Saturday, August 20, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !

நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !

-

க்சலைட்டுகள்தான் அரசுக்கெதிராக தாக்குதல் நடத்துகிறார்கள் என்று ஊடகங்கள் மூலம் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனில் சுற்றுலாவிற்கு பெயர்போன ஊட்டியில் நடந்த இப்போராட்டத்தை என்னவென்று அழைப்பது?

புலியால் கொல்லப்பட்ட மகாலட்சுமி
புலியால் கொல்லப்பட்ட மகாலட்சுமி (படம் : நன்றி தினத்தந்தி)

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது, பிதர்காடு ஓடோம்வயல் பகுதி. இங்கே சிவகுமார் என்பவரது 34 வயது மனைவி மகாலட்சுமி, கடந்த 14.2.2015 சனியன்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு புலியால் தாக்கி கொல்லப்பட்டார். பல தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் முன்னால் நடந்த இக்கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வனப்பகுதியில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் கடந்த காலத்திலும் நிறைய நடந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் மக்கள் புகார் கொடுத்தாலும் வனத்துறை எனும் அரசு எந்திரம் அதை அலட்சியமாக நிராகரிக்கும். இதனாலேயே மக்கள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணத்துடன் உடன் சாலை மறியல் செய்தார்கள். வழக்கம் போல ‘பேச்சு வார்த்தை’ மூலம் நீர்த்துப் போக வைக்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் சொல்லடியுடன் சில வல்லடிகளையும் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் கோரிக்கை எளிமையானது. “புலியைச் சுட வேண்டும், பலியான பெண் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்”. இக்கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. தண்டகரான்யாவில் பழங்குடி மக்களை கொல்லும் துணை இராணுவ வீரர்கள் பணியில் இறந்தால் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேல் அள்ளித்தருகிறது அரசு. டாடா, அதானி, அம்பானிகளின் கனிம கொள்ளைக்காக இப்படை வீரர்களுக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள்.

தேயிலை தோட்டத் தொழிலாளி
தேயிலை தோட்ட தொழிலாளிகள் பணியில் இறந்தால் அதை ஏதோ ஒரு தெரு நாய் இறப்பு போல கருதுவது ஏன்? (படம் : நன்றி manoramaonline.com)

ஆனால் பெரும்பாலான மக்கள் சுவைக்கும் தேநீருக்காக சமவெளி வாழ்க்கையின் வசதிகளை துறந்து கடுங்குளிரிலும், ஆபத்திலும் பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பணியில் இறந்தால் அதை ஏதோ ஒரு தெரு நாய் இறப்பு போல கருதுவது ஏன்?

மறியலில் ஈடுபட்ட மக்களோடு மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் அதிகாலை இரண்டு மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார். “நிவாரணப்பணி மூன்று இலட்சம்தான் வழங்க முடியும் மற்றதை பிறகு பார்க்கலாம், எங்களுக்கு அதிகாரமில்லை” என்று வழக்கம் போல சமாளித்தார். “சரி, உங்களுக்கே அதிகாரமில்லை என்றால் அதிகாரமுள்ளவர்களை அனுப்பு அல்லது எங்கள் அதிகாரத்தை காட்டுவோம்” என்று மக்கள் கொதித்தனர்.

நெலாக்கோட்டை வனச்சரக அலுவலகத்தை தாக்கிய மக்கள் அங்கிருந்த வனத்துறை வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அலுவலகக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, பொருட்களும் நொறுக்கப்பட்டன. மக்கள் கோபத்தால் சிவந்த அப்பகுதியே கலவர பூமியாக மாறியது. சில அதிகாரிகள், போலீசுக்கும் காயம் ஏற்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. பிறகு வருவாய் அலுவலர் மற்ற கோரிக்கைகளை – ஏழு இலட்சம் பணம் வழங்குதல், இறவந்தவரின் மகன் பத்தாம் வகுப்பு முடித்ததும் அரசு பயிற்சி அளித்து பணி வழங்குதல் -நிறைவேற்றுமாறு அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்ததும் பகல் 1 மணி அளவில் மக்கள் மறியலை கைவிட்டனர்.

நீலகிரி மாவட்ட வனப்பகுதி
நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியை நிர்மூலமாக்கியது சுற்றுலா தொழில் முதலாளிகளின் கைங்கர்யம்.

மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறக்காத மாவட்ட ஆட்சியர் சங்கர், “இனியும் கலவரம் நடந்தால் 144 தடையுத்தரவு போடக்கப்படும்” என்று மிரட்டியிருக்கிறார். தற்போது அரசு அளித்திருக்கும் வாக்குறுதிகள் கூட இழுத்தடித்து நீர்த்துப் போக செய்யும் உத்திதான் என்றாலும் அடுத்த முறை இந்த ‘கலவரங்கள்’ அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும்.

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியை நிர்மூலமாக்கியது சுற்றுலா தொழில் முதலாளிகளின் கைங்கர்யம். கூடவே பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் தோட்டங்களை கைப்பற்றி மேற்கு தொடர்ச்சி மலை எனும் மக்கள் சொத்தை ஏப்பம் விட்டதும் உண்மை. இந்த இயற்கையை அழிக்கும் சமநிலை குலைவால் யானைகள் சமவெளி நோக்கி இறங்குவதும், இரை தேடி வரும் புலிகள் மனிதரை தாக்குவதும் நடக்கிறது.

