Wednesday, December 11, 2024
முகப்புஅரசியல்ஊடகம்அவுட்லுக் ஆசிரியர் வினோத் மேத்தா - அருந்ததி ராய் அஞ்சலி

அவுட்லுக் ஆசிரியர் வினோத் மேத்தா – அருந்ததி ராய் அஞ்சலி

-

அவுட்லுக் இதழ் துவங்கிய காலம் முதல் அதன் ஆசிரியாக நீண்டகாலம் செயல்பட்ட வினோத் மேத்தா மார்ச் 8-ம் தேதி காலமானார். அவுட்லுக் ஒரு கார்ப்பரேட் ஊடகம் என்றாலும் இந்தியா டுடே போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஊடகங்களின் அறமற்ற பார்வையிலிருந்து சற்றே வேறுபட்டது. சரியாகச் சொன்னால் இந்த வேறுபாட்டின் அடிப்படை வினோத் மேத்தா என்பதே சரி.பரபரப்பான செய்திகள், நுகர்வுக் கலாச்சாரம், மசாலா சினிமா என்று அநேக விசயங்களில் அவுட்லுக்கும் மற்றுமொரு வணிக ஊடகம்தான். ஆனால் பல்வேறு தருணங்களில் அவ்விதழ் அரசியல் பிரச்சினைகளில் அதிகார மட்டங்களை கேள்வி கேட்டும், ஆளும் வர்க்கத்தின் அலை வரிசையிலிருந்து ஓரளவு விலகி நின்றும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றது.

இந்துமதவெறிக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் மையநீரோட்ட ஊடகங்களில் அவுட்லுக் முதன்மையானது. இன்று மோடியின் ஆட்சியிலும் கூட அத்தகைய பெருமையை அவுட்லுக் தக்கவைத்து வருகிறது. இதனால் இன்றும் அவ்விதழை இந்துமதவெறியர் மட்டுமல்ல அதன் வாசகர்களில் பலர் கூட எதிர்க்கின்றனர். வசைமாரி பொழிகின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துமதவெறி எதிர்ப்பு சக்திகளுக்கு பெரும் ஊக்கசக்தியாக திகழும் அருந்ததி ராயின் கட்டுரைகள் பல அவுட்லுக்கில் வெளியாயின. இவற்றை வெளியிடும் தைரியம் வேறு எந்த ஆசிரியருக்கு இருக்கிறது என்றால் பதில் இல்லை. ஒருக்கால் இந்தக்கட்டுரையில் அருந்ததி ராய் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இன்றைய அவரது இடத்தை உருவாக்கிய பாதையில் அவுட்லுக்கின் பங்களிப்பும் இருக்கிறது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது, அதற்கு எதிரான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரையை அவுட்லுக் வெளியிட்டது. மாவோயிஸ்ட் தோழர் ஆசாத் பேச்சுவார்த்தைக்கு என்று அழைக்கப்பட்டு பின்னர் நயவஞ்சகமாக கொன்றழிக்கப்ப்பட்ட போது, அந்த போலி மோதல் கொலையை அம்பலப்படுத்தி அவுட்லுக் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.

மிக சமீபத்தில் கூட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா சம்பந்தப்பட்ட போலி மோதல் கொலைகள் பற்றிய விரிவான கட்டுரை அவுட்லுக்கில் இடம்பெற்றது. அந்தக் கட்டுரை பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா எப்பேர்பட்ட கிரிமினல் என்பதை ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்தியது.

வினோத் மேத்தா முதலாளித்துவ ஜனநாயகத்தையே அதிக பட்ச சாத்தியமாக சரி என்பதாக ஏற்றுக் கொண்டவர். எனினும் சொல்லிக் கொள்ளப்பட்ட இந்த ஜனநாயகம் சந்தி சிரிக்கும் போது அவற்றை கேள்வி கேட்க அவர் தயங்கியதில்லை. இத்தகைய குறைந்தபட்ச நேர்மை கூட இன்றைய ஊடக ஜாம்பவான்கள் பலரிடம் இல்லை.  இந்த அளவாவது அவரிடம் ஒரு சமூகப்பார்வை இருந்தது.

