Tuesday, August 9, 2022
முகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் தாலி தேவையா ? பெண்கள் சொல்லட்டும்

தாலி தேவையா ? பெண்கள் சொல்லட்டும்

-

“பெண்களுக்கு தாலி தேவையா, தேவை இல்லையா” என்கிற விவாத நிகழ்ச்சியை நடத்த இருந்ததற்காக, பெயர்ப் பலகை இந்து அமைப்பு ஒன்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் கடந்த மார்ச் மாதத்தில் தாக்கப்பட்டது. இது ஏதோ சில அனாமதேய அற்பங்களின் பிரச்சினை அல்ல. ஏனெனில், “இந்த விவாதத்தை நடத்தக் கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ் வானர கூட்டமே அதிகாரப்பூர்வமான எதிர்ப்பையும், வன்முறையையும் அரங்கேற்றியது.

அதே போன்று பெரியார் இயக்கங்கள் தாலி அகற்றும் நிகழ்ச்சியை அறிவித்து நடத்துவதையும் இவர்கள் தடை செய்ய முயற்சிக்கிறார்கள். மோடி ஆட்சி வந்ததிலிருந்து இத்தகைய பார்ப்பன இந்துமதவெறி திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டே வருகின்றன.

சமஸ்கிருதத் திணிப்பு, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல், தேவாலயங்கள் மீதான தாக்குதல், மாட்டிறைச்சிக்குத் தடை போன்று நாத்திகத்தையும், பார்ப்பன சடங்குகளின்றி நடத்தப்படும் சுயமரியாதை திருமணத்தையும் தடை செய்ய இவர்கள் கண்டிப்பாக முயல்வார்கள்.

வட இந்திய ஆர்.எஸ்.எஸ் போன்றே, ‘இந்துத்துவத்தை’ தமிழ் பண்பாடாக பேசும் பல்வேறு தமிழினவாதக் குழுக்கள் கூட தாலியை தமிழர் பண்பாடு என்று பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்குகின்றன. பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமான தாலியை காப்பதாக இவர்கள் கூறுவது உண்மையில் பார்ப்பனியத்தின் அடிமைகளாக பெண்கள் தொடர வேண்டும் என்பதைத்தான்.

இந்நிலையில்,  “பெண்களுக்கு தாலி தேவையா தேவை இல்லையா?” என்பது பற்றி, பல்வேறு தரப்பட்ட பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிய களத்தில் இறங்கினோம். இனி அவர்கள் பேசியது அப்படியே உங்களுக்கு.

ஆர்த்திக் பிரியா, திருவான்மியூர் ரயில் நிலையம்:

aarthik-priyaஇப்ப சமூகம் எவ்வளவோ வளர்ந்து முன்னேறியிருக்கு. போற எல்லா இடத்துக்கும் தாலி அவசியம் இல்ல. கோவிலுக்கு போனா அல்லது டிரெடிஷனாலன விசயங்களுக்கு போகும் போது மட்டும் போட்டுக்கலாம். மற்ற நேரத்துல கழட்டி வச்சிக்கலாம் அது அவங்கவங்க விருப்பம், வசதியை பொருத்தது.

தாலியால ஏதாவது பயன் இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவேன். தாலி போட்டிருக்கும் பெண்களை பொறுக்கிகள் விட்டிருவாங்களா என்ன?

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீசியது ரொம்ப தப்பு. ஒரு புரோக்ராம் நடத்தினதுக்காகவே குண்டு வீசுவாங்கன்னா இது என்ன நாடு? இங்க ஜனநாயகம் இல்லையா. அரசாங்கம் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் எப்படி விட்டு வச்சிருக்கு?

தந்தை பெரியார் சொன்னது கரெக்ட். லேடிஸ்க்கு தாலி ஒரு அடிமைச்சின்னம் தான். தாலி மாதிரி ஆண்களுக்கு என்ன இருக்கு, எதுவும் இல்லை. ஆம்பளங்க என்ன வேணா செய்றாங்க. அதை யாரும் கேக்குறது இல்லை. தாலி இன்னைக்கு தேவை இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையான அன்போடு இருந்தாலே போதும்.

