privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கிரானைட் கொள்ளை : கிராமப்புறங்களின் மீது நடத்தப்படும் போர்!

கிரானைட் கொள்ளை : கிராமப்புறங்களின் மீது நடத்தப்படும் போர்!

-

மிழகத்தில் நடந்துள்ள/நடந்துவரும் கிரானைட் கொள்ளை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கெனவே பத்திரிகைகள் வாயிலாக வெளிக் கொணர்ந்துள்ளனர்.  குறிப்பாக, தமிழகத்தில் இயங்கிவரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டப் பகுதிகளில் அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்துள்ள கிரானைட் கொள்ளை, முறைகேடு பற்றி ஒரு முழுமையான வீடியோ படமொன்றை வெளியிட்டிருக்கிறது.

கிரானைட் மெகா கூட்டணிகிரானைட் கற்களை வெட்டியெடுத்து, பாலிஷ் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘தொழில்’ தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நடந்துவருகிறது. இதில் மதுரை மாவட்டத்திலுள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிபட்டி ஆகிய நான்கு பகுதிகளில் மட்டும் 83 கிரானைட் குவாரிகள் முறைகேடாக நடந்து வந்ததையும் அக்குவாரிகளில் இருந்து 39,30,431 கன மீட்டர் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டதால், தமிழக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதையும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கையாக அளித்தார்.  அந்த அறிக்கையிலேயே, “அறிவியல்பூர்வமான நவீனகாலத் தொழில்நுட்ப உதவியோடு ஆய்வு செய்தால் இந்த நிதியிழப்பு இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார், அவர்.

இதோடு மற்ற மாவட்டங்களில் நடந்துள்ள கிரானைட் கொள்ளையை, அக்கற்களின் சந்தை மதிப்பின்படி கணக்கிட்டுப் பார்த்தால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமாக பத்து இலட்சம் கோடி ரூபாயைத் தொடக்கூடும் என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.  பண வடிவிலான இந்த இழப்பு ஒருபுறமிருக்க, கிரானைட் கொள்ளையால் சாதாரண மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும், இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன. இந்தக் கொள்ளையும், நாசமும், பேரழிவும் அரசுக்குத் தெரியாமல், தலையாரி தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரையிலான அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்துவிடவில்லை என்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களும், கூறு போடப்பட்ட மலைகளும், சிதைக்கப்பட்ட புராதனச் சின்னங்களும், நாசமாக்கப்பட்ட கண்மாய்களும், ஓடைகளும், வயல்வெளிகளும், தரைமட்டமாக்கப்பட்டு அழிக்கப்பட்ட  கிராமங்களும் சாட்சியங்களாக உள்ளன.

கிராமங்களின் அழிவு

பொக்கிஷ மலை
கிரானைட் கொள்ளையின் வீச்சையும் கொடூரத்தையும் எடுத்துக் காட்டும் கீழவளவு பகுதியில் அமைந்துள்ள பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலை.

கிரானைட் கொள்ளையைக் கிராமப்புறங்களின் மீது நடத்தப்பட்ட போர் என்றே குறிப்பிடலாம்.  சாகுபடி நிலங்களையும் மேய்ச்சல் பூமியையும் விழுங்கி, கண்மாய்களையும் ஓடைகளையும் குளங்களையும் பாசன வாய்க்கால்களையும் ஆக்கிரமித்துக் கிராமப்புற பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததோடு, பல கிராமங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்திருக்கிறது, கிரானைட் மாஃபியா கும்பல்.  புது தாமரைபட்டி, ரெங்கசாமிபுரம், டி.குண்டங்கால், சிவலிங்கம் என்ற ஊர்களெல்லாம் ஆள் அரவமற்று கிரானைட் கழிவுகள் கொட்டப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாறிக்கிடப்பதை அக்கிராம மக்கள் சகாயத்திடம் சாட்சியமாகப் பதிவு செய்துள்ளனர்.