அவுட்லுக் இதழை தொடங்கிய போது தனது பத்திரிக்கையின் அரசியல் மைய இடதுசாரி (left of centre) நிலை என்று அறிவித்தார். ஆனால் அப்படி ஒதுங்க ஒரு இடம் இல்லை என்பது பிற்பாடு அருந்ததி ராய்-க்கு அவர் அளித்த ஊடக முக்கியத்துவம் உணர்த்தியது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் அவரது பார்வைக்கு எதிர்திசையிலான டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லி வந்தார். அர்னாபின் குறுக்கீடுகளுக்கு நடுவே இருமிக் கொண்டும், மூச்சிரைத்துக் கொண்டும் அவர் தெரிவித்த கருத்துக்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தன. தற்செயலாக அவரது மறைவின் போது அதே அர்னாப்பை திரைகிழித்து அவுட்லுக்கில் ஒரு அட்டைப்படக் கட்டுரையே வெளிவந்தது.

அருந்ததி ராய் தனக்கும் வினோத் மேத்தாவுக்கும் இடையே இருந்த அரசியல் உறவையும், அழகிய நட்பையும் குறித்து எழுதிய நினைவஞ்சலியின் தமிழாக்கம் இது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு இந்துத்துவம் மேலும் மேலும் தனது இருப்பை உறுதி செய்து வருகின்ற நேரத்தில் அதன் பேராபத்தை மக்களுக்கு இடைவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஊடகவியலாளரின் மரணம் குறித்த அருந்ததி ராயின் இந்த அஞ்சலிக் குறிப்பை படிக்கும் போது நமது இதயம் மேலும் கனக்கிறது.

– வினவு

Shuffled Off Somewhere, Have You?

எங்கே மறைந்து போனீர்கள், வினோத்? – அருந்ததி ராய்

நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளை அவுட்லுக்கில் வெளியிட்டு ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியர் செய்ய வேண்டியதை செய்தார், வினோத் மேத்தா. அதன் மூலம், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஊடக புரோக்கர்கள் மற்றும் அவர்களது கார்ப்பரேட் புரவலர்களுக்கு இடையேயான கூட்டுப்புணர்ச்சியின் இழிந்த டைரிக்குறிப்புகளை அம்பலப்படுத்தினார். அவ்வாறு, நாட்டை ஆளும் குற்றக் கும்பல் தங்கள் நலனுக்காக உருவாக்கி வைத்திருந்த மேட்டுக்குடி மன்றத்தின் விதிகளை மீறினார். அந்த நாடகம் முடிவுக்கு வந்து திரை விழுந்த போது, அதில் பங்கேற்ற பாத்திரங்களின் மேல் நோக்கிய உத்வேகத்தில் அது ஒரு சிறு அசௌகரியமான தேக்கமாக மட்டும் முடிந்தது என்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால், அதற்காக வினோத் மேத்தா எதிர்கொண்ட பின்விளைவுகள் தீவிரமானவை. அவரது வாழ்வை வேகமாக முடித்து வைக்க அவையும் ஒரு பங்காற்றியிருந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை.

வினோத் மேத்தா
சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவு.

எப்படியோ அவர் சென்று விட்டார். அவரோடு தடுமாற்றமில்லாத, ஊகிக்க முடியாத, விசித்திரமான பத்திரிகை ஆசிரியரின் சகாப்தமும் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற விசித்திரமான நபர்கள் யாரும் இனிமேல் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

அவரது மறைவை ஒட்டி பெருமளவில் வெளியான இரங்கல் செய்திகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்தன. அவர்களில் அவருடன் தொழில்ரீதியாக எதிர்துருவங்களாக இருந்தவர்களும் உண்டு. அவை அவரது மறைவுக்காக மட்டுமின்றி, அவரைப் போன்ற சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவுக்கானதாகவும் இருந்தன.

