privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மாணவர்களுடன் ஒரு பயணம்

மாணவர்களுடன் ஒரு பயணம்

-

ரவு பதினொருமணி. மதுரை இரயில் நிலையம். எல்லா ரயில்களும் வந்து போன பரப்பரப்பு அடங்க ஆரம்பித்திருந்தது. அந்த அமைதியை கலைத்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வர, ஆங்காங்கே இருட்டில் அமர்ந்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதல் நடைமேடையில் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள்.

unreserved-compartmentபண்டிகைநாள் என்பதால் பேருந்துக்காக  செய்த எல்லா முயற்சிகளும் வீணாய் போக, வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்தேன். முதலாளியின் கடுகடு முகம் நினைவுக்கு வந்து சென்னைக்கு செல்லும் கடைசி வண்டியான அனந்தபுரியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், வேர்க்க விறுவிறுக்க நடைமேடையை வந்தடைந்தேன்.

சில விநாடிகளுக்குள் அந்த நீண்ட ரயில் அமைதியை கலைத்து, பெரிய சத்தத்தோடு வந்து நின்றது. முன்பதிவு செய்யப்படாத (Unreserved) காம்பார்ட்மெண்டிற்கு சென்று பார்த்தால், திக்கென்றிருந்தது. வாசல்வரை நின்று கொண்டிருந்தார்கள். இது கடைசிப் பெட்டி. முன்னால் இருக்கும் இதேபோல இன்னொரு பெட்டிக்கு போகலாம் தான். ஆனால், அதற்கு நேரம் இல்லை. ஒருவேளை இதைவிட அதிகமாய் கூட்டம் இருக்ககூடிய அபாயமும் உண்டு. ரிஸ்க் வேண்டாம் என ஏறிக்கொண்டேன். 200 பேர்வரை அந்த காம்பார்ட்மெண்டில் நிச்சயம் இருந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் உட்கார இடம் தேடினார்கள். உள்ளே ஒரே கூச்சலும் குழப்பமாய் இருந்தது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளே நோட்டம் பார்த்த பொழுது, உள்ளே சிலர் படுத்து நன்றாக தூங்கி கொண்டு வந்தனர். 4 பேர் உட்கார வேண்டிய இடத்தில் இருவர் கால் நீட்டி உட்கார்ந்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றும் செய்ய முடியாது. வாயிலோரம் நின்றுகொண்டு கையில் இருந்த நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

திண்டுக்கல்லை அடையும் பொழுது, நடுநிசியாகிவிட்டது. அங்கும் சிலர் ஏறினர். அதில், நான்கு கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள். ஏறும்பொழுது, கலகலவென பேசிக்கொண்டே ஏறினார்கள். அந்த காம்பார்ட்மெண்டின் நிலை புரிய அவர்களுக்கு  பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டு, விறுவிறுவென மக்களை விலக்கி, காம்பார்ட்மெண்டிற்குள் உள்ளே நுழைந்து, ஒரு மாணவன் கட்டளைகள் தர, மற்றவர்கள் அமுல்படுத்த என பரபரவென செயல்பட்டார்கள்.

இடத்தை ஆக்கிரமித்துவிட்டு குறட்டையுடன் தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி, அன்பாய் கேட்டுக் கொண்டு உட்கார வைத்தனர். சத்தம் போட்டவர்களை பதிலுக்கு சத்தம் போட்டு அடக்கினார்கள். நின்று கொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்ததால், மாணவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.