புது தாமரைபட்டி கிராமத்தை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்த கதை வேதனையும் வக்கிரமும் நிறைந்தது.  “கிராமத்தைச் சுற்றி கிரானைட் தோண்டுவதற்கு பி.ஆர்.பி. கம்பெனி வைத்த வெடிகளால், வீடுகள் பிளந்து இடிந்து விழுந்தன. இது பற்றி புகார் சொன்னதால், அங்கு வேலைபார்க்கும் நபர்கள் எங்கள் தெருவில் உள்ள அடிபம்பில் வந்து ஜட்டியுடன் குளித்தார்கள். சிலசமயம் ஜட்டியுங்கூட இருக்காது. இதனால பொம்பளைங்க பயந்துகிட்டு தண்ணீர் எடுக்கப் போக மாட்டாங்க. ஒருநாள் தனியா போன ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை தந்தாங்க. அந்தக் காலியைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தோம். பி.ஆர்.பி. மைத்துனர் வந்து அவனை மீட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தினமும் தொல்லை தந்தாங்க. ஐந்து தலைமுறைகளாக புது தாமரைபட்டியில் வாழ்ந்து வந்த நாங்கள், அதன் பிறகு மானத்தை அடகுவைத்து குடியிருக்க முடியாம வேறு இடம் போவிட்டோம்” என சகாயத்திடம் கதறி அழுதபடியே சாட்சியம் அளித்திருக்கிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த முருகன்.

கீழையூர் அருகேயுள்ள ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்துகொண்டும், மிரட்டலுக்குப் பயப்படாத விவசாயிகளின் நிலங்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்டியும், வாய்க்கால் மற்றும் பாசனக் கிணறுகளை மண்ணைப் போட்டு மூடியும் அக்கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்திருக்கிறது, கிரானைட் கொள்ளைக் கும்பல்.

மேலூர் அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சூரியனேந்தல் கண்மாய் ஏறத்தாழ 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 83 ஏக்கரில் கிரானைட் கழிவுகளைக் கொட்டி, இந்தக் கண்மாயை வெறும் 2 ஏக்கராகக் குறுக்கிச் சீரழித்துவிட்டது, கிரானைட் கொள்ளைக் கும்பல்.  இக்கண்மாய்யில் 80 அடி ஆழம் வரை தோண்டி கிரானைட் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் அளித்த புகாரை ஆதாரமாகக் கொண்டு இக்கண்மாயை சகாயம் ஆய்வு செய்தபொழுது, இக்கண்மாய் வெறும் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டதென்றும், 1.27 ஹெக்டேர் நிலத்திற்கு மட்டுமே பாசன வசதி அளிப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூசாமல் புளுகினர்.

சூரியனேந்தல் கண்மாய்
85 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த சூரியனேந்தல் கண்மாய், வெறும் இரண்டு ஏக்கராக குறுகிப்போன அவலத்தை ஆய்வு செய்யும் சகாயம்.

கீழவளவு பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 47 ஏக்கர் பரப்பு கொண்ட சிறுமாணிக்கம் கண்மாயை பல்லவா கிரானைட் என்ற நிறுவனம் ஆக்கிரமித்து, கிரானைட் கழிவுகளைக் கொட்டி அழித்துள்ளது. இதே பகுதியில் அமைந்துள்ள 1.44 ஏக்கர் பரப்புள்ள பழுதூர் ஊரணி, 9 ஹெக்டேர் பரப்புள்ள வேப்பங்குளம் கண்மாய் ஆகியவற்றைக் கழிவுகளைக் கொட்டி மேடாக்கி, அதன் மீது தனது ஷெட்டுகளை அமைத்திருக்கிறது, பி.ஆர்.பி. நிறுவனம். செட்டிகுளம் கண்மாயில் 76 அடி ஆழம் வரை தோண்டி கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதால், அக்கண்மாயின் தோற்றமே மாறிப்போவிட்டது.