நீலகிரி புலி
இயற்கையை அழிக்கும் சமநிலை குலைவால் யானைகள் சமவெளி நோக்கி இறங்குவதும், இரை தேடி வரும் புலிகள் மனிதரை தாக்குவதும் நடக்கிறது.

ஊட்டிக்கு ஜெயாவோ இல்லை இதர அரசியல்வாதிகள், அமைச்சர் பெருமக்கள், அதிகார வர்க்கம் வந்தால் அவர்களுக்கு பணியாளர் மற்றும் சுற்றுலா சேவை செய்வதே நீலகிரி அரசு அலுவலகங்களின் முதன்மைப் பணி. கொடநாட்டில் தலைமைச் செயலகத்தையே அன்றாடம் தூக்கி சுமந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அதிகார வர்க்கம், அல்லது ஊட்டிக்கு விஐபிக்கள் வந்தால் இலட்சக்கணக்கில் செலவு செய்து டூட்டி பார்க்கும் இக்கூட்டம், ஒரு தொழிலாளி மரணத்திற்கு 3 இலட்சம் தான் வழங்க முடியும் என்று சொல்வது திமிரில்லையா?

கிராமத்து மக்கள் சுள்ளி பொறுக்குவதையும், மலை வாழ் மக்கள் சிறு விலங்குகளை கொன்று தின்பதையும் வைத்து அவர்கள் மேல் வழக்கு மேல் வழக்கு போட்டு ஆட்டம் போடும் வனத்துறை, பெரும் கடத்தல்காரர்களையோ இல்லை வனத்தை ஆக்கிரமிக்கும் பெரும் நிறுவனங்களையோ ஏறிட்டும் பார்க்காது.

வனத்தையும், வன வளத்தையும் பாதுகாப்பது அங்குள்ள மக்களாலேயே மட்டும் முடியும். வனத்துறை கூட அங்கேயுள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை வைத்து பயிற்சி கொடுத்துத்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தற்போது கூட ஆட்கொல்லி புலியைத் தேடி செல்லும் வனத்துறைக்கு வழிகாட்டியாக மக்கள்தான் பணியாற்றுகின்றனர். அப்படி வழிகாட்டியாக சென்ற ரெஜிஸ் என்ற இளைஞர் புலியால் காயம் அடைந்திருக்கிறார். புலியைச் சுட்டுப் பிடிக்கச் சென்ற அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை!

பிதர்காடு முற்றுகை
படம் : நன்றி tamil.thehindu.com

மக்களை கண்டுகொள்ளாத வனத்துறையின் நடவடிக்கைகள் இனி தொடராது என்பதை பந்தலூர் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். வனத்துறையின் அதிகாரம் அங்கே வாழும் மக்களிடம் வரும்போது புலிக்கும் பிரச்சினை இல்லை, மனிதர்களுக்கும் பிரச்சனை வராது. ஏனெனில் இடையில் இருக்கும் அரசும் அதன் பல்வேறு அலுவலகங்களும் அதிகாரங்களும்தான் வனத்துக்கும், சமூகத்திற்கும் இடையூறாக இருக்கின்றது.

இந்த அரசமைப்பை இனியும் நம்ப முடியாது என்பதற்கு பந்தலூர் பகுதி மக்கள் நடத்திய இப்போராட்டம் ஒரு சான்று. சான்றுகள் பெருகட்டும்.

இது தொடர்பான செய்தி

 1. //இந்த அரசமைப்பை இனியும் நம்ப முடியாது என்பதற்கு பந்தலூர் பகுதி மக்கள் நடத்திய இப்போராட்டம் ஒரு சான்று. சான்றுகள் பெருகட்டும்.//
  அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி- அது அந்தக் காலம். –
  இப்பொழுதோ மக்கள் தானே அரசாங்கம்? மந்திரியும் நம்மில் ஒருவன் தானே?

  பேசாமல் எல்லோரும் சேர்ந்து இவ்வுலக சுகங்களைத் துறந்து குகைகளில் அடைவோம். ஒரு நாளும் துன்பமில்லை பாருங்கள்.

  • அய்யா ,

   மந்திரி நம்மில் ஒருவன் தானா? எப்புடி? அவனும் மனுசன் தானே என்கின்றீர்களா?

   குகைகளில் வாழ மலைகள் காடுகள் வேண்டும். அதை எல்லாம் காலி செய்வதால் தானே புலிகள்,யானைகள் மக்கள் வாழும் பகுதிக்கு வருகின்றன. அவிங்க இடத்தை அவிங்களுக்கே விட்டுருந்தா இது மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் வருவது குறையும் தானே. அப்புறம் நீங்க இந்த மாதிரி பினாத்தவும் தேவையிருக்காது..

 2. குகைகளுக்குப் போக வேண்டாம். ஐம்புலங்களை அடக்கி ஆசைகளை வென்று நாட்டிலேயே வாழ்வோம். ஆனால் முடியுமா? என்பதே கேள்வி?

 3. இயற்கை சமசீர் குலைவு என்பதே காட்டு விலங்குகள் நாட்டுக்குள் வர காரணம். வனங்களை எல்லாம் எஸ்டேட் ஆகா மாற்றி வனங்களை ஒழித்து விட்டதால் மக்கள் மட்டுமே அதன் விளைவை சந்திக்கின்றனர். மாற்றாக இதை உருவாக்க காரணமான அரசும் தனியார் நிறுவனங்களும் நிவாரனதுள் ஒளிந்துகொண்டு போராடும் மக்களை இழிவாக கருதுகின்றன. இந்த போக்கை மாற்றும் வகையிலான மக்கள் போர் வெல்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க