இடம் ஒதுக்கி தந்ததில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் முன்னுரிமை தந்தார்கள். அரை மணி நேரம் ஒழுங்குபடுத்தியதில் சிரமப்பட்டு நின்றுக்கொண்டிருந்த  சகலருக்கும் உட்கார இடம் கிடைத்துவிட்டது.  இடம் பறிபோனவர்கள் புலம்பியதோடு அந்த மாணவர்களை திட்டியும் தீர்த்தார்கள். இடம் கிடைத்தவர்களோ மாணவர்களின் செயல்பாடுகளை வியந்து பேச ஆரம்பித்தார்கள். மாணவர்கள் தங்களுக்கு வாசலோரம் கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே ஜாலியாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களோடு சேர்ந்து மக்களை ஒழுங்குப்படுத்தியதில் எனக்கும் கூட ஒரு இடம் கிடைத்தது.  அங்கு உட்கார மனசில்லாமல் நானும் அந்த மாணவர்களோடு வாசலை ஒட்டி அமர்ந்துகொண்டேன்.

இடையில் ஒரு நிறுத்தத்தில் தொழிலாளி பீடி பிடித்தார் என பாக்கெட்டில் இருப்பதை பிடுங்க ரயில்வே போலீசு முயற்சி செய்ய, பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் பைசா தராமல், பேசியே தொழிலாளியை மீட்டு வந்தார்கள்.

அடுத்து ஒரு மணி நேரத்தில், வந்த நிறுத்தத்தில் மக்கள் சிலர் ஏற வந்த பொழுது, “இவ்வளவு பேருக்கு இடம் இல்லை. வண்டி நீளம் என்பதால், நடப்பதற்கு சிரமப்படும் வயதானவர்கள் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள். இந்த ஸ்டேசனில் நிறைய நேரம் வண்டி நிற்கும். ஆகையால், மற்றவர்கள் முன்பெட்டிக்கு சென்றுவிடுங்கள்” என அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை மறுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு, மீதிபேர் முன்பெட்டிக்கு நகர்ந்தார்கள். ஏறிய சிலருக்கும், பொறுப்பாய் இடம் தேடி, அவர்களையும் அமர வைத்தார்கள்.

தன்னுள்ளே நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து, புன்னகைத்தபடி அந்த ரயில் இருட்டைக் கிழித்துக் கொண்டு வேகமாக போய்க்கொண்டிருந்தது.

இதற்கிடையில், சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த வயதான அம்மா நடக்கும் வழியில் அமர்ந்திருந்ததால், போகிற, வருகிறவர்களின் செருப்பு கால் மிதிபட்டு வலியால் அழுததைப்  பார்த்த மாணவர்கள், அந்தம்மாவை பாதையை விட்டு விலகி அமர வைக்க முயற்சி செய்தார்கள். ம்ஹூம். இடம் இல்லை. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி, ‘இனி இந்த இடத்தை கடக்கிறவர்கள் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது’ என சத்தமாக அறிவித்தார்கள்.

அங்கேயே இருபது நிமிடங்கள் வரை இருந்து, மக்கள் அமுல்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்தினார்கள். அருகில் இருந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு,  திரும்பவும் தங்கள் இடத்திற்கு வந்து, விட்டதிலிருந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சென்னைக்கான தூரம் குறைந்ததால், பயணிகள் ஏறுவது நின்று போனது. சிலர் இறங்கிக் கொண்டும் இருந்தார்கள்.  அருகில் இருந்து அவர்கள் பேசியதை கவனித்ததில் கொடைக்கானல், மொபைல் போன், சினிமா, அரசியல், பெற்றோர்கள் பற்றி விடிய விடிய சளைக்காமல் பேசிக்கொண்டே வந்தார்கள்.

‘பிறவித் தலைவர்கள்’ அவர்கள் என் மனதைக் கவர்ந்து கொண்டார்கள். பேச்சுக் கொடுத்ததில், எல்லோரும் இரண்டாமாண்டு கல்லூரி படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.  ’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.

மாணவர்கள் என்றால் பொது மக்களுக்கு இடையூறு செய்வார்கள், பெண்களை கேலி செய்வார்கள், பொறுக்கிகள், குடும்ப நிலையை உணராதவர்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தியில் உறைந்து போன விசயங்கள்.

அந்த உறைந்து போன கருத்துக்கு இந்த அனுபவம் ஒரு அழகிய கவிதை அடி.

–    குருத்து