தாலி கட்டாதவங்க ஒழுக்கம் கெட்டவங்கன்னா அப்ப தாலி கட்னவங்க எல்லாம் ஒழுக்கமானவங்களா? பெண்களைப் பத்தி இப்படி பேசுறதை கண்டிக்கணும். தாலிகட்டிக்கிட்ட எல்லோருமே பர்ஃபெக்டா இல்லையே பாதி பேர் தான் சரியா இருக்காங்க. மீதி பேர் தப்பா இருக்கதுக்கு யார் காரணம் ? அதுக்கு இவங்க என்ன பதில் சொல்லுவாங்க?

subbammalசுப்பம்மாள், துப்புரவு பணியாளர், திருவான்மியூர் ரயில் நிலையம்:

நான் என்னத்த சொல்லுறது. தாலி தேவைதான். ஆனா அது இல்லாமையும் பல பெண்கள் வாழ்றாங்க. தாலி போட்டுக்கிட்டு தப்பு பண்றவங்களும் இருக்காங்க. தாலி இல்லாம ஒழுக்கமா இருக்கவங்களும் இருக்காங்க.

பெரியவங்க சொல்லியிருக்காங்க. தாலி போட்டுக்கிட்டா ஒரு மரியாதை இருக்கு. மஞ்சள் குங்குமத்தோடு போனா மங்களகரமா பாக்குறாங்க மரியாதை குடுக்குறாங்க. இப்ப நானெல்லாம் போனா முண்டச்சி வந்துட்டான்னு அபச குணமா பாக்குறாங்க.

பொம்பளைங்க ஆம்பளைகளுக்கு அடங்கி ஒடுங்கித்தான் வாழணும். ஆம்பள நாலு எடம் போய்ட்டு வந்தாலும் வெளியில தெரியாது. பெண்கள் தப்பு பண்ணுனா அது குடும்பத்தையே பாதிக்கும். நம்ம பேரன் புள்ளைக வரைக்கும் பாதிக்கும். அதனால பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்கனும்.

ரஷ்னா, டி.சி.எஸ்-சில் பணிபுரிகிறார்:

தாலி தேவைதான். ஆனா, அது எதுக்கு பயன்படுதுன்னு நான் இதுவரைக்கும் யோசிச்சதே இல்ல

ரஷ்னாவின் அருகிலிருந்த ஒரு ஆண் நண்பர்: இதை எல்லாம் யோசிச்சு என்ன பண்ணப்போறோம் பாஸ். தாலி நம்மோட கலாச்சாரம். நம்முடைய ஆழமான நம்பிக்கையிலிருந்து வர்றது. ஆண்களுக்கு அந்த மாதிரி அடையாளம் ஏன் இல்லனு கேட்டா….எப்படி ?

ஐ.டி துறையில் பணிபுரியும் விஜயசாந்தி:

தாலி போட விருப்பம்னா போட்டுக்கலாம். வேண்டாம்னா வேண்டாம். அது அவங்கவங்க சாய்ஸ்.

தாலி போட்டிருந்தா திருமணம் ஆனவங்கன்னு அமைதியா போயிடுவாங்க. அதுல ஒரு பாதுகாப்பு இருக்கு. இல்லேன்னா வேற மாதிரி பிகேவ் பண்ணுவாங்க. என்னளவுல நான் அதை போட்டுக்குவேன். அது பிடிக்கும்ங்கிற அளவுல மட்டுந்தான். ஆனா கட்டாயம் கிடையாது. மற்றவங்க போடுறதும் போடாததும் அவங்க விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

rani-tharamaniகரும்புச்சாறு கடை நடத்தும் ராணி:

தாலி பெண்களுக்கு தேவை. அதப் போட்டுக்கிட்டா தான் நாமளும் மத்தவங்கிட்ட பேசுறதுக்கு அஞ்சுவோம். மத்தவங்களும் நம்மட்ட பேசுறதுக்கு அஞ்சுவாங்க.

