privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்

அதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்

-

ஊழல், லஞ்சம் பெறும் அதிகாரிகள் குறித்த புகார்களை எங்களிடத்தில் தெரிவிக்கவும் – வி.வி.மு அறிவிப்பு

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்

ழல் செய்வது, லஞ்சம் பெறுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. கிராம அலுவலர் தொடங்கி, மாவட்ட ஆட்சியர்கள் வரையில் தகுதிக்கு தகுந்தவாறு லஞ்சமும், ஊழல் செய்வதும் நடந்தேறுகிறது. அரசு துறைகள் அனைத்திலும் இதே நிலைதான் நீடித்து நிற்கிறது.

அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளுக்கும், சான்றிதழ் பெறுவதற்கும் இருக்கின்ற தாலுகா அலுவலகம்,  வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச, ஊழல்களை பற்றி சொல்லவே தேவையில்லை.  வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு காசில்லாமல் மனுக்கள் நகருவதில்லை. ஆதரவற்றவர்களும், முதியோரும் உதவித் தொகையை நிறுத்தி விட்டதாக தினம் தோறும் அலுவலகம் முன்பு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவித் தொகைக்கு கூட காசு இல்லாமல் செய்வதில்லை. லஞ்சமே அறிவிக்கப்படாத சட்டமாகி விட்டது.

மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறி இருக்கின்றன. எந்த புது சட்டம் வந்தாலும் இதனை தடுக்க முடியவில்லை. லஞ்சம் பெறுவது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்கின்றனரே தவிர லஞ்சம் வாங்குபவர்களுக்கு கூட்டாளியாகவும் முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு சோதனை செய்யும் கீழ்த்தரமான வேலை செய்பவர்களாகவும் உள்ளனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறி இருக்கின்றன.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டிடம் கட்டி விட்டதாகவும், சாலைகள் போடப்பட்டதாகவும், தெருவிளக்கு சரி செய்யப்பட்டதாகவும், குடிநீர் வழங்கப்பட்டதாகவும் பொய்யைக் கூறி பெரும் ஊழலில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகளும், கரை வேட்டிகளும் கூட்டாக நடத்தும் ஊழல்கள் திறமையாக மறைக்கப்படுகின்றன.

“இந்தப் பிரச்சனைக்கு போலீசு, நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் அடங்கிய இந்தக் கட்டமைப்புக்குள் என்ன தீர்வு இருக்கிறது? ஊழல், லஞ்சம் பெறும் அதிகாரிகளை நாம்தான் எதிர்கொண்டு சரி செய்ய வேண்டும். அவர்களைப் பற்றிய புகார்களை எங்களிடத்தில் தெரிவியுங்கள். லஞ்சம், ஊழலை முறியடிக்க களத்தில் இறங்கி போராடுவோம்.”

என்று பென்னாகரத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

10-2-2015 செவ்வாய்கிழமை அன்று மூன்று தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரிய தட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரிய தட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

சிறிது நேரத்தில் போலீசு படை பரிவாரங்களோடு வந்தது. போலீசை பார்த்ததும் மக்கள் திரளாக சூழ்ந்து கொண்டனர். உடனே தட்டியை அகற்ற வேண்டும் என்றும் அனுமதி இல்லை என்றும் சட்டம் பேசியது போலீசு.

உடனே சுற்றியிருந்த மக்கள் மத்தியில் நின்றிருந்து தோழர்கள், “என்ன தவறாக தட்டி வைத்துள்ளனர். லஞ்சம் வாங்குவது தவறு என்றுதானே சொல்றாங்க. இதற்கு எதற்கு அனுமதி” என்று வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களில் ஒருவர், “நானே,இரண்டு நாளா வந்து போறேங்க” என்று ஆதங்கப்பட்டார்.

போலீசோ, “லஞ்சம், ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. அதை எதிர்ப்பதை அனுமதி பெற்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்” என்றனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
“லஞ்சம், ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. அதை எதிர்ப்பதை அனுமதி பெற்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்”

“ஒரு தனிநபர் தட்டியை வைத்துக் கொள்வது சட்டத்தை மீறிய செயலா? பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 52 புரோக்கர்கள் உள்ளனர். லஞ்சம் பெறுவதற்கே அவர்களை அதிகாரிகள் வைத்துள்ளனர்.” என்று பேசிய உடனே போலீசு கீழே இறங்கி மன்றாட தொடங்கியது. “கலைந்து செல்லுங்கள்” என்று பணிவாக பேசினார்கள்.

“மோடி ஊழல் ஒழிப்பு என்று சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் கலைந்து போக வேண்டுமா. இல்லை, எங்களை கைது செய்யுங்கள்” என்று தோழர்கள் பேச,

“இல்லை, கைது செய்ய முடியாதுப்பா” என்று குழைந்தது போலீசு.

“லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுக்கிறோம். நடவடிக்கை எடுங்க” என்று வாதத்தில் இறங்கினோம்.

