privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்கருங்காலி வழக்குரைஞர் சங்கம் TNAA-ஐ ஒழித்துக் கட்டுவோம் !

கருங்காலி வழக்குரைஞர் சங்கம் TNAA-ஐ ஒழித்துக் கட்டுவோம் !

-

கருங்காலி சங்கமான TNAA-ஐ ஒழித்துக்கட்டுவோம்! வழக்குரைஞர்களின் ஒற்றுமையை காப்போம்!

அன்பார்ந்த வழக்குரைஞர்களே,

வணக்கம்.

வழக்குரைஞர் பிரபாகரன் துவங்கிய தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு (TNAA) தமிழ்நாடு பார்கவுன்சில் சட்டவிரோதமாக அங்கீகாரம் அளித்துள்ளது. இது வழக்குரைஞர்களின் நலன்களை மட்டுமல்ல, சமூகத்தையே கடுமையாக பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான வழக்குரைஞர்கள் கொதித்துப்போய், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இப்படி ஒரு சங்கம் துவங்கியதால் வரும் ஆபத்தான பின்விளைவுகளை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) தோன்றியதன் பின்னணி

வழக்கறிஞர் போராட்டம்
அப்சல் குரு தூக்குக்கு எதிராக வழக்கறிஞர் போராட்டம் – மதுரையில் (கோப்புப் படம்)

19-ம் நூற்றாண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தின் பொழுது, வெள்ளையர்களாலும், அவர்களின் அடிவருடி மேட்டுக்குடியினராலும் எல்லாத் துறைகளும் நிரம்பி வழிந்த காலம் அது! படிப்பதற்கு உரிமை இல்லாத, தீண்டாமை பற்றியெரிந்த பின்புலத்தில், கல்விகற்று எழுந்த முதல்தலைமுறை வழக்குரைஞர்கள் தங்கள் தொழிற்பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கியது தான் MHAA.

நீதிமன்றம் – வழக்குரைஞர் தொழில் என குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல், MHAA சங்கம் 125 ஆண்டுகளாக பல்வேறு சமூக போராட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் துவங்கி, சமீபத்திய ஈழ ஆதரவு போராட்டங்கள் வரை அனைத்தும் இதற்கான வரலாற்று சான்றுகள்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய வழக்குரைஞர் சங்கமாக, ஒற்றுமையோடு இருப்பதும், சமூக அக்கறையோடு செயல்படுவதும் ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்கும் எப்பொழுதும் கண்ணை உருத்துகின்றன. இதன் பின்னணியில் தான், TNAAவிற்கு அங்கீகாரம் தந்த பின்னணியை பார்க்கவேண்டும்.

TNAA உருவான பின்னணி

வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க-வின் சாதிவெறி அரசியலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

2004-ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன்ரெட்டி தனது ஆண்டைத்தனத்தை காட்டும்விதமாக, “நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கையை நீட்டி பேசக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது” என்பது போன்ற 25 அடிமை விதிகளை பிறப்பித்தார். MHAA-வின் அப்போதைய சங்கத்தலைவராக இருந்த பிரபாகரன் யோக்கியமானவராக இருந்திருந்தால், வழக்குரைஞர்களைத் திரட்டி போராடி இதை முறியடித்திருக்கவேண்டும்.
மாறாக, சுயமரியாதைகொண்ட வழக்குரைஞர்கள் “பொதுக்குழுவை கூட்டுங்கள்” என போராடியபொழுது போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தனது அடியாட்களைக் கொண்டு வன்முறையை ஏவி, வழக்குரைஞர் சமூகத்திற்கு துரோகமிழைத்தார், அவர்.

களத்தில் நின்ற வழக்குரைஞர்கள் திருப்பி அடித்ததில், பிரபாகரனும், அவரது அடியாட்களும் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என தலைதெறிக்க ஓடினார்கள். தற்காலிக தலைமையை தேர்ந்தெடுத்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியும் பெற்றார்கள், வழக்குரைஞர்கள். அன்றிலிருந்து பிரபாகரன் சங்கத்தலைவராக இருந்தாலும் பயத்தில் MHAA அலுவலகம் பக்கம் வருவதேயில்லை. அருகில் உள்ள மரத்தடியில்தான் தனக்கு விசுவாசமான ஆட்களைக் கொண்டு தொடர்ந்து கூட்டம் நடத்தியதால், ”மரத்தடி பிராபகரன்” என்று அழைக்கப்பட்டார்.

