privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆந்திர படுகொலை – அரசநத்தம் கிராமத்தில் வினவு

ஆந்திர படுகொலை – அரசநத்தம் கிராமத்தில் வினவு

-

”தலைலேர்ந்து கால் வரேயும் வெள்ளே துணி போட்டு சுத்தின உடம்பைத் தான் கண்ணுல காமிச்சாங்க… இது தான் உம் புருசன்னு சொன்னாங்க….”

 விஜயா
பயங்கரமான செம்மரக் கடத்தல்காரர் என்று ஆந்திரப் போலீசாரால் சித்தரிக்கப்பட்டு போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் மனைவி விஜயா.

”…. என்னாலெ தாங்க முடியலைங்க.. ஞாயித்துக்கிழமை எங் கண்ணு மின்னே முழுசா போனவரு… என்னாலெ நம்ப முடியேலை… கடேசியா ஒருக்கா எம் புருசன் மூஞ்சிய பாக்கணுமின்னு நான் தலையெ சுத்தியிருந்த துணியைக் கிழிச்சி எடுத்தென்… அய்யோ அந்த கோராமைய எப்பிடிச் சொல்வேன்…”

“….அந்த மொகத்துல மூக்கையே காணம். மூஞ்சியெல்லாம் பிளேடு போட்டு அறுத்திருந்தாங்க.. தோ, வாயி ஓரமா இங்கேர்ந்து காது வரையும் நீளமா கிழிச்சிருந்தாங்க.. வாயிக்குள்ளே பல்லையே காணும்.. எம் புருசன் தானான்னே தெரியாத அளவுக்கு பண்ணி வச்சிருந்தாங்க….”

அதற்கு மேல் விஜயாவால் பேச முடியவில்லை. கதறி அழுது கொண்டிருந்தவரைத் தேற்ற வழி தெரியாமல் நாங்கள் நின்றோம். இடம் அரசநத்தம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவின் மலைப்பகுதியில் சித்தேரி பஞ்சாயத்தைச் சேர்ந்தது இக்கிராமம்.

விஜயாவுக்கு வயது 27. ‘பயங்கரமான செம்மரக் கடத்தல்காரர்’ என்று ஆந்திரப் போலீசாரால் சித்தரிக்கப்பட்டு போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட விஜயாவின் கணவர் சிவக்குமாருக்கு 30 வயது. 7 வயதில் ஜீவா என்ற மகனும் 1 வயது நிரம்பிய சன்மிதா என்ற மகளும் இனி அப்பாவைக் காண முடியாது.

குழந்தை சன்மிதாவுக்கு மூளை வளர்ச்சியில் ஏதோ குறைபாடு. அரூரில் உள்ள மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை வசதியில்லாததால் சென்னைக்குப் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

“பிள்ளைய மெட்ராசுக்கு எடுத்திட்டு போயி வைத்தியம் பாக்க காசு இல்லே. ‘இந்த ஊரிலெ யாரு கிட்டயும் கைநீட்டி காசு வாங்க முடியாது புள்ளே.. எல்லாருமே நம்மைப் போல வறுமையில இருக்காங்கே.. கட்டிட வேலை ஒன்னு வந்திருக்கு.. அப்பார்மெண்டு கட்டறாங்களாம். பெயிண்டு வேலைக்கு கூப்பிடறாங்க.. ஒருவாரம் வேலை பாத்திட்டு வந்தா கொஞ்சம் காசு கிடைக்கும்.. பிள்ளைய மெட்ராசுக்கு கூட்டிப் போயி வைத்தியம் பாக்கலாம்’ அப்படின்னு சொல்லிட்டு ஞாயித்துக் கிழமை காலைல 8 மணிக்கு கிளம்பிப் போனவரு தான்….

