Tuesday, June 15, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் நீலமலையில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி - நேரடி ரிப்போர்ட்

நீலமலையில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி – நேரடி ரிப்போர்ட்

-

நீலமலை தேயிலைக்கு மட்டுமல்ல எஸ்டேட் கொடுமைகளுக்கும் புகழ் பெற்றது. தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு இன்றும் கூலி மிகக் குறைவு என்பதோடு இப்போது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. நகர மயமாதலின் விளைவாகவும், கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் வன ஆக்கிரமிப்புகளினாலும் அடிக்கடி என்பதைவிட ஏறத்தாழ தினமுமே மக்கள் வசிக்கும் பகுதிக்கு வனவிலங்குகள் வருகின்றன.

ஒரு நாளைக்கு தேயிலை பறித்தால் கிடைக்கும் ரூ 170 கூலியில் வாழ்க்கை நடத்தும் இம்மக்கள் கார்ப்பரேட்டுகளைப்போல் கரண்டு வைத்த கம்பி வேலியா வைக்க முடியும்? இல்லை மோடி முதல் லேடி வரை பயன்படுத்தும் கருப்பு பூனை கமாண்டோக்களை வைத்தா உலா வர முடியும்?

கொல்லப்பட்ட மகாலட்சுமி
கொல்லப்பட்ட மகாலட்சுமி

மகாலட்சுமி மூன்று குழந்தைகளுக்குத் தாய். பல வருடங்களாக உழைத்து தளர்ந்தவர். அவரது கணவர் சிவக்குமாரும் அவ்வண்ணமே. இடிந்து விழும் நிலையில் சிறிய வீடு. அதிலும் கூட்டுக் குடும்பம் என கிட்டதட்ட அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

14-02-2015 சனிக்கிழமை அன்று வழக்கம் போல் 5 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். காலை 11.15 மணிக்கு தேநீர் இடைவேளை. அன்று சனிக்கிழமை ஆதலால் விரைவாக வேலையை முடித்து விடலாம் என எண்ணி தேநீர் குடித்த கையோடு மீண்டும் தோட்டத்திற்கு விரைந்துள்ளார். சக தொழிலாளி மஞ்சுளா சிறிது தொலைவில் இருந்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அப்போது அங்கு பதுங்கி இருந்த புலி ஒரே பாய்ச்சலில் மகாலட்சுமியின் பின் கழுத்தை கவ்வியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு மஞ்சுளா ஒடிச்சென்று பார்க்கையில் மகாலட்சுமியின் கழுத்தை கவ்வி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அவரின் அலறலைக் கேட்டு சுற்றியுள்ள தொழிலாளர்கள அனைவரும் கூடியுள்ளனர். கிட்டதட்ட 100-லிருந்து 150 பேர் வரை கூடியும் புலி அசராமல் அங்கேயே இருந்திருக்கிறது.

வனக்காவலர்கள் சிலரும் அப்போது துப்பாக்கி சகிதம் அங்கே உடன் வந்தனர். அவர்களில் ஒருவர் புலியைச் சுட முனைய மற்றொருவர் அதிகாரி, “ஒப்புதலின்றி சுடக்கூடாது” எனக்கூறி தடுத்துள்ளார். அங்கேயே நெடுநேரம் சுற்றிக் கொண்டிருந்த புலி பின் ஓடிவிட்டது. பின்னர் வந்த வன அதிகாரி (சோமசுந்தரம்), “இந்தக் காயங்களைப் பார்த்தால் புலி கடித்தாற் போல் தெரியவில்லை. ஏதோ நாய் கடித்தாற் போல் இருக்கிறது” எனத் திமிருடன் பேச,அவ்வளவு நேரம் அங்கே இருந்து புலி பாய்வதையும் உறுமுவதையும் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், ஆத்திரத்தின் உச்சிக்கே செல்ல, அந்த அதிகாரி நையப் புடைக்கப்பட்டார். மக்கள் கூட்டம் அடித்தவாறே கீழே இழுத்து வந்து,

“சொல்லு, இப்ப சொல்லு என்ன கடிச்சது?” எனக் கேட்க

“புலிதான், புலிதான்” எனக்கூறிய வார்த்தைகளில் உயிர்தப்பினார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். புலி குதறுவதை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்தும் இந்த அதிகாரி இவ்வளவு திமிராக நாய்தான் கடித்தது என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது?