ஒரு வகையில் வினோத் மேத்தா மாதிரியான கலகவாதிக்கு இடம் கொடுத்ததன் மூலம் அவுட்லுக் இதழின் உரிமையாளர்கள் தமக்குத் தாமே சிறப்பு சேர்த்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அலுவலகங்கள் பலமுறை தாக்கப்பட்ட போதும், பழிவாங்கும் வகையிலான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட போதும் அவர்கள் வினோத் மேத்தாவை விட்டுக் கொடுக்கவில்லை. வினோத்துக்கு இரங்கல் தெரிவிக்கின்ற நம்மைப் போன்றவர்களைப் பொறுத்தவரை, சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை விட்டு விட முடியவில்லை.

நான் வினோத்தின் இழப்பை மிகவும் அதிகமாக உணர்வேன். ஒரு எழுத்தாளராக எனது வாழ்க்கையில் மிகமுக்கிய பங்கை ஆற்றியவர் அவர்.

அருந்ததி ராய்
என்னுடைய படைப்புகளுக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை.

எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்து இருந்ததில்லைதான்;  பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. காங்கிரஸ் குறித்து, காஷ்மீர் குறித்து (அது இல்லாமலா!), சாதிய அரசியல் குறித்து, வினோதமானதும் சமீபத்தில் மீள எழுதப்பட்டதுமான அவரது “மீனா குமாரியின் வாழ்க்கை வரலாறு” புத்தகம் என்று வேறுபடும் புள்ளிகள் நிறைய இருந்தன. ஆனால், இப்போதைய கருத்து வேறுபாடு நிரந்தரமானது; தீர்க்கமுடியாதது. அவர் போயிருக்கக் கூடாது என்கிறேன் நான்; இன்னும் கொஞ்ச காலம் அவர் நம்மோடு இருந்திருக்கலாம். ஆனால், அவர் நான் கருதுவதை ஏற்றுக் கொள்ளாமல் போயே விட்டிருக்கிறார். இது அபத்தமானது; அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

1997-ல் என்னுடைய ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ வெளியான பிறகு, மேற்கத்திய ஊடகங்களுக்கு கிழக்கு உலகைப் பற்றி விளக்கிச் சொல்லும் முகவராக மாறிவிடும் அபாயத்தில் நான் இருந்தேன். அத்தகைய பங்களிப்பு செய்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் என்ன எழுதினாலும், எந்த வகையான விவாதங்களுக்குள் சிக்கிக் கொள்வதாக இருந்தாலும், எந்த களேபரத்தில் ஈடுபட விரும்பினாலும் அதை இங்கே செய்ய விரும்பினேன். எந்த ஒரு தேசியப் பெருமிதத்துக்கான காரணத்தாலோ, இது என்னுடைய நாடு என்ற உணர்வாலோ இல்லை; நான் வாழும் இடம் இது என்ற எளிமையான காரணத்தால் மட்டுமே. வினோத் மேத்தா என்னுடைய இந்த முயற்சியின் கூட்டாளி ஆனார். 1998-க்கு பிறகு நான் எழுதிய அனைத்தும் முதலில் அவுட்லுக்கில் தான் வெளியாகின.

வினோத் மேத்தா
நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம்.

எங்கள் உறவின் மிகத் தொடக்கத்திலே, இதற்கு மாறாக பல கருத்துகள் சொல்லப்பட்டாலும் (அப்படி நிறைய உள்ளன), நாங்கள் யாரும் மற்றவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று புரிந்து கொண்டிருந்தோம். எந்த உறவிலும் இது அபூர்வமான, அழகான ஒன்று என்று கருதுகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம். நான் அவர் வீட்டுக்கு சென்றதே இல்லை. என்னை பார்க்க ஒரே ஒருமுறை மட்டும் சமீபத்தில் வந்தார்.