சித்தேரி மலை கிராமம்
”இந்த மலையால எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் வருமானம் கிடைச்சா கூட நாங்க ஏன் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் போகணும்”

.. செவ்வாகிழம உம் புருசனை ஆந்திராவுல சுட்டுக் கொன்னுட்டதா டீ.வில காட்டுறாங்கன்னு சொன்னப்போ தான் எனக்குத் தெரியும்”

”அரசு அதிகாரிங்க யாராவது உங்க கிட்ட பேசினாங்களா?”

“கலெக்டரு வந்தாரு.. மினிஸ்டரு வந்தாரு.. படிச்சிருந்தா கெவருமெண்டு வேலை போட்டுக் குடுக்கிறதா சொன்னாங்க”

“நீங்க படிச்சிருக்கீங்களா?”

”ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்.. கவருமெண்டு கிட்ட பேசி எதுனா சத்துணவு ஆயா வேலை வாங்கிக் குடுங்க சார்.. நான் வீட்டுக்கும் போவ முடியாது.. இங்கயும் பிள்ளைங்கள வச்சி காப்பாத்த முடியாது.. தெருவில விட்டுட்டாங்க சார்”

கணவர் விபத்தில் இறந்த விட்ட நிலையில் விஜயாவின் ஒரு அக்கா தாய் வீட்டோடு தான் இருக்கிறார். தாய் வீட்டின் கஷ்ட ஜீவனம் விஜயாவை பிறந்த வீட்டுக்குச் செல்லத் தடுக்கிறது.

சிவக்குமாரின் உடல் எரியூட்டப்பட்ட இரண்டாம் நாளில் அரசநத்தம் மலைகிராமத்திற்குச் சென்றோம்.

சித்தேரி மலைப்பகுதியில் சுமார் 64 மலை கிராமங்கள் உள்ளன. ஆந்திர போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட  20 பேரில் 7 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அரிகிருஷ்ணன், லட்சுமணன், வெங்கடேசன், இன்னொரு லட்சுமணன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வேலாயுதம் ஆலமரத்துவலவு கிராமத்தைச் சேர்ந்தவர். சிவலிங்கம் என்பவர் கருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

அரூரில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய கொக்காரப்பட்டி பிரிவில் இடதுபுறம் திரும்பி பத்து கிலோமிட்டர் பயணித்தால் வாச்சாத்தி பிரிவு வருகிறது. அதற்கு மேல் மலையின் மேல் மண் சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் பயணித்தால் அரசநத்தம்.

வாச்சாத்தி பிரிவிலிருந்து அரசநத்தம் கிராமத்துக்கு மேலேறும் அந்தச் சாலை உண்மையில் நரகத்துக்குச் செல்லும் பாதை போலிருந்தது. நாங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றோம். பாறைகளும், உடைந்த சரளைகளும் நிரம்பிய அந்தச் சாலை சுமார் 45 டிகிரி கோணத்தில் வளைந்து மேலேறியது – கரணம் தப்பினால் மரணம்.

அரசநத்தம் மலைப்பாதை
45 டிகிரியில் வளைவுகளோடு உயரே செல்லும் பாதை. பொதுப்போக்குவரத்து கிடையாது.

இத்தகைய ஏற்றத்தில் இருசக்கர வாகனத்தின் மூலம் சென்றாலும் கடும் உடல் வலி இருக்கும். பொதுப்போக்குவரத்து ஏதும் இங்கே கிடையாது. கீழே ஏதாவது வேலைக்கு கிராம மக்கள் தேவைப்பட்டால் ஜீப் வைத்து அழைத்துச் செல்கிறார்கள். மேலே ஓரிருவர் பைக் வைத்திருக்கிறார்கள். இதைத் தவிர்த்து பார்த்தால் மக்கள் கால்நடையாகத்தான் மலையேறுகிறார்கள். கீழே பொருள் வாங்கி வந்தாலும் இப்படித்தான் சுமந்து செல்ல வேண்டும்.