கூடலூர் மக்கள் போராட்டம்
கூடி போராடிய மக்கள்

பின், மகாலட்சுமியின் உடலை கீழே கொண்டு வந்து வைத்து சாலை மறியலையும் போராட்டமும் துவங்கியது. கேரள தொலைக்காட்சிகள் வந்து நேரலையை துவங்கிவிட்டன.நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது; சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து மக்கள் அலை அலையாய் வரத் துவங்கியுள்ளனர். காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றுள்ளது. கடை வைத்திருப்போர் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவாக கடையடைப்பு செய்துள்ளனர்.

காவல் துறையினர் தந்திரமாக செல்பேசிக்கான சிக்னல்களை நிறுத்தியுள்ளனர். உணர்வுரீதியில் திரண்ட மக்கள் படையின் முன் இந்த அரசு அடியாட் படையின் தந்திரங்கள் எவ்விடம்!

இஸ்லாம் மக்கள் பள்ளி வாசலிலும்,கிறிஸ்தவ மக்கள் தேவாலயத்திலும் அறிவிப்பு கொடுத்து தத்தம் சமுதாய மக்களை திரட்டியுள்ளனர். இதர பிரிவு மக்களும் காரில் மைக்கை கட்டி ஊர் ஊராக சென்று மரண அறிவிப்பையும் போராட்ட அறைகூவலையும் ஒரு சேர செய்து முடித்தனர். இரவு ஆக ஆக கூட்டம் அதிகமாகியே வந்துள்ளது.

கூடலூர் மக்கள் போராட்டம்உணவு, குடிநீர் என இந்தப்படை கலைந்துவிடாமல் இருக்க கணிசமாக உள்ள இஸ்லாமிய மக்களும் இதரரும் சேர்ந்து அனைவருக்குமே கிட்டத்தட்ட 5,000 பேருக்கு உணவும் தேநீரும் இரவு முழுவதும் வழங்கியுள்ளனர். கொட்டகை போட்டு ஆண்கள் பெண்களும் அங்கேயே தங்கியுள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் வேறு வழியில்லாமல் வந்த கலெக்டர் சங்கரிடம் பொதுமக்கள் ரூ. 10 லட்சம் நிவாரணமும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் புலியை உடனே சுட உத்தரவிடவும் கோரினர். அதற்கு முன்பே இந்தப் போராட்டத்தில் ஆதாயம் தேட வந்த ஓட்டுக் கட்சி அரசியல் முதலைகளை விரட்டியுள்ளனர். குறிப்பாக, ஏற்கனவே யானையால் இறந்த ஒருவர் சாவில் பொறுக்கித் தின்ற பகுதி அ.தி.மு.க. வினரை செருப்பால் அடிக்காத குறையாய் விரட்டியுள்ளனர்.

கலெக்டர் சங்கர், “காலை 6 மணிக்கு முன் வெளியேவராதீர்கள். உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன்” எனக்கூற,

“யோவ்,அந்தப் பொம்பள செத்தது காலை 11.30 க்கு இதுக்கு பதில் சொல்லு” எனக்கூற கலெக்டர் செய்வதறியாது நின்றிருக்கிறார்.

“நாளைக்கு நீ வாயா, காட்டுக்குள்ள நாங்க தைரியமா போறோம். நீ வருவியா” என பெண்கள் கேட்க, கலெக்டர் அமைதியாய் நின்றிருக்கிறார்.

“பயம் இருக்குல்ல, அப்ப மரியாதையாய் சுட உத்திரவு இடு” எனக் கூறியுள்ளனர்.

இரவு 2 மணிக்கு மேல் கலெக்டர் சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு, போலீசும் வனத்துறையும் திருட்டுத்தனமாக மகாலட்சுமியின் உடலை எடுத்துச் செல்ல முயன்றிருக்கிறது. பொதுமக்கள் விழிப்பாக இருந்து கல், கம்புகளுடனேயே தடுத்துள்ளனர்.