என்னைப் பார்க்க வந்தார் என்று சொல்வதைக் காட்டிலும் என் வீட்டை பார்வையிட வந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். நான் எப்படி வாழ்கிறேன் என்று தனது மனதில் உருவாக்கிக் கொண்ட சித்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வந்தது போன்று இருந்தது, அவரது வருகை. அலட்டிக் கொள்ளாமல் தனது முதுமையின் தடுமாற்றத்துடன் வந்தவர் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு மறைந்து விட்டார். விருந்தினர் பாத்திரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை; விருந்து உபச்சாரம் செய்யும் பாத்திரம் எனக்கும் பொருந்தவில்லை; நாங்கள் எந்த வகையிலும் அதற்கு பொருத்தமற்றவர்கள். எங்கள் இருவரிடையேயான சமூக உறவாடல் இந்த அளவுக்குத்தான் இருந்தது.

இருப்பினும், இந்த வினோதமான, உரையாடலற்ற, குறைந்தபட்சமான உறவுமுறையிலிருந்துதான் ஐந்து பகுதிகளாக வெளியிடப்படும் அளவிலான கட்டுரைகளும், நேர்முகங்களும் படைக்கப்பட்டன. அவை இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் செய்தித் தாள்களிலும், செய்தி இதழ்களிலும் வெளியிடப்பட்டன. இவற்றின் படைப்புக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை. கட்டுரைகளை நான்தான் எழுதினேன். ஆனால், “நான் என்ன எழுதினாலும், அதை வரையறுக்கப்பட்ட ஒரு இதழியல் வடிவத்துக்குள் மட்டுறுத்தாமல் வினோத் மேத்தா வெளியிடுவார்” என்ற நம்பிக்கைதான் எழுதுவதற்கான சுதந்திரத்தையும், வேகத்தையும் எனக்குக் கொடுத்தது. இது எளிதில் கிடைத்து விடுவது அல்ல. இப்போதும், எப்போதும் ஒரு வெகுஜன வாசகப்பரப்பை குறிவைக்கும் பெரிய வணிக இதழ், அவுட்லுக். அதன் பலம் அதுதான். இருப்பினும், என்னுடைய, மரபை மீறுகின்ற, மிக நீண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, பெரும்பாலும் புயலைக் கிளப்பும் கட்டுரைகளை பிரசுரிக்கும் தன்னம்பிக்கையும், நெகிழ்வுத் தன்மையும் வினோதிடம் இருந்தன.

இதற்கான விதிகள் ஆரம்பத்திலேயே வகுக்கப்பட்டு விட்டன. 1998-ல் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு எதிர்வினையாக நான் எழுதி அனுப்பிய ‘சிந்தனையின் முடிவு’ கட்டுரையில் “‘யார் இந்த நாசமாப் போன பிரதமர், அணுகுண்டுக்கான பொத்தானில் கை வைக்கும் உரிமையைப் பெற'” என்ற வரியைப் படித்து விட்டு, “இப்படி உண்மையிலேயே சொல்ல விரும்புகிறீர்களா? அல்லது அதை ‘யார் இந்தப் பிரதமர்?’ என்று மாற்றிக் கொள்ளவா?” என்று கேட்டார். “அப்படி மாற்றுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை” என்றேன், நான். எனவே ‘யார் இந்த நாசமாப் போன பிரதமர்?’ என்ற வாக்கியம் அப்படியே வெளிவந்தது.

