Wednesday, December 8, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்

கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்

-

அடுத்தவன் கஞ்சா வித்த காசில் உயிர் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்

சிலம்பட்டியில் எஸ்.பி. போலீசாக உள்ளவர் பழனி என்ற பழனியப்பன். இவர் உசிலை பகுதியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒட்டும் போஸ்டர்களை தேடித்தேடி கிழிக்கும் ஜனநாயகத்துக்கு எதிரான இழிந்த வேலையைச் செய்பவர். ஏற்கனவே இதை தோழர்கள் கையும் களவுமாய் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

உசிலை எஸ்.பி பழனியப்பன்
உசிலம்பட்டி கஞ்சா வியாபாரிகளிடம் கட்டாய வசூல் செய்யும் போலீஸ் எஸ்.பி. பழனியப்பன் என்ற செய்தியை போஸ்டர் அடித்து ஒட்டி உசிலை பகுதி வி.வி.மு தோழர்கள் அம்பலப்படுத்தினர்.

தற்போது நவீன நெற்றிக்கண் வார இதழில் உசிலம்பட்டி கஞ்சா வியாபாரிகளிடம் கட்டாய வசூல் செய்யும் எஸ்.பி போலீஸ் பழனியப்பன் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதை போஸ்டர் அடித்து ஒட்டியும் ஜெராக்ஸ் எடுத்து மக்களிடம் விநியோகம் செய்தும் உசிலை பகுதி வி.வி.மு தோழர்கள் பழனியப்பனை அம்பலப்படுத்தினர்.

அரசியல் போஸ்டர்களை கிழித்து வந்த பழனியப்பன் தனது சொந்த அவலம் அம்பலமான போஸ்டரை கிழிக்க வேண்டிய நிர்கதிக்கு ஆளானார்.

நெற்றிக்கண் செய்தி வைத்து வசூல்
“என்ன தோழரே என் மீது அவ்வளவு கோபமா?”

வழியில் வி.வி.மு உசிலை வட்டச்செயலாளர் தோழர் குருசாமியைச் சந்தித்த பழனியப்பன், “என்ன தோழரே என் மீது அவ்வளவு கோபமா?” என்றார்.

“கட்சியில ஒருத்தர் பாக்கியில்லாம எல்லோரும் உன் மேல அவ்வளவு கோபமா இருக்காங்க. நாங்க ஒட்டுற ஒவ்வொரு போஸ்டரையும் தேடித்தேடி கிழிச்சிருக்க, கட்சியில சேர வர்றவங்க வீடுவீடாப் போயி ‘அந்த கட்சியில சேராதீங்க அவங்க நக்சலைட்டுகள்’ அப்படின்னு பீதியூட்டி இருக்க, நீ எஸ்.பி போலீசுன்னா உன் வேலை எதுவோ அத மட்டும் செய். எங்கள உளவு பாக்குற க்யூ ப்ராஞ்ச் போலீசு மேல எல்லாம் நாங்க என்னா கோவமாவா இருக்கம். அரசு வேலை பாக்குற நீங்க உங்க கடமைய மட்டும் செய்யுங்க. அதையும் தாண்டி செய்றீங்க பாரு அதுதான்…” என எச்சரிக்கை செய்தார்.

உடன் இருந்த மற்றொரு போலீசு, “தோழரே இதுவரை நடந்தது எப்படியோ விட்டு விடுங்கள், இனி தவறு நடக்காது” என வக்காலத்து வாங்கினார்.

உசிலை வட்ட விவிமு துணைச்செயலர் போஸை தொடர்பு கொண்ட க்யூ பிரிவு போலீசு,”என்ன தோழர் பழனியப்பன் பத்தி போஸ்டர் போட்டுருக்கீங்க?” என்றார்.

போஸ்,”வி.வி.மு.க்காரன் டீ கடைல நின்னாக்கூட உளவு பாக்குற நீங்க உங்க ஆளு என்னா தப்பு செஞ்சு செய்தி எப்புடி வெளிவந்தாலும் கண்டுக்க மாட்டீங்களே? கஞ்சா வித்த காசுல உசிலம்பட்டிக்கு வந்த எல்லா புத்தகத்தையும் வாங்கிட்டாலும் நாங்க புத்தகத்தை வாங்காமலா விட்டுருவோம். மொதல்ல பழனியப்பனப் பத்தி மேல சொல்லி நடவடிக்கை எடுக்கப் பாருங்க” என முடித்தார்.

உபசெய்தியாக மக்களிடம் விசாரித்ததில், “அரசு வேலை பார்க்கிறவர்கள் ரூபாய் 2,500 க்கு மேல் எது வாங்கினாலும் அரசு விதிப்படி மேலிடத்தில் அனுமதி பெற்றே வாங்கவேண்டும். ஆனால் பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார். பழனியப்பன் அப்பா வழியோ அவர் மனைவி வழியோ செல்வாக்கான குடும்பம் இல்லை. அப்படி இருக்க இம்புட்டு சொத்து எப்புடி?” என கேள்வி எழுப்பினர்.

போலீஸ் எஸ்.பி. பழனியப்பன்
“பழனியப்பன் அப்பா வழியோ அவர் மனைவி வழியோ செல்வாக்கான குடும்பம் இல்லை. அப்படி இருக்க இம்புட்டு சொத்து எப்புடி?”

ஊழல் செய்து, கொள்ளை அடித்து,மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்த ஜெயலலிதா, சசிகலாக்கள் தப்பிக்கும்பொழுது பாவம் பழனியப்பன்களும் தப்பிக்கத்தானே செய்வார்கள்.

இந்த உளுத்துப்போன அரசு இவற்றைக் கண்டும் காணாமல் அல்லது அப்படித்தான் நாங்க என்று வீராப்பாய் இருக்கலாம். ஆனால்….

மக்கள் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

மக்கள் “சரியான போஸ்டருப்பா! நல்லா ஒட்டுங்க” என வரவேற்றும், “போலீசுக்காரனப் பத்தினதானாலும் பயப்படாம போஸ்டர் அடிக்கிறீர்கள்” என வாழ்த்தியும் சென்றனர்.

நிறைய போலீசுக்காரர்களிடம் இச்செய்தியால் சந்தோசத்தைக் காண முடிந்தது.

பு.ஜ.செய்தியாளர்கள்
உசிலம்ப்பட்டி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க