இரண்டாம் நாள் காலையும் அனைவருக்கும் உணவும், டீயும் வழங்கப்பட்டிருக்கிறது. காலையில் கலெக்டர் வராததால் கடுப்படைந்த மக்கள் வன அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர். காலை 11 மணியளவில் கறுப்புக் கொடிகளுடன் சுமார் 1000 பேர் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இவை அனைத்தும் தன்னெழுச்சியாக நடந்ததும் சாதி, மத பேதமற்ற இந்த அசாத்தியமான ஒற்றுமையுமே இந்த போராட்டத்தின் சிறப்பு. பின் முற்றுகையின் முற்றிய வடிவமாக மக்களின் வீரியமான வெளிப்பாடாக ஒருவர் ஜீப்பை உடைக்க உடனே அது மொத்தக் கூட்டத்தின் திட்டமாக பரிணமித்து அனைவருமே ஜீப்களையும், அலுவலகத்தையும், லேப்டாப்புகளையும், அடித்து உடைத்தனர். கோப்புகளும் மிச்சமுள்ள ஜீப்புகளும் கொளுத்தப்பட்டன. அங்கிருந்த ஒன்றிரண்டு அதிகாரிகளும் காட்டுக்குள் ஒட்டமெடுத்தனர். இவையெல்லாம் கூட்டம் கூடியதால் நடந்த “மாஸ் வயலன்ஸ்” அல்ல. ஒரு தொழிலாளியின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியத்துடனும், திமிருடனும் நடத்திய அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு சாமானியனின் கோபமே இந்த வெளிப்பாடு.

பின்பு, மக்கள் போராட்டப் பந்தலுக்கு திரும்பினர். இதன்பின்னரே அங்கு வந்த வருவாய் அதிகாரி நிவாரணம் தருவதையும், புலியை சுட்டுக்கொள்ள உத்திரவிடப் போவதையும் உறுதிப்படுத்தினார்.

தமிழக வனத்துறையும், கேரள வனத்துறையும் இணைந்து சுமார் 500 பேர் துப்பாக்கிகள் சகிதம் காட்டுக்குள் இறங்கி சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு கடைநிலை வனக்காவலரால் இறுதியில் புலி சுடப்பட்டிருக்கிறது. இப்புலி சுமார் 325 கிலோ  எடையுள்ளது. இதை கண்டுபிடிக்க வைத்த கேமராவில் இதே போல் சுமார் 6,7 புலிகள் தென்பட்டுள்ளன.

மக்கள் மத்தியில் உள்ள கருத்து என்னவெனில், “வனத்தை வளர்க்க புலிகளை வனத்துறையே கொண்டுவந்து விடுகிறது” என்பதே. இது உண்மையெனில், வனத்தை பராமரிக்க, கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வக்கில்லாத அரசாங்கம் இதுபோன்ற வழிகளில் மக்களின் உயிர்களை காவு வாங்குகிறது. காட்டில் புலிகளை கணக்கு காட்டி சுற்றுச்சூழல் மனிதாபிமானிகளாக காட்டிக் கொள்ளும் தந்திரமும் இதில் இருக்கிறது. இப்படி புலியையும், மக்களையும் ஒருசேர பணயம் வைக்கிறது அரசு.

mahalakshmi-killed-by-tiger-8“புலியை சுட உத்திரவிடப்படும்” என்ற உத்திரவாதத்துக்கு பின்னரே மகாலட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

புலியை வேட்டையாடிய அரசு அடுத்ததாக போராடிய மக்களை வேட்டையாட தயாராகி வருகிறது. குறிப்பாக, முற்றுகையில் ஈடுபட்ட மக்களை வன அலுவலகத்தில் உள்ள கேமராவில் பதிவுகளின் மூலம் கண்டறிந்து உள்ளூர் வன காவலர்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சக நண்பர்களை வேட்டையாட உள்ளது.

