Tuesday, October 15, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கொடைக்கானல் : பழங்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !

கொடைக்கானல் : பழங்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !

-

வனநிலம் மீதான உரிமைச்சட்டம் 2006-ம் பழங்குடியினர்களின் வாழ்வாதாரமும்!

  • கொள்ளையர்களின் முதல்வர் ஜெயா மற்றும் கார்ப்பரேட்டுகளின் பிரதமர் மோடியின் வஞ்சக சதியை முறியடிப்போம் !
  • கொடைக்கானல் வனவிலங்கு சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!
  • மலைப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

என்ற அடிப்படையில் 30-03-2015 அன்று வன உரிமையை மீட்டெடுக்கும் பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பாக கொடைக்கானலில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kodaikanal-demo-07தமிழகத்தின் நிலப்பரப்பு 1.30 லட்சம் சதுர கிலோமீட்டர், இதில் 22.877 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு வன நிலமாகும், இவ்வனங்களைச் சார்ந்து ஏழரை லட்சம் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். வன உரிமைச்சட்டத்தின்படி பழங்குடியினர் கிராமங்களின் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் வனப்பகுதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

kodaikanal-posters-1வனம் என்றாலே மரம், செடி, கொடிகள், மங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான். வனவிலங்குகள் மீது அரசுக்கு வந்துள்ள திடீர் அக்கறைக்கு காரணமென்ன? சில சமூக விரோதிகளால் விலங்குகள் பாதிக்கப்பட்டதாக கூறி அரசு இந்த சரணாலய திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை அவ்வாறு கொல்லப்பட்ட விலங்குகள் பற்றிய விபரம் எதையும் அரசு வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட விலங்குகள் அம்மாவிடம் முறையிட்டதா? என்ற விவரமும் தெரியவில்லை.

kodaikanal-posters-2தமிழகத்தில் பழங்குடியினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே சத்தியமங்கலம், கொடைக்கானல், மேகமலை ஆகிய மூன்று பகுதிகளை வன உயிரின காப்பமாக (சரணாலயம்) மத்திய அரசு அறிவித்துள்ளது.

kodaikanal-posters-3வனஉயிர் பாதுகாப்புச்சட்டம் 1972 பிரிவு 26ஏ1(பி)-ன்படி தமிழக அரசு கொடைக்கானல் பகுதியில் வனஉயிர் இன சரணாலயம் அமைக்க அதிவேகமாக செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது, ஆகவே சரணாலயம் அமைக்கப்படுகையில் இது தமிழகத்தின் பனிரெண்டாவது வன உயிர் சரணாலயமாக கருதப்படும்.

kodaikanal-notice-5இந்த வன உயிர் சரணாலயத்தின் திட்ட வரைமுறையானது முன்பு 1994-ம் ஆண்டே ஒப்புதல் பெறப்பட்டு தற்பொழுது கடந்த 2013 செப்டம்பர் 20-ம் தேதி இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளிவந்துள்ளது, இத்திட்டத்தின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் வனஉயிர் சரணாலயத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது உறுதியான மற்றும் மிகப்பெரிய திட்டம் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு பகுதி அல்லது எல்லைகளாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1. கொடைக்கானல்

2. பெரும்பள்ளம்

3. தேவதானப்பட்டி

4. பூம்பாறை

5. பேரீச்சம்

6. வந்தரேவு

7. பழனியிலிருந்து ஒரு பகுதி.

6 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும், சுற்றுலா தளமாகவும், காபி, மிளகு, ஏலக்காய், ஆரஞ்சு, பலா, கேரட், பீட்ருட், செவ்வாழை, தேன், உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்களை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்குகிற இந்த மலையில் வனவிலங்கு சரணாலயம் அமைத்தால் இவை அனைத்தும் பாதிக்கப்படும்

வன உரிமையை மீட்டெடுக்கும் பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில் கொடைக்கானல் பகுதியைச் சுற்றியுள்ள மங்களம்கொம்பு, பெருமாள்மலை, கொட்டக்கொம்பு, பண்ணைக்காடு, கள்ளக்கிணறு, நல்லுர்காடு, கடையமலை, சேம்படியூத்து, கடுகுதடிபுதுர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர், ஆதிவாசிகள், ஆதிதிராவிடர் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்தப் பேரணிக்கு பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜேஸ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார், பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் தலைமையில் கலையரங்கம் பகுதியில் இருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், சுற்றுப்புற சூழல் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், வழக்கறிஞர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் பறையோசை பேரணியை கடைசிவரை உற்சாசகத்துடன் நடத்திச் சென்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இரண்டு மணிநேரம் நடந்த பேரணி இறுதியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நின்று, கோரங்கொம்பு பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.சின்னாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய ஊட்டி வழக்கறிஞர் கே.விஜயன் தனது உரையில்..