சென்னை - காவல்துறை, வழக்குரைஞர்கள்
2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்த சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தியது குறித்து வினவில் வெளியான படம்.

நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு விசுவாசமாக செயல்பட்டதற்கு கைமாறாக பல பெரிய வழக்குகளில் வழக்குரைஞர் ஆணையராக (Advocate Commissioner) நியமிக்கப்பட்டு, நேரடியாகவும், செட்டிங் செய்து மறைமுகமாகவும் நிறைய கல்லா கட்டினார். இதற்கு பிறகு வழக்குரைஞர்களால் ’எட்டப்பன்’ என ‘அன்போடு’ அழைக்கப்பட்டார்.

2007 வரை MHAA – சங்கத் தேர்தலில் நின்று தொடர்ந்து தோல்வியுற்ற பிரபாகரன், இனி ஜெயிக்கமுடியாது என உணர்ந்து, 2008-ல் TNAA என்ற சங்கத்தை தனியாக உருவாக்கினார்.
சட்டையை மாற்றிக் கொண்டு அடுத்த பஞ்சாயத்துக்குக் கிளம்பும் வடிவேலுவைப் போல பிராபாகரன்!

நீதிமன்ற நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு சங்க பிரதிநிதிகளை அழைப்பது போல, தனது சங்கத்தையும் அழைக்கவேண்டும் என பிரபாகரன் கோரியதை 29-04-2009 அன்று அனைத்து நீதிபதிகளின் முழுஅமர்வு நிராகரித்தது. இதற்கு பிறகு தான், TNAA-விற்கு 2715 சதுர அடியிலான தனிக்கட்டிடத்தை மூன்று நீதிபதி கொண்ட குழு இரகசியமாக ஒதுக்கியது.

உயர்நீதி மன்றம்
காவல்துறையிடம் அடிவாங்கிய பிறகும் நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிபதிகளைப் பற்றி வினவில் வெளியான கேலிச்சித்திரம்

தமிழ்நாடு பார்கவுன்சில் அனுமதி பெற்றுவிடவேண்டும் என்ற முயற்சியில், பார்கவுன்சில் உறுப்பினர்களில் 25 பேரில் 23 பேர் எதிராக வாக்களித்து அங்கீகாரம் தர மறுத்தார்கள். (21-10-2010)

இதற்கு இடைப்பட்ட காலத்தில், பிரபாகரன் பார்கவுன்சில் தேர்தலில் வழக்கமான சித்து விளையாட்டுகளினால் ஜெயித்து உறுப்பினராகி, அதையே தேசிய அளவில் விரிவுபடுத்தி அகில இந்திய பார்கவுன்சிலிலும் உறுப்பினரானார். இந்த வாய்ப்பையும், தனது செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது விசுவாசிகள் பார்கவுன்சிலில் இருந்த தைரியத்தில், மீண்டும் முயற்சி செய்த பொழுது 06-07-2013-ல் 23 பேரில் 13 பேர் எதிராக வாக்களித்து அங்கீகாரம் தர மறுத்தார்கள்.

இப்படி பலமுறை நிராகரிக்கப்பட்டும், எவ்வித அறிவிப்பும் இல்லாமல், MHAA உள்ளிட்ட எந்த சங்கத்திடமும் கருத்தும் கேட்காமல், 08-03-2015-ல் நடந்த தமிழ்நாடு பார்கவுன்சில் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இறுதியில் ஒரு செட்டப்போடு திணிக்கப்பட்டு, வேல்முருகன் எதிர்த்து வாக்களித்தும், K.K.S. ஜெயராமன், யுவராஜ் என இரண்டு உறுப்பினர்கள் வாய்மொழியாக எதிர்த்தாலும் மற்ற அனைவரும் வாக்களித்து TNAA-விற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் கூத்து!

உயர்நீதிமன்றத்தில் தமிழ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமைக்காக நடந்த வழக்குரைஞர்களின் போராட்டம் (கோப்புப் படம்)

பார்கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தல் நடந்த பொழுது, வாக்காளர்களான வழக்குரைஞர்களுக்கு நட்சத்திரவிடுதியில் சரக்கு விருந்து, சுற்றுலா, ரொக்கப்பணம், கவர்ச்சிகரமான பொருட்கள் என பல லட்சங்கள் வாரியிறைக்கப்பட்டு, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் போலவே அத்தனை சீரழிவுகளும் பச்சையாக வெளிப்பட்டன. அந்த சமயத்தில் நமது மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC) அமைப்பு சார்பில் “குவார்ட்டர் சரக்கும், கோழிபிரியாணியும் வழக்குரைஞர்கள் உரிமையை பாதுகாக்காது” என சுவரொட்டியும், பிரசுரமும் தயாரித்து, சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் ஒட்டினோம், விநியோகித்தோம்.

இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பல வகைகளிலும் கவனித்தும், சரிகட்டியும் தான் TNAA-விற்கு இப்பொழுது அங்கீகாரம் வாங்கியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே, சமூகத்தின் போக்கில் ஜனநாயக விழுமியங்கள் அரிதாகி வரும் காலக்கட்டத்தில் TNAA உருவாக்கும் ஊழல் பண்பாடு விஷவிதை போன்றது. இதை கருவிலேயே அழிப்பது தான் சமூகத்திற்கு நல்லது!

அரசின் உறுப்புகளில் ஒன்றான நீதிமன்றமும், விதிமாறாமல், வர்க்கசார்புடனேயே எப்பொழுதும் நடந்துகொள்கிறது. சட்டக்கல்லூரியில் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் அரசு மிக கவனமாக நடந்துகொள்கிறது. இந்தச் சூழலை பிரபாகரன் போன்ற வகைமாதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்களுக்கென்று அடியாட்படையை கட்டியமைத்து கொள்கிறார்கள்.

நீதிபதிகள் நியமன விசயத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காமல், கொலீஜியமுறையில் (அரசியல், சாதி, வாரிசு அடிப்படையில்) தேர்ந்தெடுத்து, மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத, ஜனநாயகத்தின் வாசனை கூட அறிந்திராத அரசு சார்பாக மட்டுமே சிந்திக்கக் கூடிய பல நீதிபதிகள் பதவிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகளுக்கு கூஜா தூக்க எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனும், செல்வாக்கும், அடியாட்படையும் கொண்ட பிரபாகரன் போன்ற புரோக்கர்கள் கச்சிதமாக பொருந்துகிறார்கள். பிரபாகரன் கடந்த வந்த பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் இதை புரிந்துகொள்ளமுடியும்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சுபாஷன்ரெட்டி விசயத்தில் தோற்றுப்போன பிரபாகரன் சில ஆண்டுகளுக்குள் தனக்கு கீழே ஒரு ”சாம்ராஜ்யத்தை” உருவாக்கியது இந்தப் பின்னணியில்தான்!

இந்த விஷசூழலில் பாதிக்கப்படுவது புரோக்கர் வழக்குரைஞரின் ’உதவியும், கருணையும்’ இல்லாமல் சாதாரணமாக தொழில் நடத்தும் பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் தான்! இந்த பாதிப்பு வழக்குரைஞர்களோடு நின்றுவிடுவதில்லை. வழக்காடிகளாக வரும் பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கிறது.

இந்தப் பின்னணியில், புரோக்கர் வழக்குரைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நமது ஒன்றிணைந்த சங்கமான MHAA-வில் சில குறைகள் இருந்தாலும், இந்தப் போராட்டத்தை துவக்கமாகக் கொண்டு தொடர்ந்து போராடி, குறைபாடுகளை சரிசெய்துவிடலாம். ஆனால், TNAA என்ற கருங்காலி சங்கத்தை இயங்க அனுமதித்தோம் என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஈழப்படுகொலைகளை கண்டித்து, தமிழக போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழக வழக்குரைஞர்களை ஒடுக்குவதற்காக, 2009 பிப்ரவரி 19 ல் தாக்குதல் தொடுப்பதற்கு அரசிற்கு ஏவல்நாயான காவல்துறை தேவைப்பட்டது. இனி வருங்காலத்தில் கருங்காலி சங்கமே அந்த வேலையை செய்யும். ஆளும் வர்க்கமும், அரசும், ஊழல் நீதிபதிகளும் தாம் நினைத்ததை எல்லாம் கருங்காலி சங்கத்தைக் கொண்டே கச்சிதமாக செய்துமுடிப்பார்கள்!

இப்பொழுது போராட தவறினால், வழக்குரைஞர்களின் ஒற்றுமை குலையும்! துரோகங்கள் நம்மை சூழும்! நமது உரிமைகள் பறிபோகும்! எனவே, உறுதியாய் நின்று, கருங்காலி சங்கத்தை ஒழித்துக்கட்ட இறுதிவரை போராடுவோம்!

வழக்குரைஞர் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.
தொடர்புக்கு : 9094666320