privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்

நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் டி.டி.கே பி.டி.எல் தொழிலாளர்கள் “சட்ட விரோத ஆலை மூடலைக் கைவிடு” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

april-22-ndlf-ttk-pdlபாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

19.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம், பு.ஜ.தொ.மு லைட் விண்ட் ஸ்ரீராம் கிளை, கும்முடிப்பூண்டி பகுதி ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன.

கைப்பந்தாட்டப் போட்டி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதில் லைட்விண்ட் ஸ்ரீராம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர், லெனின் குறித்த புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

பரிசு வழங்குதல்
பரிசு வழங்குதல்

ஆலைவாயில் கூட்டங்கள்…

பட்டாபிராம் TI மெட்டல் ஃபார்மிங் சங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் மகேஷ்குமார் வரவேற்றார். பு.ஜ.தொ.மு- வின் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் ஆசான் லெனினது படத்துக்கு மாலையணிவித்து கொடியேற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அவர் தனது சிறப்புரையில, லெனினை பாட்டாளி வர்க்கம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார். திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மு.முகிலன், ஆவடி-அம்பத்தூர் பகுதி தலைவர் தோழர் ம.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பு.ஜ.தொ.மு-வின் ஜி.எஸ்.எச்., இண்டெக்ரா ஆகிய கிளைச்சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாவட்டத்திலுள்ள அனைத்து இணைப்பு கிளைச் சங்கங்களிலும், ஆசான் லெனினின் உருவப்படம் வைத்து, கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மற்ற சங்கங்களில் பகுதி முன்னணியாளர்கள் முன்னிலையில் அந்தந்த சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆசான் லெனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கும்மிடிப்பூண்டி பகுதி சங்கங்களில் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் செல்வகுமார் உரையாற்றினார். “ஆசான் லெனின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? ஜார் மன்னனுக்கு ஒத்ததான பாசிச நடவடிக்கைகளை கையாளும் மோடிக்கெதிராய் தொழிலாளிகள் கிளர்ந்தெழ வேண்டும். அத்தகைய தொழிலாளி வர்க்க ஆட்சி அமைக்க பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் டால்மியா ஆலையில் கொடியேற்றினார்
மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் டால்மியா ஆலையில் கொடியேற்றினார்

SRF மணலியில் நடந்த விழாவில் கிளைச் செயலாளர் ஞானபிரகாஷ் தலைமையில், கிளை பொருளாளர் ஆனந்தபாபு உரையாற்றினார்.

எஸ்.ஆர்.எஃப் மணலி கிளை ஆலைவாயில் கூட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாவட்டத்திலுள்ள அனைத்துச் சங்கங்களில் உள்ள தொழிலாளர்களையும் ஆலைவாயில் முன் கூட்டி பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாட்டாளி வர்க்கம் என்ற வகையில் ஆசான் லெனின் பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்க வேண்டியஅவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த கூட்டங்கள், வண்ண வன்ண பிழைப்புவாதிகளை அம்பலப்படுத்துவதாகவும், புரட்சிகர தொழிற்சங்கத்தின் கடமைகளை நிலை நிறுத்துவதாகவும் அமைந்தது.

சி.ஆர்.பி ஆலையில் வாயில் கூட்டம்
சி.ஆர்.பி ஆலையில் வாயில் கூட்டம்

தொழிலாளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட பிரசுரம்
அன்பார்ந்த தொழிலாளத் தோழர்களே!

வணக்கம். அழுக்குச் சட்டை தொழிலாளர்களை அரசாள வைத்த ஆசான் லெனினின் 145-வது பிறந்த தினம் இன்று. சிறப்புமிக்க இந்த நாளைக் கொண்டாடுவது பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்கிற வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆசான் லெனின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.

லெனின் பிறந்த நாளை ஏன் கொண்டாட வேண்டும் ?