kodaikanal-demo-02அச்சமில்லை அச்சமில்லை என்று வீதியில் இறங்கி பேராடினால் மட்டுமே இந்த வன சரணாலய திட்டத்தை விரட்ட முடியும். நீங்கள்தான் உண்மையான போராளி. பலியன் இன பெண்தான் நாம் வணங்கும் மீனாட்சி. அவள்தான் இந்த வனத்தைக் காப்பவள். நீங்கள் அவளின் வாரிசுகள். உங்களுக்குத்தான் இந்த வனம் சொந்தம்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை கிளையின் துணைச்செயலாளருமான வாஞ்சிநாதன் தனது உரையில்…

kodaikanal-demo-03இந்த பேரணியும் ஆர்ப்பாட்டமும் மனநிறைவான போராட்டம். இது பூர்வீக மக்களின் போராட்டம், நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள். நாம் அமைதியாக போராடுகிறோம். நம்முடைய போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டும். வனத்தையும் விலங்குகளையும் பாதுகாக்கின்ற மலைவாழ்மக்களை இந்த வனத்தை விட்டு வெளியேற்றத் துடிக்கிறது அரசு. உண்மையில் வெளியேற்றப் பட வேண்டியவர்கள் பாரஸ்டர், போலீஸ். இவர்களால்தான் வனத்திற்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைகிறது.

வனம், மலை எங்கள் உயிர். எங்கள் தாய்போல அதை நாங்கள் காப்போம். இந்த வனவிலங்கு சரணாலயம் அமைப்பது மூலம் இனி ஒவ்வொரு விசயத்திற்கும் பாரஸ்டர்களை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டால் எப்படி உயிர் வாழ்வது?

நகரத்தில் வாழ்பவனுக்கு இதுபற்றி தெரியாது. அவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கோர்ட்டை முழுமையாக நம்பாத போராட்டம் ஜெயிக்கும். இதுபோன்ற போராட்டங்களுக்காக நாங்கள் இலவசமாக வழக்கு நடத்துவோம்,

உங்களுக்கு ஆதரவாக மதுரை உயர்நீதிமன்றத்தில் போராட்டம் நடக்கும். கொடைக்கானலை போர்க்களமாக மாற்றும் போது அரசு அலுவலகங்கள் இயங்காது. கொடைக்கானலில் குடியேறுவோம். கோடைவிழா எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.

உன் சட்டத்தை (அரசே) நீயே மதிக்கமால் இருக்கும் போது நாங்கள் என்ன மயித்துக்கு மதிக்க வேண்டும். இந்த மலைவாழ் மக்களுக்கு 60 வருடமாக பட்டா வழங்கவில்லை. 60 வருடமாக மின்சாரம் இல்லை, எனவே அனைவரும் கொடைக்கானல் நகர்பகுதியில் குடியேறுவோம். இந்த போராட்டத்தை இன்றோடு நிறுத்திவிடக்கூடாது. வீட்டுக்கு ஒருவர், குடும்பத்துக்கு ஒருவர் என ஒதுக்கி தொடர்ந்து போராடவேண்டும் நாங்களும் எங்கள் தோழமை அமைப்புகளும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி உரையை முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

திருவள்ளூர் மாவட்டம் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன் தனது உரையில்…

உடல் ஊனமுற்றோர் தொடர் முழக்கப் போராட்டங்களை தொடர்ந்து சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண் தெரியாதவர்கள் சென்னையில் போராடுகிறார். நாம் ஏன் பயப்படவேண்டும். கொடி பிடித்து ரோட்டுக்கு வராத போராட்டம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

ஆதிவாசிகளின் நாடுதழுவிய போராட்டத்தின் மூலம் வன உரிமை சட்டம் 2006-ஐ பெற்றுள்ளோம். விலங்குகள் எங்கள் கடவுள், எங்கள் சொந்தம். சட்டம் பட்டா தர சொல்கிறது, யார் அதை மதிக்கின்றனர்? வறண்ட பூமியாக மாறிவருகிறது இந்த வனம். உங்களுக்காக போராட ஒரு கூட்டம் உள்ளது. உங்கள் ஆயுதங்கள் கூர்மையானது தொடர்ந்து வீதியில் இற்ங்கி போராடுங்கள் என்று கூறினார்.