இப்போது, உதவி கேட்க வேண்டியது என்னுடைய முறை. அந்தக் கட்டுரை வெளியாவதை ஒட்டி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பாதையில் நடப்பதைப் போல உணர்ந்த நான், “இந்தக் கட்டுரை வெளியாகும் இதழின் அட்டையில் என்னுடய புகைப்படத்தை போடுவதை தவிர்க்க இயலுமா?” என்று வினோதிடம் கேட்டேன். “என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்றார்  அவர். அவரது மொழியில் அதற்குப் பொருள், “அதுக்கு வேறு இடம் பார்த்துக்கோ”. இதழ் வெளியானபோது, அதன் அட்டையில் என் புகைப்படமும், அதன் மேல் கட்டுரையின் மிக விவகாரமான வரி கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது : “நான் பிரிந்து செல்கிறேன்”. அதன் பிறகு எல்லா வகையான கலாட்டாக்களும் அவிழ்த்து விடப்பட்டன.

இவைதான் எங்கள் உறவினுடைய எழுதாத சட்டங்கள். என்னுடைய கட்டுரை எதிலும் எனது சம்மதம் பெறாமல் சிறு மாற்றத்தைக் கூட வினோத் செய்ய மாட்டார். அதே போன்று, என்னுடையது அட்டைப்படக் கட்டுரையாக வருவதாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் மற்றும் அட்டை வடிவமைப்பு பற்றி கருத்து சொல்வதை நான் தவிர்க்க வேண்டும். பதினைந்து வருடங்களுக்கு இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அத்வானி வினோத் மேத்தாவிற்கு இறுதி மரியாதை
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம் (படம் : நன்றி அவுட்லுக்)

அவரது இறுதிச் சடங்கின் போது, ஒரு கட்டத்தில் நிகழ்ந்த ஆச்சரியமான, சோகமான சூழலை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம். அத்வானி ஒரு மலர் வளையத்தை அவர் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார். நான் வினோத்துக்கு என் மனதிலிருந்து பிரியாவிடை கொடுக்கும் (அல்லது கொடுக்க மறுக்கும்) முயற்சியில் போராடிக் கொண்டிருந்தேன். வினோத் எனக்கு எச்சரிக்கை விடுத்த ஒரே சந்தர்ப்பம் அப்போது என நினைவில் ஓடியது. அது 2006-ம் வருடம். “டிசம்பர் 13, 2001 அன்று நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலில் ஆற்றிய பாத்திரத்துக்காக தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு இன்னும் சில நாட்களில் தூக்கிலடப்படலாம்” என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.

அந்த வழக்கு தொடர்பான நிகழ்வுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்து, தொடர்பான சட்ட ஆவணங்கள் அனைத்தையும் படித்திருந்த எனக்கு அது கடும் அதிர்ச்சியளித்தது. அப்சல் குருவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களில் பெரும்பாலானவை மிகவும் பலவீனமானவை அல்லது புனையப்பட்டவை என்பதை அறிந்திருந்தேன். (அந்தத் தாக்குதல் போலி அடையாளத்துடன் நடத்தப்பட்டது என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன.) அப்சல் தூக்கிலிடப்படுவது சில சங்கடமான கேள்விகளுக்கு ஒருபோதும் விடை கிடைக்காமல் செய்து விடும். எந்த நேரடியான ஆதாரமும் இல்லா விட்டாலும் ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக’ அப்சலுக்கு மரண தண்டனை விதிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் அதிர்ச்சியளித்தது.

அதே நேரத்தில், பா.ஜ.க தாக்குதல் நடந்த 2001-ல் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் தலைமையில் “தேஷ் அபி ஷர்மிந்தா ஹை, அப்சல் அபி பீ ஜிந்தா ஹை” (தேசத்துக்கு அவமானம், அப்சல் இன்னும் உயிரோடு இருப்பது) என்ற முழக்கத்தோடு ஒரு உரத்த பிரச்சாரத்தை நடத்தியது. “எனக்கு அவ்வளவு தெரிந்திருந்தும், அவற்றை எல்லாம் இப்போது வெளிப்படுத்தவில்லை என்றால் என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது” என்று தோன்றியது. வினோத்தை அழைத்து அது குறித்து நான் எழுதப் போவதாக கூறினேன். முதல் முறையாக, ஒரே தடவையும்  அவர், ”அருந்ததி வேண்டாம். நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் நம் மீதே பாய்வார்கள். உனக்கு தீங்கு விளைவிப்பார்கள்” என்று சொன்னார்.

