Saturday, December 5, 2020
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை டாஸ்மாக் உடைப்பு - சிறை சென்ற போராளிகள் விடுதலை

டாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை

-

அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை அகற்றும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு தோழர்கள் சிறையிலிருந்து விடுதலை!

செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை அகற்றும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 9 புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் குத்தனூர் பகுதியைச் சார்ந்த பெண் சாந்தி அவர்களும் வேலூர் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தனர்.

கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களும், மக்களும் 19 நாட்கள் சிறைவாசமிருக்க வேண்டி வந்தது. திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் , சென்னை உயர் நீதிமன்றம் போன்றவற்றில் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே பிணை கிடைத்தது. போதைக்கு ஆதரவாக அதிகார மையங்கள் எப்படி ஆடுகின்றன பாருங்கள்!

டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட வீதியில் இறங்கி போராடு!
03-03-15 அன்று பெண் தோழர்கள் நால்வரும், மற்றும் சாந்தியம்மா விடுதலை

அதுவும் பிணை கிடைத்த உடனேயும் தோழர்களை சிறையிலிருந்து அழைத்து வர முடியவில்லை. செய்யாறு நீதிமன்றத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகள், அலட்சியங்களை முறியடித்துத்தான் கடந்த 03-03-15 அன்று பெண் தோழர்கள் நால்வரும், மற்றும் சாந்தியம்மாவையும், 06-03-15 அன்று ஆண் தோழர்கள் ஐவரையும் வேலூர் சிறையில் இருந்து வெளியே அழைத்துவர முடிந்தது.

தமிழகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை ஒழிக்க மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்பதற்கு முன்னுதாரணமான போராட்டம் நடத்தி சிறை சென்று வந்த தோழர்களை உற்சாகத்தோடு வரவேற்கும் முகமாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், வேலூர் பகுதி மக்கள் கலை இலக்கியக் கழக செயலர் தோழர்.இராவணன் மற்றும் தோழர்கள், வேலூர் பகுதி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு சிறைச்சாலையின் நுழைவாயிலில் பறை முழக்கத்தோடு …………………..அரசியல் முழக்கங்கள் எழுப்பி தோழர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு
டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட வீதியில் இறங்கி போராடு!

அங்கிருந்து வேலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தோழர்கள் மரியாதை செய்தனர்.

டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு
பெரியார் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை

அங்கு நடைபெற்ற நிகழ்வில் பு.மா.இ.மு சென்னை மாநகர இணைச் செயலர் தோழர் மருது தலைமையேற்றார். வேலூர் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த தோழர் ஆல்வின் சிறை சென்ற தோழர்களை வாழ்த்திப் பேசினார். இறுதியாக பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை தர வக்கில்லாத இந்த அரசாங்கம் சாராயத்தை மட்டும் ஊற்றிக் கொடுக்கும் நோக்கத்தை அம்பலப்படுத்தியும், பெரியாரின் மண்ணில் மானத்தோடும், அறிவோடும் வாழ்வதற்கு இன்று மிகப்பெரிய தடையாக உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழித்துக் கட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, தோழர்களோடு டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதான முன்னுதாரணமிக்க பெண்மணியாக தமிழகத்தின் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அழிவிடைதாங்கி அருகில் உள்ள குத்தனூர் கிராமத்தைச் சார்ந்த சாந்தியம்மாவின் வீட்டிற்கு தோழர்கள் அனைவரும் சென்று அவரை வாழ்த்தினர்.

சாதாரண விவசாயப் பின்னணியைச் சார்ந்த குடும்பம். சாந்தியம்மாவும், அவரது கணவரும் 80 சென்ட் நிலத்தில் வருகிற விளைச்சலைக் கொண்டுதான் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்கின்றனர்.

டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு
சாந்தியம்மாவை வாழ்த்தும் முகமாக, பு.மா.இ.மு சென்னை மாநகர பொருளாளர் தோழர் ராஜேஸ்வரி மாலை அணிவித்தார்

இப்போராட்டத்திற்குப் பிறகு, போலீசு, ஊர்பஞ்சாயத்துத் தலைவர், வி.ஏ.ஓ, அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உறவினர்கள் ஆகியோரின் அவதூறான பேச்சுகள், சிறை, போலீசு குறித்த பயமுறுத்தல்கள் என மனரீதியாக உளைச்சலைக்கு ஆளாக்கப்பட்டு வந்தது அக்குடும்பம். இத்தனையும் எதிர்கொண்டு புரட்சிகர அமைப்புடன் உறுதியாக நிற்கின்றனர் உழைக்கும் விவசாயி வர்க்கத்தைச் சாந்தியம்மாவும், அவரது கணவரும்.