மச்சூர் ரவிச்சந்திரன் தனது உரையில்..

மனித உயிர் சரணாலயம் வேண்டுமா? வன விலங்கு சரணாலயம் வேண்டுமா? மோடியும் லேடியும் போட்ட சட்டம் வன உயிர் பாதுகாப்பு சரணாலயம் இந்த சட்டம் பெரும் முதலாளிகளுக்காக போடப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முதலில் நம்மை வெளியேற்றிவிட்டு பின்பு டாட்டா, அம்பானி, அதானி போன்ற முதலாளிகள் கொள்ளையடிக்க வனத்தை பிரித்து கொடுக்க காத்திருக்கின்ற மத்திய அரச்சையும் மாநில அரசையும் வீதியில் இறங்கி விரட்டி அடிப்போம் என்று கூறினார்.

குமாராசாமி தலைமை ஆசிரியர் ஓய்வு மச்சூர்

அன்று 1956-ல் 863 ஏக்கர் நிலங்களை பிரித்து ஒவ்வொருவருக்கும் 1 முதல் 1-1/2, 2 ஏக்கர் என அரசு கொடுத்து மக்களை வாழவைப்போம் இந்த வனத்தைக் காப்போம் என்று பிரித்துக் கொடுத்தது. இன்று வனவிலங்கு சரணாலயம் அமைத்து அதே மக்களையும் வனத்தையும் அழிக்க திட்டமிட்டுள்ளது அரசு. ஆதி வாசி என்றால் ஆதியில் பிறந்தவன் என்று அர்த்தம்.

இன்று எத்தனையோ திராவிட கட்சிகள் வந்தாலும் ஆதிதிராவிடர்களின் வாழ்நிலை மட்டும் மாறவேஇல்லை. வனவிலங்கு சரணாலயத்தை எங்கு அமைக்கப் போகீறீர்கள் என்று மேல்மலை மக்கள் கேட்டால் கீழ்மலையில் அமைக்கப்போகிறோம் என்றும், கீழ்மலை மக்கள் கேட்டால் மேல்மலையில் அமைக்கப்போகிறோம் என்றும் பொய்கூறி வருகிறது அரசு. எந்தப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது என்று வெளிப்படையாக கூறுவதற்குகூட இந்த அரசுக்கு துணிவில்லை. கொட்ட கொட்ட குனிபவனும் முட்டாள், கொட்டுபவனும் முட்டாள் என்று தனது ஆர்ப்பாட்ட உரையை முடித்தார்.

கொடைக்கானலைச் சேர்ந்த ஜெஸிஸ்தா பி.யூ.சி.எல் தனது உரையில்….

kodaikanal-demo-08படைச்சவனுக்கே இல்லாத பாகற்காய் பந்தல் கட்டி தொங்குதாம். உருவாக்கியவர்கள் நாங்கள், விவசாயத்தை நாங்கள் முடிவு செய்யவேண்டும். இது ஆதிவாசிகளின் உரிமை. இங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டால் அது ஆதிவாசிகளை மட்டும் பாதிக்காது. 6 மணிக்கு மேல் விலங்குகள் வெளியில் வந்து விடும். அதனால் வியாபாரிகளும் அதிக அளவில் பாதக்கப்படுவார்கள். 6 மணிக்குமேல் போக்குவரத்து நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். பாராஸ்டர்களை உள்ளே விட்டதால் இன்று நாம் வெளியேற்றப்படுகிறோம். நியாயத்தை தேடி நாம் செல்கிறோம். ஓட்டுபோட்ட மக்களுக்கு நீங்கள் போடும் சட்டம் வனவிலங்கு சரணாலய திட்டம்.

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் குருசாமி தனது உரையில்..

வன விலங்கு சரணாலய திட்டம் ஒரு ஃபிராடு திட்டம்.

வனம், விலங்கு மற்றும் மக்கள் மூன்றும் இயற்கையின் வரப்பிரசாதம். பகுத்தறிவு உள்ள மனிதன் வனத்தை தேவைக்கு பயன்படுத்தினான். இந்த திட்டம் பொண்டாட்டியை விற்று தண்டட்டி வாங்கின கதை.