“இது தொடர்பாக அமைதியாக இருக்கலாகாது” என்று அவரை ஏற்க வைக்க எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. “அவரது வாழ்க்கை இல்லாமல் போக வேண்டும்” என்ற தலைப்பில் நெடிய கட்டுரை ஒன்றை எழுதினேன். கட்டுரையின் தலைப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே உருவப்பட்டது. அவுட்லுக் அட்டைப்படம், “அப்சலை தூக்கிலிடாதே என்று கொட்டை எழுத்துக்களில் முழங்கியது. உண்மையில் பா.ஜ.க. அல்ல காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தான் கோழைத்தனமாக, சட்டத்துக்கு புறம்பாக, அருவருப்பான முறையில் அப்சலை சில ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் தூக்கிலிட்டது.

அந்த இதழ் வெளிவந்த பிறகு மடை திறந்தாற் போன்ற வசைமழையில் அவுட்லுக் பல வாரங்கள் குளித்தது. ஆனால், இது எங்கள் ஒப்பந்த விதிகளின் இன்னொரு பகுதி. நான் எழுதியதை வினோத் வெளியிடுவார். பின்னர், அதற்கு எதிர்வினையாக கெட்ட வார்த்தைகளில் திட்டும் வாசகர் கடிதங்களால் பல வாரங்கள் இதழை நிறைப்பார். (வினோத்தின் உதவியாளராக 25 வருடங்கள் பணியாற்றிய சாஷி, 2008 மும்பை தாக்குதல்களுக்கு பிறகு அதைப் பற்றி நான் எதுவும் எழுதுவதற்கு முன்பே அவுட்லுக் இதழுக்கு வரத் துவங்கியிருந்த கோப எதிர்வினைகளை காட்டினார்). நானறிந்த வரையில் வேறெந்த பத்திரிகையும், தனது ஆசிரியரையும், விருந்தினர்களையும் நிந்திக்கும் கடிதங்களை அவ்வளவு மகிழ்ச்சியுடன் வெளியிடுவதில்லை. வினோத் அந்த கடிதங்களிலிருந்து முடிவற்ற கேளிக்கையை பெற்றுக் கொண்டிருந்தார். சில சமயம், தனக்கு பிடித்தமான கடிதங்களை எடுத்துக் கொண்டு என்னை தொலைபேசியில் அழைத்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருப்பார். அப்சல் குரு தொடர்பான கடிதங்களில் அவருக்குப் பிடித்த கடிதம் இது தான். “அப்சல் குருவை விட்டுவிடுங்கள்; அருந்ததியை தூக்கிலிடுங்கள்”. சந்தேகத்திற்கிடமின்றி, அதை வெளியிடவும் செய்தார்.

ஆனால், இப்போது, எதிர்பாராத விதமாக, அத்வானியும், நானும் அவரது இறுதிச் சடங்கில் ஒன்றாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். நான் ஆடிப் போயிருந்தேன். அத்வானியின் தரப்பில் பெருந்தன்மையையும், ஆனால் என் தரப்பில் அது சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இத்தகைய சூழலைப் பற்றி வினோத் என்ன நினைத்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