நாங்கள் சென்ற நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களது உறவினர்களும் அரூரில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கிளம்பியிருந்தனர். ஊரில் இருந்த மற்றவர்களிடம் பேசிப் பார்த்தோம். புதியவர்களை திடீரென்று பார்ப்பதால், மருண்ட பார்வையோடே பெரும் தயக்கத்தோடு தான் பேசினர். சிலர் பேசுவதையே தவிர்த்தனர். இளைஞர்கள் ஓரளவு பேச முன்வந்தனர்.

மேலும் அங்கிருந்த உளவுத்துறை போலீசார் மக்களை ஏதோ அச்சுறுத்தி எங்களிடம் பேசுவதற்கு வரம்புகள் போட்டிருந்தாகத் தெரிகிறது.

கொல்லப்பட்ட ஏழு பேரும் கட்டிட வேலை அல்லது பெயிண்ட் வேலை என்று வீட்டில் சொல்லி சொல்லி விட்டு கடந்த 5-ம் தேதி காலை எட்டு மணிக்குக் கிளம்பியுள்ளனர். 9-ம் தேதி பிணங்களாக ஊர் திரும்பியுள்ளனர். அனைவரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கின்றன.

கொல்லப்பட்ட தொழிலாளி ஒருவரின் தந்தை
கொல்லப்பட்ட தொழிலாளி ஒருவரின் கண்பார்வை இழந்த தந்தை

ஒரு உடலில் இரண்டு கால்களும் சிதைக்கப்பட்டு ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டு ஒரே காலாக, சதைப் பிண்டமாக காட்சியளித்திருக்கிறது. இன்னொருவர் முகம் முழுவதும், கத்தியால் கீறியும் கட்டையால் அடித்தும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்; அந்த முகத்திலிருந்து கண்கள் இரண்டு பிதுங்கி வெளியே தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த உடல்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறையை விவரிக்க குடும்பத்தினர் நடுங்குகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டில் சொல்லிச் சென்ற காரணம் உண்மையாகவும் இருக்கலாம். கூலி வேலை என்று சொல்லி அவர்களை மலையை விட்டுக் கீழிறக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் ஏஜெண்டை சந்திக்கும் வரை சேஷாச்சலம் வனத்திற்கு செல்லப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு சொல்லப்படாமல் பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆனால், அவர்கள் காட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே நகரி பேருந்து நிலையத்திற்கு அருகே கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்பது நிச்சயமான உண்மை.

வறுமையும் பிழைப்பதற்கு வேறு வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையுமே அம்மக்களை மலையை விட்டு விரட்டியுள்ளது.

”இந்த மலையால எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் வருமானம் கிடைச்சா கூட நாங்க ஏன் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் போகணும்” என்றார் நாங்கள் சந்தித்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர்.

இறந்தவர்களில் லெட்சுமணனின் மகன் சண்முகம் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். கட்டணம் கட்ட முடியாமல் ஆறு மாதங்களுக்கு முன் படிப்பை நிறுத்தி விட்டு தற்போது வீட்டில் உள்ளார். லெட்சுமணனின் மகள் சங்கீதாவின் செவிலியர் படிப்பும் பணம் கட்ட முடியாமல் இடையில் நிறுத்தப்பட்டு சமீபத்தில் தான் அ.தி.மு.க ஏற்பாடு செய்திருந்த 102 ஜோடி திருமண நிகழ்ச்சியில் வைத்து திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லூரி படிப்போ அல்லது செவிலியர் படிப்போ கூட இங்கே சாத்தியமாக முடியாது என்றால் இந்த மலைகிராமத்தின் சூழலை புரிந்து கொள்ளலாம்.

உறவினர்கள்
ஒரு கல்லூரி படிப்போ அல்லது செவிலியர் படிப்போ கூட இங்கே சாத்தியமாக முடியாது.

மலையாளிகள் என்ற மலைச்சாதியைச் சேர்ந்த இம்மக்கள் அடிப்படையில் மலை பெற்றெடுத்த குழந்தைகள். கள்ளம் கபடமற்ற இவர்கள் யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பக் கூடியவர்களாகவும், வெளியுலக சூதுவாது அறியாதவர்களாகவுமே இருக்கிறார்கள். சமவெளியில் இருக்கும் எந்த வசதிகளும், விழிப்புணர்வும், ஜனநாயகமும், உரிமைகளும் இவர்களுக்குத் தெரியாது.