நகர் பகுதியில் செயின் பாலீஸ் போடுகிறேன் என்று வீடு வீடாக வந்து பாலீஸ் போடுபவன் பொது மக்களின் செயினை வாங்கி பாஸீஸ் போட்டு கொடுப்பான். அதன் பின் அந்த செயின் எடை கணிசமான அளவு குறைந்திருக்கும். பட்டப்பகலில் திருடுபவன் செயின் பாலீஸ் போடுவபன். அவன் எப்படியோ அப்படிதான் வனவிலங்கு சரணாலய திட்டத்தை கொண்டுவருபவன் செயல் அவர்கள் முழு திருடர்கள்.

லீலாவதி தனது உரையில்…

பன்னாட்டு கம்பெனிகளின் முதலாளிகளுக்கு சேவை செய்யக் கூடிய இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை நீடித்தால் பெண்கள் கற்பு சூறையாடப்படும். பெண்கள் ஒரு கட்டு விறகு விற்றால்தான் வாழ்க்கை. வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டால் அவர்கள் வனத்தில் விறகு எடுக்க முடியாது. அவர்களின் வாழ்நிலை மிகவும் பாதிக்கப்படும். கொட்ட கொட்ட குனியக் கூடாது. திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி வருகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் . கிராம சபை கட்டவேண்டும். தலைமை அமைக்க வேண்டும்.

நேற்று சில கயவர்கள் லீலாவதி-முருகேசனை, ‘போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க அதனால் பேரணி நடக்காது யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள்’ என்று சில கிராமங்களில் கூறியுள்ளார்கள்.

நான் அவர்களை கேட்கிறேன், நீங்க ஆம்பளையா இருந்தா நேரடியாக வந்து பேசுங்கள். நாங்கள் இங்கதான் இருக்கிறோம். நாங்கள் மொத்தம் 76 கிராமங்களில் வாழ்ந்து வருகிறோம். எங்களை மொத்தமாக கைது செய்து சிறையில் அடைத்து எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். நாங்கள் தயாராக உள்ளோம். போராடமாட்டோம். ஆனால் எங்கள் தாயை (வனத்தை) நாசப்படுத்தினால் விடமாட்டோம். விரட்டி அடிப்போம். 2006 சட்டப்படி எங்களுக்கு பட்டா வழங்குங்கள் என்று கூறினார்.

தலைமை உரையில் பேசிய சின்னாண்டி இதுவரை 2006, 2008, 2013 வழிகாட்டு நெறிமுறைகள் முறைப்படி கோட்டநில கமிட்டி தலைமையில் கோட்டாட்சியர் வனஉரிமை தொடர்பாக 470 மனு கொடுத்துள்ளோம். பதில் வேண்டும். ஊராட்சிமன்ற தலைவர்கள் பேரில் வனத்துறை மூலம் சட்டரீதியாக வனவிலங்கு சரணாலயத் திட்டத்தை நிறுத்தி விட்டோம் என்ற அறிக்கை வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நோட்டீசில் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ம.க.இ.க மையக்கலைக்குழுவின் பாடலும் பறையும் மலைவாழ் மக்களிடையே பேராட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

kodaikanal-demo-01தொகுப்பாக..

மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானல் பகுதியில் நினைத்தாலே சில்லென வீசும் காற்றும் வானை முட்டும் மரங்களும் பெரும் பள்ளத்தாக்குகளும் கொண்டைஊசி வளைவுகளும் நம்மைத் தொட்டுச்செல்லும் வெண்பனி மேகங்களும் கண்ணைக்கவரும் இயற்கைக் காட்சிகளும் நம் கண்முன்னே விரியும். கொடைக்கானலில் வனவிலங்கு சரணாலயம் அமைத்து பல பன்னாட்டு கம்பெனிகளுக்கு வனங்களை பிரித்து கொடுத்து கனிம வளங்ளை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளது மத்திய மாநில அரசுகள்.

வனங்கள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்கள் இருப்பவர்கள் பழங்குடியினர்கள், இவர்களை அரசு வனங்களில் இருந்து அந்நியப்படுத்தி மொட்டைப் பாறைகளில் தொகுப்பு வீடுகள் என்ற பெயரில் குடியமர்த்திய பின்னே, வனங்களும் வன விலங்குகளும் சமூக விரோதிகளால் அழிக்கப்பட உள்ளது. அரசு பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமே வனங்களும் வன விலங்குகளும் பாதுகாக்கப்படும்.

செய்தி:
பு.ஜ செய்தியாளர்
உசிலம்பட்டி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க