இவை தவிர, பாறைக்குளம் கண்மாய், மேலப்பட்டி குளம், மேடங்குளம், கொல்லங்குண்டு கண்மாய், கீழையூர் சிசி கண்மாய், எரிச்சியூர் மணியன் கண்மாய், பிள்ளையார் கண்மாய், கொணப்பகோன் கண்மாய், இடையன் கண்மாய் – என கீழவளவு பகுதியில் மட்டும் காணாமல் போவிட்ட 42 கண்மாய்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார், சகாயம். “கிணற்றைக் காணோம்” என்ற வடிவேலுவின் காமெடி சீன், மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நிஜமாகவும் குரூரமாகவும் அரங்கேறியிருக்கிறது. இக்கண்மாய்களின் அழிவு என்பது அவற்றைப் பாசனத்திற்கு நம்பியிருந்த கிராமங்களின் அழிவு என விளங்கிக் கொள்வதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.

கண்மாய்கள் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்தில் கிரானைட் வெட்டியெடுக்கப்பட்ட 80 சதவீத இடங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானவைதான்.  மதுரை மாவட்டத்தில் கிரானைட் ‘தொழில்’ செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்றிடம் மட்டும் 20,000 ஏக்கருக்கும் மேற்பட்ட சாகுபடி நிலங்கள் சட்டவிரோதமாகக் குவிந்திருப்பதாகவும், அதனை மீட்கக் கோரியும்  மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்.

கிரானைட் கொள்ளையர்கள் எந்தளவிற்குச் சட்டவிரோதமாகவும் கொடூரமாகவும் கிராமப்புற விவசாயிகளைச் சூறையாடி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை திருதாவூரும் புதுத் தாமரைப்பட்டியும் எடுத்துக்காட்டுகின்றன. திருவாதவூரில் 1,245 ஏக்கர் விளைநிலங்களை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டதாக அவ்வூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி சகாயத்திடம் புகார் அளித்திருக்கிறார்.  அவ்வூரிலுள்ள மொத்த சாகுபடி பரப்பே 1,300 ஏக்கர்தான் என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுதுதான் இந்த ஆக்கிரமிப்பின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.  மேலும், அவ்வூரிலுள்ள 1,500 ஏக்கர் அரசு நிலங்களையும் அந்நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

கிரானைட் மாஃபியா
மதுரை அருகேயுள்ள குண்டங்கால் பகுதியில் வாழ்ந்துவந்த 83 குடும்பங்கள் கிரானைட் மாஃபியா கும்பலால் துரத்தியடிக்கப்பட்டதை சாட்சியமாக அளிக்கும் விவசாயி.

புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த பாசுவதம் என்ற 62 வயது மூதாட்டி, “10 வருடங்களுக்கு முன்பு ஐ.ஆர்.8 என்ற நெல், ஏக்கருக்கு 110 மூட்டைகள் வீதம் விளைந்து விருது வாங்கின பூமி இது. கிரானைட் இருக்குனு தெரிந்ததும் எங்களை மிரட்டியும், தராதவர்களை அடித்தும் வாங்கினார்கள். இப்போ எல்லா நிலங்களும் போய் கட்டிட வேலைக்கும் போறோம்.  நெல், தானியம்னு பொன்விளைந்த பூமி இப்போ சுடுகாடா கிடக்கு” என சகாயத்திடம் கண்கலங்கி சாட்சியம் அளித்திருக்கிறார்.

அதே ஊரைச் சேர்ந்த பூமா என்ற இன்னொரு மூதாட்டி, “என் நான்கு ஏக்கர் நிலத்தை மிரட்டிக் கேட்டும் தரலை.  அதனால என் நிலத்துக்குப் போகவிடாமல் வேலி போட்டு அடைத்துவிட்டனர். அறுவடை செய்யக்கூட முடியல. ஒத்த பொம்மனாட்டியா இவங்ககூட மோதிக்கிட்டு இருக்கேன்” என சகாயத்திடம் கூறி, தனது வயலைக் காண்பித்திருக்கிறார்.

பாசனக் கண்மாய்களையும், இரு போகம் விளையக்கூடிய நிலங்களையும் ஆக்கிரமித்து, அவற்றைக் குப்பைத் தொட்டிகளாகச் சீரழித்த பிறகு, எந்த கிராமமாவது உயிர்த்துடிப்போடு இருக்குமா?