இவர்களை கொத்துக் கொத்தாக வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்கள் இந்த ஆதரவற்ற ஏழ்மையை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே இங்கே வேலைக்கு அழைக்கும் போது எந்த உத்திரவாதமும், ஆசையும் காட்ட தேவையில்லை. கூடவே வேலை குறித்த அச்சமும், பயமும், இடரும் இவர்களுக்குத் தேவையில்லை.

இந்த அடிப்படையில் ஏஜெண்டுகள் சொல்வதை நம்பி இவர்கள் சேஷாச்சலம் வனப்பகுதிக்கு சென்றிருக்கும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.

நாங்கள் ஏற்கனவே மரம் அறுக்கச் சென்று திரும்பியவர்களைச் சந்திக்க முயற்சித்தோம். ஆனால், கிராமவாசிகள் தங்களுக்கு அப்படிச் சென்றவர்கள் யாரையும் தெரியாது என்று மறுத்தார்கள். போலி மோதல் கொலையைத் தொடர்ந்து கிராமமே மிரட்சியில் உள்ளது. வெளி நபர்களை அதிகம் கண்டிராத இந்தக் கிராமங்களுக்கு தற்போது அரசின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து போகிறார்கள். குறிப்பாக உளவுப் பிரிவு போலீசின் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. வெளியார்களிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள்; பேசியவர்களும் அளந்து பேசுகிறார்கள்.

வினவு செய்தியாளர்களைத் தவிர இங்கே இதுவரை வேறு ஊடகங்கள் எதுவும் வரவில்லை. பல சுற்று முயற்சிகளுக்கு பிறகு மக்களிடம் திரட்டிய தகவல்களை இப்படி தொகுக்கலாம்.

வெட்டப்படும் செம்மரத்திற்கு கிலோவிற்கு ஐநூறு ரூபாய்கள் கிடைத்தாலும், இந்த வேலை தொடர்ச்சியாக கிடைக்க கூடிய ஒன்றில்லை. மேலும் சொல்லப்படும் தொகையும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆந்திரா ஏஜெண்டுகள், அவர்களோடு தொடர்பில் உள்ள தமிழக ஏஜெண்டுகள் என்று இரண்டு, மூன்று கைகள் மாறியே இம்மக்கள் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். ஒரு முறை சென்று திரும்ப பத்து நாட்கள் ஆகலாம்.

சேஷாச்சலம் வனத்தின் அடர்ந்த பகுதியில் மரத்தை வெட்டி தலைச் சுமையாக டிரக்குகள் வரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஒருவர் அதிகபட்சம் நாற்பது கிலோ வரை சுமந்து வர முடியும்.

கிலோவுக்கு ஐநூறு என்று தரப்படும் கூலியில் இடையில் உள்ள ஏஜெண்டுகளுக்கு கமிஷனாக கொடுத்தது போக சில ஆயிரங்கள் மிஞ்சும். மீண்டும் செல்லும் வாய்ப்பு உடனடியாக கிடைக்காது. அங்கே தோதான அதிகாரிகள் இருக்கிறார்களா, மரக்கடத்தல் மாஃபியா குழுக்களில் எந்தக் குழுவின் கை அந்த சமயத்தில் ஓங்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த வேலை வரும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலை வந்தால் அதுவே அதிகம்.

மலைப்பாதை
காசுக்கு ஆசைப்பட்டு மரம் அறுக்கப் போயிருக்கிறார்கள், மரம் அறுத்த காசில் மலையின் மேல் வசதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படும் கருத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களுடையது மட்டுமல்ல.