அவர்கள் வீட்டிற்கு சென்றபோது தோழர்களைப் பார்த்து “எம் பொண்டாட்டி, எந்த விசயமா இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்பா, அதிகாரிங்கள நிக்க வச்சு கேள்வி கேட்பா, புள்ளைங்கள போலீசு புடிக்கிறத பாத்துட்டு அவளால சும்மா இருக்க முடியல. தட்டிக் கேட்ட அவளும் புள்ளைங்களோட சேந்து ஜெயிலுக்குப் போயிட்டா. நல்ல விசயத்துக்காகத்தான் போயிருக்கா, எனக்கு எந்த வருத்தமும் இல்ல. என்ன ஊருக்குள்ள நாலு பேரு பேசறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணுமில்லப்பா’’ என்று தன் மனைவியைப் பற்றிப் பெருமை பொங்க எதார்த்தமாகப் பேசினார்.

rsyf-cadres-come-out-of-jail-9அவருடைய சொந்தப் பிள்ளை டாஸ்மாக் கடையால் சீரழிவதை கண்டு மனம் பொறுக்க முடியாமல் மக்களைத் திரட்டி களத்திற்கு வந்த சாந்தியம்மா, கணவர் சொல்வதை அமைதியாக ஆமோதித்தார்.

வீட்டிற்கு வந்த தோழர்கள் 25 பேருக்கும் உணவு தயாரித்து விருந்தளித்தனர் சாந்தியம்மாவும், அவரது கணவரும். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தோழர்களை அன்போடு வரவேற்றனர். தன் வீட்டுப் பிள்ளைகளை உபசரிப்பதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தோழர்களை வர்க்கப் பாசத்தோடு உபசரித்தது அந்தக் குடும்பம்.

பின்னர் போராட்ட ஆல்பத்தைக் கொடுத்தவுடன், சாந்தியம்மாவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஆர்வத்தோடு பார்த்தனர். என்னதான், போலீசு அச்சுறுத்தல் காரணமாக பயம் இருந்தாலும், தாங்களும் போராட்டத்தில் பங்கு பெற்றதை பெருமிதமாகவே அம்மக்கள் பார்த்தனர்.

மாலை 4.30 மணியளவில் சாந்தியம்மா வீட்டு மாடியிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பு.மா.இ.மு சென்னை மாநகர செயற்குழு உறுப்பினர் தோழர் ஆசாத் தலைமையேற்றார். பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் ஒருங்கிணைத்து நடத்தினார். சாந்தியம்மாவை வாழ்த்தும் முகமாக, பு.மா.இ.மு சென்னை மாநகர பொருளாளர் தோழர் ராஜேஸ்வரி மாலை அணிவித்தார். அதேபோல, போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற பெண் தோழர்களுக்கு, சாந்தியம்மா மாலை அணிவித்தார். ஆண் தோழர்களுக்கு சாந்தியம்மா கணவர் சேகர் மாலை அணிவித்துது என கவுரவப்படுத்தினார்.

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்
பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் உரை

இதன் தொடர்ச்சியாக, சிறை சென்று வந்த தோழர்கள் சிறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். பெண் தோழர்கள் சார்பில் பேசிய தோழர் நிவேதிதாவும், ஆண் தோழர்கள் சார்பில் பேசிய தோழர் ராஜாவும் சிறை என்பது போராடிச் சென்றவர்களுக்கு உரமேற்றும் மையமாக இருக்கிறது என்பதை தங்கள் அனுபவங்களிலிருந்து கூறினர். பெண்கள் சிறையைப் பொறுத்தவரை, மற்ற கைதிகளோடு பேசுவதற்கு போலீசு அனுமதிக்கவில்லை. தோழர்கள் பேசுவதற்கு போராடியுள்ளனர். ஆனாலும் போலீசு மறுத்துள்ளது. எனவே அமைப்புப் பாடல்களின் வழியாக மக்களின் மனங்களோடு பேசியுள்ளனர் தோழர்கள்.