மலை விழுங்கி மகாதேவன்கள்

திருவாதவூர் அருகேயுள்ள ஓவா மலை, கீழவளவு பகுதியிலுள்ள பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலை, அரிட்டாபட்டியில் உள்ள பெருமாள் மலை உள்ளிட்ட ஏழு மலைகள், கீழையூர், கீழவளவு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பஞ்சபாண்டவர் மலை, இ.மலம்பட்டியிலுள்ள புறாக்கூண்டு மலை மற்றும் இம்மலைகளில் இருந்த சுனைகள், புராதனச் சின்னங்கள், மலைகளைச் சுற்றியிருந்த கண்மாய்கள் அனைத்தையும் பி.ஆர்.பி., ஒலிம்பஸ், பி.கே.எஸ்., சிந்து உள்ளிட்ட நிறுவனங்கள் தமக்குள் கூறுபோட்டுக் கொண்டு சிதைத்துள்ளன.

வாச்சாம்பட்டி அய்யங்காளை
கிரானைட் கொள்ளை பற்றி சாட்சியம் அளித்ததால், போலீசார் தன்னைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டியதை சகாயத்தின் காலில் விழுந்து சொல்லும் வாச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யங்காளை.

“பொக்கிஷ மலையை, நடுப்பகுதி எனக்கு, வால் பகுதி உனக்கு, சைடு பகுதி அவருக்கு – என துண்டுதுண்டாக அறுத்து பங்குபோட்டுக் கொண்டன பி.ஆர்.பி., பி.கே.எஸ்., ஒலிம்பஸ் நிறுவனங்கள். இந்த மலையைக் காப்பாற்ற நாங்கள் சட்டப்படி எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டும் மலையைக் காப்பாற்ற முடியவில்லை” என சகாயத்திடம் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொக்கிஷ மலை களவாடப்பட்டதை விளக்கியிருக்கிறார், அப்பகுதி ஜமாஅத் தலைவர் முகமது காசிம்.

இந்து, முசுலீம் மதங்களைச் சேர்ந்தவர்கள் யார் திருமணம் செய்தாலும் பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலைக்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என மக்களிடம் வழிவழியாக நம்பிக்கை இருந்துவரும் அளவிற்கு இம்மலை அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறது.  அப்படிபட்ட புராதன மலை இன்று அலோங்கோலமாகிக் கிடக்கிறது.

92 அடி உயரம், 200 அடி நீளத்தில் 21 ஏக்கரில் அமைந்திருந்த புறாக்கூண்டு மலை இன்று அரசு ஆவணங்களில் மட்டுமே உள்ளது. 2006-ல் இம்மலையை டாமின் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், அம்மலையில் புதைந்திருந்த காஷ்மீர் ஒயிட் என்ற விலையுயர்ந்த கிரானைட் கற்களை வெட்டியெடுப்பதற்காக மூன்றே மாதத்தில் பரந்து விரிந்திருந்த இம்மலையை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டது.

திருதாவூரில் அமைந்துள்ள ஓவா மலை 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதன மலையாகும் என்பதோடு, தமிழ் மக்களின் கலாச்சார, வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்துள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதிப் படிக்கும் பண்பாட்டைப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக இம்மலையில் கல்வெட்டுகள் இருந்துள்ளன.  இம்மலை குகையில் 10 சமணர் படுகைகள் இருந்துள்ளன. இம்மலைக்கு மேலுள்ள சிவன் கோவிலுக்கு மாணிக்கவாசகர் வந்து சென்றிருக்கிறார்.  இவை அனைத்தும் பி.ஆர்.பி. மற்றும் சிந்து கிரானைட் கொள்ளைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்டுவிட்டன. புராதனச் சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டு, அவை சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஓவா மலையில் அமைந்திருப்பதைப் போலவே அரிட்டாபட்டியில் உள்ள மலைகளிலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும், சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன.  தேசிய புராதனச் சின்னங்களாக இவை அறிவிக்கப்பட்டிருப்பினும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இம்மலையில் சமணர் பள்ளியைக் குடைந்து கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன.  இம்மலையில் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட 365 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமுத்திரம் நீர்த் தேக்கமும் கிரானைட் கொள்ளையால் அழிந்து போனது.

