privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககொடைக்கானல் சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!

கொடைக்கானல் சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!

-

  • கொள்ளையர்களின் முதல்வர் ஜெயா மற்றும் கார்ப்பரேட்டுகளின் பிரதமர் மோடியின் வஞ்சக சதியை முறியடிப்போம்!
  • கொடைக்கானல் வனவிலங்கு சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!
  • மலைப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

லைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலை நினைத்தாலே, சில்லென வீசும் காற்றும், வானை முட்டும் மரங்களும், பெரும் பள்ளத்தாக்குகளும், கொண்டைஊசி வளைவுகளும், நம்மைத் தொட்டுச் செல்லும் வெண்பனி மேகங்களும், கண்ணைக்கவரும் இயற்கைக் காட்சிகளும் நம் கண்முன்னே விரியும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் விலங்குகளின் நலனுக்காக என்று சொல்லி அன்றைய தமிழக முதல்வரும் இன்றைய ‘மக்களின் முதல்வருமான’ ஜெயா 2013-ல் தமிழகத்தின் 12-வது வனவிலங்கு சரணாலயமாக கொடைக்கானலை அறிவித்தார்.

கொடைக்கானல்
சில்லென வீசும் காற்றும், வானை முட்டும் மரங்களும், பெரும் பள்ளத்தாக்குகளும், கொண்டைஊசி வளைவுகளும், நம்மைத் தொட்டுச் செல்லும் வெண்பனி மேகங்களும், கண்ணைக்கவரும் இயற்கைக் காட்சிகளும்.

வனவிலங்குகள் மீது அரசுக்கு வந்துள்ள திடீர் அக்கறைக்குக் காரணமென்ன? சில சமூக விரோதிகளால் விலங்குகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி அரசு இந்த சரணாலய திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை அவ்வாறு கொல்லப்பட்ட விலங்குகள் பற்றிய விவரம் எதையும் அரசு வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட விலங்குகள் ஏதும் அம்மாவிடம் முறையிட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.

ஒரு புறம் கொடைக்கானலில் விலங்குகளைப் பாதுகாப்பதாக நாடகமாடுகிறது. மறுபுறம், நீலகிரியில் சிறுத்தை மற்றும் கரடிகளை வனத்துறை சுட்டுக்கொல்லுகிறது. முதுமலை சரணாலயம் வறட்சி காரணமாக அவ்வப்போது மூடப்படுகிறது. பல்வேறு ஊர்களில் விலங்குகள் காடுகளைவிட்டு ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. விலங்குகளுக்கு காலம்காலமாக இயற்கையாக இருந்து வந்த நீர்நிலைகள், வழித்தடங்கள் போன்றவை எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காக அரசால் அழிக்கப்படுகின்றன. எனவேதான் விலங்குகள் தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றன. விலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கின்றன.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
விலங்குகளுக்கு காலம்காலமாக இயற்கையாக இருந்து வந்த நீர்நிலைகள், வழித்தடங்கள் போன்றவை எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காக அரசால் அழிக்கப்படுகின்றன

இந்த வனவிலங்கு சரணாலயம், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் , கொடைக்கானல், பழனி மற்றும் பெரியகுளம் தாலுக்கா பகுதிகளை உள்ளடக்கி அமையவுள்ளது. இதற்காக சுமார் 608.95 ச.கி.மீ (60895 ஹெக்டேர்) நிலப்பரப்பை கைப்பற்ற அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் மக்களின் வாழ்விடம் மற்றும் விவசாய நிலங்களும் அடக்கம்.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு சிலர் மட்டுமே நிலவுடைமையாளர்கள். பெரும்பாலானோர் கூலி விவசாயிகளாவர். கூலி வேலை செய்தும், காட்டுக்கிழங்கு, மிளகு, கல்பாசி, பட்டை, கிராம்பு, தேன் போன்ற வனப்பொருட்களை சேகரித்து விற்று கிடைக்கிற குறைந்த வருமானத்தில்தான் பலரும் வாழ்கின்றனர்.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
கூலி வேலை செய்தும், காட்டுக்கிழங்கு, மிளகு, கல்பாசி, பட்டை, கிராம்பு, தேன் போன்ற வனப்பொருட்களை சேகரித்து விற்று கிடைக்கிற குறைந்த வருமானத்தில்தான் பலரும் வாழ்கின்றனர்.

வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்போவதாக 20-09-2013-ல் வெளியிடப்பட்ட அரசாணை, ஏற்கெனவே அமுலில் இருக்கும் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்த கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறித்து விட்டது.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கேரள ஆதிவாசி மக்களின் முத்தங்கா போராட்டத்தின் தாக்கத்தால் உருவானதுதான் 2006-வன உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி ஆதிவாசி மக்களின் வீடுகள் மற்றும் காடுகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும். ஆனால், தமிழ் நாட்டில் இது வரை ஒரே ஒரு நிலப்பட்டா கூட வழங்கப்படவில்லை. இந்த நிலையில், புதிதாக 2013-ல் அறிவிக்கப்பட்ட வனவிலங்குகள் சரணாலய திட்டமோ வனத்திலிருந்து இம்மக்களையே அப்புறப்படுத்த முனைகிறது. அதனால்தான் இந்த சட்டத்தை அமுல்படுத்த அரசும் அதிகார வர்க்கமும் அவ்வளவு முனைப்பு காட்டுகின்றனர். இப்படி மக்களை விரட்டி விட்டு இவர்கள் யாருக்கு சேவை செய்யப்போகிறார்கள்? அதை அரசு வெளிப்படையாக அறிவிப்பதில்லை. “வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக”, “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக” என்றெல்லாம் கூறித்தான் மக்களை விரட்டப்போகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வதுதான் இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம்.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
2006-வன உரிமைச் சட்டத்தின் படி ஆதிவாசி மக்களின் வீடுகள் மற்றும் காடுகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும்.