கைதும் செய்ய முடியாமல், மிரட்டவும் முடியாமல் திகைத்து நின்றது போலீசு.

“லஞ்சம் வாங்குவது தவறு என்று போராடினால் உளவுத் துறை படம் பிடிக்கிறது. அலுவலகத்துக்குள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து போய் படம் பிடியுங்கள்” என்று தோழர்கள் பேச படம் பிடிப்பதை நிறுத்திக் கொண்டது உளவுத் துறை போலீசு.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
“லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுக்கிறோம். நடவடிக்கை எடுங்க”

பல பெண்கள் உட்பட மக்கள் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு, “எங்கள் பிரச்சனையை தீர்க்க இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாமா” என்று கேட்டுச் சென்றனர். “நீங்கள் செய்வது சரியானது, தொடர்ந்து செய்யுங்கள்” என்றனர்.

ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அங்கிருந்து சென்று பேருந்து நிலையம், மக்கள் கூடம் இடங்களில் பிரச்சாரம் செய்தோம். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மக்கள் மனக் குமுறலோடு இருப்பதை காண முடிந்தது.

லஞ்சத்தையும், ஊழலையும் போலீசு, அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை, நீதிமன்றம், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அடங்கிய இந்தக் கட்டமைப்புக்குள் ஒழிக்க முடியாது. இதனை அடியோடு ஒழித்துக் கட்ட அரசையும், அதிகாரிகளையும் நாமே தட்டிக் கேட்கும் வகையில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அதுதான் தீர்வாக இருக்கும்.

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம்
9943312467

  1. “லஞ்சம் வாங்குவது தவறு என்று போராடினால் உளவுத் துறை படம் பிடிக்கிறது. அலுவலகத்துக்குள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து போய் படம் பிடியுங்கள்” என்று தோழர்கள் பேச படம் பிடிப்பதை நிறுத்திக் கொண்டது உளவுத் துறை போலீசு.——அடடா.. நல்ல போலீசா….. இருக்கு…????

  2. நல்ல முயற்சி. பாராட்டுகள். இது போன்ற உருப்படியான போராட்டங்களை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும். அன்னா ஹசரே அமைப்பும், அதன் மூலம் தோன்றிய ஆம் ஆத்மி கட்சியும் இதே போன்ற லட்சியங்களுக்காக தான் போராடுகிறார்கள். அவர்களை ‘நட்பு’ சக்திகளாக பாவிப்பதே விவேகம். இன்று பொது எதிரி ஊழல்மயமான அரசு எந்திரமும், அதை ‘பயன்படுத்தி’ கொள்ளையடிக்கும் மாஃபியா வகை போலி ‘முதலாளிய’ கும்பல்களும் தான். வெறும் வறட்டு மார்க்சியம் பேசி, மொத்த புரட்சி வேண்டும் என்று போராடுவதில் பயனில்லை. இது போன்ற லோக்கல் பிரச்சனைகளில் அனைத்து ஜனனாயக சக்திகளும் ஒன்று பட்டு எதிர்பதே விவேகம். நடைமுறை சாத்தியமும் அது தான்.

    ஆம் ஆத்மி கட்சி சில விசியங்களில் ‘சோசியலிச’ பார்வை கொண்டவர்கள் தான். அதில் அவர்களோடும் முரண்படவே செய்கிறேன். இருப்பினும் சென்ற வருட தேர்தலுக்கு முன்னால் அதில் சேர்ந்து பணியாற்றினேன். நேர்மையானவர்கள் தான் (அதாவது ஊழல் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அல்லாமல், சேவை மனோபாவ லட்சியத்துடன்) அரசியலுக்கு அடிப்படை தேவை. கொள்கை முரண்பாடுகள் (இடது / சந்தை பொருளியல்) பற்றி பெரிதாக அலட்டிக்க தேவையில்லை. அதை பிறகு தேவைபடும் போது விவாதித்து, பொது கருத்தை அடைந்து சரியான செயல் திட்டங்களை வகுக்க முடியும். ஆனால் முதல் தேவை, மாஃபியா வகை கும்பல்களை துணிச்சலுடன் களத்தில் நின்று எதிர்க்கும் களப்பணியாளர்கள்.

  3. லஞ்சத்தை ஒழிக்க முக்கியமான, சரியான, செயலூக்கமுள்ள ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். பாராட்டுகள்! அரசு அலுவலகங்களில் தனி நபராக விண்ணப்பங்களைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தால் காரியங்கள் நடக்காது. தனி நபரால் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கவும் முடியாது. அதனால் தனிநபர்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.தனிநபர் பாதிக்கப்படும்போது மக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகத் திரண்டு அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும்போதே அதிகார வர்க்கம் பயப்படும். மக்களும் தங்கள் பலத்தை உணர்வார்கள். அமைப்பின் தேவையையும் உணர்வார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க