ஆண்களுக்கு அவங்க மனச்சாட்சி தான் அடையாளம். அவங்க பொம்பளைங்க கைய புடிச்சு இழுப்பாங்க, பதிலுக்கு நாங்க ஆண்கள் கைய புடிச்சு இழுக்க முடியுமா ? பெண்களுக்கு தாலிதான் வேலி.

ஜெயின் கல்லூரி மாணவிகள் மீனாட்சி, பிரியா:

meenakshi-priyaதாலி பெண்களுக்கு உயிருக்கும் மேலானது. தாலி பற்றி சொல்ல இதைத் தவிர வேறு வார்த்தையே இல்லை. கணவன் தான் எல்லாமே அப்படிங்கிறதுக்கான அடையாளம் தான் தாலி. தாலி கட்டியிருந்தா ஒரு சபைக்கு போனாக்கூட கவுரவமாகத்தான் பார்ப்பாங்க. பொண்னுனாலே தாலி இருக்கனும்.

எனக்கு ஒரு வேல கெடச்சு தாலி போடக்கூடாதுன்னு சொன்னா அந்த வேலைக்கே போகமாட்டேன்.

 

விநோதினி, கே.சி.பி. கல்லூரி:

தாலி தேவைன்னு அந்தக்காலத்துல சொல்லியிருக்கலாம். இப்ப அதெல்லாம் அவசியம் இல்ல. தாலி போட்டவங்களப் பார்த்து மட்டும் ஆம்பளைங்க மரியாதையா ஒதுங்கி போறங்களா என்ன? தாலி இருந்தா பாதுகாப்புன்னு நினைக்கிறதெல்லாம் சும்மா.

SAMSUNGமேடவாக்கத்தை சேர்ந்த பவித்ரா:

பெண்களுக்கு திருமணம் என்பது சந்தோசமான விசயம். அதற்கான அடையாளம்தான் தாலி. அதே மாதிரி தாலி போட்டுக்கிறதும் போட்டுக்காததும் அவங்கவங்க தனிப்பட்ட விசயம். அதை போட்டுத்தான் ஆகனும்னு சொல்லறதுக்கு யாருக்கும் ரைட்ஸ் கிடையாது. நான் ஒழுக்கமானவங்கிறதை தாலி கட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு சொல்லறதுக்கு இவங்க யாரு?

பூஞ்சோலை:

தாலி முக்கியம்தான். மனைவி என்பதற்கு தாலிதான் ஆதாரம், ஆனா பெண்கள் மாதிரி ஆண்களும் கல்யாணம் ஆனவர்கள் என்ற அடையாளத்துடன் திரியறத விருப்புறது இல்லை. தாலியை மஞ்சள் கயிற்றில் போட்டால் யாரும் மதிக்கிறதும் இல்ல. திருடர்கள் அறுக்கிறதும் இல்லை, தங்கச் சங்கிலிக்குத்தான் மவுசு.

SAMSUNGரம்யா, அபர்ணா, விசுவல் கம்யூனிகேசன் மாணவிகள்:

பெண்களுக்கு ஒரு வாட்டி பேர் கெட்டுப்போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு! பசங்களுக்கு அப்படி கிடையாது. அத கண்டுக்காம போய்டுவாங்க. ஆனா நமக்கு, நம்ம அடையாளமே போய்டும். அதனால தாலி ரொம்ப முக்கியம். அப்பத்தான் கணவன், குடும்பம்னு பாசமா இருக்கிறோம்னு ஏத்துக்குவாங்க.

வீணா, கல்லூரி மாணவி:

கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்க்கிறவங்க தாலியை கழட்டி வச்சிட்டு போறாங்க. அது அவங்க வேலைக்கு தேவையா இருக்கு, ஸ்டைலுக்காக அப்படி பண்றாங்க. அதை தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா என்னை பொருத்தவரை தாலிங்கிறது நம்ம கல்ச்சர், அதை ஃபாலோ பண்ணனும். பண்ணலேன்னா அத தப்புன்னும் சொல்ல முடியாது.