சந்தேகமிருந்தால் வட இந்திய வனப்பகுதிகளை சற்றே உற்று நோக்குங்கள். மத்தியபிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார் வனப்பகுதிகள் முழுவதிலும் குவிந்து கிடக்கும் கனிச் செல்வங்களை டாடா, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற முதலாளிகள் கொள்ளையடிக்க பெரும் தடையாக இருப்பது ஆதிவாசி மக்கள்தான். ஆட்சியாளர்கள் அந்த வனத்தையும் வனத்தின் அருவிகளையும், மலைகளையும் மலைக்குள் மறைந்திருக்கும் பாக்சைட் உள்ளிட்ட ஏராளமான தாதுக்களையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பட்டா போட்டுக்கொடுத்துவிட்ட போதும், அதைக் கொள்ளையடிக்க முடியாதபடி காத்து நிற்பது காலம் காலமாக அங்கு வசித்து வரும் ‘நாகரீகமறியா’ ஆதிவாசி மக்கள்தான். எனவேதான் மலைகள், காடுகளிலிருந்து மலைவாழ் மக்களை அகற்றுவதை தமிழ்நாட்டில் முதல் இலக்காக வைத்து செயல்படுகிறது இந்த அரசு.

வனம் என்றாலே மரம், செடி, கொடிகள், மரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான். உலகறிந்த இந்த விசயம் ஆட்சியாளர்களுக்கு புரியாததல்ல. ஆனால், மரம் தனி, காடு தனி, விலங்கு தனி, மனிதன் தனி எனப் பிரித்து வைத்து மக்களை ஏய்க்கின்றனர். மனிதனை விரட்டிய பின் எதிர்க்க ஆளின்றி வனத்தை மேயலாம் என்ற கார்ப்பரேட்டுகளின் நோக்கத்திற்கேற்பவே ஆட்சியாளர்களும் வனத்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கமும் இந்த நாலாந்தர வேலையை செய்கிறது.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
காட்டெருமையால் தாக்கப்பட்டவர்

6 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும் சுற்றுலாத்தலமாகவும் காபி, மிளகு, ஏலக்காய், ஆரஞ்சு, பலா, கேரட், பீட்ரூட், செவ்வாழை, தேன் உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்களை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்குகிறது இந்த மலை. வனவிலங்கு சரணாலயம் வந்தால் இவை அனைத்தும் பாதிக்கப்படும். காலம் காலமாக பயிரிடப்படும் உணவுப்பொருட்களைப் பயிரிடாதே என்றும் உரம், பூச்சி மருந்து பயன்படுத்தக் கூடாது என்றும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற எதையும் மனிதர்கள் வளர்க்கக் கூடாது என்றும் நிர்ப்பந்தித்து மனிதர்களை விரட்டுகிறது வனத்துறை. வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக மக்களை அழிக்க முனையும் அரசின் அக்கறையை என்னவென்பது?

ஆனால், ஆதிகாலம்தொட்டு மக்களும் வனவிலங்குகளும் அதே காடுகளில்தான் அக்கம் பக்கமாக – ஒத்திசைந்து வசித்து வந்துள்ளனர். மக்கள் யாரும் பணத்திற்காக விலங்குகளை வேட்டையாடியதுமில்லை, தந்தத்திற்காக சுட்டுக்கொன்றதுமில்லை. தேவைக்கு அதிகமாக ஒரு மரத்தைக்கூட வெட்டியதில்லை. வெளியிலிருந்து வனத்துறை மற்றும் அரசியல் புள்ளிகளின் உதவியுடன் வந்த கொள்ளையர்கள்தான் காட்டை அழித்தனர்; வன விலங்குகளை வேட்டையாடினர். இன்றோ இந்த வனத்துக்கே அந்நியமான சில விலங்குகளை வெளியிலிருந்து கொண்டு வந்து விடுவதாக மக்கள் கூறுகின்றனர். (உ-ம்: தடியன் குடிசையில் மலைப்பாம்பு 75, காட்டுப்பன்றி ஒரு லோடு, சிறுத்தைப்புலி-25 மற்றும் காட்டு மாடுகள் என இறக்கி விட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் யானைகள் இறக்கி விடப்பட்டுள்ளன.) இப்படி இந்த மலைக்கே அந்நியமான விலங்குகளால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இனியும் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்குமென்றும் கூறுகின்றனர்.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
யானையால் தாக்கப்பட்டு முகஅறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

அரசின் இந்த அயோக்கியத் தனத்தை எதிர்த்து விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் சார்பாக 30-03-2015 அன்று கொடைக்கானலில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள எமது அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலைவாழ் மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்! வாரீர்!!!..

பேரணி-ஆர்ப்பாட்டம்

நாள் 30.03.2015 இடம் கொடைக்கானல்

தலைமை :
M. முருகேசன், தலைவர், பழனிமலை பழங்குடியினர் பளியன்-புலையன் கூட்டமைப்பு.

சிறப்புரை:
குணசேகரன், பொதுச்செயலர், தமிழக ஆதிவாசிகள் அமைப்பின் கூட்டமைப்பு, திருவள்ளுர் மாவட்டம்
CK.ஜானு, தலைவர், ஆதிவாசி கோத்ரா மகாசபை, கேரளா
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் மோகன், மாவட்ட செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி மாவட்டம்

மற்றும் பிற பழங்குடி சங்கங்களின் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் பேசுகின்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம் பெறும்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
தமிழ்நாடு.