ஹரியானா அரசு தனது மாநிலத்திற்கு உட்பட்ட, தில்லியை ஒட்டியுள்ள ஆரவல்லி மலைப் பகுதியைக் காடு அல்லவென்று வரையறுத்து அறிவித்துள்ளது. தற்போது உள்ள இந்திய வனச் சட்டங்களின் அடிப்படையில் இந்தப் பகுதிகளில் வன மேம்பாட்டுப் பணிகளைத் தவிர வேறு ‘வளர்ச்சிப் பணிகள்’ எதையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா அரசின் முடிவானது, ‘வளர்ச்சி நாயகர்களான’ ரியல் எஸ்டேட் கும்பல் காட்டுக்குள் இறங்க வகை செய்துள்ளது.
குஜராத்தின் மேற்குப் பகுதியில் தொடங்கி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்கள் வழியே தில்லியின் குர்காவ்ன் வரை நீளும் ஆரவல்லி மலைத் தொடர் இந்தியாவின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் முதன்மையானதாகும். 150 கோடி ஆண்டுகள் பழைமையான இம்மலைத் தொடர், 5 கோடி ஆண்டுகள் வயதான இமைய மலைத் தொடர்களோடு ஒப்பிட்டால் இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
சிலிக்கான் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆரவல்லி மலைத் தொடர் பல்வேறு பறவை இனங்களின் இல்லமாகவும் திகழ்கிறது. ராஜஸ்தானிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் மணற் புயலைத் தடுப்பதோடு தில்லியை பாலைவனமாகாமல் காத்து மக்கள் வசிக்கத் தகுதியுள்ள பகுதியாக வைத்திருக்கும் ஆரவல்லி மலைத் தொடர் தான் தில்லியின் நிலத்தடி நீருக்கான முக்கியமான ஆதாரம்.
ஆரவல்லி மலைச் சிகரங்கள் பல ஆண்டுகளாக சட்டவிரோத கனிமவளக் கொள்ளையால் மொட்டையடிக்கப்பட்டு வந்த நிலையில் 2002 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவும் காகிதத்தில் தான் இருந்ததே ஒழிய, எதார்த்தத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆசியோடு கொள்ளை தொடர்ந்தது.
ஆரவல்லி மலைக் காடுகளை சூறையாடியிருக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழில் (படங்கள் நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்நிலையில், உத்திரபிரதேசத்தின் நோய்டா மற்றும் ஹரியானாவின் குர்காவ்ன் பகுதிகள் தலைநகரோடு இணைக்கப்பட்ட பின் இந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் கும்பல்களின் ஆதிக்கம் தலைதூக்கத் துவங்கியது. மலைப்பாங்கான பகுதிகளில் பண்ணை வீடுகள் அமைப்பது, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அமைப்பது மற்றும் கேளிக்கை விளையாட்டு மையங்களை உருவாக்குவது பெரும் லாபம் கொழிக்கும் தொழில் என்பதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்களை ஆரவல்லி மலைத் தொடர் உறுத்திக் கொண்டேயிருந்தது.
இந்நிலையில் ஹரியானாவில் கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வென்று மனோகர் லால் கட்டர் முதல்வராகப் பொறுப்பேற்றார். இயற்கை வளங்களை கூறு கட்டி விற்பதிலும் காடுகளைக் கொன்றொழிப்பதிலும் தேர்ந்த அனுபவம் கொண்ட பாரதிய ஜனதாவுக்கு இந்த விசயத்தில் வேறு யாரும் பாடம் எடுக்க வேண்டிய தேவை எழவில்லை.
ஏற்கனவே இந்திய வனச் சட்டங்களைத் திருத்தும் முயற்சியில் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது. வனங்கள் என்பதற்கான வரையறை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதென தரகு முதலாளிகள் கருதுவதால் காடுகளுக்கான வரையறையையே திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு. ஏற்கனவே உள்ள சட்டத்தின் அடிப்படையில் காடுகளை மதிப்பிடுவதற்கு 6 அளவுகோல்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் பயன்படுத்துகிறது.
காட்டின் தன்மை, அதன் உயிரியல் வளம், வன விலங்குகள், காட்டின் அடர்த்தி, நிலத்தின் தன்மை, அதன் நீர்வள மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான், வனப்பகுதியில் சுரங்கத்தொழிலை அனுமதிப்பது அல்லது மறுப்பது என்பதை அரசு செய்து வருகிறது. இந்த 6 அளவுகோல்களிலிருந்து காட்டின் அடர்த்தி மற்றும் அதன் உயிரியல் வளம் என்ற இரு அளவுகோல்களையும் நீக்கி விட்டு, மீதமுள்ள நான்கு அளவுகோல்கள் அடிப்படையில் வனப்பகுதியை வரையறுப்பதற்கான விதிகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது மோடி அரசு.