காசுக்கு ஆசைப்பட்டு மரம் அறுக்கப் போயிருக்கிறார்கள், மரம் அறுத்த காசில் மலையின் மேல் வசதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படும் கருத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களுடையது மட்டுமல்ல; அருகில் இருக்கும் புதிய கொக்காரப்பட்டியில் நாங்கள் சந்தித்த ரங்கசாமி என்ற முதியவரும் அதே கருத்தைச் சொன்னார்.

அரசநத்தத்தில் சுமார் பதினோரு கிலோமீட்டர் தொலைவில் சமவெளியில் உள்ள கிராமம் புதிய கொக்காரப்பட்டி. ரங்கசாமிக்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் உள்ளது. தென்னை மரங்களும், மாமரங்களும் நிற்கிறது. மானாவரியாக மஞ்சள் விளைவிப்பதாகச் சொன்னார். அரசநத்தம் கிராமம் குறித்தும், போலி மோதல் கொலைகளைக் குறித்தும் அவரிடம் விசாரித்தோம்.

”தம்பி அதெப்படி நம்ம நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு மரம் அறுக்கப் போவலாம்? அதான் போட்டுட்டானுவோ. இப்பவும் மலைக்காரானுங்களுக்கு கெவருமெண்டு நட்ட ஈடு குடுக்கறாங்களாமே. அ.தி.மு.க குடுக்குது, தி.மு.க குடுக்குது.. அட விஜயகாந்து கூட அம்பதாயிரம் குடுக்கறாராமே? எப்படியும் ஒரு பத்து லட்சம் தேறுமில்லே?” என்றார்.

”அய்யா நீங்க அந்த கிராமத்துக்குப் போய் பார்த்திருக்கீங்களா?”

“ம்.. சின்ன வயசில அங்கெல்லாம் சுத்தியிருக்கேன். இப்ப அங்கே நல்ல வசதி வந்திருச்சின்னு சொல்றாங்க. கெவருமென்டே வீடு கட்டிக் குடுத்திருக்காம். கெவருமெண்டு வேலைல அவங்களுக்கு தான் முன்னுரிமையாம்.. நம்ம வன்னிய பசங்கன்னா படிச்சி மார்க்கு எடுக்கனும்.. அவனுங்களுக்கு மார்க்கே இல்லைன்னாலும் வேலை தாரானாமே?”

இன்னொரு புறம் வன்னியர்களின் கட்சிகளான பா.ம.கவும், வேல்முருகன் கட்சியும் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்காக போராடுவதாக கூறும் சமயத்தில் ஒரு கிராமத்தில் வாழும் வன்னியரின் கருத்தே இப்படித்தான் உள்ளது.

மலை கிராமங்களின் நிலைமை வெளியில் இருப்பவர்களின் கற்பனைகளில் உள்ளதைப் போல் இல்லை. எட்டாம் வகுப்பு வரை உள்ள ஓராசிரியர் பள்ளி ஒன்று அரசநத்தத்தில் செயல்படுகிறது. செயல்படுகிறது என்று சொல்வதே பெரிய குற்றம். எட்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆசிரியர்; அவரும் வாரம் ஒருமுறை வந்து கையெழுத்திட்டுச் செல்வார். அதையும் போலியாக மாதம் ஒன்று போட்டால் வரவே தேவையில்லை போலும்.

பள்ளிக் குழந்தைகள்
தினசரி போடப்படும் இலவச மதிய உணவைத் தவிற வேறு செயல்பாடுகள் அந்தப்பள்ளியில் இல்லை.