தாலிக்கும் கேரக்டருக்கும் சம்பந்தம் இல்ல. போடாதவங்க எல்லாம் மோசமான பெண்கள்னு சொல்றது ரொம்ப ரொம்ப தப்பு. இப்ப ஒரு ஏழைக்குடும்பம் இருக்காங்க அவங்க தாலி அணியிறதில்லங்கிறதுனால ஒழுக்கங் கெட்டவங்களா?

vaisenthiவைஜெயந்தி, ஐ.டி துறை:

கணவனோட பாதுகாப்புக்குத்தான் தாலின்னு எங்க அம்மா சொல்லுவாங்க. எனக்கு அதைப்பத்தி ஒண்ணும் தெரியாது. தாலி போடுறதே அடிமைத்தனங்கிறதை நான் ஏற்கல. கணவன் எப்படி நடந்துக்குறாரோ அதப் பொருத்துத்தான் அடிமைத்தனமா இல்லையான்னு சொல்ல முடியும். தாலிய வச்சு சொல்ல முடியாதுங்கிறது என்னோட ஒபீனியன்.

தாலி அணியலாமா கூடாதான்னு பேசவே கூடாதுன்னு சொல்றது டூமச். தாலி திருமணம் ஆனதுக்கான அடையாளம் தான். ஆனால் பெண்ணுக்கு அதுதான் வாழ்க்கை, அது தான் எல்லாம்னு சொல்லமுடியாது. என்னைப் பொருத்தவரை நாம எவ்வளவு சந்தோசமா இருக்கோங்கிறது தான் முக்கியம் தாலி முக்கியமில்லை. தாலியால பெண்களுக்கு ஏதாவது பாதுகாப்புன்னெல்லாம் சொல்ல முடியாது. தாலியையே அறுத்துட்டு ஒடுறாங்க.

லதா, ஜோதி, பத்மா துப்புரவு பணியாளர்கள்:

jothi-padma-lathaதாலிதாம்பா பொம்பளைங்களுக்கு பாதுகாப்பு. தாலியும், மெட்டியும் போட்டுக்கிட்டு ரோட்ல போகும் போது நாலு பேரு பாத்தா கூட இது கலியாணம் ஆன பொண்ணு இதுக்கிட்ட வச்சிக்கினா பிரச்சினைன்னு நினைப்பாங்க. அப்படி இல்லைன்னா “ஏ இது ஏதோ ஃபிகர்டா, கிண்டல் பன்னலாண்டா, வாரலான்டா”ன்னு செய்வாங்கோ. அதனால தாலிங்கிறது மெயின் பெண்களுக்கு.

அதுனால தாலி இருந்தா பாதுகாப்புன்னும் சொல்லல.. ஏன் நாங்களே பாதிக்கப்பட்டிருக்கோம். நாங்க வேலை செய்யிற இடத்திலயே பல பிரச்சினை வருது.

பொம்பளைக்கு தாலின்னா ஆம்பளைக்கு என்னன்னு பெரியார் சொன்னது சரியா இருந்தாலும் தாலி நம்ம கலாச்சாரத்துலயே இருக்கதுனால பழகிப் போச்சு.

தாலிகட்டிக்கினு எத்தனை பேரு ஒழுக்கங்கெட்டு போய் திரியிறாங்க. பொம்பளை ஒழுக்கங்கெட்டு போறாதுக்கு காரணமே ஆம்பளைங்க தான் எந்த பொம்பளையும் அவளா தப்பான வழிக்கு போறதில்ல.