நரபலி உள்ளிட்ட கிரிமினல் குற்றங்கள்

கிரானைட் குவாரிகளில் புதிய பொக்லைன், புதிய கிரேன் இயந்திரங்களை இயக்குவதற்கு முன்பு நரபலி கொடுப்பது வாடிக்கையாக நடந்துள்ளது.  குறிப்பாக, பி.ஆர்.பி. நிறுவனத்தில் நரபலி கொடுப்பது கோழியை அறுத்துப் பலி கொடுப்பது போல சர்வசாதாரணமாக நடந்திருப்பதை அந்நிறுவனத்தில் வேலைபார்த்து, பின்னர் வெளியேறிவிட்ட சேவற்கொடியான், பழனிவேல் ஆகிய இருவரும் சகாயத்திடம் மனுவாகவே எழுதிக் கொடுத்துள்ளனர்.

இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
குவாரிக்குத் தனது நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் மாஃபியா கும்பலால் தனது கை வெட்டப்பட்டதை சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

சேவற்கொடியோன் பி.ஆர்.பி. நிறுவனத்தில் 1998 முதல் 2003 வரை ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார். அந்தச் சமயத்தில் ஆந்திரா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த பல ஏழைத் தொழிலாளர்களை நரபலி கொடுத்துவிட்டு, அவர்கள் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி இப்படுகொலைகளை மூடிமறைத்துவிடுவார்கள் என்றும்; மதுரை, கரூர், புதுக்கோட்டை பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பிடித்து வந்து நரபலி கொடுத்திருப்பதையும் சேவற்கொடியோன் தனது மனுவில் தகுந்த விவரங்களோடு குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பாக, மதுரை நகரில் சுற்றித்திரிந்த இரண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுப்பதற்காக மனோகரன் என்பவர் கூட்டிவந்தபோது, நான்தான் காரை ஓட்டி வந்தேன் என்று தனது மனுவில் சேவற்கொடியோன் கூறியிருக்கிறார்.

முன்னாள் இராணுவச் சிப்பாயான பழனிவேல் 1998 முதல் 2008 வரை பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியிருக்கிறார்.  கள்ளுதின்னி சேகர், ஜோதிபாசு, பழனி, சுப்பிரமணி ஆகிய நால்வரும் ஒரு மந்திரவாதியோடு சேர்ந்துகொண்டு 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைப் பொக்கிஷ மலைக்கு அருகேயுள்ள பல்லவா கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்ததை நான் நேரடியாகவே பார்த்தேன் என்று மனு கொடுத்திருக்கிறார், அவர்.

புதுத்தாமரைப்பட்டி உஷா
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது மூன்று வயது குழந்தை கோபிகா, பி.கே.எஸ் குவாரியில் நரபலியாகக் கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த உஷா.

தாமரைப்பட்டி கிராமத்திலுள்ள பி.கே.எஸ். குவாரியில் கோபிகா என்ற மூன்று வயது சிறுமி 2008-ம் ஆண்டில் நரபலி கொடுக்கப்பட்டார்.  இப்படுகொலை தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராடியதையடுத்து லாரி டிரைவர் ரவியை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கில் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, லாரி டிரைவர் ரவி, “போலீஸ் தன் மீது பொய்வழக்கு போட்டிருப்பதாக”  சகாயத்திடம் மனு கொடுத்திருக்கிறார்.