தினசரி போடப்படும் இலவச மதிய உணவைத் தவிற வேறு செயல்பாடுகள் அந்தப்பள்ளியில் இல்லை – அந்த மதிய உணவும் கடந்த ஒரு வாரகாலமாக போடப்படுவதில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

அரசநத்தத்தில் சுமார் ஐம்பது வீடுகள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அரை ஏக்கர், ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர் என்று சிறு அளவில் நிலம் உள்ளது. மானாவரி விவசாயம். பெரும்பாலும் ஆரியம் (ராகி – கேழ்வரகு) தூவுகிறார்கள். நல்ல மழை பிடித்தால் ஒரு போகம் விளையும். ஏக்கருக்கு இரண்டு மூட்டை ஆரியம் தேறுவது அதிசயம். அதையும் உணவுத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாங்கள் அங்கே இருந்த போது கிராமத்தின் ஒரே குடிநீர் ஆதாரமான கிணற்றை கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து தூர்வாரிக் கொண்டிருந்தனர். சுமார் ஐம்பது அறுபது அடி ஆழமிருந்த அந்தக் கிணற்றின் ஊற்றுக் கண் மூடியிருந்தது. உள்ளே இருவர் நிற்க, வெளியே சிலர் கயிற்றில் கூடையைக் கட்டி அதில் கறுப்பான சேற்றைக் கோரி இறைத்துக் கொண்டிருந்தனர்.

“இதிலேர்ந்து தான் குடிக்க தண்ணீர் எடுப்பீங்களா?”

“ஆமாங்க..”

“இந்த ஊருக்கு அரசாங்கம் தண்ணீர் பைப் போட்டுத் தரலையா?”

“இருக்கு.. ஆனா தண்ணீ வராதுங்க.. எப்பயாச்சும் வந்தா வரும்”

தண்ணீர் தேடல்
“இருக்கு.. ஆனா தண்ணீ வராதுங்க.. எப்பயாச்சும் வந்தா வரும்”

கடந்த ஓராண்டாக மழையின்றி நிலத்தடி நீர் குறைந்து போயுள்ளது. கிணறு தூர்ந்து போனதால் நீண்ட தொலைவிலிருந்து குடிநீர் எடுத்து வருகிறார்கள். மலையிலிருந்து கீழிறங்க சாலை இல்லை. கொடிப்பாதையாக (ஒற்றையடிப் பாதை) இருந்ததை கிராம மக்களே சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டி மண் பாதை ஏற்படுத்தியுள்ளனர். இரவு நேரத்திலோ மழைக்காலத்திலோ அந்தச் சாலையிலும் பயணிக்க முடியாது.

மருத்துவ அவசரம் என்றால் கூட உடனடியாக கீழே இறங்க முடியாது. கிராமத்திலேயே கை வைத்தியம் ஏதாவது செய்து சமாளிக்க வேண்டும். வருமானத்திற்கான வாய்ப்புகள் ஏதும் மலையில் இல்லை என்பதால் அவர்கள் வேறு வழியின்றி கூலி வேலைகளுக்காக மலையை விட்டுக் கீழிறங்கியாக வேண்டும். அனேகமான வீடுகளில் குடும்பத்தலைவர் இல்லை. பலர் கட்டிட வேலைகளுக்கும், கோவையில் உள்ள செங்கல் சூளை, நாமக்கல் கோழிப் பண்ணை, கருநாடகத்தின்  காப்பித் தோட்டங்கள் என்று செல்கிறார்கள்.

வெளியுலகச் சூதுவாது தெரியாதவர்கள் என்பதால், உழைப்புச் சுரண்டல் என்னவென்றோ நியாயமான கூலி என்னவென்பதையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்களிடம் விசாரித்த போது, வெளியூருக்கு வேலைக்குப் போனால் ஓரிரு ஆண்டுகள் ஊருக்கு வர முடியாது என்கிறார்கள். வேலைக்கு போகும் முன்பே முன்பணம் பெற்றுக் கொள்வோம் என்றும், இரண்டு ஆண்டுகள் கழித்து கணக்கு முடிப்பார்கள் என்றும் தெரிவித்தனர். அது கொத்தடிமைச் சுரண்டல் என்பதைக் கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கைதான்.