SAMSUNGஉமா, ஐ.டி ஊழியர்:

தாலி போட்டுக்கறது அடிமைத்தனம்னு சொல்ல முடியாது. அது, அவங்க அவங்க விருப்பம். தாலிப்போட்டுக்கறது சமூகத்துல பாதுக்காப்புனும் சொல்ல முடியாது. தாலிய அறுக்கறது இப்ப சர்வசாதாரணமா நடக்குது. தாலி கண்டிப்பா போடணும்னு சொல்றதுக்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தாலி போடாதவங்க எல்லாம் தப்பானவங்க கிடையாது. அது தனிப்பட்ட விருப்பம். பெண்களுக்கு பூ, பொட்டு, மெட்டி மாதிரிதான் தாலி! தேவையின்னா போட்டுக்கலாம் தேவையில்லனு நினைச்சா ரீமூவ் பண்ணிகலாம். அது அவங்க மனசு சம்மந்தப்பட்டது. தாலி போடலைன்னா எந்த தப்பும் கிடையாது.

மரகதம், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பூ விற்பவர்:

தாலி இல்லாம எப்படிப்பா இருக்க முடியும், தாலி முக்கியம். ஆனா இப்ப ஐ.டில வேலை செய்ற பல பொண்ணுங்க தாலி போடுறது இல்ல, அதுக்கு நாம என்ன பண்ண முடியும் அது அவங்க விருப்பம். இதைப் பத்தி பேசுனதுக்காகவே குண்டு வீசுனதெல்லாம் ரொம்ப தப்பு. தாலின்னா அடிமைத்தனம்னும் சொல்ல முடியாது அப்படி இல்லைன்னும் சொல்ல முடியாது. இதனால பாதுகாப்பெல்லாம் ஒன்னும் கிடையாது. தாலி கட்டாதவங்க எல்லாம் ஒழுங்கங்கெட்டவங்கன்னா எத்தனை பேரை அப்படி சொல்றது ? எங்க சாதில தாலியே கிடையாது. நாங்க ஒக்கலிய கவுண்டர். கல்யாணத்துல மாலை மட்டும் தான் மாத்திக்குவோம். அதுக்கப்புறம் ஒரு கருப்பு மணி மாலை போட்டுக்குவோம். எல்லோரையும் ஒட்டுமொத்தமா இப்படி பேசினா எப்படி ?

__________________________________________

இந்த நேரடி சந்திப்பில் நடுத்தர வர்க்க பெண்கள், மாணவிகள், அடித்தட்டு பெண்கள் கருத்து தெரிவித்ததை இப்படி தொகுக்கலாம்.

தாலியால் விசேசமான பாதுகாப்பு இல்லை என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்தனர். பாதிக்கு மேற்பட்ட பெண்கள் தாலி அணிவது அவரவர் விருப்பம் சார்ந்தது, கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று பதிவு செய்திருக்கின்றனர். தாலி புனிதமா, பண்பாடா, மரபா போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை பாதிக்கும் மேற்பட்டோர் குழப்பமாகவே பேசினர். அல்லது வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டு தனது அடிமைத்தனத்தை நியாயமென்று கருதும் ஒரு அப்பாவித்தனமென்றும் அதைக் கூறலாம். அதை புரிந்து கொண்டு நிராகரித்தவர்களும் கணிசமாகவே இருந்தனர்.

தன்னை முண்டச்சி என்று அழைப்பார்கள் என்று தெரிவித்த ஒரு பெண் தொழிலாளி கூட தாலியை ஆதரிக்கிறார் என்றால் அது மேற்கண்ட வகையிலேயே இருக்கிறது.

நாங்கள் சந்தித்து பேசிய பெண்கள் அனைவரும் ‘இந்துப்’ பெண்கள்தான். தாலி புனிதம், தாலிதான் ஒழுக்கம் போன்ற இந்துமதவெறியர்கள் மற்றும் தமிழினவாதிகளின் கருத்துக்களுக்கு எதிரான கருத்தையும் சுதந்திரத்தையும் உரிமையையும் அநேக பெண்கள் வெளிப்படுத்தினர். அல்லது எமது ஒழுக்கத்தை தாலி கொண்டு அளவிடுவதை ஏற்கமாட்டோம் என்பதே அவர்களது கருத்து.