இக்கிரிமினல் குற்றங்கள் தவிர, ஆட்களைக் கடத்திக் காணாமல் போகச் செய்வது, கொலைவெறியோடு தாக்கி முடமாக்குவது என்பதெல்லாம் வரைமுறையின்றி நடந்துள்ளன. இ.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜா தனது நிலத்தைத் தர மறுத்ததற்காகத் தாக்கப்பட்டதில், அவர் தனது இடது கையை இழந்து முடமாகிப் போனார்.  திருமங்கலத்தைச் சேர்ந்த ஹேமத்தா என்ற பெண், கிரானைட் பிரச்சினை தொடர்பாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் சுரேஷ்குமார் அதன்பின் வீடு திரும்பவில்லை என சகாயத்திடம் மனு அளித்திருக்கிறார். பஞ்சபாண்டவர் மலையில் கிரானைட் வெட்டியெடுப்பதைத் தடுக்கும் தீர்மானம் போட்டதற்காகத் தன்னை வெட்ட முயன்றார்கள், இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள் என அம்பலப்படுத்தியிருக்கிறார், கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மலிங்கம்.

தீர்வு, எந்தப் பாதையில்?

பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மக்களின் சொத்துக்களான கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  இதற்கும் மேலாக, பல கிராமங்கள் அழிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் நாசமாக்கப்பட்டு, அவர்கள் அகதிகளாக, கையேந்திகளாகத் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். கண்மாய்கள், ஓடைகள், கால்வாய்கள், பழமை வாய்ந்த மலைகள் உள்ளிட்ட இயற்கையும், தமிழ் மக்களின் வரலாற்று ஆதாரங்களான புராதனச் சின்னங்களும் மீள் உருவாக்கம் செய்ய முடியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன.

பி.ஆர்.பி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன்
பி.ஆர்.பி கும்பலால் பல்லவா குவாரியில் 25 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நரபலி கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள பி.ஆர்.பி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன்

இவையெல்லாம் அரசுக்குத் தெரியாமல் நடந்து விட வில்லை.  புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள மலைகளை “தீர்வையற்ற தரிசு, பயனற்ற குளம்” என வருவாய்த் துறையினரே போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்து கிரானைட் கொள்ளைக்குத் துணை போயுள்ளனர். பஞ்சபாண்டவர் மலையை, குளம் என அரசு ஆவணங்களில் பதிவு செய்து, கிரானைட் மாஃபியாக்களிடம் ஒப்படைத்திருக்கிறது, அதிகார வர்க்கம். தலையாரிக்கு ரூ.1,000, வி.ஏ.ஓ.வுக்கு ரூ.5,000, வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு ரூ.50,000 என இலஞ்சப் பணம் மேலிருந்து கீழ்வரை பாய்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் கிரானைட் மாஃபியாக்களிடமே வேலைக்குச் சேர்ந்து பொதுச் சொத்துக்களை சுலபமாகவும் மொத்தமாகவும் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் போட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

அதேசமயம், இக்கொள்ளையைத் தடுப்பதற்கும், புராதனச் சின்னங்களைக் காப்பதற்கும் பகுதி மக்கள் நடத்திய போராட்டங்கள் கிரானைட் மாஃபியா கும்பலாலும், போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தாலும் கொடூரமாக நசுக்கப்பட்டிருக்கிறது. கிரானைட் கொள்ளை மற்றும் அட்டூழியங்கள் குறித்து சகாயத்திடம் புகார் மனு அளிக்கும் பொதுமக்கள் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகின்றனர். சகாயத்திடம் பி.ஆர்.பி. நிறுவனம் மீது புகார் மனு அளித்த ஒரே காரணத்திற்காக வாச்சம்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை என்பவரை போலீசார் கடத்திச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு, அவர் குடும்பத்தினர் மீது பொய்வழக்கும் போட்டுள்ளனர்.

இப்படிபட்ட நிலையில் என்ன செய்வது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. சென்னை உயர்நீதி மன்றமும் சகாயம் கமிசனும் கிரானைட் மாஃபியா கும்பலைக் கவனித்துக் கொள்ளும் என ஏமாளித்தனமாக நம்பி கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க போகிறோமா? அல்லது தமிழகத்தின் செல்வ வளங்களைக் காப்பதை, அதனைச் சுரண்டிக் கொழுத்த மாஃபியா கும்பலைத் தண்டிப்பதை நம் கரங்களில் எடுத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்தப் போகிறோமா என்பதைத் தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டிய தருணமிது.

– குப்பன்
_____________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________