அதே போல காடு என்று வரையறை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு மலைவாழ் மக்களின் ஒப்புதல் தேவையில்லை என்றும் வன உரிமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் நடக்கிறது. இது தொடர்பாக பிரகாஷ் ஜாவடேகர் தலைமையிலான சுற்றுச்சூழல் அமைச்சகத்தோடு பழங்குடி நல அமைச்சகம் முரண்பட்டுள்ளது என்ற செய்தி முதலாளித்துவ ஊடகங்களிலேயே வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் காவாலிகளின் இரட்டை நாக்கு பற்றி தனியே விவரிக்கத் தேவையில்லை. பாரதம், சுதேசி என்று சொன்ன அதே வாயால் அந்நிய முதலீட்டையும் பன்னாட்டுச் சுரண்டலையும் வரவேற்றுப் பேசுமளவிற்கு அதற்கு கூச்ச நாச்சம் கிடையாது. ரிஷிகள் தவமிருந்த புனித வனங்கள் என்று ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பாடி பயிற்சி பெற்ற மோடி தான் தனது சொந்த மாநிலத்திலேயே வனங்களை அதானி குழுமத்திற்கு விருந்து வைத்துள்ளார்.
2008-09 காலகட்டத்தில் குஜராத்தின் கட்ச் பகுதியில் காடுகளைத் தவறாக வரையறுத்ததன் மூலம் அதானி குழுமம் முறைகேடான வழியில் 58.64 கோடி ரூபாய் சுருட்ட வகை செய்து கொடுத்துள்ளார் மோடி என்கிறது சி.ஏ.ஜியின் அறிக்கை ஒன்று. கடந்த மார்ச் 31-ம் தேதி குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி சி.ஏ.ஜி அறிக்கையின் காகிதங்கள் அங்கிருந்து நேராக முதல்வரின் கழிப்பறைக்கு நடந்து செல்லுமா பறந்து செல்லுமா என்பதையெல்லாம் நாம் விளக்க வேண்டியதில்லை.
மோடியின் வளர்ச்சிப் பாதையை அடியொற்றி ஹரியானாவில் பதவிக்கு வந்துள்ள மகனோகர் லால், தனது தலைவரின் வளர்ச்சிப் பாதையில் தற்போது பீடு நடைபோடுகிறார்.
வளர்ச்சி – தொழில் வளர்ச்சி என்று இவர்கள் சொல்வதெல்லாம் ஒட்டுமொத்தமாக முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. 2008-ல் ஆரம்பித்த பொருளாதார பெருமந்தத்தின் தாக்கம் இன்னமும் விலகவில்லை. உற்பத்தித் துறை வளர்ந்து, பொருளுற்பத்தி பெருகி, அதை மக்கள் நுகர்ந்து – இந்த சுழற்சியின் மூலம் மூலதனம் பெருகுவது என்ற வழமையான வழிகள் அடைபட்டுள்ள நிலையில் முதலாளிகள் தப்பிக்க ஒரே மார்க்கமாக இயற்கை வளங்களே திகழ்கின்றன.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை வளங்களை எந்தளவுக்கு சுரண்ட முடியுமோ அந்தளவுக்கு ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது ஒன்றே தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற தீர்மானத்திற்கு மூலதனத்தின் அதிபதிகள் வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. இதன் விளைவைத் தான் நாம் கார்மாங்குடியிலும், தென் தமிழக கரையோரங்களிலும், மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளிலும், நியாம்கிரியிலும் காண்கிறோம். இங்கெல்லாம் என்ன நடக்கிறதோ அதே தான் ஆரவல்லி மலைத் தொடருக்கும் நடக்கிறது.

தனது பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியில் இருந்து தப்ப இயற்கை வளங்களின் மேல் பாய்ந்து குதறுகிறது மூலதனம். ஓட்டுக்கட்சிகளும், அரசு நிர்வாக எந்திரமும் மூலதனத்தின் காலாட்படையாக சீரழிந்து கிடக்கிறார்கள். இவர்களை களத்தில் முறியடிப்பது ஒன்று தான் பொருளாதார மற்றும் பாரம்பரிய மதிப்பு மிக்க நமது இயற்கைச் செல்வங்களைக் காப்பாற்றுவதற்கு உள்ள ஒரே வழி.
– தமிழரசன்
இது தொடர்பான செய்திகள்
- Some Aravali forests opened to real estate
- Aravali not a forest, says Haryana order
- Illegal mining ravaging, raping the Aravalis
- Ban fails to stop illegal mining in Aravalis
- SAVE ARAVALI
- Wrong classification of forest land caused Rs 58.64 cr benefit to Adani company: CAG report
- Rift between environment and tribal ministry over dilution of tribal veto powersக்க