இப்படி சமூகமே குறிப்பாக பெண்களே தாலியின் புனிதத்தை தூக்கி எறியும் மனப்போக்கை அடிப்படையாக கொண்டிருக்கும் போது அதை ஒரு விவாத நிகழ்வாக காட்டுவதற்கு கூட புதிய தலைமுறை டி.விக்கு தைரியம் இல்லை. அதுதான் இந்துமதவெறியர்களின் பலம்.

தாலி என்பது நிலவுடைமை சமூகத்தின் பெண்களது அடிமைத்தனத்தை நிலைநாட்டுகின்ற அடையாளம். அதற்கான கருத்தோட்டத்தை கதைகளாக, நீதிகளாக, சட்டமாக பார்ப்பனியம் நிலைநிறுத்தியது. நிலவுடைமை சமூகம் மாற ஆரம்பித்து முதலாளித்துவ சமூக மாற்றம் இங்கே அறிமுகமானாலும் அது அடிப்படையை மாற்றியமைக்கும் புரட்சியாக நடக்கவில்லை. அதன் விளைவே நகரங்களில் அக்சய திரிதியை என்ற பெயரில் தாலியும், பெண்ணடிமைத்தனமும் புதிய முறையில் நிலைநாட்டப்படுகின்றன.

பண்டைய சீனாவில் பெண்கள் மீதான கொடிய ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் நிலவி வந்தன. பெண்களுடைய கால்கள் நீளமாக வளரக்கூடாது என்பதற்காக இரும்பால் செய்யப்பட்ட சப்பாத்துக்களை அணிவிப்பது வழக்கத்தில் இருந்தது. இது போன்ற நிலவுடைமை ஆணாதிக்க பிற்போக்குத்தனங்களையும் இன்னபிறவற்றையும் சீனாவில் நடந்த மக்கள் ஜனநாயகப்புரட்சி ஒழித்துக் கட்டியது. இன்றைக்கு சீனாவிலோ, இல்லை ரசியாவிலோ கம்யூனிசம் பின்னடைவு கண்டிருந்தாலும் உரிமை என்ற அளவில் சமூகம் பின்னோக்கி போகவில்லை; முடியாது.

இன்று சீனாவில் பெண்ணுரிமையும், திருமண – விவாகரத்து உரிமையும், பொருளாதார உரிமையும் இந்தியாவை விட பல்வேறு வகைகளில் மேம்பட்டு இருக்கின்றன.

பார்ப்பனியத்தின் பிடியில் இருந்த தமிழ்ச் சமூகத்தில் சென்ற நூற்றாண்டிலேயே பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது மண்ணில் தாலி இன்னும் நீடிக்கக் கூடாது என்பதை கருத்துப் பிரச்சாரமாகவும், தாலி அகற்றும் நிகழ்வுகளாகவும் நடத்த வேண்டிய கடமை இடதுசாரி, முற்போக்கு, பெரியார் இயக்கங்களுக்கு இருக்கின்றது.

ஆனால் அந்தக் கடமையை சட்டப்படியே இல்லாமல் ஆக்க இந்துமதவெறியர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அதை அமல்படுத்தவும் செய்கின்றனர்.

அதை முறியடிக்க வேண்டியது நமத கடமை! அதில் நாம் மட்டும் தனியாக இல்லை. நமது சமூகத்தில் தாலியை வேறு வழியின்றி சுமந்து கொண்டிருக்கும் பெண்களும் நமக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

–    வினவு செய்தியாளர்கள்.

 1. 1.ஒரு நாட்டில் தனிமனித சொத்துரிமை மற்றும் சொத்துக்கு வாரிசு என்ற நிலை இருக்கும்வரை.

  2.பெண்கள் எல்லா ஆண்களுக்கும் அடிமை இல்லை.தனது கணவருக்கு மட்டுமே ஓரளவுக்கு தனிந்து போகும் தோழியாக இருக்கிறாள்.