கலசப்பாடி, ஆலமரத்துவலவு மற்றும் கருக்கம்பட்டி கிராமங்களும் அரசநத்தம் கிராமத்தை ஒத்திருந்த சிறிய கிராகங்கள் தாம். ஏறக்குறைய நாகரிக உலகின் எல்லைக்கு அப்பாலிருந்த அந்தக் கிராமங்களில் வாழ்வதே சித்திரவதை தான். மறுநாள் பசிக்கு என்ன செய்யலாம் என்பதே அந்த மக்களின் உடனடிக் கவலையாக இருக்கிறது.

இவ்வாறானதொரு சமூகப் பொருளாதார நிலையும் அதை முன்னேற்றுவதற்கு எந்த முனைப்பையும் காட்டாத அரசின் அலட்சியமும் தான் இம்மக்களை செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பலுக்கு பலியாக்கியிருக்கிறது.

நாங்கள் சென்ற தினம், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அரூரில் சி.பி.எம் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்காக கீழே இறங்கியிருந்தனர்.

சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
சி.பி.எம் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம்.

சித்தேரி மலையின் அடிவாரத்தில் வாச்சாத்தி பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனத்தைப் பிடித்தோம். அங்கே வைத்து தான் கொல்லப்பட்ட சிவக்குமாரின் மனைவி விஜயாவை பேட்டி கண்டோம். பொதுவாக ஆள் நடமாட்டம் அதிகமில்லாத வாச்சாத்தி பிரிவு அந்த நேரத்தில் அன்று பரபரப்பாகியிருந்தது.

மலைமக்களை ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பா.ம.கவைச் சேர்ந்தவர்களும் மடக்கி நிறுத்தியிருந்தனர். இவ்விரு கட்சியினரிடையே அம்மக்களை கட்டுப்படுத்துவது யார் என்ற சண்டை நடந்து கொண்டிருந்தது.

வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம்.

”சார், நாங்க மத்தவங்க மாதிரி இல்லே சார். இதுவரைக்கும் சிறையில் இருக்கும் ரெண்டாயிரம் பேரைப் பத்தி யாரும் யோசிக்கலை, நாங்க தான் அதைக் கையில் எடுத்திருக்கோம், இனிமேல் தான் அவர்களுக்காக வழக்குப் போடப் போகிறோம். அதே மாதிரி எங்க தலைவர் அம்மா கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கார். பாதிக்கப்பட்ட இந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவங்களை அம்மா முன்னாடி அசெம்பிள் செய்யப் போறோம்”

வாழ்வுரிமைக் கட்சி டீம்
“பாதிக்கப்பட்ட இந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவங்களை அம்மா முன்னாடி அசெம்பிள் செய்யப் போறோம்.”

”எதுக்கு?”

“எதுக்குன்னா… இன்னும் கூடுதலா எதுனா நட்ட ஈடு வாங்கிக் குடுக்கலாமில்லே?

ஆக வேல்முருகன் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் அம்மாவிற்கு நற்பெயர் வாங்கித்தரவேண்டிய கடமை உணர்வில் தீவிரமாக இருந்தார்கள்.

அடுத்து பா.ம.கவைச் சேர்ந்த தர்மபுரி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அரசாங்கம் (இவரது பெயரே அதுதான்) மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகனைச் சந்தித்தோம்.

“சார் நாங்க 25 லட்ச ரூபா நட்ட ஈடு வாங்கித் தரப் போறோம் சார்” என்றார் அரசாங்கம்.

”சரிங்க.. இங்க வாழ்வுரிமைக் கட்சிக்காரங்களும் இருக்காங்க நீங்களும் இருக்கீங்க. உங்க ரெண்டு இயக்கங்களும் ஏன் இப்படி போட்டி போடுறீங்க?”

”அது வந்து… நாங்க மத்தவங்களைப் பத்தி சொல்ல முடியாது. எங்களை எடுத்துக்கிட்டீங்கன்னா எங்க சின்னய்யா தன்னோட பாராளுமன்ற கன்னிப் பேச்சிலயே மலைவாழ் மக்களைப் பத்தித் தான் பேசிருக்கார்.. இப்பவும் நாங்க தான் அதிகபட்சமா 25 லட்சம் வாங்கித் தரப்போறதா சொல்லியிருக்கோம்” என்றார்.