அவுட்லுக் இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வினோத் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, கடைசியாக அவுட்லுக் வெளியிட்ட எனது கட்டுரை “தோழர்களுடன் ஒரு நடைப்பயணம்”. பஸ்தரின் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களுடன் பல நாட்கள் நான் கழித்தது பற்றிய எனது அனுபவங்களை அதில் பதிவு செய்திருந்தேன். சமீபத்தில் மரணித்த பி.ஜி. வர்கீஸ் கூட அதற்கு எதிர்வினையாற்றி இருந்தார். வினோத் ஒரு அசாதாரண செயலாக பி.ஜி. வர்கீஸின் எதிர்வினைக்கு மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆசாத் என்றழைக்கப்படும் செருகுரி ராஜ்குமாரின் மறுமொழியை வெளியிட்டார். அப்படி செய்தது வினோதின் மிகவும் குறிப்பிடத்தகுந்த பணியாக இருந்தது. எவ்வளவு நிதானமாகவும், தர்க்கரீதியாகவும் ஆசாத் எழுதியிருந்தார் என்று வினோத் என்னிடம் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அந்த கட்டுரை வெளியாகும் போது ஆசாத் உயிருடன் இருக்கவில்லை. நாக்பூரில் சாதாரண உடையில் வந்த போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டு ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில், தண்டகாரண்யா காட்டுப் பகுதியில் வைத்து எந்த விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

அவர் நோய் வாய்ப்படுவதற்கு முன்பாக கடைசியாக ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்தார். “கவனியுங்கள் அருந்ததி; நான் உங்களிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை; இப்போது கேட்கிறேன். சரியாக சொல்வதென்றால், நான் இதனை கோரிக்கையாக வைக்கவில்லை; செய்யும்படி கூறுகிறேன். என்னுடைய புதிய நூல் “கட்டவிழ்க்கப்பட்ட – பத்திரிகை ஆசிரியர்”-ஐ நீங்கள்தான் வெளியிட வேண்டும். இது போன்ற வேலைகளை செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்’ என்றார். நான் சிரித்து விட்டு ஒத்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தார். ”ஆங்! நான் சொல்ல மறந்து விட்டேன். நம்முடன் மேடையில் இருக்கப் போகும் மற்றொரு விருந்தாளி அர்னாப் கோஸ்வாமி” என்று குறும்புடன் கூறினார். அர்னாபிடமும் இது தொடர்பான முழு விபரங்களையும் வினோத் சொல்லியிருக்க மாட்டர் என்று நினைக்கிறேன். அந்த கிழட்டு நரி எங்கள் இருவரையும் எதிரெதிராக விளையாடியிருக்கிறது.

நாங்கள் மூவரும் ஒரே மேடையில். அதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது. இருந்த போதிலும், வினோத் மேத்தாவுக்காக நான் அதை செய்திருப்பேன்; மகிழ்ச்சியாகவே. ஆனால் அவரோ எங்கோ மறைந்து போய் விட்டார். அவர் போயிருக்கக் கூடாது. அவருடன் நான் பேச வேண்டியிருக்கிறது.

– அருந்ததி ராய்
தமிழில்: சம்புகன்

 

  1. “அவர் போயிருக்கக் கூடாது. அவருடன் நான் பேச வேண்டியிருக்கிறது.“

    சிறந்த நட்பு இப்படிதான் வேண்டும். அப்படியே வேண்டியிருக்கிறார்

  2. சமுக மாற்றத்துக்கான செயல்பாட்டாளர் தோழர் ஆசாத் , சமுக மாற்றத்துக்கான கிரியா ஊக்கி வினோத் மேத்தா ஆகியோரின் நினைவுகள் நம்மை இனி வழிநடத்த வேண்டும்.

  3. இரங்கல் கடிதம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!

  4. முதலாளித்துவ பத்திரிகையில் சிறிது நேர்மையான பத்திரிக்கையாளராக விநோத் மேத்தாவை நான் பார்ககிறேன்.

  5. frontline ஆசிரியர் என். ராம் outlook இதழை விட மிகுந்த தீவிரமான கட்டுரைகளை பதிப்பித்து இருக்கிறாரே..! அவருக்கும் வினவின் உள்ளத்தில் இந்த இடம் கிடைக்குமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க