ஒரு கட்டத்தில் பாடல்கள் பாடுவதையும் தடை செய்துள்ளது ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின்’ போலீசு. இதைக் கேள்விப்பட்ட ஒரு வயதான அம்மா தோழர்களோடு வந்து பேசியுள்ளார். அவர் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் போட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தவறுகளால் அவர் சிறைப்பட நேர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக சிறையில் வாடுபவர். “உங்க பாட்டுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் தனியாக இருக்கிறத மறக்கறதுக்கு காரணமா இருந்துச்சு, நீங்க பாடுங்கம்மா” என்று அன்போடு கூறியுள்ளார்.

rsyf-cadres-come-out-of-jail-6சிறையில் உள்ள பல பெண் கைதிகள் தங்கள் வாழ்க்கைக்காக சாராயம் விற்று உள்ளே வந்தவர்களாக இருப்பதை தோழர்கள் விளக்கினர். மக்களின் அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வக்கில்லாத இந்த அரசு அவர்கள் சாராயம் விற்றுத்தான் பிழைக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர்களை கைது செய்து ஒடுக்குகிற வேலையையும் செய்கிறது.

சிறையைப் பொறுத்தவரை மக்கள் பிரச்சினைக்காகப் போராடிய அரசியல் கைதிகள் என்ற காரணத்தால் கைதிகளாலும், போலீசாலும் தோழர்கள் மதிப்புடனே நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சிறை சென்ற தோழர்களின் அனுபவங்கள் பகிர்ந்து சென்றன.

இறுதியாக பேசிய தோழர் த.கணேசன், 1930 களில் பெரியாரின் மனைவி நாகம்மையும், அவரது தங்கையும் கள்ளுக்கடை உடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றதைப் போல, ஒரு போராட்ட வரலாற்றை அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டம் உருவாக்கியுள்ளதையும், அதில் சாந்தியம்மாவின் பங்கையும் ஒப்பிட்டுப் பேசினார். அந்த வகையில், “சாந்தியம்மா என்பவர் தனியொருவர் அல்ல, அவருடன் பு.மா.இ.மு தோழர்கள் உள்ளனர்.’’ என்று நம்பிக்கையூட்டினார். அந்த வகையில் இந்த போராட்டம் இத்தோடு முடிவதில்லை. அதற்கு உதாரணமாக, ஜெயங்கொண்டத்தில் பள்ளி மாணவர்கள் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி முற்றுகைப் போராட்டத்தை நடத்தியதை சுட்டிக் காட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு வீட்டிலுள்ள ஆணாதிக்கத் தடைகளின் காரணமாக வரமுடியாத அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் பலர் அவரவர் வீட்டு மாடிகளில் இருந்து ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்து விடைபெற்று அழிவிடைதாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றான வெங்களத்தூர் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

வெங்களத்தூர் தெருமுனையிலேயே பறைமுழக்கம் எழுப்பி, சிறை சென்ற ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியைச் சார்ந்த மக்கள் தோழர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

rsyf-cadres-come-out-of-jail-7போலீசின் பீதியூட்டலைத் தாண்டி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், குறிப்பாக சிறுவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தோழர்கள் பேசினார்கள். உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வக்கில்லாத இந்த அரசு தாலியறுக்கும் டாஸ்மாக்கை நடத்தி நமது பிள்ளைகளை சீரழிப்பதை அம்பலப்படுத்திப் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

rsyf-cadres-come-out-of-jail-8சிறுவர்கள், பகுதி இளைஞர்கள், தோழர்கள் என 80 க்கும் மேற்பட்டோரின் பங்கேற்போடு பறை இசை முழங்க ஊர்வலம் நடைபெற்றது. வெங்களத்தூர் பகுதியைச் சுற்றிலும் ஒரு சுற்று வந்து ஊர்வலம் முடிவு பெற்றது. இந்நிகழ்வு ஏற்கனவே அப்பகுதியில் போலீசு ஏற்படுத்தியுள்ள அச்சத்தில் இருந்த இளைஞர்களுக்கு தைரியத்தையும், அப்பகுதி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுப்பதாக அமைந்தது.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

  1. சிறை சென்ற தோழர்களுக்கும், போராட்டத்தில் பங்கு கொண்ட சாந்தி அம்மா மற்றும் பகுதிவாழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    தமிழகம் தழுவிய அளவில் இந்த போராட்டம் பரவவேண்டும்!

  2. மெய் சிலிர்க்கிறது தோழர்களே!!!! மதுவை ஒழிக்க வெற்றுகோஷமிடும் கூட்டத்தின் மத்தியில் உங்கள் தியாகம் பாராட்டத்தக்கது !!!! உங்கள் தியாகத்தின் முன் நான் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா???? சீக்கிரம் உங்களோடு சேர்த்து போராட வருகிறேன்..இடம் தருவீரா தோழமையே!!!! பாண்டியன் திருப்பூர்

    • நன்றி பாண்டியன்,
      விரைவில் உங்களது எண்ணுக்கு தோழர்கள் அழைப்பார்கள். வாருங்கள், சேர்ந்து செயல்படுவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க