தக் கட்டமைப்பை
விழிப்போடு நாமே
உடைத்து எறிவதை விட
வேறு என்ன
வாழ வழி?!

– துரை.சண்முகம்

Ranipet-Murder-2

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்