பு.ஜ.தொ.மு கென்மின் கிளையில் கொடியேற்றம்
பு.ஜ.தொ.மு கென்மின் கிளையில் கொடியேற்றம்

1870-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதியில் ரஷ்ய நாட்டில் பிறந்தார், லெனின். “இந்த உலகத்தில் எதுவுமே மாறாது” என்ற கருத்தை உடைத்து, “மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்ற கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் வகுத்தளித்த விஞ்ஞானத்தை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் லெனின்.

“நீங்க நாலு பேரு செவப்பு சட்டை போட்டுட்டு, கொடி பிடிச்சி கோஷம் போட்டா எல்லா பிரச்சனையும் தீந்துடுமா?” என்று அறியாமையினால் இன்றைக்கு கேள்வி கேட்பவர்களைப் போலவே வரலாறு நெடுக கேள்வி கேட்டு வந்திருக்கிறார்கள்; ரஷ்யாவிலும் கேட்டார்கள். “தொழிலாளர்களால் அரசாள முடியுமா” என்றும், “முதலாளிகள் இல்லாமல் தொழில் துறை வளர்ச்சி சாத்தியமா” என்றும் ஏளனமாகப் பேசினர். உலக வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்யாவில் சோசலிச புரட்சியை நடத்திக்காட்டி, தொழிலாளி வர்க்கத்தால் அரசாள முடியும், முதலாளிகள் இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டினார் லெனின்.

கொடுங்கொல் ஆட்சி புரிந்து வந்த ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால் வீழ்த்தப்பட்டது. உலக முதலாளித்துவத்தின் செவிப்பறையில் ஓங்கி அடிக்கும் வண்ணம், தொழிலாளிகள்-விவசாயிகள் நேச அணியை உருவாக்கி, முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு சாவுமணி அடித்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலநாட்டினார்,லெனின். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய ஆசான் லெனினின் பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்க வேண்டியது தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை.

ஆசான் லெனினை நாம் வரித்துக் கொள்ள வேண்டும்!

பிறந்து வளர்ந்து, படித்து முடித்து வேலை தேடி, கிடைத்த பின் வீடு கட்டி திருமணம் செய்து, குழந்தை பெற்று, அதையும் தன்னைப் போலவே வளர்த்து கடைசியில் மாண்டு போகும் அற்பத்தனமான வாழ்க்கையை வாழவில்லை, ஆசான் லெனின். தன் மனைவி, தன் குழந்தை, தன் குடும்பம் என வட்டமிட்டுக்கொண்டு சொத்து சேர்த்துக்கொள்ளவில்லை. சக மனிதர்கள் வறுமையில் உழன்ற போது, அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளான போது, அதனை அவனது தலைவிதியென்றும், பூர்வஜென்ம பாவமென்றும் வியாக்கியானம் பேசி ஒதுங்கிச் செல்லவில்லை. மாறாக சமுதாயத்தை ஆய்வு செய்தார். அது விதியல்ல, ஜார் மன்னனின் பேயாட்சியில் முதலாளித்துவ கொடுங்கோன்மையால் விளைந்த சதி என்று தொழிலாளர்களுக்கு உணர்த்தினார். சுரண்டலில் கொழுத்த முதலாளி வர்க்கத்தை உழைக்கும் மக்களின் முன் அம்பலப்படுத்தி அவர்களை விரட்டியடித்தால் ஒழிய உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை என்பதை உணர்த்தியதோடு நில்லாமல் வழிநடத்தவும் செய்தார்.

முழக்கமிடுதல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
உலகின் முதல் சோசலிசப் புரட்சி

உலகின் முதல் சோசலிச அரசு 1917 நவம்பர் 07 அன்று நிறுவப்பட்டது. ஆசான் லெனின் தலைமையிலான இந்த ஆட்சியில் வறுமை ஒழிப்பு, விலைவாசி குறைப்பு, அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது, உலகின் சிறந்த நாடாகவும், அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய நாடாகவும் வளர்ந்து நின்றது , ரஷ்யா.

ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்கோன்மையை வீழ்த்துவதற்கு இந்திய நாட்டு இளைஞர்களை அறைகூவி அழைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங், தனது கருத்தை நாடறியச் செய்ய வேண்டுமென்பதற்காக, உயிர்ச் சேதம் விளைவிக்காத வெடிகுண்டை நாடாளுமன்றத்தில் வீசிய போது அவரை ஏகாதிபத்திய தீவிரவாதியாக சித்தரித்து தூக்கிலிட்டுக் கொன்றது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பகத்சிங்கின் பிணத்தைக் கூட கண்டு அஞ்சினார்கள். இறந்த உடலைத் துண்டு, துண்டாக வெட்டி சட்லஜ் நதிக்கரையில் வீசினார்கள் காலனியாதிக்கவாதிகள். அன்று பகத்சிங்கின் உடலைக் கண்டு அஞ்சியதைப் போலத்தான் இன்று ஆசான் லெனின் குறித்தும், கம்யூனிசம் குறித்தும் அஞ்சி நடுங்குகின்றது, ஆளும் வர்க்கம்.

ஒடுக்கப்படுகின்ற வர்க்கங்களின் விடுதலைக்கென்று ஒரு தத்துவம் உள்ளது. அதுதான் கம்யூனிசம்! அந்த கம்யூனிச தத்துவமெனும் ஆயுதத்தை நாம் முதலாளிகளுக்கெதிராக நீட்டி விடக்கூடாது என்பதால் தான் தத்துவத்தையும் , அதனை வளர்த்தெடுத்த தலைவர்களையும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறது, ஆளும் வர்க்கம். அவதூறும் செய்து வருகிறது. ஆளும் வர்க்கத்தின் இருட்டடிப்புகள், அவதூறுகள் அத்தனையையும் முறியடித்து ஆசான்களையும், கம்யூனிசத் தத்துவத்தையும் உலகறியச் செய்ய வேண்டும். நம்முடைய ஆசான்களை நாம் தானே உயர்த்திப் பிடிக்க வேண்டும்!

நமது நாட்டில் புரட்சி மலர லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்

ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் உழைக்கும் மக்கள் வதைக்கப்பட்டதைப் போலவே இன்று நமது நாட்டிலும் பாசிச நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். முதலாளிகளின் நலன்களுக்காக நாடு நாடாக பறந்து கொண்டிருக்கிறார், பிரதமர். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளிகளை முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்கும் வேலையைச் செய்வது, அவசரச் சட்டங்கள் போட்டு உழைக்கும் மக்களை மரணக்குழியில் தள்ளுவது என அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கிஞ்சித்தும் தயக்கமின்றி செய்து வருகிறது மோடி அரசு.

தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் மிகத்தீவிரமாக அமுல்படுத்தத்தப்பட்டதன் விளைவாக மக்கள் ஓட்டாண்டிகளாகி நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர். தண்ணீர், கல்வி, மருத்துவம் என அனைத்தும் தனியார்மயம். வேலை தற்காலிகம், பசி பட்டினி தான் நிரந்தரம்! மக்களைக் காக்கவோ, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அரசால் முடியாது என்பது நிருபணமாகியுள்ளது.

அரசும் அதன் உறுப்புகளும் ஆளத் தகுதியிழந்து நிற்கிறது. போலீசு, நீதித்துறை, இராணுவம் அனைத்துமே மக்களுக்கானதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளும்வர்க்கமே தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகும் நாம் அமைதியாய் இருக்க முடியாது.ஆசான் லெனின் காட்டிய வழியில் தொழிலாளி வர்க்கமாக ஒன்றிணைந்து திவாலாகிப் போன,ஆளத் தகுதியற்ற இந்த அரசமைப்பை அடித்து நொறுக்குவோம். மக்களுக்கான அதிகார அமைப்புகளை நிறுவுவோம். அதை செய்து முடிக்க ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க