கூடலூர் மக்கள் போராட்டம்

இடையில் நீலமலை ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கடத்தல்காரர்கள் எனும் கதையை என்ஜிவோக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மூலம் அவிழ்த்து விட்டுள்ளார்கள். கடத்தலுக்கு தடையாக இருக்கும் வனத்துறைக்கு ஒரு பாடம் கற்பிக்கவே கடத்தல்காரர்கள் இப்பிரச்சினையில் மக்களை தூண்டி விட்டுள்ளதாக கூசாமல் பொய்யுரைக்கின்றனர். இத்தகைய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தைரியமிருந்தால் மகாலட்சுமியின் குடியிருப்பு பகுதிக்கு வந்து சொல்லிப் பார்க்கட்டும். ஒரு வேளை கடத்தல் தொழில் அங்கே நடக்கிறது என்றால் அது வனத்துறை மற்றும் ஒட்டுப் பொறுக்கி கட்சி தலைவர்கள் இன்றி சாத்தியமில்லை.

எல்லா அபாயங்களோடும், குறைந்த பட்ச ஊதியத்தோடும் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளி கொல்லப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையை புலி செய்திருந்தாலும் புலியை ஏவிவிட்டது இந்த அரசும் அதிகார வர்க்கம்தான். வனத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், விடுதிகளுக்கும் அள்ளிக் கொடுத்தால் புலி மட்டுமல்ல யானை சிறுத்தை அனைத்தும் மக்கள் குடியிருப்பிற்குத்தான் வரும்.

குடிகெடுத்த அரசுக்கெதிரான நீலமலை மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம். அடக்குமுறையை கண்டிப்போம்.

– செய்தி, புகைப்படங்கள் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை

______________________________________

இதனைத் தொடர்ந்து,  27-02-2015 காலை 10.30 மணியளவில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் – கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புலி கடித்து அப்பாவிப் பெண் பலியானதை தொடர்ந்து நியாயம் கேட்டு போராடிய மக்களை போலிசு பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலடைத்து வருகின்றது.

அவர்களை விடுதலை செய்யக் கோரியும், வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், போராடும் மக்களை கைது செய்வதை நிறுத்தக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும், வனவிலங்குகள் வாழ்விடங்களான காடுகளை அழித்து ஆக்கிரமித்துள்ள பெருநிறுவனங்களிடமிருந்து பிடுங்கி அரசுடைமையாக்கக் கோரியும், மக்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வாழ்க்கை சூழலை உருவாக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பட்டத்திற்கு தோழர் விஜயன் தலைமேயேற்று நடத்தினார். தோழர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். தோழர் ராஜா நன்றியுரை வழங்கினார். தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

 • இறந்த தொழிலாளிக்கு ஆதரவாக போராடிய மக்களை கைது செய்வதை உடனே நிறுத்து
 • கைது செய்தவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்
 • உரிமைக்காக போராடிய மக்களை போலீசை ஏவி அடக்குமுறை செய்வதை உடனை நிறுத்து.
 • மக்களின் வாழ்விடத்திற்கு வந்து வனவிலங்குகள் மக்களை தாக்குவதற்கு காரணமான காடுகளை ஆக்கிரமித்துள்ள பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை உடனே நிறுத்து

தகவல்
இரா ஆனந்தராஜ்,  தலைவர்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
ஜீப் நிலையம் மார்க்கெட், கோத்தகிரி

 1. மதிப்பிற்குரிய வினவுக்கு,

  இவ்வாறு இறந்தவர்களின் உடலங்களின் புகைப்படத்தை வெளியிடுவதை மறுபரிசீலனை செய்யும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

  இது அந்த சகோதர சகோதரிகளை இழிவுபடுத்துவதாகும்.

  சமீபத்தில் ஒரு குழந்தை மொபைல் சார்ஜெர் வயரைக் கடித்து இறந்து போயிற்று. அதன் புகைப்படத்தினை முகனூலிலே கண்டேன். மிக வருத்தம் அடைந்தேன்.

  அவர்களுடைய குருதிசம்பந்தப்பட்ட உறுப்பினர் கண்டால் நரக வேதனை அடைவர்.

  ஏதோ தோன்றியதைச் சொன்னேன்.
  தவறிருப்பின் மன்னிக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க