  3.பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்தான்(EQUAL) ஆனால் ஒன்றல்ல(NOT THE SAME).

  4.சமூக மரியாதை,பாதுகாப்பு கறுதி உலகம் முழுவதும் மனமான பெண்கள் ஏதாவது ஒரு அடயாளத்தை பின்பற்றுகிறார்கள்.தமிழ் பெண்கள் ஆபர்ணவிரும்பிகளாக இருப்பதால் செயின் போன்ற தாலி அனிவதில் என்ன தவறு.

 2. தாலி வேண்டுமா, வேணாமா என கருத்து அறியும் வினவும் குழுமம்… தைரியம் இருந்தால் சென்னை எ.ஸ்.ஜ.டி. பெண்கள் கல்லூரி முன் நின்று, “பர்தா” அணிவது தேவையா, இல்லையா என்று _____ போட்டோவுடன் வெளியிடும் தைரியம் இருக்கிறதா? ______________________முதலில் பெரிய அறிவாளி புடிங்கியாட்டும் கட்டுரை எழுதுவதை விட்டு, அறிவு பூர்வமாக எதாவது எழுதித் தொலை…

  • தாலியோ… பர்தாவோ… இல்ல கறுப்பு சட்டயோ… அவரவர் விருப்பம்.. இசுலாமியர்களில் உங்களுக்கு உள்ள வெறுப்பு நல்லாவே புரியிது… மனிதர்களுடைய உனர்வுகளை மதித்து வாழ்வோம்.. மதம் வேண்டாம் என்றால் வெறும் சடத்துவ வாதம்தான் மிஞ்சும்.. மூட நம்பிக்கைகளை களைந்தால் மதம் நல்லதே…

  • தாலி போட்டுக்க சொல்லுறது இந்து மதத்தினை சார்ந்தவன் அதை கேள்வி கேட்பவனும் இந்து இதுல எங்கடா வந்தது பர்தா ?

   இல்லை எந்த முஸ்லீமும் உங்கிட்ட வந்து இந்து பெண்கள் ஏன் தாலி போட்டு கிட்டு இருக்காங்க என்று வம்பு பண்ணினான ?

   கேட்ரவன் ஒருத்தன் அவனுக்கு பதில் கொடுக்க துப்பில்லை இதில் பிற மதத்தினை சேர்ந்தவனை வம்புக்கு இழுப்பாதில் இருந்து தெரியவைல்லை உன்னுடைய துப்புகெட்ட தனம்

 3. when vinvau team takes the right side on all issues, it is much such surprising to see why they blindly take wrong side on women related issues. there were lot of interviewed women confirmed that thali is not required and it is slavery. those who said that were all educated, working in offices and believe that the world has changed so they must change. _______________________ instead of taking healthy indian food with authentic spices, they eat healthspoiling burgers and fried chicken. so if this be the case, why to expect opinions from someone who lost the sense to differentiate between the good and bad.

  thali is not some superficial object. there are many aspects by keeping the following in mind by our ancestors. its a weakness of men wanting of women and getting women by men is tough so there was nothing similar to thali required for men though lot of men wear wedding rings. whereas getting men by women is easy. so when a woman wears a thali, she herself carries a fear that she should not indulge in infidelity because the moment woman says yes for some action, there is no control for a man. when a man sees the thali he develops a fear that she is somebody’s property and there is a man behind her to protect her.

  _________________________________________________

 4. Mr. Uzhavan. Vivatham nu vanthuta ellathukum vivatham than. Ithula athu veru ithu veru nu sonna eppadi. Inga matha matham nu enga vanthuchu. Samudhaaya thukaga pesuravanga common ah pesurathu than correct. En tha vishayatha vinavu oru vivathama matha kudathu. Antha thairiyam vinavukku irukka..??

 5. தாலி தேவையில்லை. இது ஒரு அடிமை சின்னம். தாலி அகற்றிய தைரியமான, துனிச்சலான சகோதரிகளைப் பாராட்டுகிறேன்.