பா.ம.க டீம்
“இப்பவும் நாங்க தான் அதிகபட்சமா 25 லட்சம் வாங்கித் தரப்போறதா சொல்லியிருக்கோம்”

பா.ம.கவைப் பொறுத்த வரை தேர்தல் காலத்தில் இம்மக்கள் ஓட்டுப்போடவேண்டும் என்ற எண்ணிக்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதனால்தான் சின்னய்யாவின் டெல்லி குரல், 25 லட்சம் என்று சாதனைகளை வீசிக் கொண்டிருந்தனர்.

மூன்று மணி நேரம் இவ்விரு இயக்க செயல்வீரர்களின் பிடியிலும் சிக்கிக் கிடந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். பழங்குடியினப் பெண்மணி ஒருவரிடம்,

”அம்மா… உங்களுக்கு இவர்களெல்லாம் நஸ்ட ஈடு வாங்கித் தரப்போறாங்களாமே.. அதை வச்சி இனிமேல் பிள்ளைங்களை காப்பாற்றி விடுவீர்கள் இல்லையா?”

பணம் ஏரு ஓட்டுமா?
”அய்யா.. கோடிக்கணக்குல கொடுக்கட்டுமே.. அந்தப் பணம் பேசவா போகுது? இல்லை அந்தப் பணம் ஏரு ஓட்டுமா?, எங்காட்களை திரும்ப கொடுக்குமா”

”அய்யா.. கோடிக்கணக்குல கொடுக்கட்டுமே.. அந்தப் பணம் பேசவா போகுது? இல்லை அந்தப் பணம் ஏரு ஓட்டுமா?, எங்காட்களை திரும்ப கொடுக்குமா” என்று சலித்துக் கொண்டார்.

மதியம் அரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத் திடலுக்குச் சென்றோம். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ டில்லிபாபு தன்னால் மலை மக்களுக்குக் கிடைத்த நன்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இனி இம்மக்களை தங்களது அரசியல் நாடகங்களுக்கு “செட் பிராப்பர்டிகளாக” பராமரிப்பது யார் என்ற போட்டி சூடுபிடிக்கும். தமிழினவாதிகளும் கோதாவில் குதித்திருப்பதால் போட்டி கடுமையாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எல்லாம் சில நாட்களுக்கோ அல்லது ஒரு சில வாரங்களுக்கோ தான்.

கேட்க நாதியற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிதைத்துக் கொல்லப்பட்ட அந்த உடல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.. ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அந்தச் சாம்பலைக் கிளறி கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சித்தேரி மலையின் 64 கிராமங்களும், அதன் பன்னிரண்டாயிரம் மக்கள் தொகையும் ஓட்டுக்களும் ஒரு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவதில்லை. தீர்மானிப்பதாக இருந்தாலும் அவர்களுக்கு உரிமைகளோ இல்லை முன்னேற்றமோ கிடைத்து விடாது.

சித்தேரி மலை கிராமம்
சீந்துவாரின்றி சித்தேரி மலைமேல் வீற்றிருக்கும் அந்தக் கிராமங்களில் இனி ஏழு பேர் கிடையாது.

காலம் காலமாக அரசு இயந்திரத்தால் கைவிடப்பட்ட அந்த மக்களை இன்னும் சில நாட்களில் கரை வேட்டிகளும் கைவிட்டுச் செல்வர் – எப்போதும் போல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிழவிகளைக் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கிச் செல்ல மட்டும் திரும்ப வருவர்.

சீந்துவாரின்றி சித்தேரி மலைமேல் வீற்றிருக்கும் அந்தக் கிராமங்களில் இனி ஏழு பேர் கிடையாது. வாழ்வதற்காக அழுது கொண்டிருக்கும் மக்களிடம் சாவதற்காக அழுமளவு தெம்பில்லை.

–    வினவு செய்தியாளர்கள்.