   • குழந்தை பிறப்புக்காக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யபட்ட போது ,அல்லது வேறு காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்யபட்ட போது உங்கள் மனைவி ,மகள் ,அல்லது மருமகள் தாலியுடனான கயிற்றை அணிந்து கொண்டு தான் இருந்தார்களா சென்னைகாரரே ?தாலியுடனான கயிற்றை நீக்கிய அத்தருணங்களில் அவர்களின் கணவன் இறந்ததாக அர்த்தமா ?

    ஏன் கேட்கின்றேன் என்றால் குழந்தைக்கான சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது தாலியுடனான கயிற்றை எடுத்து என் சட்டை பாக்கெட்டில் போட்டு விட்டு ஒரு பவுண் தங்கம் இதில் இருக்கு பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தான் ஆப்ரேசன் தியேட்டருக்கே சென்றார்கள். திரும்பி வந்த உடன் நினைவு தெளிந்தவுடன் தாலியுடனான கயிற்றை வாங்கி மாட்டிகொண்டார்கள். பெண்களுக்கு பல நூற்றாண்டு கால பார்பன-பண்பாட்டு தொடர்பில் தாலியின் மீதும் அதன் கயிற்றின் மீதும் ஒரு அட்டச்மெண்டு இருபதாக ஏற்றுகொள்வோம். அதே நேரத்தில் ஆண்களுக்கு எதற்கு தாலி-கயிறு செண்டிமெண்டு ?

    • ஏன் கேட்கின்றேன் என்றால் குழந்தைக்கான சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது -> ஏன் கேட்கின்றேன் என்றால் என் மனைவி குழந்தைப்பேருக்கான சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது

 6. வெளிநாடுகளில் பெரும்பாலானவர்கள் தாலி மெட்டி அணிவது இல்லை . இந்தியா போகும் போது தான் தேடி எடுத்து அவை அணிவார்கள் . அல்லது கோவிலுக்கு சேலை கட்டி போகும் போது மட்டும் .

  மாடர்ன் டிரஸ் போடும்போது கனமான தாலி போட முடியாது .
  இந்தியாவில் மாடர்ன் டிரஸ் விலை மிகவும் குறைந்து உள்ளது. அதிக பெண்கள் விரும்பி அணியும்போது மோதிரம் போதும் என்று முடிவு எடுப்பார்கள் …

 7. காலத்திற்கேற்றாற்போல சடங்குகளும் , வழமைகளும் மாறத்தான் வேண்டும்! இதில் புனிதம் ஒன்றுமில் மோதிரம் அணிவித்து , திருமண உறுதி செய்துகொள்ளும் மேனாட்டு முறை, நமது காலில் மெட்டி அணிவதை விட ஏற்புடையது! முற்காலத்தில் ஆண்களும் மெட்டி, தாலி அணிந்திருக்கிரார்கள், பின்னர் வழக்கொழிந்து போனது! உறவினர்கள் அன்பளிப்பாக தரும் சிறு பொன் அணிகலண்களை கோர்த்து மாலையாக அணியும் வழக்கமே தாலியானது! ஆண் குழந்தைகள் வீரத்தோடு வளர பொன்னாலான படைகலன் அணிகள், அய்ம்படைதாலி என மாமன் வீட்டாரால் அணிவிக்கப்படும் வழக்கம் தமிழகத்தில் உண்டு! தற்போது அரைனாண் கொடியில் இவற்றை கோர்க்கிரார்கள்! இவ்வழக்கங்கள் காலத்திற்கொப்ப மறுதலடைந்திருக்கிறது! இனியும் மாறிக்கொண்டுதான் இருக்கும்! ஒரே பாலினத்தவர் இருவர் திருமணம் செய்துகொள்ள, சட்டம் அனுமதிக்கையில், தாலியின் புனிதம் பற்றி கூக்குரலிடுவது சந்தர்ப்பவாத அராஜகமே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க